எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 17 மார்ச், 2023

அமினோரியா என்றால் என்ன? அதிலிருந்து மீள்வது எப்படி?

 அமினோரியா என்றால் என்ன? அதிலிருந்து மீள்வது எப்படி?இயல்பாகவே ஒவ்வொரு பெண்ணும் தன் பருவ வயதில் பூப்படைதலில் இருந்து தீட்டு நிற்கும் (மெனோபாஸ்) காலம் வரை ஒவ்வொரு கட்டத்திலும் உடல் நலிவுகளால் அவஸ்தைப்படுகின்றாள். ஆனால் பூப்படைவதே கோளாறு என்றால், பருவவயது கடந்து விட்ட பின்னும் பூப்பு அடையாவிட்டால் அதுதான் அமினோரியா. இது ஒரு பெண்ணின் தாய்மை அடையும் தகுதியையே பாதிக்கும்.

உடலியல் மற்றும் நோய்க்குறியியல் சார்ந்தது என அமினோரியா இரு வகைப்படும்.. உடலியல் அமினோரியா என்பது மாதவிலக்கு ஏற்படாத நிலை. உடற்கூறின்படி இது பருவ வயதில் பூப்பெய்தாமல் இருப்பது, மேலும் கர்ப்ப காலத்திலும், குழந்தைக்குப் பாலூட்டும் போதும், மாதவிடாய் நிற்கும் பருவத்திலும் (மெனோபாஸ்) ஏற்படுகின்றது.

நோய்க்குறியியல் அமினோரியா மூன்று வகைப்படும் க்ரிப்டோமெனோரியா, ப்ரைமரி அமினோரியா, செகண்டரி அமினோரியா.இதில் க்ரிப்டோமெனோரியா என்றால் எண்டோமெட்ரிய மடிப்புகளில் இருந்து உதிரம் வெளியேறும் ஆனால் அது மாதவிலக்காக பெண்ணுறுப்பில் இருந்து வெளியேறாமல் நின்றுவிடும்.

பதினைந்து பதினாறு அதிகபட்சம் பதினெட்டு முதல் இருபது வயதிற்குள் ஒரு பெண் பூப்படையாவிட்டால் அது ப்ரைமரி அமினோரியா எனப்படுகிறது. இது பிறப்புறுப்பு இல்லாமை, அல்லது கர்ப்பப்பையில் முட்டைகளின் வளர்ச்சி இன்மை, கருமுட்டைகளே இல்லாமல் இருத்தல் மேலும் டர்னர்ஸ் சிண்ட்ரோம் போன்ற குரோமோசோம் குறைபாடு, தைராய்டு மற்றும் அட்ரீனல் ( சிறுநீரக ) செயலிழப்பு போன்றவற்றினாலும் இருக்கலாம்.

செகண்டரி அமினோரியா என்றால் பூப்படைந்து முதல் மாதவிடாய் ஏற்பட்டு அதன் பின் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரையிலோ அல்லது அதற்கு மேலுமோ மாதவிலக்கு ஏற்படாத நிலை. ட்யூபர்குலர் எண்டோமெட்ரியோசிஸ், பாலிசிஸ்டிக் கருப்பை நோய், கருப்பைக் கட்டிகள், ஹைப்போ தைராய்டு (டி சி ஹெச் எனப்படும் தைராய்டு ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் ), சர்க்கரை நோய், மன அழுத்தம், ஊட்டச்சத்துக்குறைபாடு ஆகியவற்றல் ஏற்படலாம்.

கருப்பையில் குரோமோசோமால், மரபணுவால் ஏற்படும் பிரச்சனைகள், ஹைப்போதலாமஸ் அல்லது பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்படும் பிரச்சனைகள், இனப்பெறுக்க உறுப்புகளின் கட்டமைப்பில் சிக்கல், இனப்பெருக்க உறுப்புகளின் பாகங்கள் இல்லாமல் இருத்தல் அல்லது முட்டைகளை வைத்திருக்கும் பெண் பாலின உறுப்புகள் இல்லாமலிருந்தல் ஆகியவையும் காரணமாகும்.

