எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 31 ஜனவரி, 2012

மீனா லெட்சுமணனின் கிராமத்துப் பொங்கல். இவள் புதியவளில்.


மீனா லெட்சுமணன் சென்னையைச் சேர்ந்தவர். ஈவண்ட் மேனேஜ்மெண்ட் செய்து வருகிறார். தன் தந்தையின் ஊரான திண்டிவனம் கிராமத்துக்கு பாட்டி வீட்டுக்குப் போனபோது கொண்டாடிய பொங்கலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறார்.

திங்கள், 30 ஜனவரி, 2012

வலைப்பதிவர்கள் கவனத்திற்கு...( கலைமகள்., தினமணி போட்டிகள் )

வலைப்பதிவ தோழமைகளுக்கு,

இன்று கலைமகள், தினமணி போட்டிகளுக்கு சிறுகதை அனுப்ப கடைசி நாள். 31. 1. 2012 உடன் முடிகிறது. இன்று உங்களிடம் கைவசமுள்ள கதைகளை தினமணி ( 3 பக்கத்துக்கு மிகாமல்) , கலைமகள் ( 6 பக்கத்துக்கு மிகாமல்) முடிந்தவரை இன்று கூரியர் சர்வீசிலாவது அனுப்பி விடுங்கள். பரிசுத் தொகை அதிகம். கலைமகள் 50,000/- மற்றும் தினமணி முதல் பரிசு 5,000, இரண்டாம் பரிசு 3,000, மூன்றாம் பரிசு 2,000.

இந்த நினைவுறுத்தலை ஜனவரி மத்தியில் ஒரு முறை செய்ய எண்ணி இருந்தேன். என் வேலைப் பளுக்களாலும், புத்தக வெளியீட்டிலும், ப்ரயாணங்களாலும் தகுந்த சமயத்தில் நினைவுறுத்த இயலாமல் போயிற்று.

கலைமகள் போட்டி விவரம்.:-
*******************************

கலைமகளில் சிறுகதைப் போட்டி ( ரூபாய் 50,000/-)

மணிமேகலையின் தலைப்பொங்கல்., இவள் புதியவளில்.



மணிமேகலையின் (நகரத்தார் மக்கள் கொண்டாடும்) தலைப் பொங்கல் :-
****************************************************************************************

மணிமேகலை செட்டிநாட்டுப் பகுதியைச் சேர்ந்தவர். இவர்கள் ஊரில் பொங்கல் வீட்டில் மிகுந்த சீரோடும் சிறப்போடும் கொண்டாடப்படும். தீபாவளி சீர் போல பொங்கல் சீரும் பெண்ணுக்கு ரொம்ப முக்கியம். அந்தப் பொங்கல் சீரை தந்தை அல்லது அண்ணன் தம்பி கொண்டுவந்து தருவார்கள். ஒரு பெண்ணுக்கு பிறந்த வீட்டிலிருந்து மகிழ்வளிக்கக்கூடியது இந்த சீர்.. உன்னை நாங்கள் மறந்து விடவில்லை. உன் மனதில் என்றும் சந்தோஷம்ம் பொங்கட்டும் என பொங்கல் சீர் அளிப்பார்கள். பொங்கல் பொங்கியதும் பால் பொங்கிற்றா என கேட்பார்கள். தாய் வீட்டிற்கும் மாலையில் சென்று பால் பொங்கிற்றா என கேட்பார்கள். அவர்கள் எங்களுக்கு நல்லா பால் பொங்கிற்று. உங்களுக்கு நல்லா பால் பொங்கிற்றா என கேட்பார்கள். எனவே ஒவ்வொரு வருட பொங்கலும் பெண்களுக்கு தாய் வீட்டின் பிடிப்பை இன்னும் அதிகப்படுத்துவதாகவே அமையும்.

வெள்ளி, 27 ஜனவரி, 2012

வித்யாவின்( விதூஷ்) வித்யாலயம்,”.ஃபுட் ப்ரிண்ட்ஸ்”.இவள் புதியவளில்.


நம் பிரபல வலைப்பதிவர் ( பகோடா பேப்பர்கள் விதூஷ் ) ., தோழி, சகோதரி, வித்யாவின் குழந்தைகள் காப்பகம் மற்றும் கல்வியகம் ,”ஃபுட் ப்ரிண்ட்ஸ்” பற்றி சிறப்புப் பேட்டி இவள் புதியவளுக்காக எடுக்கப்பட்டது.

1. குழந்தைகள் காப்பகம் ஏன் ஆரம்பித்தீர்கள். இந்த எண்ணம் ஏற்பட்டது எப்படி.

வியாழன், 26 ஜனவரி, 2012

முப்பெரும் சுதந்திர தேவியர். ப்ரிகேடியர் துர்காபாய், ப்ரிகேடியர் முத்துலெக்ஷ்மி, ருக்மணி சேஷசாயி.



ப்ரிகேடியர் துர்காபாய்., ப்ரிகேடியர் முத்துலெக்ஷ்மி. ருக்மணி சேஷசாயி இந்த மூன்று பேரும் தேசம் காக்கப் போராடியவர்கள். ஒருவர் சிறு வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர் மற்ற இருவரும் ராணுவ சேவையில் ஈடுபட்டு மருத்துவ சேவை செய்த பெண் வீராங்கனைகள். இவர்கள் பற்றி இந்த குடியரசு தின நாளில் சொல்லியே ஆகவேண்டும். எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி என்று பாரதி பாடிச் சென்றது இவர்கள் பற்றி இருக்கலாம். இந்தக்காலத்தில் கூட சாதாரண குடும்பங்களில் ராணுவத்தில் பணியாற்றுவதோ., காவல்துறை உத்யோகத்தில் சேர்வதோ அவ்வளவாக இல்லாத நிலையில் சுதந்திரப் போராட்டக்காலத்தில் சுதந்திரத்துக்காகவும். பின் இந்தியாவுக்காகவும் பாடுபட்ட வீரம் செறிந்த எழுச்சிப் பெண்களைப் பார்த்தபோது நாம் இந்தியர் எனப் பெருமித உணர்ச்சி பொங்கியது.

