எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 24 நவம்பர், 2017

கேட்காதவள்.கேட்காதவள்.

கார்த்திகை.. எங்கே சொல்லு “ மாடிப்படியோரம் கீழ்க்கண்ணால் பார்த்தபடி அமுதாக்கா கேட்டாள்.

“தார்த்திதை” என்றாள் ஆனந்தி. 

செல்லமாகத் தட்டித் திரும்பவும் ”கார்த்திகை” ன்னு சொல்லுடி வாலு ” என்றாள்.

”தார்த்திதை” என்றாள் அவள் முகத்தைப் பார்த்தபடியே ஆனந்தி. 

”நாக்கை எதுக்குப் பல்லோட ஒட்டுறே… கா.. கா சொல்லு. கார்த்திகை ” என்றாள். ”தா தா தார்த்திதை” என்று அவள் சொல்லவும் மாடிப்படியிலிருந்து இறங்கி இவர்களைப் பார்த்துப் புன்னகைத்தவாறு கார்த்திகேயன் செல்லவும் சரியாக இருந்தது. வெட்கத்தோடு இவளை இழுத்து அணைத்து உம்மா கொடுத்தாள் அமுதாக்கா. சரியா சொல்லிட்டோம் போல என நினைத்து இவளும் பதிலுக்கு அக்காவுக்கு உம்மா கொடுத்தாள். கன்னமெங்கும் அக்காவின் பவுடர் மணத்தது.

யேய்.. உக்கி போடுடி.. பெரியம்மா கூப்பிட்டுட்டு இருக்காங்க. கேக்காதமாதிரி சொப்பு வைச்சு விளையாடிட்டு இருக்கே. வா இங்கே இந்தப் புள்ளையாருக்கு எதுக்கால உக்கி போடு “

காதைப் பிடித்து முருகு அத்தான் இழுத்துச் சென்று தோப்புக்கரணம் போட வைக்க என்ன செய்தோம் எனக் குழம்பியவாறு தொடை வலிக்க வலிக்க அவன் போதும் என்று சொல்லும் வரை உக்கி போட்டு அமர்ந்தாள் ஆனந்தி. வலியில் கண் கசிந்தது. ரௌடிப்பய. முறைச்சா அடிச்சாலும் அடிச்சிருவான். 

“எப்பக் கூப்பிட்டாங்க.” அது கூடத் தெரியாமயா விளையாடிட்டு இருந்தோம். குனிந்து அமர்ந்து சொப்பு சாமான்களை அடுக்கினாள். 

“அத்த கூப்பிட்டீங்களா” ஓடிப்போய்க் கேட்டாள். 

“ஆமா. எப்பக் கூப்பிட்டேன். எப்ப வர்றே .. வர வர மெய்மறந்துகிட்டே போறே “ என்று டோஸ் வைத்த அத்தை மாங்கொட்டைகளைக் கொடுத்து ”இந்தா போய் சாப்பிடு” என்றாள். பெரிது பெரிதாக துண்டு துண்டாக இருந்ததே. புளித்த கொட்டைகளை சாப்பிட்டுவிட்டுக் கைகழுவினாள். 

டீ ஆனந்தி.. நில்லு நில்லு” என வேக வேகமாக ஓடி வந்து காலண்டரைப் பறித்துக் கொண்டாள் புஷ்பா. வகுப்புத் தோழி. 


”எனக்கொன்னு குடுத்துட்டுப் போன்னு சொல்றேன். கேக்காத மாதிரி போய்கிட்டே இருக்கியே. கடோசில சாமி படமா கொண்டாந்து கொடுப்பே. எனக்கு பாப்பா போட்ட காலண்டர்தான் வேணும். ”

