எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 8 செப்டம்பர், 2026

மூலம்

மூலம்

சிறிது நடுக்கமாகத்தான் இருந்தது மெச்சிக்கு அந்த ஜாதக விபரங்களைப் பார்த்ததும். மகனுக்குக் கல்யாணத்துக்கு வரன் தேடிக் கொண்டிருந்தார்கள் மெச்சியும் அவள் கணவர் அழகப்பனும்.

பையனுக்கு ஆறு நட்சத்திரங்கள் ஆகாது என்று கீழச்சீவல்பட்டி ஜோசியர் குறித்து கொடுத்திருந்தார். ஆனால் வச்சு அடிப்பது போல அந்த ஆறு நட்சத்திரங்களும் மாறிமாறிப் பெண் ஜாதகங்களில் வந்து கொண்டிருந்தன, எல்லாம் பொருந்தி இருந்தால் மெச்சி வீடு சார்ந்த அதே கோயிலையும், அதே பிரிவையும் சேர்ந்த பெண்களாகவே வந்தனர். அப்படி என்றால் சகோதரி முறையாச்சே பண்ணக் கூடாதே என விலக்க வேண்டியதாயிற்று. 

பத்தும் பத்தாததற்கு மகன் வயதில் உள்ள பெண்களுக்கு பத்துப் பதினைந்து வயதுக்குள் உள்ள குழந்தைகள் வேறு இருந்தார்கள். சில சமயம் மகனை விடப் பத்து வயது சிறிய பெண்களும் விவாகரத்தாகி இருந்தார்கள். திருமண மேட்ரிமோனிகளைச் சுற்றிச் சுற்றி வந்தும் மகனைப் போல பத்தாண்டுகளாக மறு திருமணம் ஆகாமல் அன்று கண்ட அதே இருபது முப்பது பெண்களே எஞ்சி இருந்தார்கள். அவர்களுக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை இவனுக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதுதான் ஒரே பொருத்தம்.

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2026

பிடிமண்

 பிடிமண்

ரோட்டை ஒட்டிய பாலத்தின் அடியில் இருந்தது அந்தப் பெட்டிக் கடை. அந்த ரோட்டின் மேலேயே பாலத்தின் கைப்பிடிச் சுவரில் ஒரு பிள்ளையார் கோவிலும் இருந்தது. பெட்டிக்கடைக்காரரே பிள்ளையார் கோவிலையும் பூசாரி போல் பார்த்துக் கொண்டு இருந்தார். இன்னோவாவை விட்டு இறங்கிக் கடைக்கருகே சென்று விசாரித்தார் பழனி, “இங்கே ராஜநாயகம்கிறது யாரு ?” ”நாந்தான்” என்று பெட்டிக் கடை ஓலையைப் பிடித்தபடி எழுந்து சரிவான பாதையில் மேலேறி வந்தார் கடைக்காரர்.

”இங்க ஜாதகம் எல்லாம் பார்க்கிறதுன்னு சொன்னாங்களே”,ஐயத்தோடு கேட்டார் பழனி. “ஆமா நாந்தான் பார்ப்பேன். இருங்க வரேன். என்றவர் ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்துக் குடித்து விட்டு இவருக்கும் நீட்டினார். ”இல்லங்க வேண்டாம். ஒரு ஜாதகம் பார்க்கணும்”

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

காப்பு. (சிறுகதை)

காப்பு.
றுதியாய் முன்கை தன்னை உமைஇள மதலை காக்க
தறுகண் ஏறிடவே என்கைத் தலத்தை மால்மருகன் காக்க”
”தேவானை அடி தேவானை.. ” இரண்டாங்கட்டிலிருந்து ஆத்தா கூப்பிடுவது தெரியாமல் வளவுப் பூசைவீட்டில் குளித்துமுழுகித் தலையைச் சுற்றிய துணியோடு காக்கச்சொல்லி முருகனை அழைத்துக் கொண்டிருந்தாள் தெய்வானை. இவ்வரிகளைப் பாடும்போது புறஉலகம் மறந்து சண்முகத்தின் வலிமையான இருகைகள் அவள் விரல்களைப் பிடித்துக்கொண்டு விடமாட்டேன் என்று நின்றதே கண்ணுக்குள் இனிமையாய் முட்டி நின்றது.
”அட இருஞ்சே. புள்ள சம்முகக் கவசம் சொல்லிக்கிட்டு இருக்கு. முடிச்சிப்புட்டு வரும். அப்பிடி என்ன அவசரம் ஒனக்கு.” என அப்பச்சி ஆத்தாளைக் கடிந்து கொண்டார்கள்.
”கார்த்தியலுக்குக் குன்னக்குடிக்கு வடிக்கப் போகோணும். நேரமாச்சு. ஆளும் பேரும் வந்திருவாக. அங்கன சமையக்காரவுகளும் காத்திருப்பாக. வெள்ளனக் கெளம்புனாத்தான தாவல. ”

சனி, 30 ஜூலை, 2022

வெண்கலம் ( விகடன்)

 வெண்கலம்

கொழந்த வேலா பொளந்த வாயான்னு பகல்முழுக்கத் தூங்குவான் என் பேரப்பய. ராத்திரி எந்திரிச்சான்னாத்தான் வெங்கலத்தொண்டை. அழுதழுது ஆல்வீட்டுல இருக்குற எலி பெருச்சாளியெல்லாம் வெரட்டிப்பிடுவான்.” என்று பிள்ளையைப் பார்க்கவந்த பக்கத்துவீட்டு சாரதாச்சியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் உண்ணாமலை ஆச்சி.