செவ்வாய், 24 ஜனவரி, 2012

வெளிநாடு வாழ் தமிழர்களும் சாதனை அரசிகள் புத்தகம் பெற..


வெளிநாட்டில் வாழும் தமிழ் மக்களில் சிலர் என் வலைப்பதிவை படித்து வருவதாலும், முகநூலில் நான் எழுதும் கவிதைகளைப் படிப்பதாலும் இந்த புத்தக வெளியீடு முடிந்தவுடன் ஆன்லைனில் புத்தகம் கிடைக்குமா என விசாரித்தார்கள். அதற்கான முயற்சியை தொடங்கலாம் என நினைக்கிறேன்.

திங்கள், 23 ஜனவரி, 2012

நன்றி பபாசி, டிஸ்கவரி புக் பேலஸ். ஆஸ்த்ரேலியன் வானொலி,சன் நியூஸ் ( THANKS TO BAPASI, DISCOVERY, AUSTRALIAN RADIO & SUN NEWS TV. )


என் புத்தக வெளியீடு டிசம்பர் 24 இல் இருந்து தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. ஏற்கனவே லேடீஸ் ஸ்பெஷலில் வந்த கட்டுரைகள் என்றாலும் ஒன்பது முறை ப்ரூஃப் போய் வந்தது.

சனி, 21 ஜனவரி, 2012

பதின்பருவப் பிள்ளைகளின் அம்மா II

பதின்பருவப் பிள்ளைகளின் அம்மா:-
*****************************************

வளரும் பிள்ளைகளின்
அம்மாவாய் இருப்பது
அற்புதம்தான்..
கொஞ்சம் கொஞ்சல்
கொஞ்சம் பொய்
கொஞ்சம் உரைத்தல்
கொஞ்சம் மறைத்தல்
எல்லாம் உணர்ந்தும்
மௌனமாய் இருக்கக்
கற்க வேண்டும்.

கைபேசியோ
கணணியோ
கவனிக்கப்படவேண்டும்
எல்லைமீிறா வகையில்.
படபடவென்று
சண்டையிடும்போதும்
தூக்கி எறிந்து பேசும்போதும்
உணரவேண்டும்..
பேசுவது அவர்களல்ல..
துடித்தோடும் ரத்தம்.

மனம்கவர் நட்போ
அதனோடான உராய்வோ
வரைந்து வைக்கும்
மந்தகாச ஓவியமோ
கரிக்கிறுக்கல்களோ
கண்டும் காணாமல்
கடக்க வேண்டும்.
கேள்விகளற்று..
பிள்ளைகள் புலிகளாய்
சீறப்போகும் சூத்திரம் உணர்ந்து.

இராத்தூக்கம் மறந்து
போர்வைக்குள் மறைந்து
கூடா நட்போடு
கதைக்கும் மகளோ
டிஸ்கோதேயில் தொலைந்து
பீருக்குள் கரைந்து
கூகை ஒலிக்கும் நேரம்
வரும் மகனோ பார்த்து
அதிராமல் இருக்க
பழக வேண்டும்.

ஒரு நட்பு தொலைத்து
மறு நட்பில் உயி்ர்த்து
உனக்கென்ன தெரியுமென
கேட்கும் பிள்ளைகளிடம்
கடித்துக் குதறவோ
சுயகௌரவம் காட்டவோ
விடுதலைப்பத்திரம் நீட்டவோ
தூக்கிப் போட்டுப்
போகவோ முடியாது
திருமண பந்தம் போல.

உள் வைத்து உணவூட்டியது
போல் எளிதில்லை
வெளியில் உணர்வூட்டுவது.
இதுவும் கடப்போமென
எளிதாய் நகர்ந்தால்
அனுபவம் அவர்க்குச்
செமிக்கச் சொல்லும்
வயிற்றில் சுமந்தவள்
மேலேற்றும் கவலையோடு
மனதிலும் சுமக்கிறாளென..


.

வெள்ளி, 20 ஜனவரி, 2012

நன்றி சுரேகா...சாதனை அரசிகள் விமர்சனத்துக்கு..



சக வலைப்பதிவராவும் ஒரு நல்ல நண்பராகவும் சுரேகா எனக்கு முதன் முதலில் கேபிள்ஜி எனப்படும் நண்பர் கேபிள் சங்கரின் லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் என்ற முதல் புத்தக வெளியீட்டின்போது அறிமுகம். அதாவது அவர் விழாவை அழகாக தொகுத்து வழங்கினார். அழகிய தமிழ். சரளமான நடை. புன்னகை முகம். பின் அவரின் வலைத்தளம் படித்ததுண்டு . அவர் சென்று வந்த, வாழ்ந்த ஊர்கள் பற்றிய பதிவுகள். அவர் வாழ்க்கைத் துணையின் ஒருமித்த எண்ணப் போக்கு பற்றிய பிரமிப்பு, பின் அவரின் நீங்கதான் சாவி என்ற நூல் , என்று ஆச்சர்யப்பட வைத்தவர் அவர்.

அந்த தன்னம்பிக்கை நூலைப் படித்து நான் எழுதிய விமர்சனம் திண்ணையில் வெளிவந்தது. என் வலைப்பதிவிலும் பகிர்ந்துள்ளேன். அவர் என் நூலைப் படித்து முதல் விமர்சனம் கொடுத்தது மிக சந்தோஷமான நிகழ்வு. நன்றி சுரேகா. வேறென்ன சொல்லி விடப்போகிறோம் நன்றி என்ற ஒற்றைச் சொல்லில் எல்லாவற்றையும் நிறைவாக்குவதை விட..!!!

இனி அவரின் விமர்சனம். உங்களுக்காக..

////வெற்றிக்கதைகள் படிப்பது எப்போதுமே ஒரு சுவாரஸ்யமான அனுபவமாகத்தான் இருக்கும். சாதித்த மனிதர்களின் வெற்றியின் பின்னணியில் இருந்த இடர்களைப் படிக்கும்போது அந்த உழைப்பின் மேன்மை உரைக்கும் செய்திகள் ஏராளம்!

