கலைமகள் அறிவித்திருந்த “நான் சென்று வந்த இந்து திருத்தலம்” என்ற போட்டிக்கு எனது இந்தக் கட்டுரையை அனுப்பி இருந்தேன். அதற்கு மூன்றாம் பரிசும் 2,000/- ரூபாய் பரிசுப் பணமும் கிடைத்துள்ளது. நன்றி கலைமகள். இதை எனக்கு அறியத்தந்த மங்கையர் சோலை குழுவில் உள்ள சகோதரி திருமதி கல்யாணி ஸ்ரீதர் அவர்களுக்கு நன்றி :)
ஸ்ரீ நரியங்குடி கருங்குளம் பூரண புஷ்கல சமேத ஸ்ரீ ஆதினமிளகி அய்யனார் காட்டுக் கருப்பர் கோயில்
குலதெய்வம் என்பது
மனிதகுலத்தைக் காக்கும் தெய்வம் என்பதால் நாட்டாரும் நகரத்தாரும் சேர்ந்து வழிபடும்
அய்யனார், கருப்பர் கோயில்கள் சிவகங்கைப் பகுதியில் அதிகம். வலசை வந்த நகரத்தார் தாம்
வந்து தங்கியிருந்த ஊர்களில் கழனிகளையும் கம்மாய்களையும் காக்கும் ஊர்க்காவல் தெய்வமாக
நாட்டார்கள் வழிபட்ட அய்யனாரையே தம் தலைமாடு காக்கும் குலதெய்வமாகக் கொண்டனர்.
பட்டமங்கலத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது நரியங்குடி.. ஊர் எல்லையில் கம்மாய்க்கரையில் கம்பீரமாகப் புது மணத்தோடும் வண்ண வண்ண நிறத்தோடும் காத்திருந்தார்கள் கையில் அரிவாளோடு சிங்கப்பற்களுடன் இரண்டு பூதங்களும் பாரிவேட்டைக்குத் தயாரான நிலையில் இரண்டு புரவிகளும். ஏனெனில் 31.5.23 அன்று அங்கே புரவி எடுப்பு..