“பய ராத்திரில பொறந்தானா, பகல்ல பொறந்தானா “ என்று கேட்டார்கள் சாரதாச்சி.

“ராத்திரிலதான் ஆச்சி “ என்றாள் உண்ணாமலை.

“அடி ராத்திரில பொறந்தபய ராத்திரிலதாண்டி முழிப்பான். ஆமா பாண்டியக்கா குளியாட்ட வர்றாளாமே” என்று கேட்ட சாரதாச்சியிடம் “ஆமா ஆயா. அக்கா ஒவ்வொரு நாளும் குளியாட்டினவோடனே பயலுக்குக் கோமயம், பேர்சொல்லாதது, ஆடுதோடா இலை, துளசி, மாசிக்காய், சங்கு, அப்பிடின்னு ஏதாவது கொண்டாந்து ஒரசி வடிகட்டிக் கொடுக்கும்.” என்றாள் நாகு.

“அடி சங்கு குடிச்சிருக்காண்டி ஒன் பேரன். அதுதான் வெங்கலத் தொண்டையாயிருச்சு. நல்லா இருக்கட்டும்போ “ என்று கிளம்பினாக எண்பது வயது சாரதாச்சி.

“ஆச்சி நாளன்னைக்கு மிட்டாய்த்தட்டு வைக்கிறோம். ரொட்டி மிட்டாய் எடுத்துக்க வாங்க “ என்றாள் உண்ணாமலை.

புதன், 1 செப்டம்பர், 2021

ஆச்சி தந்த சீர்

ஆச்சி தந்த சீர்


”ஆச்சி ஆச்சி “ குரல் கேட்டு இரண்டங்கட்டிலிருந்து வெளியே வந்தாள் வள்ளி.

முகப்பில் நீலவண்ண சுடிதாரில் ஒரு கல்லூரிப் பெண் தன் தாயுடன் நின்றிருந்தாள்.

திங்கள், 23 நவம்பர், 2020

நண்டு

 நண்டு


கடற்கரையோர நகரம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்கள் மாலதியின் தம்பிகள். இன்னும் திருமணமாகவில்லை. அவர்களுக்கு சமைத்துப் போட அவர்கள் பாட்டி வீட்டில் இருந்து சிகப்பி அக்காவை அனுப்பி இருந்தார்கள். தன் பிள்ளைகளோடு கோடை விடுமுறைக்குத் தம்பிகள் வீட்டுக்கு வந்திருந்தாள் மாலதி. 

நண்டைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார் சிகப்பி அக்கா. ”வெள்ளையாத்தானேக்கா இருக்கு இந்த நண்டு. இது எப்பிடி சமைச்சோடனே சிவப்பா ஆகுது ” என்று கேட்டாள் பக்கத்தில் அமர்ந்து நண்டு சுத்தம் செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மாலதி.

“இது கடல் நண்டு. சட்டில போட்டு வதக்குனவோடனே சூட்டுக்கு செவப்பாயிரும். அம்மாப்பொண்ணு இங்க உக்காராதே. சுத்தம் செய்யும்போது பார்த்தாச் சாப்பிட மாட்டே “ என்று சொல்லிக் கொண்டே நண்டின் கால்களைப் பிரித்து ஓட்டை உடைத்து மஞ்சள் பகுதியைக் கையால் தேய்த்துக் கழுவினார் சிகப்பியக்கா.

தண்டட்டிக் காது அசைய அமர்ந்திருந்த சிகப்பியக்கா பேருக்கேற்றாற்போல வெள்ளைச் சிகப்பு. மாலதியின் பாட்டி வீட்டில் கிட்டத்தட்ட 30 வருடமாக சமையல் வேலை செய்தவர். பாட்டி வீட்டுக்கு விடுமுறைக்கு வரும்போதெல்லாம் சிகப்பி அக்காளின் கைவண்ணத்தில் விதம் விதமான உணவுகளை ருசித்திருக்கிறார்கள் மாலதியும் அவள் தம்பிகளும். திடீரென எவ்வளவு பேர் வந்தாலும் அவ்வளவு பேருக்கும் உணவு தயாரிப்பதில் அசந்ததேயில்லை சிகப்பியக்கா.

வேலை ஓய்ந்த பகல்பொழுதுகளிலும் திருகையில் உப்புமாவுக்கு உடைப்பது, குந்தாணியில் சிவப்பரிசி போட்டு உரலால் புட்டு இடிப்பது , சாயங்காலமானால் பச்சரிசி மாவில் தேங்காய் திருகிப் போட்டு சீடை உருட்டுவது, கயிறில் கோர்த்து உப்புக்கண்டம் காயப்போடுவது, வற்றல் போடுவது  என ஏதாவது செய்து கொண்டே இருப்பார். ஒருநாள் கூட மதியத்தில் அந்த அக்கா ஓய்ந்து உறங்கிப் பார்த்ததேயில்லை மாலதி.