அந்த வகையில் ‘நமது பதிவரும்..பிரபல கவிஞர், எழுத்தாளர் என்று அறியப்படுபவருமான தேனம்மை லட்சுமணன் அவர்கள் எழுதி சாதனை அரசிகள்’ என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் புத்தகம் சொல்லும் சாதனை மனிதர்கள் உண்மையிலேயே என்னை பிரமிக்க வைத்துவிட்டார்கள்.

மொத்தம் பதினேழு பெண்மணிகள். வெவ்வேறு துறை சார்ந்தவர்கள். ஆனால், அவர்கள் அனைவரது வெற்றிக்கும் பின்னால் இருந்த ஒரே ஒற்றுமை, -உழைப்பு, விடாமுயற்சி, நம்பிக்கை.! மேலும் அவர்கள் ஜப்பானிலோ, ஜமைக்காவிலோ இல்லை.. நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். நம் நகரத்தில்..நம் மாநிலத்தில்…நம்முடன் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றித் தெரிந்துகொள்வதில் ஒரு உண்மையும், நெருக்கமும் உணரமுடிகிறது.

முதலில் ரம்யா தேவி! – இவரை நான் ஒருமுறை அப்துல்லா அண்ணனின் அலுவலகத்தில் நடந்த பதிவர் சந்திப்பில் பார்த்திருக்கிறேன். சில நிமிடங்கள் பேசினோம். ஆனால்..இவ்வளவு சிறந்த பெண்மணியை சந்தித்திருக்கிறோம் என்று இதைப்படித்தவுடன்தான் உணர்ந்தேன். 13 வயதில் வாழ்வைப் புரட்டிப்போட்ட தீ விபத்திலிருந்து மீண்டு இன்று பலரது வாழ்வை நல்முறையில் புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கிறார். இவர் புதுக்கோட்டையில் படித்திருக்கிறார் என்பது எனக்கு தனிப்பெருமை! ரம்யா தேவி அவர்களே! உங்களைப் பாராட்டுவது சிறியது! வணங்குவதே உரியது!

அடுத்து மோகனா சோமசுந்தரம் – ஆலோசனை சொல்லி வந்த ஆங்கிலக் கடிதத்தை , காதல் கடிதம் என்று எண்ணி அல்வாவில் விஷம் வைத்துக் கொல்ல முயற்சித்த குடும்பத்திலிருந்து வந்த சுயம்பு! கல்வியின் மேன்மையால் தன்னையும் சமூகத்தையும் உயர்த்திய உத்தமப் பெண்.! புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இரும்புப் பெண்மணி!

மணிமேகலை – புத்தக வெளியீட்டன்று இவரை நேரிலேயே சந்தித்தேன். நீண்ட நாள் பழகியவர் போல் அன்பாகப் பேசிக்கொண்டிருந்தார். உணவருந்த அமர்ந்த சிறுமி, பக்கத்து வீட்டில் தீ பற்றுகிறது என்று தெரிந்தவுடன், யாரும் சொல்லாமல், நீரை எடுத்துச்சென்று ஊற்றி அணைத்திருக்கிறார். இது போதும்! அவரது உதவும் குணம் சொல்ல! அப்படிப்பட்டவர் இன்று ஒரு பெரிய அரசு அதிகாரி..! தலித் பெண்களின் துயர்துடைக்கும் சாதனையாளர்.!

சாருமதி,தமிழரசி, வெங்கடேசன் – சமூக அக்கறையுடன், வெறுப்பின்றிச் செயல்படும் கூட்டுச் சாதனையாளர்கள்.

மாங்குரோவ் காடுகளைப்பற்றி ஆய்ந்து முனைவர் பட்டம் பெற்ற, சூழல் அக்கறை உள்ள ஆஸ்வின் ஸ்டான்லி..

உடலில் நோய்கள் முற்றுகை இட்டாலும், உள்ளத்தில் உறுதியை முற்றுகையிடவைத்து அரசுப்பள்ளியில் அற்புதங்கள் நிகழ்த்தும் ஆசிரியை லூர்துராணி.!

இருளர் இனத்துப் பெண்களின் இருள் நீக்குவதே குறிக்கொளாகக் கொண்ட வசந்தி!

அன்னையின் மரணச் சோகம் கூட ஆட்டத்தை பாதிக்காத வகையில் வெறியுடன் வெற்றிகண்ட கிரிக்கெட் வீராங்கனை திருஷ்காமினி

இதயநோயுடன் போராடினாலும், இன்முகத்துடன் செவிலியராய் வலம் வரும் உமா ஹெப்சிபா!

குழந்தை நட்சத்திரமாய் மிளிர்ந்து, நடனப்பள்ளியை நடத்திவரும் லெஷ்மி என்.ராவ்!

உயிர்போக்க வந்த தன் நோய் தீராமல், உறுப்பு தானம் செய்து பிறர் துயர் தீர்த்த அனுராதா!

அ வில் ஆரம்பித்த வாழ்வை ஆட்டோவால் நிமிர்த்தி, சி ஐ டி யு வின் மாநிலக்குழு உறுப்பினராக உயர்ந்திருக்கும் சாந்தி!

ஐந்து வயதில் தாயை இழந்து, நம்பிக்கையை உரமாக்கிக்கொண்டு, பிறர் வாழ்வில் நம்பிக்கை ஊட்டும் ஸ்ரீலேகா!

ஒரு கட்டுப்பெட்டிக் குடும்பத்திலிருந்து ,கனவுகளை மட்டுமே கருவாகக் கொண்டு திரைப்பட இயக்குநராக திரு திரு துறு துறுவென வெற்றிப் படியேறும் நந்தினி ஜே எஸ்! ( புத்தக வெளியீடு அன்று குட்டிப்பாப்பாவுடன் வந்திருந்தார். மிகவும் எளிமையாகப் பழகும் அன்புக்குரியவர்)

படித்தது கணிப்பொறியாக இருந்தாலும், கவிதைப்பொறியால் கலக்கி, திரைப்படப் பாடலாசிரியராக, கட்டுரையாளராக, தமிழ்ப்பேச்சாளராக வலம்வரும் 25 வயது தோழி பத்மாவதி!

சோதனைகளைக் கடந்து ஆயத்த சீருடை அதிபராய் வளர்ந்து நிற்கும் மகேஸ்வரி!