அம்மாவும் பெரியம்மாவும் சில்வர் பாத்திரக் கடை நடத்தி வந்தார்கள். வருடா வருடம் பள்ளியில் புத்தாண்டு அன்று கடை விளம்பரம் போட்ட காலண்டர் விநியோகம் இவள் வசம்தான்.  இவளின் மவுசு அன்று அதிகமாகிவிடும். பிலுக்கிக் கொண்டே தன் தோழிகளுக்குக் கடைசியாகக் கொடுப்பாள். இதில் “ உங்களுக்கு வேணும்னா நான் வேண்டியத நாளைக்குக் கூடக்  கொண்டு வந்து திரும்பக் கொடுக்கலாம்டி. ஆனா மத்த வகுப்புக்கு எல்லாம் கேட்டத கொடுத்தாதானே மாட்டுவாங்க. ”

”போடி பெரிய இவ. ஃப்ரெண்ட்ஸ்தாண்டி மொதல்ல முக்கியம். மத்தவங்களுக்கு அப்புறம் கொடுக்கணும். ” என்று கோபித்துக் கொண்ட சாந்தி  இவள் கேட்க கேட்க கேட்காமல் போய்விட்டாள் என்று அரைப் பரிட்சை வரை பேசவேயில்லை. அதன் பின் காண்டீனில் சில்லரை தட்டுப்பாட்டில் தேன் மிட்டாய் வாங்கும்போது சேர்த்து வாங்கிக் காக்காய்க் கடி கடித்துப் பிரித்துக் கொண்டு சமரசமானார்கள். 

குளமும் வயலும் வரப்புமாய் இருக்கும் பள்ளியில் ஹாஸ்டல் பக்கம் மட்டும் போகக் கூடாது. “சாந்து அரைச்சு கை எல்லாம் எரியுதுடி” என்று சொன்ன அல்போன்ஸிற்கு தனி காலண்டர் எடுத்து வைத்து இருந்தாள். இந்த வருடம் அவள் வேறு பிரிவுக்குப் போய்விட்டாள். 

காலண்டரை வாங்கிக் கொண்ட அல்போன்ஸ் ”என்ன நீ மறக்கவே இல்லடி தாங்க்ஸ்டி ஆனா பொட்டிலதான் வைக்கணும். பாப்பா படம் அழகுடி. அடுத்த வருஷம் கட் பண்ணி எடுத்து வைச்சுக்குவேன். “ என்று பிரியத்தோடு கைபிடித்துக் கொண்டாள். 

ட்ரெஸ் ரொம்ப அட்டகாசமா இருக்கே.” சொன்ன எதிர்வீட்டம்மா க்ரேஸ், ஆனந்தி வீட்டுக் கேட்டைத் திறந்து ஒன்றும் சொல்லாமல் திரும்பிப் பார்த்துவிட்டுப் போனதைப் பார்த்து ‘ரொம்ப ஹெட்வெயிட்’ என நினைத்துக் கொண்டார்.

அவர் ஏன் இப்போதெல்லாம் பார்த்தால் கூடப் பேசுவதில்லை. பார்க்காத மாதிரி போகிறார் என்று ஆனந்திக்குக் குழப்பம். எத்தனை முறை கிறிஸ்துமஸுக்கும் தீபாவளிக்கும் இனிப்புத்தட்டுகள் மாறி மாறி உலா வந்திருக்கும். ஏதோ கோபமாயிருக்காங்க போல. 

பிள்ளைகள் இருவருக்கும் பப்ளிக் எக்ஸாம். படிக்க வைக்க வேண்டிய வேலை. அதை அடுத்து வேறு ஊர் மாற்றலாகிவிட பாக்கிங்கில் அப்படியே மறந்துவிட்டாள் ஆனந்தி. போகும்போது போய் சொல்லிக் கொண்டுதான் சென்றாள். 

ண்ணீ கொடும்மா. லேசா வெந்நீர் வேணும்.” பிள்ளைகளுக்குச் சாப்பாடு போட்டுக் கொண்டிருந்தாள் ஆனந்தி. மாமா சொன்னதைக் கேட்டுக் கொள்ளவில்லை.