திங்கள், 16 நவம்பர், 2020

ட்ரான்சிட்

 ட்ரான்சிட்


திஹாடின் டிவியில் 2, 4, 8, 16 என்று எண்களைச் சேர்த்துக் கொண்டிருந்தான் பக்கவாட்டில் அமர்ந்திருந்த ஜெர்மானியன். 2048 என்றோரு எண் விளையாட்டு. காகுரே சுடோகு போல் அகிலாவுக்குப் பிடித்த எண் விளையாட்டு. நூற்றுக்கணக்கான முறை விளையாடியிருப்பாள் அவள். முப்பத்திஐயாயிரத்துச் சொச்சம் மதிப்பெண்களோடு அவளின் செல்ஃபோனில் உறைந்திருந்துக்கிறது அந்த ஆன்லைன் விளையாட்டு. நேரே நின்று லைஃப்ஜாக்கெட்டை எப்படி அணிவது எனச் சொல்லத் தொடங்கி இருந்தாள் பணிப்பெண்.

வெள்ளி, 6 நவம்பர், 2020

யுவைடிஸ்

 யுவைடிஸ்


டுப்படிப் பத்தியில் ஐயாவுக்குச் சாப்பாட்டைக் கட்டிக் கொண்டிருந்தாள் ஒமையா. அப்பத்தா இல்லாததால் ஐயா வீட்டில் தங்குவதில்லை. கிணற்றடிக் காளியம்மன் கோவில் பக்கம் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார்கள் ஐயா. அங்கே நண்பர்களோடு அவ்வப்போது சீட்டுக் கச்சேரியும், அரட்டைகளும், தினசரிகள் பார்த்து அரசியல் அலசல்களும் நடக்கும். எப்போதும் எல்லாரும் சீட்டு விளையாடும் இடம் என்பதால் அதற்கு சங்கம் என்று பெயரிட்டு இருந்தார்கள் ஐயாவின் நண்பர்கள். 

கீழ்வாசலில் நின்று கண்ணைச் சுருக்கியபடி ”சீக்கிரம் கொடாத்தா “ என்று பரபரத்து கொண்டிருந்தார் சோமண்ணன்.

வெற்றிலை பொகையிலை போட்டுச் சிவந்திருந்த வாய்க்கு ஈடாக ராத் தூக்கமில்லாமல்  செக்கச் செவேலனக் கிடந்தன சோமண்ணனின் கண்கள்.


எப்போது பார்த்தாலும் அவர் முகத்தில் ஒரு சிரிப்பு ஒட்டிக் கொண்டிருக்கும். மாநிறம்தான் என்றாலும் சூரியனை உலவ விட்டதுபோல் இரண்டு கண்ணும் ஜொலிக்கும். எல்லாருக்கும் வாய் சிரிக்கும் என்றால் சோமண்ணனுக்குக் கண்ணுதான் முதலில் சிரிக்கும். ஐயாவுக்கு அமையும் ஆட்களும் ஐயாவைப் போலவே.

ஐயாவின் கண்கள் போல சாந்தமானவை அண்ணனின் கண்களும். ஒற்றை நாடி சரீரம். லேசாய் வழுக்கை விழுந்த தலை. ஒரு ப்ளெயின் சட்டை, கட்டம்போட்ட லுங்கி இதுதான் அவர் அணிவது.

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

முத்தாயி.

முத்தாயி:-

பள்ளிக்கூடம் விட்டுப் பிள்ளைகளுடன் ஆடிக்கொண்டே வந்தாள் முத்தாயி. வீட்டின் எதிரேதான் பள்ளிக்கூடம். அவளுடன் அஞ்சாப்பு படித்த ரேவதியும் காமாட்சியும் தோளில் கைபோட்டு ஒஞ்சரிச்சுச் சாய்ஞ்சபடி வந்தார்கள்.

சனி, 4 ஏப்ரல், 2020

ஒப்பிலாள் - பெண்களின் குரலில்.

ஒப்பிலாள்.

னா செட்டியார் கடுதாசில போட்டபடி நாளானைக்குக் கிளம்பி வாராகளாம். நாகப்பட்டினம் கப்பலடிக்குப் பிளைமவுத் கார் அனுப்பச் சொல்லித் தந்தி அடிச்சிருக்காக வெனையத்தாச்சி” என்றபடி தந்தி தபால் ஆபீசில் இருந்து வந்த ஊழியர் தந்தியை உடைத்துப் படித்தார். அரசப்பன் செட்டியாரின் ஆத்தா வெனையத்தாச்சி தபால்காரர் கையில் ஒரு ரூபாய் நோட்டைக் கொடுத்து "நல்ல சேதி சொன்னே தம்பி வைச்சுக்க" என்றார்கள்.

