எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 30 ஆகஸ்ட், 2018

இரவு - எல் கேயின் நூலுக்கு என் இன்னுரை.

இரவு :- முன்னுரை.


எனது முன்னுரையுடன் இன்னொரு இன்னூல்.

நூல் வெற்றி பெறவும் திக்கெட்டும் உங்கள் புகழ் பெருகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள் கார்த்திக் !கார்த்திக் லெக்ஷ்மி நரசிம்மனின் சிறுகதைத் தொகுப்பான இது மென்மையான உணர்வுகளால் பின்னப்பட்டது. நீதி, நேர்மை, நியாயம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ள சராசரி மனிதர்களின் எண்ணப்போக்கைப் பிரதிபலிப்பது. மேலும் இவரது கதைகள் குண்டு வைத்தல், குழந்தைப்பேறின்மை, இணையத்திற்கு அடிமையாதல் போன்றவற்றை இன்றைய சூழலில் மனிதன் எப்படி எதிர்கொள்வது என்ற இன்றையப் ப்ரச்சனையைப் பேசுகின்றன.
ஆச்சர்யமாக இத்தொகுப்பின் நடுவில் ஒரு க்ரைம் & த்ரில் தொடரும் இடம்பெற்றுள்ளது. மிக சுவாரசியமாக தனக்கு க்ரைம்தொடர் எழுத வரும் என்பதையும் நிரூபித்துள்ளார் கார்த்திக்.
தவறு செய்தவன் தண்டனை கொள்வான் என்பது முதல் கதையான இரவு மெய்ப்பிக்கிறது. மணிக்கணக்குப் பிசகாமல் நகரும் கதை. சட்டென்று தீர்ப்புக் கூறிவிட்ட முடிவு மிகவும் பொருத்தம். வாழ்வில் நன்மையில் நம்பிக்கையும் தீமையை விட்டு விலகியும் இருக்கக் கற்பிக்க இம்மாதிரிக் கதைகள் இன்றைய தேவை.

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

கார் ஆசுபத்திரியும் குலைநடுங்க வைத்த வெள்ளமும்.

1861. ஆலம் விழுதுகள் போல் உறவுகள் ஆயிரம் இருந்துமென்ன. வேரென இருந்தவரைக் காணலியே..

1862. உற்றம் சுற்றம் சூழச் செல்வதற்கும் கொடுத்துவைத்தவர்கள் மிகச் சிலரே.

1863. பருவம் முகிழ்த்த சூதகம்
பச்சிளம் பிறப்பின் சீராம்.
நரைத்த திரைத்த கேதம்
ஞமனின் நடுவன் சீராம்

மூங்கில் நுணலாய்
உருவம் சாய்த்த
இரும்பது துரும்பாய்
உள்ளம் ஒய்த்த
உவப்பை ஒழித்த
பெருங்கழி ஓதம்
நுதலின் நிபந்தம்.

1864. காற்றின் இசைவுக்கேற்ப
நடனமாடிக்கொண்டிருக்கிறது
அசைவறியாப் பூ.

1865. தென்மேற்குப் பருவக்காற்று தேனிப்பக்கம் வீசுதம்மா சாரல் இன்பத் தூறல்.. :) <3 p="">

1866. ரம்புட்டான் கிலோ 200 ரூ. ஆனா குரங்கு மாதிரி கீறி பிச்சு தின்ன வேண்டி இரிக்கி.. ஹிஹி...

திங்கள், 27 ஆகஸ்ட், 2018

ஸ்யமந்தகமணி படுத்திய பாடு. தினமலர். சிறுவர்மலர் - 32.


ஸ்யமந்தகமணி படுத்திய பாடு.

ண்டவனைக் கூட அபவாதத்தில் ஆழ்த்திய பொருள் என்றால் அது ஸ்யமந்தகமணி என்றொரு ரத்னஹாரம்தான். அதற்கு என்ன சிறப்பு அது என்ன அபவாதத்தைக் கொண்டு வந்தது என்று பார்ப்போம் குழந்தைகளே.