“கேக்காத மாதிரியே உக்கார்ந்து இருக்கதப் பாரு” என்று மோவாயில் இடித்துக் கோபித்தவாறு அத்தை எழுந்து சென்று அடுப்படியில் சட்டியை சடசடவென உருட்டி எடுத்து வெந்நீர் சுடவைத்தார்.

‘என்ன செய்கிறார்’ என எட்டிப் பார்த்த ஆனந்தி ’செரிமானக் கோளாறு போல. குடிக்க வெந்நீர் வேணும்போல’ என்று சாப்பிட அமர்ந்து விட்டாள். மாமா வெந்நீர் கேட்டதே தெரியவில்லை அவளுக்கு.

ப்பா.. அம்மா எல்லார் கூடவும் ஃப்ரெண்டாயிடுறாங்க. அம்மாவும் பக்கத்துவீட்டு ஆண்டியும் சாயங்காலம் பேசிக்கிட்டு இருந்தாங்கப்பா.”

“ஒரே சமயத்துலயா..”

“ஆமாம்பா.”

”ரெண்டு பேரும் அட் அ டைம்ல பேசி இருப்பாங்களே. ஒருத்தர் சொல்லும்போதே அடுத்தவங்க மறிச்சு மறிச்சு. ”

”அட ஆமாம்பா. ”

”அதுதானே அவ வழக்கம். எதையும் காது கொடுத்துக் கேட்டுக்கமாட்டா. ஒருத்தங்க பேசும்போதே பேசுவா. குறுக்கே குறுக்கே பேசுவா. பேசுனதே மறந்துரும் நமக்கு. ”

”ஆ.. ஆமாம்பா. ”

”அப்புறம் நம்மகிட்ட வந்து நாங்க ரெண்டு பேரும் நல்லா பேசிக்கிட்டு இருந்தோம்க அப்பிடிம்பா. அவங்க சொல்றது எதையும் இவ கேட்டாத்தானே.”

”ஏங்க ஏங்க இப்பிடி. இன்னிக்கு உங்களுக்கு ஊறுகா நானா. அவங்க சொன்னத கேட்டுக்கிட்டேதாங்க பேசுனேன். அவங்க வீட்டுக்காரர் வெளிநாட்டுல இருக்காராம். பையன்களுக்கு கல்யாணமாயிடுச்சு. பொண்ணுக்குப் பார்த்துக்கிட்டு இருக்காங்க. அம்மா அப்பா பக்கத்துத் தெருவுல இருக்காங்கன்னுதான் இங்க வீடு எடுத்திருக்காங்க. ஆக்சுவலா அவங்களுக்கு பூர்வீக வீடு கிராமத்துல இருக்காம். அவங்க பேசுறத கேட்டுக்காம நான் எப்பிடிங்க இதெல்லாம் சொல்ல முடியும்.”

”பசுமாட்டுப் பால் எங்க கிடைக்கும் ?. வேலைக்கு ஆள் சௌரியமா கிடைக்குமா? . இங்க பக்கத்துல லைப்ரரி இருக்கா இதெல்லாம் கேட்டுட்டு இருந்தேன்.” பையனைப் பார்த்து முறைத்தாள். ”டேய் உனக்கு டியூஷன் செண்டர் எங்கேன்னும் விசாரிச்சு வைச்சிருக்கேன். டிவி அலறுது பாரு. இவ்ளோ சவுண்ட் என்னத்துக்கு. காது ஜவ்வு பிஞ்சுரும்போல. அணைச்சிட்டுப் போய் படிடா பெரிய மனுஷன் மாதிரி கிண்டலடிக்க வந்துட்டான்” என விரட்டினாள். 

”ஆமா நாங்க டிவி பார்த்தா பாட்டுக் கேட்டா ஒனக்கு சவுண்டு மட்டும் ஜாஸ்தியா கேக்கும் .. முக்கியமா பேசினா, கூப்பிட்டா கேக்கவே கேக்காது. அலறணும். காரியச் செவிடு. ” கடுப்பாக ரிமோட்டைப் பிடுங்கி அமானுஷ்யமாக அலறும் ஆங்கிலப் படத்தைப் பார்க்கத் துவங்கினான் ஆனந்தியின் கணவன்.