“அடி ஒப்பிலா. ஓசைமணி காளிக்குக் காசெடுத்து வையி. பாப்பாத்திக்குப் படைக்கோணும். முத்தாத்தாளுக்கு மாவெளக்கு வைக்கோணும்” என்றபடி தன் சேவல்கொண்டையைச் செருகிக்கொண்டே விபூதி பூசிக்கொண்டார் வினை தீர்த்தாள் ஆச்சி.

பிள்ளைகளுக்குத் தூக்குச் சட்டியில் பள்ளிக்கோடத்துக்குச் சாப்பாடு கட்டிக் கொண்டிருந்த ஒப்பிலா ஆச்சி ”அதான் தெரிஞ்ச விசயமாச்சே, மகனைக் காணமுன்னே ஆத்தா இந்தச் சத்தம் போடுறாக. மகனை கண்டுபிட்டா ஒரே ஆட்டபாட்டம்தான்” என மோவாயை இடித்தபடி உள்ளே சென்றாள்.

சேதியைக் கேட்ட பிள்ளைகளுக்கெல்லாம் கொண்டாட்டம். அப்பச்சி வந்தா மலயா ரிப்பன், முட்டாயி, ரப்பர், ப்ளேடு, ஸ்டிக்கர், டேப்பு, வெளையாட்டுச் சாமான், கைக்கெடிகாரம், பிஸ்கட்டு டின்னு, துணிமணி அம்புட்டும் வருமே. கேக்கும்போதே மலயா வாசம் அடித்தது அவர்கள் மனசுக்குள்.

மலயாச் சாமான் வைச்சிருக்கிற வளவறைக்குள்ள ஆத்தா விடுறதேயில்லை என்ற ஏக்கம் அவர்கள் நெஞ்சுமட்டும் நிரம்பி இருந்தது. அப்பச்சி வந்தா ரொட்டி முட்டாய் வேஃபர்ஸ் கிடைக்கும் என்ற இனிப்புக் கனவோடு பள்ளிக்கு வேண்டாவெறுப்பாய்க் கிளம்பினார்கள்.

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

சூரியப்ரபை சந்திரப்ரபை.

சூரியப்ரபை சந்திரப்ரபை.

விவசாயம் பொய்த்துக் கொண்டிருந்தது. தண்ணீர் வரத்து இல்லாமல் கொள்ளிடம் கருவாட்டு மணலாய்ச் சுருண்டிருந்தது. கால்வாயும் வாய்க்காலும் வெள்ளமாய்ப் பொங்கி மடைதிறந்து முப்போகம் விளைந்த பூமியில் இன்று போர் போட்டு ஒரு போக விவசாயம். வந்தால் வெள்ளமும் புயலும் வந்து கெடுக்கிறது. இல்லாவிட்டால் பாயிவரப்பான்கள் அணையைத் திறக்க மாட்டேன் என்கிறான்கள். ”கோபாலா காப்பாத்து.” கவலையோடு பட்டாலையில் குறிச்சியில் சாய்ந்திருந்தார்கள் ஆவுடையப்பன் செட்டியார்.
”அப்பச்சி” என்று அழைத்தாள் லெச்சுமி. மாசமான வயிறு சொலிந்து இருந்தது. லேசான சோகையோடு கால் மாற்றிக் கால் வைத்தபடி நின்றிருந்தாள். வலி பின்னி எடுத்தது. இது சூட்டு வலியோ.
”சொல்லாத்தா. இடுப்பை நகத்துதா. இந்தா தங்கண்ணன் கிட்ட காரை எடுக்கச் சொல்லி இருக்கேன் சுகுமாரம்மாவுக்கு ஃபோன் பண்ணி இருக்கேன். எப்ப வேணாலும் வாங்கன்னு இருக்காக. உங்க ஆத்தா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்.”
”அப்பச்சி நீங்கதான் எனக்குத் தாய் தகப்பன்.”கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் லெச்சுமி. கண் கலங்கியது இருவருக்கும். 
”நீ கவலைப்படாதாத்தா. அக்கினியாத்தாளும் நரியங்குடிக் கருப்பரும் தொணையிருப்பாக.” கையைத் தட்டிக் கொடுத்துப் பிடித்துக் கொண்டார்கள் ஆவுடையப்பன் செட்டியார்.
’மூணும் பொண்ணாப் போச்சு. அடுத்தாவது மகளுக்கு மகனைக் கொடுங்கப்பா பழனி தெண்டாயுதபாணி. ராச கோபாலா ’
அப்பச்சி சாமி வீட்டைத் திறந்து உள்ளே போய் விபூதி எடுத்துவந்து பூசுவதற்கும் அடுத்தடுத்த வலி வெடுக் வெடுக்கென அவளைத் தாக்கவும் சுருண்டு கொண்டிருந்தாள் லெச்சுமி. ஆத்தாப்பொண்ணு கையைப் பிடித்து அமர்ந்திருந்த ஆவுடையப்பனுக்கு மகளைப் பார்த்து மனசு நிலை கொள்ளவில்லை.

சனி, 28 செப்டம்பர், 2019

சூலாட்டுக்குட்டி.

சூலாட்டுக்குட்டி.