திருமணமாகிக் கர்ப்பமுற்றிருக்கும் மாதங்களிலும், குழந்தை பெற்றுத் தாய்ப் பாலூட்டும் பருவத்திலும் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்படாது. பாலூட்டுதல் நின்றபின்பு திரும்பவும் மாதவிலக்கு ஏற்படும் இது இயற்கை. ஆனால் ஹார்மோன்களாலோ, பாலி சிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்னும் குறைபாட்டினாலோ, கருத்தடை மாத்திரை உபயோகிப்பதாலோ, மாதவிடாயைத் தள்ளிப்போடும் மாத்திரைகளை உபயோகிப்பதாலோ, உணவு முறையில் மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் ( அதிக குளிர் பிரதேசத்துக்கு மாறுதல்) ஏற்பட்டாலோ மாதவிலக்கு சுழற்சி தாமதப்படும். ஹார்மோன் சிகிச்சைகள், கட்டி அல்லது கட்டமைப்பு அடைப்புகள் இருந்தால் அதற்கான அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ சிகிச்சைகள் கொடுத்தால் இதைக் குணப்படுத்தலாம்.தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ மாதவிலக்கு ஏற்படாததையே அமினோரியா என்கிறோம். இவ்வாறு சில மாதங்கள் தள்ளிப் போனால் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நீண்ட காலத்துக்கு மாதவிலக்கு ஏற்படாவிட்டால் அது கரு முட்டைகள் வெளியாவதைத் தடுத்து மலட்டுத்தன்மையை ஏற்படுத்திக் கர்ப்பம் தரிப்பதைத் தடுத்துவிடும். சில சமயம் வளர்ச்சியுறாத முட்டைகளால் கருச்சிதைவும், பின்னர் கருவுற்றாலும் அதில் பிற பிரச்சனைகளும் ஏற்படலாம்.

அதிகப்படியான உடற்பயிற்சி, உடல் பருமன், இரத்த சோகை, உணவுக் கோளாறுகள், குறைவான உணவை உட்கொண்டு 15 சதவிகிதத்துக்கு மேல் எடை குறைந்தல், ஆரம்ப மாதவிடாய் நின்ற குடும்பத்தின் மரபணு வரலாறு ஆகியவற்றோடு மன அழுத்தம் முக்கிய காரணியாகும். மன அழுத்தத்தினால் உடலில் கார்டிசோல் அதிகம் உற்பத்தி ஆகி அது மாதவிடாயைத் தள்ளிப் போடும் அல்லது இல்லாமல் ஆக்கி விடும். தூக்கமின்மையும் உடலில் மெலடோனின் அளவைப் பாதிப்பதால் அது மாதவிடாயின் தொடக்கத்தையும் அதன் சுழற்சியின் நீளத்தையும் பாதிக்கும். பி சி ஓ எஸ் என்னும் பிரச்சனையாலும் சீரற்ற மாதவிடாய் ஏற்படும். தற்காலத்தில் 25 பேரில் ஒரு பெண்ணுக்கு இந்த நிலை ஏற்படுவதாக ஒரு சர்வே தெரிவிக்கிறது. இவர்கள் உடனடியாக வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். இரத்தப் பரிசோதனையும் மருத்துவ சிகிச்சையும் தேவை.