துவாரகையில் சத்ராஜித் என்பவர் வசித்துவந்தார். அவருடைய பக்தியைப் பாராட்டி சூரியபகவான் கொடுத்ததுதான் ஸ்யமந்தகமணி என்றொரு ஹாரம். அது சாதாரண ஹாரம் மட்டுமல்ல. அது இருக்கும் இடம் மங்கலம் பொங்கும். ஆரோக்கியம் அளிக்கும் அது மட்டுமல்ல தினமும் எட்டு தோலா தங்கமும் கொடுக்கும்.

இப்பிடியாகப்பட்ட பொருள் ஒரு சாதாரண மனிதனிடம் இருப்பதை விட துவாரகையின் ராஜாவான உக்ரசேனரிடம் இருந்தால் தேச நலனுக்கும் நாட்டு மக்களின் செழிப்புக்கும் உதவுமே என்று கிருஷ்ணர் நினைத்தார். அதனால் அதை ராஜா உக்ரசேனருக்கு வழங்குமாறு அறிவுறுத்தினார்.

ஆனால் சத்ராஜித்துக்கு அதைக் கொடுக்க விருப்பம் இல்லை. அந்த ஸ்யமந்தகமணியை அணிந்துகொண்டு அவனது தம்பி ப்ரசேனன் என்பவன் வேட்டைக்குச் சென்றான். அங்கு அவன் மிருகங்களைத் துன்புறுத்தியதால் ஸ்யமந்தகமணியின் புனிதம் குறைந்தது. ஒரு சிங்கம் அவனை வேட்டையாடி அந்த மணியை வாயில் கவ்விச் சென்றது.

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

விளையாட்டு வினையாகும். தினமலர். சிறுவர்மலர் - 31.


விளையாட்டு வினையாகும். :-

ன்னனானால் என்ன மகரிஷி ஆனால் என்ன ? எதில்தான் விளையாடுவது என்ற வரைமுறை இருக்கிறது. அப்படி இல்லாமல் ஒரு ராஜா  தவமியற்றிக் கொண்டிருக்கும் முனிவரின் கழுத்தில் விளையாட்டாக ஒரு செத்த பாம்பை மாலையாகப் போட்டுவிட்டான். அந்த முனிவரின் மகன் உக்கிரத்துடன் விழித்து கமண்டல நீரை அவன்மேல் தெளித்து ஒரு வாரத்துக்குள் அவன் நாகத்தால் இறப்பான் என பிடி சாபம் கொடுத்துவிட்டார். அதனால் என்னென்ன குளறுபடிகள் ஏற்பட்டன. அவை எப்படி நீங்கின என்று பார்ப்போம் குழந்தைகளே.

குருஷேத்திரப்போர் முடிந்த சமயம். ஹஸ்தினாபுர அரண்மனையில் அர்ஜுனனின் மகன் அபிமன்யுவின் இறப்பிற்குப் பிறகு அவரது பேரன் பரீட்சித்து மன்னர் ஆட்சிக்கு வந்தார். இவரது தாய் உத்தரை. உலகிற்கே மன்னர், தான் ஒரு சக்கரவர்த்தி என்ற மமதை அவரிடம் இருந்தது.

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

நேர்த்தியும் மனநிறைவும்.

நான்காம் ஆண்டில் வாசிப்பை நேசிக்க வைத்த நமது மண்வாசம். 

வானம் வெய்யிலைத் துறந்திருந்த அந்த ஜூலை மாத 12- ஆம் நாள் காலைப்பொழுதில், நமது மண்வாசம் இதழின் நான்காம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது மதுரை தானம் அறக்கட்டளையின் நிர்வாகக் கட்டிடத்தில். மிக அருமையான அந்தக்கூட்டத்தில் கிட்டத்தட்ட 300 சுய உதவிக் குழுக்களின் தலைவிகளும், நமது மண்வாசம் இதழில் பங்களிப்புச் செய்துவரும் பேராசிரியர்களும், மருத்துவர்களும், இதழாளர்களும் எழுத்தாளர்களுமாக அரங்கை நிரக்கச் செய்திருந்தார்கள்.
காலை பத்து மணிக்கு திரு பால்பாண்டி அவர்கள் இறைவணக்கம் பாடினார்கள். சிறப்பு விருந்தினர்கள் முனைவர் திரு. கு. ஞானசம்பந்தன் அவர்கள் குத்துவிளக்கினை ஏற்ற தொடர்ந்து ஐந்து திருமுகங்களையும் மருத்துவர் வடிவேல் முருகன் மற்றும் சுய உதவிக்குழுக்களின் தலைவி சாந்தி மதுரேசன் ஆகியோர் ஏற்றினார்கள்.

