சாணக்ய நீதி ( பதவுரை பொழிப்புரையுடன் )
முன்னுரை
சாணக்யர் என்ற பேரையும், சாணக்ய நீதி, சாணக்ய சபதம் போன்றவற்றையும்
கேள்விப்படாத இந்தியப் பெருமக்களே இருக்கமுடியாது. தனி வாழ்வில் ஆகட்டும் பொது வாழ்வில்
ஆகட்டும், திறமையாக, சாமர்த்தியமாக, புத்தி சாதுர்யத்துடன், அளப்பரிய தந்திரத்துடன்,
தனக்குச் சாதகமாக எல்லா விஷயங்களையும் நிகழ்வுகளையும் கையாள்பவர்களை ”அவன் சாணக்யண்டா”
என்றும் “ராஜதந்திரி” என்றும் புகழக் கேட்டிருப்போம்.
”யதா ராஜா ததா பிரஜா, விநாசகாலே விபரீத புத்தி, பழிக்குப் பழி, இதுவே சாணக்ய நீதி” என்றெல்லாம்
வழங்கப்படும் பிரபலமான வாக்கியங்கள் இவரால் படைக்கப்பட்டவைதான்.
கிட்டத்தட்ட 2300 ஆண்டுகளுக்கு முன்பு மகதநாட்டின் எல்லைப்புறத்தில் குடில கோத்திரத்தில் சனகா என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் சாணக்யர். தட்சசீலப் பல்கலைக் கழகத்தில் பயின்று அங்கேயே பணியாற்றியவர். அதன் பின் மன்னர் தனநந்தரிடம் பதவி கேட்டுச் சென்றபோது அவமானப்படுத்தப்பட்டார். வீரர்கள் அவரை அரசவையை விட்டு வெளியே இழுத்துச் சென்றபோது அவரது குடுமி அவிழ்ந்து விழுந்தது. அதனால் நந்த வம்சத்தை ஒழிக்கும் வரை தன் குடுமியை முடிவதில்லை என்ற சபதத்தை ஏற்றவர்.