டர்னர் சிண்ட்ரோம் என்பது இதற்கு ஒரு உதாரணம். இக்குறையால் பீடிக்கப்பட்டோர் ஒன்று அதிக எடையுடன் இருப்பார்கள். அல்லது மிகக் குறைந்த எடையுடன் திகழ்வார்கள். இவர்கள் உண்ணும் உணவில் போதிய ஊட்டச்சத்துக்கள் இருக்காது. அளவுக்கதிகமான தீவிர உடற்பயிற்சியும் கூட மாதவிலக்கைத் தடுக்கும். மோசமான உணவும், மன அழுத்தமும் கூட இரத்த சோகையை உண்டு பண்ணி மாதவிலக்கை மூன்று நான்கு மாதங்களுக்கு மேலும் தள்ளி வைக்கும். இது எதனால் ஏற்படுகிறது என்று மருத்துவருடன் கலந்துரையாடி உடல் பரிசோதனை செய்து சிகிச்சை பெற வேண்டும்.அமினோரியா இருந்தால் மாதவிடாய் நேரங்களில் ஜவ்வு போன்ற வலை ஒன்று கருப்பை வாயைத் தடுக்கலாம். அதனால் மாதவிடாய் ஏற்படாமல் இரத்தமோ, திசுக்களோ உடலை விட்டு வெளியேறுவதை இது தடுக்கலாம். இந்தத் தொந்தரவை மருத்துவ முறைகள் மூலம் சரி செய்தால் அடைப்பு நீங்கி மாதவிடாய் ஏற்படும். சில பெண்களுக்கு மாதவிடாய் வலி இருக்கும். ஆனால் மாதவிடாய் ஏற்படாது. இதற்கு நீர்க்கட்டிகள், மலச்சிக்கல், கர்ப்பம், புற்றுநோய் கூட இவ்வலிக்குக் காரணமாய் இருக்கலாம்

க்ளாமிஃபீன் சிட்ரேட் சிகிச்சை என்பது கருமுட்டைகள் வெளியாவதைத் தூண்டுகிறது. ஈஸ்ட்ரோஜென் மாற்று சிகிச்சை, என்பது ப்ரைமரி அமினோரியா மற்றும் ஹார்மோன் அளவைச் சமன்படுத்தி மாதவிடாய் இயற்கையாய்த் தொடங்க உதவுகிறது.

யோகா செய்தல், அளவோடு உடற்பயிற்சி செய்தல், சரியான உடல் எடையைப் பராமரித்தல், போதுமான உறக்கம், சத்துள்ள உணவு, (இஞ்சி, மசாலாப் பொருட்கள், இலவங்கப்பட்டை சேர்ந்தது, போதுமான விட்டமின்கள், இரும்புச்சத்துக்கள் கொண்ட உணவு, ஆப்பிள் சைடர் வினிகர், அன்னாசிப்பழம் இவைகளை) எடுத்துக் கொள்வதால் மாதவிடாய் சீராகும்.  
 
அமினோரியாவுக்கு உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் அது குழந்தைப்பேறின்மையோடு உயர் இரத்த அழுத்தம், இதயநோய், எலும்புத்தேய்மான நோய், சீக்கிர முதுமை ஆகியவற்றுக்கு வழிவகுக்கும். மீன், கொட்டைகள் மற்றும் முழுதானியங்கள், காய்கறிகள், ஒமேகா- 3 கொழுப்புள்ள உணவுகள், கால்ஷியம், மெக்னீஷியம், விட்டமின் டி மற்றும் கே மற்றும் போரான் ஆகியன எடுத்துக் கொள்வதால் அமினோரியாவைத் தடுக்கலாம். .

பூப்பெய்தாத பெண்களுக்குச் சிறு நெருஞ்சில் வேரை எலுமிச்சைச் சாறு விட்டு அரைத்து அரை நெல்லிக்காய் அளவு எடுத்து 48 நாட்கள்கொடுத்து வர விரைவில் பருவமெய்துவார்கள். 18 , 20 வயதாகியும் பூப்பெய்தாத பெண்களுக்கு 12 செம்பருத்திப் பூக்களுடன் சிறு துண்டு மஞ்சளும், ஒரு சிறு துண்டு கொப்பரைத் தேங்காயும் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு உருண்டையாக்கி வாரம் ஒருமுறை கொடுத்துவர பூப்பெய்துவார்கள். அஸ்வகந்தி லேகியம் மற்றும் அமுக்கரா சூரணமும் கொடுக்கலாம்.

மேலும் நெருஞ்சில் இலை ஒரு கைப்பிடி எடுத்து அரை டம்ளர் நீரில் கொதிக்க வைத்துக் கால் டம்ளராகச் சுண்டியவுடன் மாதவிலக்கின் முதல் மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வர தாமத மற்றும் சீரற்ற மாதவிடாய் கட்டுக்குள் வரும். கர்ப்பப்பை மற்றும் சினைப்பைக் கட்டிகளும் கரைந்து வெளியேறும்.

