எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

சாபம் நீங்கி ஞானம் பெற்ற சத்தியதவன்

 சாபம் நீங்கி ஞானம் பெற்ற சத்தியதவன்


முன்னோர் செய்த புண்ணியம் தலைமுறை தலைமுறையாகத் தொடரும். அதேபோல்தான் அவர்கள் செய்த பாவமும். நாகாவாமல் தன் தந்தை செய்த பிழையால் சாபத்தோடு பிறந்து அம்பிகையின் பீஜாக்ஷரத்தால் ஞானம் பெற்ற சத்தியதவனைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

வேத காலத்தில் கோசல தேசத்தில் தேவதத்தன் தன் மனைவி ரோகிணியுடன் வசித்து வந்தான். பல்லாண்டுகாலம் பிள்ளைப்பேறு இல்லாததால் இருவரும் மனம் வருந்தினார்கள். புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால் பிள்ளைப் பேறு உண்டாகும் என்று சொல்லப்பட அதற்கான யத்தனங்களில் இறங்கினான் தேவதத்தன்.

தமஸா நதிக்கரையில் புத்திரகாமேஷ்டி யாகம் செய்ய வேண்டி பொருட்களைச் சேகரித்தான். ஹோம குண்டங்களையும் அமைத்தான். நெருப்பு, மின்னல், சூரியன் என்று மூன்று விதமான அக்னிகளையும் எழுப்பினான். ரித்விக்குகளாக பிரம்மா, அத்வர்யு, ஹோதாவாகத் தக்கவர்களை அமைத்தான். இதில் பிரம்மா அதர்வ வேதத்தைப் பின்பற்றி யாகத்தைச் செய்வார். அத்வர்யு யாகத்திற்கான பொருட்களைக் கொடுத்து யாக குண்டத்தை அமைப்பார். ஹோதா ரிக் வேதம் ஓதி யாக தேவதைகளை அழைத்து அவர்களுக்கான மந்திரங்களை உச்சரிப்பார்.

உத்காதரர் சாம வேதம் ஓதுவதில் சிறந்தவர். தன்னுடைய புத்திர காமேஷ்டி யாகத்தில் சாம வேதம் ஓதும்படி உத்காதரராக கோபிலர் என்னும் மகரிஷியை வேண்டிக் கொண்டான் தேவதத்தன். வயது முதிர்ந்தவர் கோபிலர். அவரால் மூச்சை இழுத்துப் பிடித்துச் சாமகானம் செய்ய இயலவில்லை. கானம் அபஸ்வரமாக ஒலித்தது.


பொறுத்துப் பொறுத்துப் பார்த்த தேவதத்தன் ஒரு கணத்தில் மகரிஷியைப் பார்த்துச் சீறினான். “எப்படிப் பாட வேண்டும் சாமகானம். இப்படி அறிவிலியைப் போல அபஸ்வரமாகச் சாமகானம் செய்கின்றீர்களே” இந்த இகழ்ச்சியைக் கேட்டதும் ஏற்கனவே முதுமையினால் ஏற்பட்ட தள்ளாமையினால் தடுமாறிக் கொண்டிருந்த கோபிலர் மகரிஷி பொங்கிவிட்டார்.

”உனக்கு மகன் பிறக்க வேண்டி என் தள்ளாமையையும் பொருட்படுத்தாமல் சாமகானம் பாட ஒப்புக் கொண்டேன். நீயோ என் வயதின் முதிர்ச்சியையும் கருதாமல் என்னை அறிவிலி என இகழ்ந்து விட்டாய். உனக்கு அறிவிலியான புதல்வன் பிறப்பானாக” என்று சாபமிட்டு விட்டார்.

இதைக் கேட்டதும் நடுநடுங்கிப் போனான் தேவதத்தன். “சுவாமி. தாங்கள் இப்படிச் சாபம் கொடுக்கலாமா? சிரார்த்தத்தின் போது கூட அறிவிலியான பிராமணனுக்கு அன்னம் வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால் தானம் செய்யக் கூடாது. குழந்தை வரம் வேண்டித்தானே யாகமே செய்கின்றேன். அப்படியிருக்க என் குழந்தைக்கு நீங்கள் இப்படி எப்படிக் கூறலாம்?” என்று கண்ணீர் விட்டுக் கதறி அழுதான்.

இதைக் கண்டு மனமிரங்கினார் மகரிஷி. அவரது சினம் தணிந்தது. “உன் மகன் சில ஆண்டுகளுக்குப் பின் மேதை ஆவான்” என அருளிச் சென்றார். யாகமும் முடிந்தது.