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

சிறப்பானதைக் கொடுத்த சபரி. தினமலர். சிறுவர்மலர் - 30.

சிறப்பானதைக் கொடுத்த சபரி
சாதாரணாமாகவே பிறருக்கு நாம் ஒன்றைக் கொடுக்க வேண்டுமென்றால் நல்லதையே கொடுக்க வேண்டும். அதுவும் அவதார புருஷனான இராமபிரான் வரப்போகிறார் என்றால் அவருக்கு சிறப்பானதைத்தானே கொடுக்க வேண்டும். அதனால் மரங்களிலிருந்து நல்ல பழங்களைப் பறித்துக் கொண்டிருக்கிறாள் அந்த வேடுவப் பெண். ஓராண்டு ஈராண்டல்ல எட்டு வயதிலிருந்தே அவள் தினமும் அப்படி என்ன சிறப்பான பழங்களை சேகரிக்கிறாள் என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
ரிஷியமுகம் ஆசிரமம். அங்கே முனிபுங்கவர்கள் ரிஷிகள் வேதம் ஓதும் சப்தமும், ஹோமத்தின் புகையும் வானோங்குகிறது. இதுதான் சரியான இடம் என்று மதங்க முனிவரின் குடிலுக்கருகில் சென்று அமர்கிறாள் ஒரு சின்னஞ்சிறுமி. அவளுக்கு எட்டு வயதிருக்கும். காதோலைக் குருத்தணிந்து தலையை சேவற்கொண்டையிட்டு காலில் தண்டையயும் அரையில் சிற்றாடையும் அணிந்த அப்பெண்ணின் முகத்தில் தேஜஸ் ஒளிவிடுகிறது.
திருமண சமயம் வீட்டை விட்டு ஆசிரமத்துக்கு ஓடி வந்த அவளைத் தேடி அவளது வேடுவத் தந்தை வருகிறார். ”அம்மாடி பெண்ணே. உன் விருப்பத்துக்கு மாறா திருமணம் செய்யமாட்டோம். நீ ஆசைப்பட்டபடி எந்த ஆட்டையும் பலி கொடுக்காம ஆயிரம் ஆட்டையும் விடுதலை செய்து விட்டுட்டோம். நீ திரும்ப வீட்டுக்கு வா “ என்கிறார். மகளோ மறுக்கிறாள்.

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

அவள் விகடனில் எனக்குப் பிடித்த நகைச்சுவை நூல்.

அவள் விகடனில் படி படி படி என்ற தலைப்பில் எனக்குப் பிடித்த நகைச்சுவை நூல் பற்றிக் கூறும்படி நிருபர் தினேஷ் கேட்டிருந்தார்.

அவரிடம் நான் கூறியவற்றை இங்கே பாருங்கள். :)


https://www.vikatan.com/avalvikatan/2018-aug-21/entertainment/143128-favourite-books-of-famous-people.html

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

சிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு பரிசு.

மகிழ்வுடன் பகிர்கிறேன். 

கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் பதக்கம் & சான்றிதழ் பரிசினை எனது சிறுகதைத் தொகுப்பான "சிவப்புப் பட்டுக் கயிறு" பெற்றுள்ளது.

திங்கள், 13 ஆகஸ்ட், 2018

தாயைக் காத்த தனயன்.( கத்ருவைக் காத்த கருடன்.) தினமலர். சிறுவர்மலர் - 29.


தாயைக் காத்த தனயன்.( வினதையைக் காத்த கருடன்.)

தாய் சொல்லைத் தட்டாத தனயன்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் தாயைக் காத்த தனயன் என்றால் அதில் முதலிடம் வகிப்பது கருடன் மட்டுமே. அவர் தாயான வினதைக்கு நேர்ந்த இக்கட்டு என்ன அதை அவர் எப்படிக் களைந்து தன் தாயைக் காப்பாற்றினார் என்று பார்ப்போம் குழந்தைகளே.