காய்ந்த துணிகளை மடித்து வைத்தவள் இரவு உணவு செய்ய எழுந்து சென்றாள். இவர் கிண்டல் எப்போதான் மாறுமோ. தன்னை மட்டம் தட்டுவதே வேலை. ’ஒவ்வொருத்தர் மாதிரி நான் என்ன ஜரிகை போட்ட சேலையும் இன்னிக்கு மார்க்கெட்டுக்கு வந்திருக்கிற புத்தம் புது அடுப்படி எலக்ட்ரானிக் ஐட்டமுமா கேக்குறேன். இருக்கத ரிப்பேர் பண்ணித்தானே ஓட்டுறேன். எது செஞ்சாலும் நையாண்டிதான். எப்போதான் திருந்துவாரோ.” கசிந்த கண்ணைத் துடைத்தபடி தோசை ஊற்றிவிட்டு ஜன்னல் வழி விழுந்த நிலவைப் பார்த்தாள். தேய்ந்து வளர்ந்து தேய்ந்து வளர்ந்து அவளது வாழ்க்கை போல விளையாடிக் கொண்டிருந்தது தென்னைமரக் கீற்றின் வழி தெரிந்த நிலவுத் துண்டு. 

ன்னடி குடிகாரன் மாதிரி தள்ளாடிட்டு இருக்கே. “

”என்னன்னு தெரில பிபி இருக்கு போலிருக்கு.”

”அதெல்லாம் உனக்கு வராது.”

”எனக்கு ஏன் வராது என்னை என்ன கல்லிலயா செஞ்சிருக்கு. வேகமா எந்திரிச்சா தள்ளாடுது. காதுல நொய்ங்குன்னு சவுண்டு வேற வருது. ”

”அன்னிக்கு பஸ்ஸுல நிக்கும்போதும் அப்பிடித்தான் . பிரேக் போடமுன்னாடி வேகமா வந்து கியர்ல விழுவுற. எண்டையர் பஸ்ஸும் நம்மைப்பார்த்துச் சிரிச்சிது. காலை பலமா ஊனி நிக்கிறதில்ல. கையாலயும் கம்பிய நல்லா பிடிச்சிக்கிறதில்ல. ”

”என்னவோ தெரில காலும் வீக்கா ஆனமாதிரி இருக்கு. ஆனா அன்னிக்கும் காது நொய்ங்குன்னுது. ”

”எப்பப்பாரு காதை நோண்டிட்டே இருக்கே. அதுவும் பறவை இறகு, ஊக்கு, ஏர்பின்னு எல்லாம் வைச்சு நோண்டிட்டே இருக்கே. வாழைப்பூ நரம்பை எல்லாம் எடுத்து சுத்திவிட்டு சுகமா இருக்குன்னு நோண்டுனா என்னாகும் காது ஓட்டையாயிடும்தான். அதுனால பேலன்ஸ் இல்லாம தடுமாறும்தான்.”

”ஆமாம் ஈக்விலிபிரியம் மெயிண்டெயின் பண்றதே அதுதானாம். இருக்கலாம். லேசா பஸ் வேற காதுல வருது.. காமிக்கணும்.”

”முன்னே கூட காமிச்சமே. அதே மருந்தைப் போட்டுக்க.”

”அதப் போட்டா தொண்டை வரை இறங்கி எரியுது. ”

”காதுல எண்ணெய்ல நனைச்ச பஞ்சை வைச்சுக் குளின்னா குளிக்கிறியா. வெளியே பனியில போகும்போது காதுல பஞ்சு வைச்சுக்கன்னா வைச்சுக்கிறியா. ஸ்கார்ஃபும் கட்டிக்கிறதுல்ல. எதுவும் ரிப்பேர் ஆகுவரைதான். ரிப்பேர் ஆயிட்டா தொடர்ந்து ரிப்பேர் வந்துகிட்டே இருக்கும். சரி சாயங்காலம் ரெடியா இரு. இந்த மாசம் டாக்டருக்கு அழுவணும்ல.” சலித்துக் கொண்டு அலுவலகம் சென்றான் ஆனந்தியின் கணவன். 

