எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 21 மார்ச், 2023

சாணக்கிய நீதி ( பதவுரை பொழிப்புரையுடன் ) - எனது இருபத்தி மூன்றாவது நூலின் முன்னுரை

சாணக்ய நீதி ( பதவுரை பொழிப்புரையுடன் )


முன்னுரை

சாணக்யர் என்ற பேரையும், சாணக்ய நீதி, சாணக்ய சபதம் போன்றவற்றையும் கேள்விப்படாத இந்தியப் பெருமக்களே இருக்கமுடியாது. தனி வாழ்வில் ஆகட்டும் பொது வாழ்வில் ஆகட்டும், திறமையாக, சாமர்த்தியமாக, புத்தி சாதுர்யத்துடன், அளப்பரிய தந்திரத்துடன், தனக்குச் சாதகமாக எல்லா விஷயங்களையும் நிகழ்வுகளையும் கையாள்பவர்களை ”அவன் சாணக்யண்டா” என்றும் “ராஜதந்திரி” என்றும் புகழக் கேட்டிருப்போம்.

”யதா ராஜா ததா பிரஜா, விநாசகாலே விபரீத புத்தி,  பழிக்குப் பழி, இதுவே சாணக்ய நீதி” என்றெல்லாம் வழங்கப்படும் பிரபலமான வாக்கியங்கள் இவரால் படைக்கப்பட்டவைதான்.

கிட்டத்தட்ட 2300 ஆண்டுகளுக்கு முன்பு மகதநாட்டின் எல்லைப்புறத்தில் குடில கோத்திரத்தில் சனகா என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் சாணக்யர். தட்சசீலப் பல்கலைக் கழகத்தில் பயின்று அங்கேயே பணியாற்றியவர். அதன் பின் மன்னர் தனநந்தரிடம் பதவி கேட்டுச் சென்றபோது அவமானப்படுத்தப்பட்டார். வீரர்கள் அவரை அரசவையை விட்டு வெளியே இழுத்துச் சென்றபோது அவரது குடுமி அவிழ்ந்து விழுந்தது. அதனால்  நந்த வம்சத்தை ஒழிக்கும் வரை தன் குடுமியை முடிவதில்லை என்ற சபதத்தை ஏற்றவர்.

அதன் பின் நந்த நாட்டை அரசாளும் உரிமை உடைய சிறுவனான சந்திரகுப்தனைச் சந்தித்தார். அவனை வழிநடத்தி அரசியலறிவைப் புகட்டி சகல தந்திரங்களையும் பயன்படுத்தி அரியாசனத்தில் அமரவைத்தார். 50 வருடங்கள் குப்தவம்ச மன்னர்களுக்கு ஆலோசகராக இருந்தார். அர்த்தசாஸ்திரம், சாணக்ய நீதி ஆகியவை அவரால் எழுதப்பட்ட நூல்கள். அர்த்த சாஸ்திரம், அரசியல், நிர்வாகம், மற்றும் பொருளாதாரம் பற்றிப் பேசுகின்றது.

சாணக்ய நீதி, மன்னனும் மக்களும் தம் வாழ்வில் கைக்கொள்ள வேண்டிய விஷயங்களைப் போதிக்கின்றது. ராஜநீதி, தேசம், பாதுகாப்பு, பொருளாதாரம், ஆன்மீகம், தர்க்கசிந்தனை, கடமை ஆகியவற்றை மட்டுமல்ல இல்லறவாழ்க்கை, குழந்தை வளர்ப்பு, நட்பு, கல்வி, செல்வம், காதல், திருமணம், உறவுகள், உத்தமர்கள், பணி, தீயொழுக்கம், நல்லொழுக்கம் பற்றியெல்லாம் பேசுகிறது சாணக்ய நீதி.