வாலிபத்திலேயே வால் ஸ்ட்ரீட்டை புரிந்துகொள்ளாதவர்கள் மத்தியில் , வயோதிகத்தில் பங்கு வர்த்தகம் செய்யும் உதாராண ஆச்சி முத்து சபா ரத்தினம் என சாதனையாளர்களின் சரித்திரங்களால் நிரம்பிக்கிடக்கிறது 80 பக்கங்கள்!

மனம் சோர்வாய் இருக்கும்போது , இதில் ஏதாவது ஒரு பக்கத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தால், ஒரு சாதனையாளரின் வாழ்க்கை விரியும். அவர் சந்தித்த துன்பங்களும் அதன் மீட்சியும், எழுச்சியும் நம்மைத் தட்டியெழுப்பி, ‘நமக்கு வந்திருப்பதெல்லாம் ஒரு கஷ்டமா? என்று தெளிவடைய வைத்து அடுத்த செயலை நோக்கிச் செல்ல வைப்பதுதான் இந்தப்புத்தகத்தின் ஒரே சிறப்பு, !

என் தோழி ஒருவருக்கு வாழ்வில் மிகப்பெரிய பிரச்னை ! என்னிடம் சொல்லி அழுதார்! எதேச்சையாக ஊருக்குக் கொண்டு சென்றிருந்த இந்தப் புத்தகத்தை அவரிடம் கொடுத்து படிக்கச்சொன்னேன்.. முடித்துவிட்டு அவர் சொன்னது இதுதான்..! எனக்கு வந்திருக்கிறதெல்லாம் ஒரு பிரச்னையா? பி.எச்.டி வேலை அப்படியே கெடக்கு அதைப் பாக்குறேன்..! என்று தெளிவாகிவிட்டார்.

இதுதான்..இந்த நூலின் வெற்றி!

உண்மையிலேயே செய்வதைச் சிறப்பாகச் செய்ய வேண்டுமென்ற முனைப்புடன் தன் எழுத்துலகப் பணியில் வெற்றி நடை போட்டுவரும் -இந்த நூலில் சொல்லப்படாத,- சாதனை அரசியான தேனம்மை லட்சுமணன் அவர்களே! சாதனைப் பெண்களை எங்களுக்கு வெளிக்காட்டியதற்கு நன்றி!

சாதனை அரசிகள் – தேனம்மை லட்சுமணன் – முத்துசபா பதிப்பகம் – ரூ.50.00

கிடைக்குமிடம்: : நம்ம டிஸ்கவரிதான்! ////

டிஸ்கவரியில் கிடைக்கிறது. திருப்பூர், காரைக்குடி புத்தக சந்தைகளிலும் கிடைக்க ஆவன செய்கிறேன். பெங்களூரு நண்பர்கள் ராமலெக்ஷ்மி, தவிர வேறு யாரும் இருந்தால் சொல்லுங்கள். அனுப்பி வைக்கிறேன்.


வியாழன், 19 ஜனவரி, 2012

அன்பின் அம்மாவும் அசடன் புத்தகமும்., குற்றமும் தண்டனையும் விமர்சனமும்.


அம்மா.. என்ன சொல்வது வார்த்தைகள் இந்த வருடங்களையும் வெற்றிடத்தையும் நிரப்பி விடுமா என்ன..?

எனக்கும் உங்களுக்கும் அறுக்கப்படாத தொப்புள் கொடி உறவாய் நம் தமிழ் அமைந்திருப்பது சிறப்பு அம்மா..

அசடன் புத்தகம் மிக அருமை.. படிக்க பல மாதங்கள் ஆகும்போல.

ஜெயமோகனின் முன்னுரையையே சிறிது நேரம் படித்துக் கொண்டிருந்தேன். அவர் எதையும் ஆராய்ச்சிக்கட்டுரைபோல சிறப்பாக வழங்குவதில் வல்லவர்.

உங்கள் கதைமொழிபெயர்ப்பில் நம் ஃபாத்திமா அம்மாவின் விமர்சனமும் பார்த்தேன்.

இன்னும் பல பிரபல எழுத்தாளர்களும் இருக்கும் இடத்தில் என்னுடைய விமர்சனத்தையும் சேர்த்தது உங்களுடைய பெருந்தன்மை அம்மா..

இன்னும் உங்கள் அடுத்த முயற்சிகளையும் எனக்கான தூண்டுதலாய் சுயநல நோக்கோடு உங்களின் அடுத்த புத்தகங்களையும் எதிர்பார்க்கிறேன் அம்மா.

பபாசி என்னும் தேரில் பல தெய்வங்கள். உங்கள் புத்தகங்கள் இருந்த இடத்தில் நான் எழுதிய ஒன்றும் அச்சிலேறி உற்சவமூர்த்தியானது குறித்து மகிழ்ந்தேன்.

எப்போது வருவீர்கள் உங்களை நேரில்காணலாம் என்ற ஆவலில் இருக்கிறேன்.

மாணவிகள் தன் ஆசிரியரை ஞாபகம் வைத்திருப்பது புதிதல்ல.. ஆனால் ஆசிரியை தன் மாணவியை ஞாபகம் வைத்து அடையாளம் காண்பிப்பதும் எளிதல்ல.

இது போராடிய ஜெயித்த பெண்களின் கதைகள்தான். உங்கள் அன்பை அருந்திய பாக்கியத்துடன் இன்னும் எனக்கான மற்றும் எல்லாருக்குமான இலக்கியம் படைக்கும் உறுதியையும் எனக்கு ஆசியாய் வழங்கும்படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் அம்மா.!

**********************************************************

என்னைப் பற்றியும் என் நூல் பற்றியும் அவர்கள் கருத்துக்கள் கட்டுரை வடிவில்

“மகளாய்.. மாணவியாய்..