காது மூக்கு தொண்டை நிபுணரிடம் ஏகப்பட்ட கூட்டம். அவர் காதுக்குள் லைட் எல்லாம் அடித்துப் பார்த்துவிட்டு ஒரு கனமான ஃபோர்ஸெப்ஸ் போன்ற ஒன்றை டங்கென்று டேபிளில் அடித்து நடு நெற்றியில் வைத்து அவளைப் பார்த்துக் கேட்டார்.

“சவுண்ட் கேக்குதாம்மா.”

”ஆங்.. கேக்குது. .. சவுண்ட் எல்லாம் நல்லாவே கேக்குது. ”

”எந்தக் காதுல கேக்குது.”

”ரெண்டு காதுலயும்தான்.”

”இந்த டெஸ்ட் எல்லாம் எடுத்துட்டு வாங்க. ஆடியோமெட்ரி டெஸ்ட்ஸ் எழுதி இருக்கேன். இந்த ஸ்கேனும் பண்ணிடுங்க. ”

டெஸ்ட் லாப் எதிர்த்தாற்போல ஒரு பில்டிங்கின் கடைசியில் இருந்தது. ”டாக்டர்களே லாப் நடத்தி வர்றவங்களுக்கு எல்லாம் டெஸ்ட் செய்யச் சொல்லி நல்லா சம்பாதிக்கிறாய்ங்க.” என்று திட்டியபடி வந்தான் அவளது கணவன். 

தனி அறை. ஏதோ ரெக்கார்ட் ரூம் போல இருந்தது. டெஸ்ட் எடுத்த பெண் வெளியே இன்னொரு ரூமில் இருந்தாள். ஹெட்போனை மாட்டி கேட்ட ஒலிகளை எல்லாம் சொன்னாள் ஆனந்தி . எதிரே இருந்த திரை ஃப்ரிக்வென்ஸிக்கும் உச்சஸ்தாயி, மெல்லிய டெஸிபல்லுக்கும் ஏற்றாற்போல மாறிக்கொண்டிருந்தது. குறித்துக் கொண்டே வந்தாள் டெஸ்ட் எடுத்த பெண். ஒரு சில சமயம் இவளுக்குக் கேட்கவே இல்லை. வெளியே அந்தப் பெண் கையசைத்தாள். இவள் அருகே இருந்த பட்டனைத் தட்டினாள். திரும்ப உச்சஸ்தாயியில் சவுண்ட் கேட்க ஆரம்பித்தது. இன்னொரு காதுக்கும் முடிந்து வெளியே வந்ததும் பேப்பர் படித்துக் கொண்டிருந்த கணவனோடு மறுநாள் ரிசல்ட் வாங்கிக் கொள்வதாகச் சொல்லிக் கிளம்பினார்கள்.

ஸ்கேன் செண்டரில் ஒரே கூட்டமாக இருந்தது. மறுநாள் காலை வரச் சொன்னார்கள். கணவனுக்கு அலுவலகம் என்பதால் பிள்ளைகளையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டுத் தனியாகவே சென்றாள். மறுநாள் ஒரு ஆள் கூட இல்லை.

“தை வெள்ளியும் அதுவுமா தாலியக் கழட்டச் சொல்றீங்க சொல்லி இருந்தா நாளைக்கு வந்து பணம் கட்டி இருப்பேன்ல.” எல்லா நகையையும் கழட்டி பர்ஸில் வைத்துக் கொண்டிருந்தாள். 

”அது மஞ்சக்கயிறா இருந்தா பரவாயில்லைம்மா. தாலி செயின் போட்டு எடுத்தா சரியா வராது. இந்த ஸ்கேன் எடுக்க பாதி உடல் உள்ளே போகணும். அப்போ மெட்டல் சமாச்சாரம் எதுவும் இருந்தா சரியா எடுக்காது.”