ல்லிகைப்பூ வாசம் மூக்கைத் துளைத்தது. அதையும் மீறி அடித்துக்கொண்டிருந்தது மூத்திர நாற்றம். மப்ளரைச் சுற்றியபடி கதவைத் திறந்து பார்த்தவர் வாக்கிங் போகும் எண்ணத்தைக் கைவிட்டு கைப்பிடியில் மாட்டியிருந்த மல்லிகைப்பூப் பையை எடுத்து அவசரமாகத் தாழ் போட்டார்.

’திரும்பவும் ஒண்ணுக்குப் போயிட்டாளா’. யோசனையாய் படுக்கை அறைக்கு வந்தவர் போர்த்திப் படுத்திருந்த மனைவியின் முகத்தில் அரை டம்ளர் தண்ணீரை ஊற்றினார். மப்ளரைக் கழட்டி வீசினார்.

புதன், 25 செப்டம்பர், 2019

சுப் சிப் ஆனந்தம்.

சுப் சிப் ஆனந்தம்.

அந்த வேகன் ஆர் வேகமாகப் போய்க்கொண்டிருந்தது. வளைவுகளில் அபாரமாகத் திருப்பிய கவிதாவுக்கு இருபத்திமூன்று வயது.

“ஃபாஸ்டா கத்துக்கிட்டே. குட் ட்யூட் ! “ வியந்த ப்ரசன்னாவுக்கு வயது முப்பது. இருவரும் லீடிங் ஜர்னலில் ஃப்ரீலான்சிங் ஜர்னலிஸ்ட்ஸ். ஆன்மீகம் அரசியல் என்று எல்லா அக்கப்போரையும் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்ந்து ரவுண்டு கட்டி கட்டம் போட்டு நியூஸ் அனுப்புவார்கள்.

”ஆட்டோ கியர் . ஜஸ்ட் லைக் டூவீலர்ஸ். என்ன லெஃப்ட் அண்ட் ரைட் சைஸ் கொஞ்சம் பெரிசு. ரோட் கான்ஷியஸ் கொஞ்சம் இருந்தா போதும். ஓட்டிறலாம்.”

“ட்ரை பண்றியா “ கேட்டுக்கொண்டே அந்தப் பத்ரிக்கை அலுவலகத்துக்குள் நுழைந்து சர்ரென்று வளைத்துக் காரை நிறுத்தினாள் கவி என்ற கவிதா.

”புது அசைன்மெண்ட்.. கொஞ்சம் கேபினுக்கு வா.": .. மேலதிகாரி விட்டலிடமிருந்து ஒரு மெசேஜ் ஒளிர்ந்தது.

”எனக்கும் சேர்த்து ஒரு சாண்ட்விச் காஃபி ஆர்டர் பண்ணு . ஃபைவ் மினிட்ஸ்ல வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்”. என்றவள் மூடத்துவங்கிய லிஃப்டில் தாவினாள்.

”அது என்ன காலா ரெக்கையா. இப்பிடிப் பறக்குது “ நினைத்துக்கொண்டே ப்ரசன்னா கேண்டீனுக்குத் திரும்பினான்.

சனி, 8 டிசம்பர், 2018

அழகப்பா பல்கலைக்கழகத்தில் 2018ஆம் ஆண்டு பன்னாட்டுக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக.



20 ஆம் நூற்றாண்டுத் தமிழ்ப்புதின, சிறுகதை ஆசிரியர்கள் பற்றிய பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்று அழகப்பா பல்கலைக்கழகத்தில் 6. 12.2018 வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. அதில் மூன்று சிறப்பு விருந்தினர்களில் ஒருவராகக் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க அழைப்பு வந்தது.

பேராசிரியர் திரு. அய்க்கண் அவர்கள், பேராசிரியர் திரு. இராகுலதாசன் அவர்கள் ஆகியோரோடு வலைப்பதிவர் & எழுத்தாளரான என்னையும் தமிழ் உயராய்வு மையத்தின் இயக்குநர் திருமதி செந்தமிழ்ப்பாவை அழைத்திருந்தார்கள்.



இந்தக் கருத்தரங்கம் லெ.சித.லெ. பழனியப்ப செட்டியார் கலையரங்கத்தில் நடைபெற்றது.

வெள்ளி, 24 நவம்பர், 2017

கேட்காதவள்.



கேட்காதவள்.

கார்த்திகை.. எங்கே சொல்லு “ மாடிப்படியோரம் கீழ்க்கண்ணால் பார்த்தபடி அமுதாக்கா கேட்டாள்.

“தார்த்திதை” என்றாள் ஆனந்தி. 

செல்லமாகத் தட்டித் திரும்பவும் ”கார்த்திகை” ன்னு சொல்லுடி வாலு ” என்றாள்.

”தார்த்திதை” என்றாள் அவள் முகத்தைப் பார்த்தபடியே ஆனந்தி. 