சில இடங்களில் வர்ணாசிர தர்மத்தையும், பெண்களைப் பற்றிய பிற்போக்குக் கொள்கைகளையும் சொல்வதாக அமைந்தாலும் அது எழுதப்பட்ட காலகட்டத்தை ஒட்டியே அக்கருத்துக்கள் அமைந்துள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சொல்லப்போனால் அவர் எல்லா தர்மத்தினரும், எல்லா வர்க்கத்தினரும், ஆண் பெண் இருபாலாரும் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகளை, கடமைகளை வெகு கறாராக வடிவமைத்துள்ளார்.

சாணக்ய நீதியைப் படிக்கும்வரை அவர் மகா தந்திரக்காரர் என்பது மட்டுமே என் எண்ணமாக இருந்தது. ஆனால் சிறந்த மதியூகி, மகா புத்திமான், சுதர்மர் என்பதைப் படித்தபின் உணர்ந்தேன். இரண்டடித் திருக்குறள் போல நான்கு முதல் எட்டடிகளில் சுருங்கச் சொல்லி விரிந்த பொருளைத் தருவன அவர் ஸ்லோகங்கள். ஒரே நேரத்தில் மூன்று முதல் எட்டுவிதமான விஷயங்களைச் சொல்லி அவற்றை இணைத்தோ பாகுபடுத்தியோ காட்டி அதுபற்றி அறிவுறுத்திக் கூறுவன அவரது ஸ்லோகங்கள்.

தக்ஷிண் பாரத் ஹிந்தி ப்ரசார் சபா நடத்திய தேர்வில்  ப்ரவேசிகாவில் தமிழ்நாட்டில் மூன்றாவதாகவும், நெய்வேலியில் முதலாவதாகவும் தேர்ச்சியுற்றிருக்கிறேன். டெல்லியில் மகன் டிடிஇஏ வில் படித்ததால் சமஸ்கிருதத்திலும் கொஞ்சம் பரிச்சயம் உண்டு. என் சொற்ப சமஸ்கிருத அறிவுடன் https://www.learnsanskrit.cc, https://en.wiktionary.org/wiki/Appendix:Sanskrit_Swadesh_list, ஆகிய இணையங்களின் துணையுடன் இந்த மொழிபெயர்ப்பைச் செய்துள்ளேன். மொழிபெயர்ப்பில் பிழைகள் ஏதும் இருப்பின் பொறுத்தருள்க.

2000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட அர்த்தசாஸ்திரத்தின் சமஸ்கிருத ஓலைச்சுவடிகளைக் கண்டெடுத்து அதை ஆங்கிலத்தில்  பதிப்பித்த திரு ஷாமா சாஸ்திரிகள் அவர்களுக்கும், சாணக்ய நீதியின் ஸ்லோகங்களை ஆங்கிலத்தில் ஆக்கம் செய்த திரு. ஆர். பி.ஜெயின் அவர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வந்தனங்கள்.

இது எனது 21 ஆவது நூல். பாரதி பதிப்பகத்தில் என் ஐந்தாவது நூல். தமிழ் கூறும் நல்லுலகுக்குச் சாணக்கியரின் நீதியைப் பதவுரை, பொழிப்புரையுடன் தலைப்புகள் பிரித்து எழுதித் தரும்படி என்னிடம் கேட்டுப் பதிப்பிக்கும் பாரதி பதிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் செல்வி நித்யா ராஜேந்திரன் அவர்களுக்கும் நன்றிகள்.

--தேனம்மைலெக்ஷ்மணன்.


நூலின் பெயர் : சாணக்கிய நீதி (பதவுரை பொழிப்புரையுடன்)

பக்கம் - 360

விலை ரூ. 300/- 

நூல் கிடைக்குமிடம்:- பாரதி பதிப்பகம்,

புதிய எண் 4, பழைய எண் 37,

சி.ஆர்.ஆர்.புரம், முதல் தெரு,

L&T காலனி, விருகம்பாக்கம்,

சென்னை - 600092.

செல்: 93839 82930,

போன்: 044 2434 0205,

E-mail ID: bharathipathippagam@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...