லாப் ஊழியர்கள் யூனிபார்ம் போட்டு விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ‘அவர் இருந்தா பரவாயில்லை. ’ ‘நகையை எல்லாம் பர்ஸில் போட்டு எப்படி வெளியில் வைத்துவிட்டு டெஸ்ட் செய்து கொள்வது. அவர்கள் கொடுத்த அங்கியை அணிந்து கொண்டாள். தாலியைக் கழட்டவில்லை. படுத்துக் கொண்டதும் அந்தப் படுக்கை உள்ளே போய் ஏதோ சத்தம் வந்தது.

”இல்லம்மா. எடுக்க மாட்டேங்குது. இதுல எல்லாம் ஒண்ணுமில்ல. டெஸ்ட்தானே செய்துக்குறோம். உடனே போட்டுக்கலாம். ஒரு அஞ்சு நிமிசம் மட்டும் கழட்டிவைச்சிருங்க. ” அந்த ரூமில் இவளும் ஒரு ஊழியரும் மட்டும் இருந்தார்கள். 

வெளியே முகம் மட்டும் தெரிய ஒரு சதுர வடிவ திறப்பின் முன் இன்னும் இரண்டு லாப் ஊழியர்கள் யூனிஃபார்மும் தலையில் தொப்பி அணிந்தும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“இருங்க ஃபோன் செய்துட்டு வர்றேன். “ 

“வெளியே வந்து பாத்ரூம் எங்கே என ரிஷப்ஷனில் விசாரித்துவிட்டு உள்ளே போய் கணவனுக்குப் போன் செய்தாள்.

“இன்னிக்குத் தைவெள்ளிக்கிழமை. தாலியை எல்லாம் கழட்டிட்டு ஸ்கேன் செய்யணும்கிறாய்ங்க. அதான் இன்னிக்கு ஒரு மக்க மனுசா வல்ல போல. நான் வேணா நாளைக்கு வந்து செஞ்சுக்கவா “

“டாக்டருக்கு ஐநூறு ரூவா கன்சல்டிங் கொடுத்திருக்கு. மூணு நாளைக்குள்ள பார்த்தா அதே ஃபீஸ்தான். இப்ப ஸ்கேன் எடுத்தாதான் நாளைக்குக் காமிக்கலாம். இல்லாட்டி இன்னொரு ஐநூறு தண்டம் அழணும். இன்னிக்கே எடுத்துக்க. ஒன் நகையை எல்லாம் அவய்ங்க தூக்கிட்டு ஓடிற மாட்டாய்ங்க. லீவு நாள்ல ஸ்கேன் செண்டர் கிடையாது “ 

சத்தம் இல்லாமல் தாலியைக் கழட்டிப் பர்ஸில் வைத்துவிட்டு அதை அங்கே இருந்த ஒரு மர டேபிளில் கண்பார்வைபடும்படி வைத்துவிட்டுப் ஸ்கேன் டேபிளில் ஏறிப் படுத்தாள். 

’ஸ்வைங்ங்ங்’ என்றபடி அது அவளை வெளிச்சமான உருளைக்குள் இழுத்துச் சென்றது. ஒரு ஐந்து நிமிடங்கள் வெளி உலகம் என்ற ஒன்று இருக்கா இல்லையா. இல்லாவிட்டால் பிரபஞ்சத்துக்குள்ளே இருக்கும் பரப் பிரம்மமோடு உடலோடே கலந்துவிட்டோமா என்று திகைக்கும்படி லேசாகக் குளிராக இருந்தது. சத்தங்களற்று ஒளிமட்டும் உலவிய உலகு. 

திரும்ப “ஸ்வைங்ங்ங் “ வெளியே வந்து முதலில் தாலியை எடுத்துப் போட்டுக் கொண்டு கண்ணில் ஒற்றிக் கொண்டாள். பழக்க தோஷம். ’முத்துமாரி என் தாலி எப்பவும் நிலைச்சிருக்கணும்’. 