”நாக்கை எதுக்குப் பல்லோட ஒட்டுறே… கா.. கா சொல்லு. கார்த்திகை ” என்றாள். ”தா தா தார்த்திதை” என்று அவள் சொல்லவும் மாடிப்படியிலிருந்து இறங்கி இவர்களைப் பார்த்துப் புன்னகைத்தவாறு கார்த்திகேயன் செல்லவும் சரியாக இருந்தது. வெட்கத்தோடு இவளை இழுத்து அணைத்து உம்மா கொடுத்தாள் அமுதாக்கா. சரியா சொல்லிட்டோம் போல என நினைத்து இவளும் பதிலுக்கு அக்காவுக்கு உம்மா கொடுத்தாள். கன்னமெங்கும் அக்காவின் பவுடர் மணத்தது.

யேய்.. உக்கி போடுடி.. பெரியம்மா கூப்பிட்டுட்டு இருக்காங்க. கேக்காதமாதிரி சொப்பு வைச்சு விளையாடிட்டு இருக்கே. வா இங்கே இந்தப் புள்ளையாருக்கு எதுக்கால உக்கி போடு “

காதைப் பிடித்து முருகு அத்தான் இழுத்துச் சென்று தோப்புக்கரணம் போட வைக்க என்ன செய்தோம் எனக் குழம்பியவாறு தொடை வலிக்க வலிக்க அவன் போதும் என்று சொல்லும் வரை உக்கி போட்டு அமர்ந்தாள் ஆனந்தி. வலியில் கண் கசிந்தது. ரௌடிப்பய. முறைச்சா அடிச்சாலும் அடிச்சிருவான். 

“எப்பக் கூப்பிட்டாங்க.” அது கூடத் தெரியாமயா விளையாடிட்டு இருந்தோம். குனிந்து அமர்ந்து சொப்பு சாமான்களை அடுக்கினாள். 

“அத்த கூப்பிட்டீங்களா” ஓடிப்போய்க் கேட்டாள். 

“ஆமா. எப்பக் கூப்பிட்டேன். எப்ப வர்றே .. வர வர மெய்மறந்துகிட்டே போறே “ என்று டோஸ் வைத்த அத்தை மாங்கொட்டைகளைக் கொடுத்து ”இந்தா போய் சாப்பிடு” என்றாள். பெரிது பெரிதாக துண்டு துண்டாக இருந்ததே. புளித்த கொட்டைகளை சாப்பிட்டுவிட்டுக் கைகழுவினாள். 

டீ ஆனந்தி.. நில்லு நில்லு” என வேக வேகமாக ஓடி வந்து காலண்டரைப் பறித்துக் கொண்டாள் புஷ்பா. வகுப்புத் தோழி. 

சனி, 21 அக்டோபர், 2017

கறிக்குழம்பு.


கறிக்குழம்பு.

வெசம் வைக்கத்தான் காசு வாங்கிட்டுப் போனியா “ முகமெல்லாம் ஜிவுஜிவுக்க வாசலிலேயே நிற்கவைத்து கேள்விச் சவுக்கால் விளாசிக் கொண்டிருந்தாள் புவனா.

“யக்கா என்ன அக்கா இப்பிடி கேக்குறீங்க. என்னய போய் இப்பிடிக் கேட்டீங்களே அக்கா.. “ திக்கித் திக்கி அழுது கொண்டிருந்தாள் கங்கம்மா.

“ஆத்தாளைப் பாத்துக்குறேன், ஆத்தாளைப் பாத்துக்குறேன்னு காசு வாங்கிக்கிட்டு கடோசீலஅண்ணன் தம்பி வீட்ல கொண்டு போய்த் தள்ளுனது பத்தாதா. சொத்த வாங்கக் கையெழுத்துக் கேட்டீங்க சரி. அது ஏண்டி ஒத்தப் பொட்டப்புள்ளயா ஒன்னப் பெத்தவளுக்கே வெசம் வைச்சுக் கொன்னு போட்டே பாவி “ கண்கள் கலங்க ஓங்கிக் குரலெடுத்து ஆங்காரமாய்க் கத்திக்கொண்டிருந்தாள் புவனா. கோபத்தில் அவள் உடல் அதிர்ந்து ஆடிக்கொண்டிருந்தது.

”யக்கா என்ன நம்புங்கக்கா. நான் வெசம் எல்லாம் வைக்கல. அது ஆசைப்பட்ட கறிக்கொழம்பைத்தான் கொண்டு போனேன். சோத்துல போட்டு ஊட்டும்போது கூட கண்ணீர் விட்டுக்கிட்டே சாப்பிட்டுச்சுக்கா.. யக்கா. நானே எங்காத்தாளுக்கு வெசம் வைப்பனா..”

“இத எல்லாம் நம்பச் சொல்றியா. அப்பிடியே வெளிய போயிரு. எனக்கு ஆளும் வேணாம் தேளும் வேணாம். ஒம் மூஞ்சீல முழிக்கக்கூடப் பிடிக்கல. நீயெல்லாம் ஒரு மனுசியா. நீ சமைச்சத இனி எனக்குத் திங்கப் பிடிக்குமா. எங்க எனக்கும் வெசம் வைச்சிருவியோன்னுதான் பயமா இருக்கும் .. போ வெளியே “ என்று கத்தினாள் புவனா.