கஸ்யபர் என்ற முனிவருக்கு கத்ரு, வினதை என்று இரு மனைவிகள் இருந்தார்கள். வினதைக்குக் கருடன், அருணன் என்று இரு மகன்களும், கத்ருவுக்கு ஆயிரம் நாகங்கள் மகன்களாகவும் பிறந்தார்கள். கத்ருவின் புதல்வர்களும் வினதையின் புதல்வர்களும் தாய்ப்பாசம் மிக்கவர்கள். தங்கள் தாய் சொல்லைத் தட்டாதவர்கள்.

வியாழன், 9 ஆகஸ்ட், 2018

காரைக்குடிச் சொல்வழக்கு, பிச்சோடாவும் சித்தாடையும்.

981. மருக்கா -  இன்னொரு தரம்.

982. பிச்சோடா - கொண்டை. சின்ன கொண்டை. கோடாலி முடிச்சுப் போல.

983. பெரியாச்சி - பாட்டி, ஆயா, வீட்டின் பெரிய பெண்மணி, முதிய பெண்மணி, அதிகாரம் உள்ளவர், தாயார்.

984. ஒத்துப்பார்த்தல் - சிட்டைஒத்துப் பார்த்தல், சாமான் ஒத்துப் பார்த்தல். சரி பார்த்தல்.

985. யாது இல்லை - ஞாபகம் இல்லை.

குற்றாலம் என்னும் தேனூர் !!!

செங்கோட்டை எக்ஸ்ப்ரஸ்ஸில் ஒரு நாள் அதிகாலையில் தென்காசி வந்தாச்சு. ஆனால் ட்ரெயின் ஒரு மணி நேரம் லேட்.

தென்மேற்குப் பருவக் காற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளுமாக பசுமை வயல்களுடன் மரம் செடி கொடிகளுடன் குளுகுளுவென அற்புத தரிசனம் தந்தது. ஜிலுஜிலுவென்று ஏசி போட்டதுபோல் இருந்தது. அங்கேயே இருக்கலாம்போல் ஒரு எண்ணம் வந்தது.

தென்காசி. காற்று அதிகம் என்பதால் இங்கே காற்றாலைகள் ( விண்ட்மில்)  அதிகம் பொருத்தப்பட்டுள்ளன . குற்றாலம் அருவிகள் நிரம்பிய ஊர். இதற்குத் தேனூர் என்றொரு பேரும் உண்டாம். டபுள் குஷியோடு தேனூரின் அருவி நீரில் நனையச் சென்றோம் )

ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர்தான் குற்றாலத்தில் சீசன். சாரல் திருவிழா எல்லாம் நடக்கும். ஆறுமாசம் க்ளைமேட் அப்புறம் காத்தாடும் என்றார் ஆட்டோக்காரர்.

இங்கே நான்கு ஆறுகள் பிறக்கின்றன. ஒன்பது அருவிகள் புறப்படுகின்றன. குற்றால நாதர் கோவிலும் சித்திர சபையும் வெகு பிரசித்தம். சிறுவர் பூங்கா, அருங்காட்சியகம் எல்லாம் உண்டு.  பராசக்தி மகளிர் கல்லூரியைப் பார்த்தேன்.

இதோ மெயின் அருவி.

ஆனால் அது ஒரு ஆடி வெள்ளி என்பதால் ஒரே கூட்டம். அதுவும் ஆண்கள் பக்கம் கூட்டம் கம்மி.

பெண்கள் பக்கம் கூட்டம் அதிகம் என்பதால் க்யூ. போலீஸ் கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தது.

புதன், 8 ஆகஸ்ட், 2018

மாயப்பிசாசும் மனயானையும்

1841. எழுத்தை உபாசிப்பவர்கள்முன் நேசமும் எழுதுபொருள்தான்.

1842. உணர்ந்து உணர்ந்து படைக்கப்படும் எழுத்துக்களை வருடும்போது மணலைப்போல தட்டுப்படுகிறது சுயமும்.