டியோகிராமைப் பார்த்த டாக்டர் ஏர் ட்ரம்ல ஹோல் இருக்கு. சர்ஜரில சரி பண்ணிடலாம். இன்னர் ஏர்ல மூணு சர்ஜரி பண்ணனும்.. காதுக்கு வெளியில ஹோல் போட்டுப் பண்ணணும். இதுல ப்ளாஸ்டிக் சர்ஜரியும் இருக்கு “ என்றார்.

“உக்காருங்கம்மா” என்றாள் இவளிடம்.

மேலே காலண்டர் முருகனைப் பார்த்துக் கொண்டிருந்த இவள் கேட்டுக் கொள்ளவில்லை. “முருகா” என்று சொன்னாள். 

“கேட்டுக்கவே மாட்டா. எப்பப் பார்த்தாலும் கேட்டுக்கவே மாட்டா. கேட்டுக்காமயே பேசுவா. ” ”காதை குடையாதே. கேக்காமப் போயிரும்னு சொல்வேன் கேக்கவே மாட்டாளே “ என்று கோபமாகக் கடிந்தான் அவள் கணவன். கை பிடித்து அமரவைத்தான்.

“சார் அவங்களுக்குக் கேக்க வாய்ப்பில்லை. இவங்க வீட்ல யாருக்கும் இது போல இருக்கா” எனக் கேட்டார்.

“இவங்க அம்மா, பெரியம்மா ரெண்டு பேருக்கும் கொஞ்சம் காது கேக்காது. இவங்க தாத்தாவுக்கும் கேக்காது. அவர் ஹியரிங் எய்ட் போட்டிருக்கார்.”

“நான் நெனைச்சது கரெக்ட்தான். இவங்களுக்குப் பிறவியிலேருந்து காது கேக்கலை சார். வீட்ல பெரியவங்களுக்குக் காது கேக்காததுனால சத்தம் போட்டுப் பேசியே பழகி இருக்காங்க. இவங்களுக்குக் காது கேக்கலைங்கிறதையே யாரும் கண்டுபிடிக்கல. ஏன்னா நேரா பேசினா இவங்க வாய் அசைவ வைச்சுக் கண்டு பிடிச்சிடுறாங்க. ஆனா இவங்களோட வலது காது ஐம்பது சதம் கேக்காது. இடது காது பத்து சதம் கேக்காது.” 

”இது நடுவுல எல்லா வல்ல சார். பிறவியிலேயே இப்பிடி அமைஞ்சிருக்கு. அவங்களுக்கு தெரியாததுனால யாருமே கண்டு பிடிக்கல. அதுனாலதான் நீங்க இவங்க கேட்டுக்காம பேசுறாங்கன்னு நினைச்சிட்டீங்க. இந்த சந்தேகம் இருந்ததாலதான் டெஸ்ட் பண்ண சொன்னேன். டெஸ்ட்ல எல்லாம் கன்ஃபர்ம் ஆயிடுச்சு.  சர்ஜரி பண்ணா சரியாயிடும்.”

திகைத்துப் போய் அமர்ந்திருந்தார்கள் ஆனந்தியும் அவள் கணவனும்.

ர்ஜரியா.. அம்பதாயிரம் செலவாகுமாமே. ஐம்பது வயசுல என்ன சர்ஜரி. இன்னொரு டாக்டர்கிட்ட ஒரு செகண்ட் ஒபீனியன் கேட்டுறலாம். “

ன்னது அவளுக்குக் காது கேக்காததுனாலதான அப்பிடி இருந்தாளா. புகுந்த வீட்டில் அவள் காது விஷயம் டமாரமானது.