அவளது மூர்க்கத்தின் முன் நடுங்கி மயக்கம் வந்தவளாய்த் தடுமாறி எழுந்து சுவரைப் பிடித்து கதவைப் பிடித்து அழுது வடிந்த கண்களை முந்தானையால் துடைத்தபடி வெளியேறினாள் கங்கம்மா.

திங்கள், 22 மே, 2017

பத்மயக்ஞம்.

பத்மயக்ஞம் :-

“என்னை ஏன் படைத்தாய் ?” ஒன்றல்ல இரண்டு பெண்கள் கேள்விக்கணைகளோடு கண்கசிய நின்றிருந்தார்கள் பிரம்மனின் முன். ரூப தீர்த்தத்தில் நீராடிய ஒருத்தியும் நாக குண்ட் இல் நீராடிய ஒருத்தியும் கூந்தல் நீர் சொட்ட கைகூப்பி நிற்க, தலையைப் பாரமாக்கிய க்ரீடத்தைக் கழட்டி வைத்துவிடலாமா என்று யோசித்தபடி நாலாபுறமும் பார்த்தார் நான்முகன்.

”ஏன். ஏன்?” என்று எத்தனை கேள்விக்கணைகள் அவர்முன். ’என்னை ஏன் படைத்தாய்’ என்று நித்தம் நித்தம் எத்தனை கோபாக்கினிகள் ?. அவருக்கு மட்டும் பதில் தெரியுமா என்ன. கைக்கு வந்ததை உருவாக்கி உலவவிடுதலே பணி. கிடைத்த மண்ணில் வனைந்த பாண்டம். கண்மூடி மௌனித்தார் இதைக் கேட்கவேண்டியே டெல்லியிலிருந்து ஒருத்தியும் சிதம்பரத்திலிருந்து ஒருத்தியும் புஷ்கருக்குக் குடும்பத்தோடு வந்திருந்தார்கள்.

”பிதுர்வரம்.” என்ற வார்த்தைகள் உதிர்ந்தன அவர் வாயிலிருந்து. பிரம்மனா பேசினார் ?. ’என்னது, பிதுர்வரமா ?’ சன்னதியில் எதிரெதிரே நின்றிருந்த இருவரும் உடல் சிலிர்த்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். என்ன அழகு எத்தனை அழகு கோடிமலர் கொட்டிய அழகு என்றிருந்த நீரஜாவைப் பார்த்த கணத்தில் பத்மாவதியின் புத்தி பேதலித்தது. பிள்ளைகுட்டிகள் நட்சத்திரங்களாய்ச் சூழ பூரணநிலவைப் போலிருந்த பத்மாவதியின் களை நீரஜாவை வைத்தகண் மாறாமல் பார்க்கச் செய்தது.

வெள்ளிக் காசுகளை வெள்ளிக்  கூர்மத்தின் மேல் பதித்துக் கொண்டிருந்தார்கள் பத்மாவதியின் பிள்ளைகளும் மருமக்களும். நாற்பத்தி மூன்று வயது பத்மாவதிக்குப் பதினெட்டிலேயே ராஜகோபாலுடன் திருமணமாகிப் பத்தொன்பதில் பெண்ணும் இருபது வயதில் பிள்ளையும் பிறந்திருந்தார்கள். அவளது நாற்பதாவது வயதில் பெண்ணுக்குத் திருமணமாகி நாற்பத்தி ஒன்றில் பேத்தியும் பிறந்துவிட்டாள். இரண்டு வயது அபியும் அம்மா அப்பாவோடு தொத்திக்கொண்டு காசு பதித்து சந்தோஷத்தில் கைதட்டியது.

பாட்டியைப் பார்த்து ஓடி வந்து காலைக் கட்டிக் கொண்ட அபியை அணைத்த பத்மாவதியின் கண்களில் இருந்து யாரும் பார்க்குமுன் இருசொட்டுக் கண்ணீர் சுண்டித் தெறித்தது கூர்மத்தின் மேல். சிலிர்த்தார் விஷ்ணு. பிரியத்தைக் கொட்டும் கணவன். நிறைவான வாழ்க்கை வாழ்ந்த இவளுக்கென்ன குறையென்று நோக்கினார்.

தொப்பக்கா என்று உறவினர்களாலும் ஜப்பான் சுந்தரி என்று தாத்தாவாலும் கட்டச்சி என்று தம்பியாலும் கருவாச்சி என்று புகுந்த வீட்டாராலும் நாமம் சூட்டப்பட்ட தனக்கு கொள்ளைப் பிரியம் காட்டும் கணவன் கிட்டியிருந்தாலும் என்ன மனக்குறை என்று இவருக்குத் தெரியாதா என்ன ? என் அப்பா அம்மா தாத்தா பாட்டி அனைவரும் என்னைப் போலில்லையே. நான் மட்டும் ஏன் கறுப்பாய்க் குட்டையாய் குண்டாய் சப்பைமூக்காய் இருக்கிறேன் என யோசனையாய் நிமிர்ந்து பார்த்தவள் கண்ணுக்குள் பிரம்மனின் உதடு அசைந்தது.