***********************************************************

இது குற்றமும் தண்டனையும் விமர்சனம்:-


( ஏறக்குறைய 4 வருடங்களுக்கு முன் எழுதி என் அம்மாவுக்கு அனுப்பியதை அவர் தன் வலைத்தளத்திலும் வெளியிட்டு தற்போது தன்னுடைய அசடன் நூலிலும் பதிப்பித்திருக்கிறார். நன்றி அம்மா.:)

///தேனம்மை,மதுரை.
சின்ன வயதில் மிக்கேல் ஷோலகோவ் கதைகளை (தமிழ் மொழிபெயர்ப்பு)என் அம்மா வாங்கித்தந்து படித்திருக்கிறேன்.உலகத்தைச் சுற்றிவரும் ஒரு சிறுவனின் கதையையும் படித்திருக்கிறேன்.அதற்குப்பின்பு தற்போதுதான் ஒரு மிகச்சிறந்த ரஷிய எழுத்தாளரின் படைப்பைத் தமிழில் படிக்கும் பேரனுபவம் ஏற்பட்டது.பாராட்டுக்கள். உங்கள் முயற்சி அளவிடற்கரியது.எவ்வளவு பாராட்டினாலும் சொல்லில் அடங்காதது.

தனி மனிதர்களின் மன மேன்மைகளை,உன்னதங்களை,உயர் இலட்சியங்களை மட்டுமல்லாது குறைகளை,குணக்கேடுகளை,நோய் பிடித்த மனத்தின் சிறுமைகளை, சீரழிவுகளை,வக்கிரங்களை, அவலங்களை உங்கள் மொழியாக்கத்தின் மூலம் தரிசனம் செய்தபோது நிறைய ஆத்ம விசாரங்களும்,ஆத்ம விசாரணைகளும் ஏற்பட்டன.
சோனியாவின் ஜீவனோபாயமும்,ரஸ்கோல்நிகோவின் மனச்சங்கடமும், ஸ்விட்ரிகைலோவின் மன விகற்பமும் என்னை அவர்களுள் ஒருத்தியாக்கி,வேதனைப்படவும், அழவும்,வெகுண்டெழவும் வைத்தன. தன் உடன் பிறவாச் சகோதர,சகோதரிகளுக்காகவும், குடும்பத்தை இரட்சிக்கவும் அவள் விபச்சாரியாகும் காலகட்டத்திலும், முகஸ்துதிகள் மூலம் துனியாவை ஸ்விட்ரிகைலோவ் ஏமாற்றும் இடத்திலும் தவிர்க்க இயலாமல் அழுது கொண்டும், ஸ்விட்ரிகைலோவ் என் கையில் கிடைத்தால் கொன்று விடும் உத்தேசத்துடனும் இருந்தேன்.

ரஸ்கோல்நிகோவைப் பற்றித்தான் முன்பு நிறைய எழுத நினைத்தேன். ஆனால் நீண்ட நாட்களுக்குப் பின்பும் அந்த இரண்டு பெண்களும்தான் என்னை மிகவும் பாதித்து இருக்கிறார்கள். காரணம்,-அபலைகள்; தங்கள் வாழ்வைத் தாங்களே தீர்மானிக்க முடியாமல்-பணத்தின், சூழ்நிலையின், வாழ்க்கைத் தேவைகளின் கைப்பாவையாக- ஆனால்...உயர்ந்த கொள்கைகளிலும், உயர்ந்த பண்புகளிலும் உறுதியும், திடமும் உள்ளவர்களாக இருக்கும் அபலைகள்.

ஜூலை மாத மாலைநேரக் கசகசப்பில் ஆரம்பிக்கும் ரஸ்கோல்நிகோவின் வாழ்வைப்பற்றி நினைக்கும்போது-இனிப்பு உண்ணும்போதும் நாவினடியில் ஏற்படும் ஒரு சமயக் கசப்பு போல ஒரு சோகம் ஏற்படுகிறது.எப்படி வர வேண்டியவன் தன் வாழ்வை எப்படி ஆக்கிக்கொண்டான் என்றும்,சோர்வுற்ற மனமே சூழ்நிலைகளையும், தங்குமிடத்தையும் எப்படி மாற்றி விடுகிறது என்றும் எண்ணினேன். Once wearஉடைகளை ரஸுமிகின் வாங்கி வந்து கடை பரப்பும்போது, ஏழைகளின் வாழ்வு இவ்வளவு துயரங்களுக்கு உள்ளானதா என்று தோன்றியது.'ஏழை படும் பாடு' நாவலில் வரும் ஜீன்வால்ஜீனையும், கோஸத்தையும் நினைத்துக்கொண்டேன். இந்தியாவில் தீவிரவாதிகள் என்றும்,நக்ஸலைட்கள் என்றும்,மாவோயிஸ்டுகள் என்றும், சாராயம் காய்ச்சினான்...கஞ்சா விற்றான்...கொள்ளையடித்தான் என்றும் போலீசால் என்கௌண்டர் செய்யப்படும் தாதாக்கள்,குண்டர்கள்,அடியாட்கள் ஆகிய அனைவருமே குற்றம் செய்தவர்தானா என சிலர்

முகங்களைப்பார்க்கும்போது தோன்றும்.ரஸ்கோல்நிகோவ் போல தடி எடுத்தவன் எல்லாமே தண்டல்காரனாக ஆகிவிடமுடியாது.அது அடிப்படையிலேயே தவறு.

இந்தக்கதையின் மையக்கருவே ரஸ்கோல்நிகோவ் தன் குற்றத்தைத் தானாகவே ஒப்புக்கொண்டு தண்டனையை ஏற்றுக்கொள்கிறானா என்பதுதான். மனித மனம் எத்தனை விசித்திரங்கள் நிரம்பியது என்பதை ...நான் பியோதர் தஸ்தாயெவ்ஸ்கியைப் படித்துத்தான் புரிந்து கொண்டேன். சாதாரண விஷயத்திற்கே சிலர் உண்மையைக்கூறாதபோது 'எவ்வளவு பொய், நெஞ்சழுத்தம்' என்று நினைத்துக்கொள்வேன். ரஸ்கோல்நிகோவ் நம் மனமே ஆயாசப்படும் வகையில் -கடைசி வரையில் குற்றத்தை முழுமனதோடு தானாக ஒப்புக்கொள்ளவே இல்லை.சோனியாவின் அன்பு, காதல், மற்றும் அவளது வார்த்தைகளுக்காகத்தான் ஒப்புக்கொள்கிறான் என உணர்ந்தபோது -மனித மனதில் கடைசிவரை போராடிப்பார்க்கும்....தன் செயலை எல்லாம் நியாயப்படுத்த நினைக்கும் ஒரு extreme corner இருக்கிறது(எல்லோருக்குமே) என உணர்ந்து கொண்டேன்.
ஆனால் ஒன்று சொல்ல வேண்டும்; ரஸ்கோல்நிகோவின் உடல் உபாதைகள்,மனச்சோர்வு,கொள்கை உறுதி, செயலில் நிலையாக நிற்பது ...இவை எல்லாமே நம்மைப்பிடித்து ஆட்டுகின்றன. அவன் போலீசில் மாட்டி விடக்கூடாதே என்ற பேராசையும், அவனைத்துன்பப்படுத்தும் போர்பிரி பெத்ரோவிச்சை ஏதாவது செய்து விடலாமா என்ற விபரீத எண்ணங்களும் நமக்கே உதிக்கின்றன.