ண்டு காதுலயும் பிரச்சனை இருக்கு. ஆனா வலது காதுல ட்ரம் டேமேஜா இருக்கதால் சர்ஜரி பண்ணா கேட்க வாய்ப்பிருக்கு. பண்ணினாலும் சரிதான். பண்ணாட்டாலும் சரிதான். ஆனா வயசாக ஆக ஹியரிங் லாஸ் அதிகமா இருக்கும். “ ஹெலன் கெல்லர் படத்தை மாட்டி இருந்தார் செகண்ட் ஒபீனியன் கேட்கப் போன டாக்டர். 

”சரி டாக்டர் . சர்ஜரிக்கு நாள் பார்த்துட்டு வர்றோம். ”

து கெடக்கு. இத்தனை வயசு வரைக்கும் சமாளிச்சிட்டேன். எங்க அம்மாவும் பெரியம்மாவும் காது கேக்காமயே கடையில உக்கார்ந்து வியாபாரம் பண்ணாங்க. சில்வர் பாத்திரம் பர்சேஸ் பண்ண சென்னை வரை போவாங்க. ”

”அவங்களுக்கு காது மட்டும்தான் கேக்காது. ஒனக்கு ஓட்டை இருக்கே. தண்ணீ போய் பிரச்சனை ஆவுதே. ”

”காதுல தண்ணீர் புகாம பார்த்துக்கிட்டா போதும். இதுக்கெல்லாம் சர்ஜரி என்னத்துக்கு. சமாளிச்சுக்குவேன்.” என்றாள் அவள். விடுதலை ஆனது போல் இருந்தது அவளுக்கு.

”சர்ஜரின்னா பயமா இருக்கா. நீ பத்ரமா திரும்பி வருவே. ”

”ஐய அதெல்லாம் ஒன்னியுமில்ல. இதென்ன காதுதானே. ரெண்டு சிசேரியன்லயும் ரெண்டு சக்கரக் குட்டிகளைப் பெத்துத் தப்பிப் பொழைச்சவ நான்.” 

’என்னிக்குத்தான் நான் சொன்னத எல்லாம் கேட்டிருக்கே. ஒன் இஷ்டப்படி பண்ணு.” 

”இன்னிக்குக் கேக்குறேன். உங்களுக்குச் செலவு மிச்சம் பண்ணிட்டேன்ல இனி என்ன வேணுமாம். வயசானா காது கேக்காமத்தானே போயிரும். இப்பம் முன்னாடியே போயிருச்சுன்னு வைச்சுக்க வேண்டியதுதான். என்றாள் புருஷன் என்ன சொல்லியும் கேட்டும் கேட்காதவள். !


5 கருத்துகள்:

 1. //அதன் பின் காண்டீனில் சில்லரை தட்டுப்பாட்டில் தேன் மிட்டாய் வாங்கும்போது சேர்த்து வாங்கிக் காக்காய்க் கடி கடித்துப் பிரித்துக் கொண்டு சமரசமானார்கள். //

  :))))))

  ஓரளவு நடுவிலேயே யூகிக்க முடிந்தாலும்.... சர்ஜரி செய்திருக்கலாம். நேற்றுதான் வாட்ஸாப்பில் நிறம் கண்டுபிடிப்பதில் குறைபாடு உள்ள மகனுக்கு ஒரு கண்ணாடி வாங்கி கொடுத்து தந்தை அவன் படும் சந்தோஷத்தைப் பார்த்து மகிழ்கிறார். அதுபோல, காது என்றால் என்ன, அதன் பயன் என்ன என்று அவள் அறிந்திருக்கலாம்!

  பதிலளிநீக்கு
 2. நமக்கு இருக்கும் புலன்கள் சரியாக வேலை செய்யாவிட்டால் ஒரு காம்ப்ல சென்சி உருவாகும் இப்போது பரவாயில்லை ஆர்டிஃபிசியல் சாதனங்கள் துணை நிற்கின்றன

  பதிலளிநீக்கு
 3. நன்றி ஸ்ரீராம் புரிதலுக்கு :)))))))))))))))))))))

  நன்றி மாதவி

  நன்றி ஜம்பு சார்

  நன்றி பாலா சார். ஆம்.

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...