உடலில் வெய்யில் பட்டால் உடல் எடை குறையும். ஆகையால் நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். சீரான எடை, சமச்சீரான உணவு, தேவையான உடற்பயிற்சி, போதுமான உறக்கம், மன அழுத்தம் இல்லாமல் இருப்பது ஆகியவை அமினோரியாவிலிருந்து மீட்கும். பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகளில் அதிக அளவில் மெக்னீசியம் மற்றும் வைட்டமின் கே, போரான்  போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவற்றை உண்ணக் கொடுக்கலாம்.

மேலும் கும்மாயம், வேங்கரிசி மாவு ஆகியவற்றைக் கொடுப்பதால் இரத்தசோகை நீங்கி சீக்கிரம் பூப்பெய்துவார்கள். கும்மாயம் செய்யத் தேவையானவை:- கும்மாய மாவு( பச்சரிசி 1 கப்., பாசிப்பருப்பு 1 கப்., வெள்ளை உளுந்து 1 கப்பை வெறும் வாணலியில் வெதுப்பி பொடித்து சலிக்கவும்.) இதிலிருந்து ஒரு கப் மட்டும் எடுத்துக் கொள்ளவும். - 1கப் 200 கி்ராம், கருப்பட்டி + வெல்லம் = 1 1/2 கப் 200 கிராம், நெய்+நல்லெண்ணெய் = 100+50 கிராம், தண்ணீர் - 4 கப்.

பானில் நல்லெண்ணெய் 50 கிராம்., நெய் 50 கிராம் ஊற்றி மாவை ஒரு நிமிடம் வாசனை வரும்வரை வறுக்கவும். இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் 4 கப் ஊற்றி வெல்லம்., கருப்பட்டியை போட்டு அடுப்பில் வைக்கவும். கரைந்தவுடன் வடிகட்டி மாவில் ஊற்றி கட்டிகளில்லாமல் கரைக்கவும். பின் அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறவும். கையில் ஒட்டாமல் கெட்டியாக கண்ணாடியைப் போல வரும்வரை கிளறி மிச்ச நெய்யைஊற்றி இறக்கவும். குழந்தைகளுக்குச் சுடச் சுட பரிமாறவும்.

வேங்கரிசி?பொரியரிசி மாவு செய்யத் தேவையானவை: சிவப்பரிசி/வேங்கரிசி - 1/2 கிலோ, சீனி - 1 கப், தண்ணீர் - தேவையான அளவு. அரிசியை நன்கு கழுவி ஒரு கொதி வேகவைத்து வடிக்கவும். வெய்யிலில் ஒரு நாள் முழுவதும் காய விடவும். வெறும் பானில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு வறுக்கவும். பொரிந்ததும் கொட்டி ஆறவிடவும். மிக்ஸியில் பொடித்து சீனி சேர்த்து காற்றுப் புகாத டப்பாக்களில் வைக்கவும்.தேவையானபோது ஒரு டேபிள் ஸ்பூன் மாவை ஒரு பவுலில் எடுத்து தேவையான நீர் விட்டுக் குழைத்து சாப்பிடக் கொடுக்கவும். தண்ணீருக்குப் பதிலாக சிறிது நெய் அல்லது தேங்காய் எண்ணெய் போட்டு பிசறி சாப்பிடலாம். புரை ஏறும்., கவனம். இது இரும்புச் சத்து நிறைந்தது. இரத்த சோகையை நீக்கும். எங்கள் பாட்டி செய்து தருவார்கள். இது குழந்தைகளுக்கு நல்லது.

அடுத்து அதிக ரத்தப்போக்கு, வலிமிகுந்த மாதவிடாய், பி சி ஓடி, பி சி ஓ எஸ் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வது பற்றிப் பார்க்கலாம்.

2 கருத்துகள்:

 1. மிகநல்ல கட்டுரை, தகவல், பலருக்கும் பயனுள்ள விழிப்புணர்வு.

  கீதா

  பதிலளிநீக்கு
 2. நன்றி கீத்ஸ்.

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...