ரஷியாவில் ஏற்பட்ட பலவித புரட்சி மாற்றங்களைக் கதை பேசுகிறது.அந்த எண்ணச்சிக்கல்களுக்குள் மாட்டிக்கொண்ட ஏழை இளைஞன் ரஸ்கோல்நிகோவின் வாய்க்கசப்பும், எதோ ஒரு தாகத்தில் தவிப்பவனைப்போல அலையும் அலைச்சலும், அவனுடைய பழைய உடைகளும், தொப்பியும், ஷூக்களும் நம்மைத் தீவிரமாகப் பாதித்துக் காய்ச்சலை உண்டு பண்ணுகின்றன.

துனியாவுக்குத்தான் எவ்வளவு சோதனைகள்...இடர்ப்பாடுகள்! ரஸ்கோல்நிகோவின் மீது அவன் தாய் பல்கேரியா அலெக்ஸேண்ட்ரோவ்னா வைத்த பாசமும் , நம்பிக்கையும் நம் மனதை நெகிழச்செய்கிறது. காதரீனா இவானோவ்னா இந்திய ஏழைத் தாய்களின் பிரதிநிதியாகவும், மர்மெலாதோவ் இந்தியக்குடிகாரத் தந்தையின்(மனைவி தாலியைப்பறித்துக்கொண்டுபோய்க்குடிப்பது) பிரதிநிதியாகவும் இருக்கிறார்கள்.

அல்யோனா- பணக்காரர்களின், அடாவடிக்காரர்களின், அக்கிரமக்காரர்களின் குறியீடு;

ரஸ்கோல்நிகோவ்- ஏழைகளின், இயலாதவர்களின்,புரட்சிச் சிந்தனையாளர்களின் கோபத்தின் குறியீடு;

ஸ்விட்ரிகைலோவ் ,லூசின் -கயவர்களின் குறியீடு;

துனியா, சோனியா -நேர்மைகளின்,நம்பிக்கைகளின், நன்னெறிகளின், நல்லொழுக்கங்களின் குறியீடு (அறியாமையினாலோ, குடும்பத்தேவையினாலோ பிறழ்ந்தவர்களை நான் மோசமானவர்களாகக் கருதவில்லை);.

காதரீனா, மர்மெலாதோவ்-இயலாதவர்களின், வறுமையின் குறியீடு.

போர்பிரி பெத்ரோவிச்-கடமை தவறாதவர்களின் குறியீடு.

லெபஸியாட்னிகோவ், ரஸுமிகின் போன்ற இளைஞர்கள்தான் நல்ல,,இனிமையான எதிர்காலத்துக்கான குறியீடு.

இவ்வளவு உணர்வுகளையும் படித்து...புரிந்து...உணர்ந்து...அனுபவித்து எங்களுக்காகக்கொடுத்திருக்கிறீர்களே ,உங்கள் கரங்களுக்கு ஆயிரம் வந்தனங்கள். ///

அசடனைப் படிக்க இன்னும் இரு மாத கால அவகாசம் தேவைப்படும். இவ்வளவு பெரிய நூலை எப்படி மொழி பெயர்த்தீர்களோ என்ற ஆச்சர்யத்துடன் இன்னும் புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் அம்மா. அதில் வரும் காரெக்டர்ஸ் படங்களுடன் முன்னுரையில் இருப்பது சிறப்பு.

ஜெயமோகனின் நல்லவர் , கெட்டவர் இயல்பு ( தெய்வீகத்தன்மை மற்றும் அசட்டுத்தனம், புத்திசாலித்தனம் மற்றும் கயமைத்தனம் ) பற்றிய ஒப்பீடுகளை சிறிது நேரம் அசைபோட்டுக் கொண்டிருந்தேன். நானும் நூலை முழுமையான அனுபவித்தபின் எழுதுகிறேன் அம்மா எனக்குத் தெரிந்த மொழியில்..:)

புதன், 18 ஜனவரி, 2012

சாதனை அரசிகளை சந்தித்தமைக்கு நன்றி விஜயலெக்ஷ்மி, தஞ்சைவாசன், ரெங்கநாதன்.

என் புத்தகம் வந்ததும் முதன் முதலில் வந்து வாங்கியவர்கள் நண்பர்கள், தோழிகள் உறவினர்கள். முதன்முதலில் விமர்சனம் எழுதியவர் ரெங்கநாதன். அதன் பின் அன்புத்தோழி விஜி.. இவர்களுடன் தஞ்சைவாசன்.. மூவருக்கும் என் நன்றிகள்.

அங்கீகாரம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு செயலுக்கும் தேவையாய் இருக்கிறது. என்னை அங்கீகரித்து நூலுக்கு மதிப்புரை அளித்திருக்கும் மூவருக்கும் நன்றி.. வேறென்ன சொல்ல..

விஜயலெக்ஷ்மி ஜெயவேலு:-
************************************

என் தோழி தேனம்மை லக்ஷ்மணன் எழுதிய "சாதனை அரசிகள்" என்ற புத்தகத்தை நேற்று புத்தக கண்காட்சியில் வாங்கி ஒரே மூச்சாக படித்துவிட்டேன்!!!

அப்பப்பா! என்ன ஒரு தடைகளற்ற வாக்கிய அமைப்பு! சொற் பிரவாகம் !!