ஞாயிறு, 27 நவம்பர், 2016

ஸ்ட்ரோக் :-

ஸ்ட்ரோக் :-

ஸ்க்ரீன் சேவரில் வைத்திருந்த அஞ்சனாவின் கண்களையே பார்த்தபடி அமர்ந்திருந்தார் ஜோ. பேசும் கருவிழிகள். பேச்சற்று நிறுத்தும் விழிகள். எத்தனை மொழிகள் இருந்தென்ன மொழியற்று அமரவைக்கும் இவள் பார்வை ஒன்றே போதாதா. எதற்காக மொழிகளுக்கு ஏங்குகிறோம், அது தரும் போதைக்கும் என  நினைத்தபடி மனமில்லாமல் ஸ்க்ரீனை மேலே தள்ளியபோது மெசெஜ் ஒன்று வந்திருந்தது அவளிடமிருந்துதான்

.
மூன்று குழந்தைப் புகைப்படங்கள். அன்று க்ரீமி இன்னில் எடுத்தது. குழந்தைப் பொண்ணு. இல்லை பயபுள்ள. பதினைந்து வயதில்தான் பெரியவளானாளாம். பத்துவயது வரை ஆண் என்றே எண்ணிக் கொண்டாளாம். சிரிப்பு வந்தது அவருக்கு. அழகான தோள்பட்டைகள். அதில் நிம்மதியாகச் சாய்ந்து கொள்ளவேண்டும் போலிருந்தது. எப்போது என்றுதான் தெரியவில்லை.


வெள்ளி, 4 நவம்பர், 2016

நந்தினி :-



                   நந்தினி

ந்த ஆஸ்பத்திரியின் வெளி கேட் வரை அமர்ந்திருந்த மக்கள் கூட்டம் நின்றுகொண்டும் நகர்ந்து கொண்டும் ஒழுங்கற்ற அசைவோடும் இரைச்சலோடும் உணர்ச்சி வசப்பட்டும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தது.

“அந்த டாக்டரம்மாள வரச் சொல்லு. என் புள்ளய கொன்னுட்டா.. இப்ப என் மாப்பிள்ளையும் தூக்கு மாட்டி செத்துட்டாரு.” பச்சைபிள்ளைபோல மேல்துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டு அழுதுகொண்டிருந்தார் கதிரேசன்.

”பொம்பளையா அவ.. அவளுக்கு மனசாட்சி இல்ல. இந்த ஆசுபத்ரியே வேணாம்னே. கொலைகாரப் பயலுவ. ஒழுங்கா கெவனிக்க மாட்டானுவ. போன வருஷம் நம்ம வெள்ளையன் மகளும் பிரசவத்துல செத்துப் போச்சுல்ல.. “ என்று கூடவே சேர்ந்து யார் யாரோ குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

”டாக்டரம்மா வந்தாத்தான் வாங்கிட்டுப் போவோம்.”

சனி, 8 அக்டோபர், 2016

திருநிலை. - தினமலர் வாரமலரில் வெளியான சிறுகதை.

திருநிலை.

டிங் டிடிங் டிங் டிடிங் என்று தொடர்ந்து ஒலித்த காலிங்பெல் திருநெலை ஆச்சியின் நெஞ்சத்துடிப்பை அதிகமாக்கியது. பூக்காரம்மா, பேப்பர்காரன், பால்காரப்பையன், தண்ணி கேன் கடைக்காரர், கூரியர் போஸ்ட், வேலை செய்யும் முத்தி யாராக இருந்தாலும் ஏன் இப்பிடி மண்டையிலடிப்பதுபோல காலிங்க்பெல்லை அடிக்கிறார்கள் என்று அவுகளுக்கு நெஞ்சப்பாரடித்தது. டிடிங் டிடிங் என்று பூட்டைத் திறக்கும்போதெல்லாம் மணியடித்தது போல் சத்தமிடும் பெரியவீட்டின் பட்டாலை முகப்புக்கதவு அவர்களின் கண்ணுக்குள் வந்து போனது.

எழுபத்தியைந்து வயதைச் சுமந்த உடம்பை அசைத்துச் சென்று கதவைத் திறந்தால் பேரமிண்டியும் பேரனும் நின்றிருந்தார்கள். வாசப்படி நிலையில் நிக்கமுடியாமல் யார் இப்பிடிக் காலிங்பெல்லை உடைக்கிறது என்று கோபமாகக் கேட்க நினைத்தவர் மௌனமாகத் திரும்பி வந்து தன்னுடைய திண்டில் அமர்ந்தார். அப்பத்தா வீட்டு ஐயாவின் பெயரிட்டுக் கொண்ட அவுக பிரியத்துக்குரிய பேரன் ஐயப்பனைக் கோச்சுக்க முடியுமா. புள்ளகூட்டியே வந்த வீட்டில் மொதமொதலாப் பொறந்த பேரன். அவனுக்காகத்தானே எல்லாம். கேட்ட விளையாட்டுச் சாமானை எல்லாம் வாங்கிக் கொடுத்தமாதிரி இப்ப கேட்ட பூர்வீக வீட்டையும் உடைக்கக் கொடுத்திருக்கிறாக.