மும்தாஜ் இல்லம்
“அண்ணே சௌதில இருக்காங்க. அங்க வரச் சொல்லி லெட்டர் போட்டிருக்காங்க”
பின்னால் வந்து கொண்டிருந்தான் அவன். ”இந்தா இத வாங்கிப் பாரு. உண்மையத்தான் சொல்றேன்”
என ஒரு கடிதத்தை நீட்டினான். வெளிநாட்டுத் தபால்தான். கடந்த சில மாதங்களாகப் பின் தொடர்ந்து
கொண்டிருக்கிறான். டைப்ரைட்டிங்க் இன்ஸ்டிடியூட்டின் எதிரில் இருந்த ஒரு ஜவுளிக்கடையில்
அவனைப் பார்த்திருக்கிறாள். சில சமயம் கல்லாவிலும் அமர்ந்திருப்பான். கடைக்காரருக்கு
உறவினர்போல என நினைத்திருந்தாள்.
மாடியில் இருந்தது அவள் டைப்ரைட்டிங் கற்றுக் கொண்டிருந்த இன்ஸ்டிடியூட். அதன் அருகிலேயே தேரடி. எனவே அதன் பக்கவாட்டு மரப் படிகளில் ஏறித்தான் மாடிக்குச் செல்ல வேண்டும். கோ ஆப் டெக்ஸின் மேல்தளம் பார்வைக்கு அகப்படும். அந்த வரிசையில் கடைசியில் இருந்தது இன்ஸ்டிடியூட். பேப்பரை டைப்ரைட்டரில் சொருகி Asdfgf ;lkjhj என டைப்ப ஆரம்பித்து இப்போது இன்வாய்ஸ், கடிதம் என்று அடிக்க ஆரம்பித்திருக்கிறாள். இன்னும் சில நாட்களில் பரிட்சை.