வாழ்த்துக்கள் தேனு!!! இது உங்களுடைய முதல் படைப்பு என்று நம்பதான் முடியவில்லை!!!

உங்களுக்கு முதலில் இருந்து ஆதரவு தந்த மேடம் கிரிஜா ராகவன்,தாங்களே பேட்டி எடுத்த மேடம் பாத்திமா பாபு,கல்லூரி காலம் தொட்டு உங்கள் திறமை அறிந்த professor சுசீலா முன்னுரை,நட்புரை,வாழ்த்துரை இவற்றில் மிக்க பெருந்தன்மையும்,ஊக்கமும்,உங்கள்பால் அக்கறையும் தென்படுகிறது தேனு!!!

உண்மையில் ஒவொரு தோழியுமே சாதனை அரசிதான்!!!! அவர்கள் சந்தித்த சோதனைகளே சாதனைகளாக மாற்றிய முயற்சி, தன்னம்பிக்கை ஒரு கணம் எல்லோரையும் அசர வைக்கும்.

இவர்களில் எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் என் தோழியர்கள்!!

ரம்யா தேவி:

நான் வியந்து திகைத்த தோழி இவர்தான்!!!தன்னம்பிக்கையின் உச்சகட்டம்!!! காயத்திரி அக்காவின் நட்பு இவருக்கு பெரும்பலம் !!!ஆசைகளும் இளமை பூரிப்பும் அரும்பு விடும் 13 வயதில் நெருப்பு காயத்தால் ஏற்பட்ட ரணங்களை 42 plastic surgery மூலம் சரி செய்து தன்னம்பிக்கை உருவமாக ஊலா வருகிறார் தன்னால் முடிந்த சேவைகளை விடாமல் செய்து கொண்டு!!!

மோகனா அம்மா:

சோதனைகளே வாழ்க்கையாக பெற்றவர் .பெண்ணாக பிறப்பதற்கு மாதவம் செய்தல் வேண்டும் என்பதற்கு எடுத்துகாட்டு இவரை பற்றி முக நூல் தோழியருக்கு நான் சொல்லவேண்டியது இல்லை!!!பள்ளி படிப்பு முதல் பிரின்சிபால் பதவி வரை பிறகு தனிப்பட்ட வாழ்கையில் அவர் சந்தித்த சோதனைகள்,சங்கடங்கள், இடர்பாடுகள்,அவமானங்கள் ஏராளம்!!புற்று நோய் தாக்குதல்,தொடர் சிகிச்சை இவற்றில் எல்லாம் மீண்டு புற்று நோய் பற்றி awareness எல்லோரிடமும் ஏற்படுத்தும் அளப்பரிய பணியை தொடர்ந்து கொண்டு இருக்கிறார். இது போதாது என்று எதிர்கால சந்ததினருக்கு science research என்று ஊக்குவித்து கண்ணுக்கு தெரியாத புரட்சியை அமைதியாக ஏற்படுத்துகிறார் !!!இவருக்கு ஒரு நாளைக்கு 24 மணிநேரம் பத்தாது அப்படி காலில் சக்கரம் கட்டி பறக்கும் பெண்மணி!!

மணிமேகலை:

iron lady என்றால் அது மணிமேகலை தான்!!! பெண்கள்,ஒடுக்கப்பட்டோர் இவர்களுக்கு ஒரு சிறு பிரச்சினை என்று தெரிந்தால் ஓடோடி வந்து களத்தில் நின்று போராடுபவர்!!!SC / ST போராட்டத்தில் பலமுறை சிறை சென்றவர்!!!கணிர் என்று ஒலிக்கும் இவர் குரல் நமக்கு பல மடங்கு உற்சாகம், தன்னம்பிக்கை தரும்!!!

சாருமதி,தமிழரசி :
மத்திய அரசில் அதிகாரிகளாக பணி புரியும் இவர்கள் நாம் கண்ணில் காணும் தெய்வங்கள்!!!ஈ புழுக்கள் இவற்றால் மொய்த்து அனாதையாக கிடக்கும் மன நிலை சரி இல்லாதவர்கள், வயோதிகர்கள், பெண்கள் இவர்களை சக தோழர்களோடு சுத்த படுத்தி மருந்திட்டு உணவிட்டு ,கவுன்செல்லிங் செய்து அவர்கள் உறவினர்கள் அல்லது காப்பகங்கள் சேர்ப்பதும் அவர்களை அரசு கவனத்திற்கு கொண்டு செல்வதும் இவர்கள் சிரமேற்கொண்டு செய்கிறார்கள் .WELL WISHERS OF MENTALLY ABNORMAL NATIONALS என்ற அமைப்பு ஒன்றை சட்ட ரீதியாக நிறுவி செவ்வனே செய்து வருகிறார்கள் !!


எங்கோ கண்ணுக்கு தெரியாமல் சோதனைகள் இடையே சாதனைகளை சேவைகளை செய்து கொண்டு இருக்கும் 17 பெண்களை பற்றி சமுகத்துக்கு வெளி கொண்டு வந்த தேனம்மை லக்ஷ்மணன் நீங்களும் சாதனை அரசிதான்!!!தொடரட்டும் உங்கள் எழுத்து பணி!!!
**************************

தஞ்சைவாசன். :-
*********************

மனிதனாய் பிறந்துவிட்ட நமது அனைவர் வாழ்விலும் சோதனை வருவதும், அதனை எதிர்கொள்வதும் பொதுவான ஒன்றுதான்... பெண் என்றால் இன்னும் அதிகமாகவே இருக்கும்... ஆனால்...

வாழ்வில் வந்த சோதனை எல்லாவற்றையும் கடந்து, வென்று சாதனையாக்கி மற்றவர்களுக்கு தானும் ஒரு முன்னோடியாக இருக்கும் இத்தகைய மங்கையர்களை பற்றி படிக்கும் போது மனதுக்குள் கண்டிப்பாக எனக்கே உற்சாகம் பிறக்கும் போது உங்களுக்குள் கண்டிப்பாக வெள்ளமாகவே இருந்திருக்ககூடும்...