சில காலம் கழித்துத் தேவதத்தனின் மனைவி ரோகிணி கருவுற்றாள். தக்க காலத்தில் அவளுக்கு அழகானதொரு ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால் அந்தோ பாவம். வளர வளரக் குழந்தையின் மூடத்தனம் வெளிப்படலாயிற்று. தங்கள் மகன் பரம முட்டாளாக இருப்பதைப் பார்த்த தேவதத்தனுக்கு உள்ளம் விட்டுப் போயிற்று. இன்னும் வளர்ந்தபின் பலரும் அவனை மூடன் என்று இகழ்வதைக் காண்பதைக் காட்டிலும் அவனைக் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடலாம் என முடிவெடுத்தான்.

ஒருநாள் மனைவிக்கும் தெரியாமல் குழந்தையைக் கொண்டுபோய்க் காட்டில் விட்டு விட்டான். காட்டில் தனித்துவிடப்பட்ட அக்குழந்தைக்குத் தன் பெற்றோர் தனக்கு ஒன்றும் தெரியாத காரணத்தினாலேதான் தன்னைக் கைவிட்டு விட்டார்கள் எனத் துக்கமாக இருந்தது. “இனி நான் பொய்யே உரைக்கமாட்டேன்” என்று விரதம் பூண்டான். உண்பது, உறங்குவது இவை இரண்டைத் தவிர வேறு எதையும்  செய்யாமல் சத்தியத்தைக் கடைப்பிடித்த காரணத்தினால் அவனுக்குச் சத்தியதவன் என்ற பெயர் விளங்கலாயிற்று.

இப்படியே பதினான்கு ஆண்டுகள் கழிய ஒரு நவராத்திரி காலம் வந்தது. காட்டில் ஒரு வேடன் ஒரு பன்றியை வேட்டையாடினான். ஆனால் அதுவோ சிற்சில காயங்களுடன் தப்பி ஓடிவந்து சத்தியதவனின் குடிலில் தஞ்சம் அடைந்தது. பன்றியைத் துரத்தியபடி வந்த வேடன் குடிலின் வாயிலில் அமர்ந்திருந்த சத்தியதவனிடம் “இங்கே ஒரு அடிபட்ட பன்றி ஓடிவந்ததா? என வினவினான். மேலும் “அதைக் கொன்று சாப்பிடுவது என் குலதர்மம்/ நான் பொய் சொல்லவில்லை, நீயும் பொய் சொல்லக் கூடாது ” என்று கூறினான்.


இதைக் கேட்ட சத்தியதவனோ இங்கே பன்றி இருக்கிறது என்று கூறினால் அது வதமாகி விடும். இல்லை என்றால் பொய் கூறியதாகி விடும்.  இவனும் பட்டினியாகப் போக நேரிடும் பாவமும் ஏற்படும். என்ன சொல்லலாம் என யோசித்தான்.  குடிலின் உள்ளே மறைந்திருந்த பன்றியோ “ஹ்ரூம், ஹ்ரூம்” என உறுமுவது அவனுக்கு மட்டும் கேட்டது. இந்த ஓசை என்னை என்னவோ செய்கிறதே என்று உணர்ச்சி வசப்பட்டான் சத்தியதவன்.

அது நவராத்திரிக் காலம் வேறு. அம்பாளின் பீஜாக்ஷர மந்திரத்தின் ஒரு பகுதியான ஹ்ரூம் ஹ்ரூம் என்ற ஒலி அவனது காதில் பட்டதும் அவனுக்கு ஒருவிதமான ஞானத் தெளிவு ஏற்பட்டது. எனவே அவன் அந்த வேடனை நோக்கி ,” எவன் பார்க்கிறானோ அவன் சொல்ல மாட்டான், எவன் சொல்கிறானோ அவன் பார்க்க மாட்டான். தன் வேலையையே கடமையாகக் கொண்ட வேடனே நீ அடிக்கடி என்ன கேட்கிறாய்?” என்று சமயோசிதமான வினவ, இவனிடம் பேசி மீளமுடியாது என்பதை உணர்ந்த வேடன் அவ்விடத்தை விட்டு அகன்றான். பன்றியும் காப்பாற்றப்பட்டது.

இவ்வாறு பீஜாக்ஷர மகிமையால் ஞானம் பெற்ற சத்தியதவன் தன் அறியாமை நீங்கி மென்மேலும் புலமை பெற்றவனானான். இதைக் கேள்வியுற்ற அவனுடைய பெற்றோர் இருவரும் வந்து அவனை மகிழ்வுடன் தழுவித் தம் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். இவ்வாறு தன் தந்தை செய்த பிழையால் பெற்ற சாபம் அம்பாளின் மந்திர மகிமையால் நீங்கி ஞானம் பெற்றான் சத்தியதவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...