1843. எளிமையும் குளுமையும் நிரம்பியதுதான் என்றாலும் இருண்மையையும் தருகிறது வனத்தின் நேயம்.

1844. செடிகளைத் துறந்து தொடர் ஓட்டங்களில் தொலையும்போது சப்பாத்திக்கள்ளிப்பூவைப்போல பூத்துச் சிரிக்கிறது என்னை எள்ளும் என் மனம்.

1845. அடர்வண்ணங்களுக்குள் ஒளிந்துதான் இருக்கின்றன இளவண்ணங்களும். நிறப்பிரிகை இனங்காட்டுகிறது எல்லா வண்ணங்களையும்.

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

தமிழ் வளர்த்த நகரத்தார்கள் நூலில் என்னைப் பற்றியும்.

மகிழ்வுடன் பகிர்கிறேன் .

நகரத்தார் திருமகள் இதழில் முனைவர் கரு முத்தையா அவர்கள் " தமிழ் வளர்த்த நகரத்தார்கள் " என்ற தலைப்பில் எழுதி வந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு மணிவாசகர் பதிப்பகத்தால் நூலாக்கம் செய்யப்பட்டு காவிரிப் பூம்பட்டினம் பட்டினத்தார் திருவிழாவில் வெளியிடப்பட்டுள்ளது. என்னைப் பற்றியும் ஒரு கட்டுரை அதில் இடம்பெற்றுள்ளது பெரும்பேறு. நன்றி திருமதி ரோஜா முத்தையா, திரு.கரு முத்தையா & மணிவாசகர் பதிப்பகம்.  

பதிப்பகம் :- மணிவாசகர் பதிப்பகம்
நூலின் பெயர் :- தமிழ் வளர்த்த நகரத்தார்.
நூலின் விலை ரூ. 150/-.

ஈரோடு புத்தகத் திருவிழாவில் சிவப்புப் பட்டுக் கயிறு.

ஈரோடு புத்தகக் கண்காட்சி டிஸ்கவரி அரங்கு எண் 11-ல் எனது சிறுகதைத்தொகுப்பு, “சிவப்பு பட்டுக் கயிறு “ கிடைக்கும்.


கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் பதக்கம் & சான்றிதழ் பரிசினை எனது சிறுகதைத் தொகுப்பான "சிவப்புப் பட்டுக் கயிறு" பெற்றுள்ளது.

திங்கள், 6 ஆகஸ்ட், 2018

நமது மண்வாசம் நான்காம் ஆண்டுவிழாவில் பெண்மொழி வெளியீடு.

நான்காம் ஆண்டில் வாசிப்பை நேசிக்கவைத்த நமது மண் வாசம்

நமது மண்வாசம் இதழின் நான்காம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது மதுரை தானம் அறக்கட்டளையின் நிர்வாகக் கட்டிடத்தில். மிக அருமையான அந்தக்கூட்டத்தில் கிட்டத்தட்ட 300 சுய உதவிக் குழுக்களின் தலைவிகளும், நமது மண்வாசம் இதழில் பங்களிப்புச் செய்துவரும் பேராசிரியர்களும், மருத்துவர்களும், இதழாளர்களும் எழுத்தாளர்களுமாக அரங்கை நிரக்கச் செய்திருந்தார்கள்.

புதன், 1 ஆகஸ்ட், 2018

கம்பன் அடிப்பொடி புகழ்த்திருநாளில் சாகித்ய விருதாளர்களுக்குப் பாராட்டு.


கம்பன் அடிப்பொடி புகழ்த்திருநாளில் சாஹித்ய விருதாளர்களுக்குப் பாராட்டு.

காரைக்குடி மலர் ஹோட்டலின் செண்பக அரங்கில் கடந்த 28. 7. 2018 ஞாயிறு மாலை கம்பன் அடிப்பொடியின் 37 ஆவது புகழ்த்திருநாள் நடைபெற்றது.  கம்பன் கழகத்தார் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் காரைக்குடியைச் சேர்ந்த இரு சாஹித்ய அகாதமி விருதாளர்களுக்கும் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
Related Posts Plugin for WordPress, Blogger...