அவர்களை பற்றி ஆய்ந்து, ஒரு நூலாக தன்னுடைய முதல் நூலாக எழுதி தானும் ஒரு சாதனை அரசியாக உங்கள் மனதிலும் உலாவரும் உங்கள் இனிய தோழிக்கு என்னுடைய நல்வாழ்த்துகள்...

நீங்கள் குறிப்பிட்ட அனைத்து மங்கையர்களுக்கும் மற்றும் எங்களுடன் பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் என் வாழ்த்துகள்...

*************************************

வி. ரெங்கநாதன்:-
********************

இன்று சாதனை அரசிகள் புத்தகத்தை கண்காட்சியில் வாங்கினேன். அட்டை படம், வடிவம், உள்ளே எழுத்துக்களின் வடிவம், அளவு அருமை.
என்னை மிகவும் கவர்ந்த விஷயம் பிழையின்றி நேர்த்தியான அச்சு படிக்க சுகமாக இருந்தது.
மூன்று புத்தகங்களின் ஆசிரியன் என்ற அனுபவத்திலும், தீவிர வாசிப்பை கைக்கொண்டவன் என்ற அணுகுமுறயிலும் நான் தெரிந்து கொண்டது நேர்த்தியான கட்டமைப்பை கொண்டுவருவது என்பது கடும் முயற்சிக்குப் பின்னேயே நடக்கக் கூடியது.
அந்த வகையில் பிரபல பதிப்பகங்களே வழுக்கி விழுந்து விடுகின்றன.
உங்கள் புத்தகம் நேர்த்தியோடு சமைக்கப்பட்டுள்ளது படிக்க ஊக்கம் அளிக்கிறது.
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

செவ்வாய், 17 ஜனவரி, 2012

லேடீஸ் ஸ்பெஷலின் ஸ்பெஷல் லேடியும் சாதனை அரசிகளும்...


வாழ்வின் சில தருணங்கள் எப்படி எதிர்ப்படுகின்றன என்பதை நாம் கணிக்கவே முடியாது. நம் கனவுகளை சூலுற்று பாதுகாத்து வைத்திருந்தால் நாமே அவற்றை ஒரு காலத்தில் சுகமாய்ப் பிரசவிக்கலாம் என்பது உண்மை,

திரு நாகப்பன் அவர்கள் என் உறவினர் மட்டுமல்ல.. என் பால்யகால புத்தகத் தோழர் என்பதும் உண்மை. அவரது புத்தக அலமாரியில் இருக்கும் புத்தகங்கள் எங்கள் விடுமுறைகளைப் புதுப்பித்தவை. ஒன்றைப் படித்துப் பத்திரமாய்த் திருப்பிக் கொடுத்தால்தான் அடுத்தது கொடுப்பார். அவ்வளவு ஸ்ட்ரிக்ட். என்னைவிட ஒரு வயது மூத்த என் தாய் மாமா அவர்.

சனி, 14 ஜனவரி, 2012

சுசீலாம்மாவின் வாழ்த்துரை.. சாதனை அரசிகள் புத்தகத்தில்.


என் தாய் தமிழ் பேச கற்றுக் கொடுத்தார். அது என் தாய் மொழி என்பதால் இலகுவாகக் கற்றுக் கொண்டேன். கல்லூரியில் தமிழின் மேல் என் காதலைக் கண்டுபிடித்தார் சுசீலாம்மா. என் தமிழன்னை. பெண்கள் பற்றிய அவரது ஒரு ஆராய்ச்சிப் படிப்புக்காக நிரம்பி வழியும் அவரது அலமாரியில் இருந்து தினம் எங்களுக்கு ஒரு நூல் வரும். ( எனக்கும் உமா மகேஸ்வரிக்கும்) . தினம் ஒரு கவிதை எழுதுவோம். தினம் எங்களுக்கு அதற்கான ஒரு அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும். தினம் தினம் தாயவளின் சன்னதியில் ஒரு தீப தரிசனம் போல எங்கள் தமிழ் தரிசனம் நிகழ்ந்து கொண்டிருந்தது.

வியாழன், 12 ஜனவரி, 2012

என் அன்பின் அம்மாவுக்கு..

எங்களுக்காய்
கடவுள் அனுப்பிய தேவதையே..
அன்பெனும் குடுவையான அழகியே..
உன் உதிரத்தைப்
பாலாக்கி உரமூட்டியவளே..

வீட்டினுள் இருக்கும்
விளையாட்டுத் தோழி நீ..
வேதனையில் சாயும் போது
போதி மரம் நீ..

புதன், 11 ஜனவரி, 2012

சாதனை அரசிகள் வெளியீடு 35 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில்..

டிஸ்கவரி புத்தக அரங்கில் என்னுடைய புத்தகத்தை என் கணவர் வெளியிட உயர்திரு பாரதி மணி ஐயாவும், இளம் பெண் கிரிக்கெட்டர் திருஷ்காமினியும் பெற்றுக் கொண்டார்கள்.

சனி, 7 ஜனவரி, 2012

சாதனை அரசிகள் விழா அழைப்பிதழ்:-


என் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய வலைப்பதிவ சகோதர, சகோதரி மற்றும் தோழமைகள், வாசகர்கள், உறவினர்கள் அனைவரும் வருக..!!!

வியாழன், 5 ஜனவரி, 2012

எப்போதும் உங்களுடன் 106.4 ஹலோ எஃப். எம்மில்

டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி காலை 9 மணிக்கு ஹலோ எஃப்.எம்மில் ஒரு நல்ல கலகலப்பான நிகழ்ச்சி. சர்வதேச சினிமா பற்றி ப்ரபலங்கள் கருத்து பகிர்ந்து கொண்டிருந்த நேரத்தில்., நாமும் நம்ம கருத்தை சொன்னோம். ( நாம பிரபலமா, நேயரா என்பது கொஸ்டீனபிள்..!!!). கருத்து கேட்டாங்க .. சொன்னேன்.

நம்மோட சினிமா பற்றி , அதன் வளர்ச்சி பற்றி , மற்றும் பொதுவான தங்கள் கருத்துக்களை எல்லாம் சொல்லிகிட்டு இருந்தாங்க..
Related Posts Plugin for WordPress, Blogger...