எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 12 மார்ச், 2026

ஆளுமைத்தன்மைமிக்க அட்டிங்கலின் ராணி உமையம்மா

ஆளுமைத்தன்மைமிக்க அட்டிங்கலின் ராணி உமையம்மா

800 ஆண்டு பழமையான அட்டிங்கல் நகரத்தைச் சுற்றி வாமனபுரம் ஆறும் மாமம் ஆறும் ஒடிக் கொண்டிருந்தன. திருவிதாங்கூர் இராஜ்ஜியத்தின் வேணாடு அரச குடும்பத்தைச் சார்ந்த பெண்களே அட்டிங்கலில் ராணியாகும் பாத்யதை பெற்றிருந்தார்கள். இந்நிலையில் 13 ஆம் நூற்றாண்டிலேயே போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்களுடன் வணிகம் ஆரம்பித்தது. வியாபாரம் செய்ய வந்தவர்கள் நாட்டின் வரிவிதிப்பிலும் அரசு நிர்வாகத்திலும் தலையிடத் தொடங்கினார்கள். 

அஸ்வதி திருநாள் உமையம்மா ராணி அட்டிங்கலின் பேரரசியானார். வாய்ப்புக் கிடைத்தால் பெண்ணாக இருந்தாலும் அரசாங்க நிர்வாகத்தையும் சீராகக் கவனிக்கமுடியும் என நிரூபித்தவர். துணிச்சலுக்கும் ஆளுமைத்தன்மைக்கும் பேர் போனவர். 

அட்டிங்கலில் அரசரின் சகோதரியின் குழந்தைகள்தான் அரசாளும் அடுத்த வாரிசுகள். அதிலும் பெண் வாரிசுகள்தான் ஆளும் தகுதி பெற்றவர்கள். அட்டிங்கலில் அடுத்து அரசாளப் பெண் வாரிசு இல்லாவிட்டால் மற்ற அரச குடும்பங்களிலிருந்து தத்தெடுத்துக் கொள்வார்கள். இவ்வாறு கொளத்துநாட்டில் இருந்து வேணாடு குடும்பத்திற்கு  மகரம் திருநாள், அஸ்வதி திருநாள் உமையம்மா என இரண்டு இளவரசிகள் தத்தெடுக்கப்பட்டனர்.அன்றிலிருந்து திருவிதாங்கூரை ஆண்ட குடும்பத்தின் பெண் உறுப்பினர்கள் அட்டிங்கல் ராணிகள் என்று அழைக்கப்பட்டனர்.

1677 இல் அட்டிங்கலின் அரசர் ஆதித்யவர்மாவின் மரணத்துக்குப் பின் அரசாளும் தகுதி பெற்ற வாரிசான ரவிவர்மாவுக்கு மிகச் சிறு வயது. அதன் ஜூனியர் ராணி உமையம்மா. அடுத்து ரவிவர்மாவுக்கு அரசாள உரிய வயது வரும்வரை கொட்டாரக்கரை, திருவிதாங்கூர், கைம்குளம், கருநாகப்பள்ளி, கார்த்திகைப்பள்ளி, நெடுமங்காடு, அட்டிங்கல், காயாங்குளம், கொல்லம், பேரகம்,  இவற்றை உள்ளடக்கிய வேணாட்டின் தலைமைப் பொறுப்பேற்று 1677 முதல் 1684 வரை ரீஜண்ட் ராணியாகப் பொறுப்பேற்று அரசாண்டார்.

உமைய்யாம்மா கம்பீரமான முக அமைப்புக் கொண்டவள். ராணியின் வீரதீரம் சொல்லுக்கடங்காது. தனக்கெனவே தனிப்படை ராணுவமே வைத்திருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். வெள்ளையர்கள் இவரது ஆட்சிக்குட்பட்ட இடங்களில் இவரது சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வியாபாரத் தொடர்பு வைத்திருந்தார்கள். ஹென்ரிக் வான் ரீடி என்ற டச்சு ராணுவ அதிகாரி ராணியின் அதிபுத்திசாலித்தனம் மற்றும் யாரும் அணுகமுடியாத அவளுடைய ஆளுமைத்தன்மை குறித்தும் வியந்து எழுதி உள்ளார்.

அட்டிங்கலின் ராணிகள் கரமானா நதியைத் தாண்டித் திருவிதாங்கூருக்குள் நுழையக்கூடாது என்பது அங்கே கடைப்பிடிக்கப்பட்ட பழமையான விதி. ஆனால் ஆண்களின் கோட்டையாக வர்ணிக்கப்பட்ட திருவிதாங்கூரை ராணியின் படைகள் முற்றுகையிட அதன் ராஜா பயந்து தப்பியோடினார் என்பது அரசாங்க ஆவணங்களிலேயே பதிவாகி உள்ளது.

இளவயதிலேயே இவ்வளவு துணிச்சல்காரியாக இருந்த ராணியின் வீரமும் தீரமும் வயது ஏற ஏற இன்னும் மெருகேறியது. ஆங்கிலேயர்களுடனும் டச்சுக்காரர்களுடனும் அவர்கள் கடற்கரை வரை மட்டுமே வந்து செல்லும் உரிமையை வகுத்துக் கொடுத்து வியாபாரம் புரிந்து வந்தாள். 

 இந்தியாவில் மசாலாப் பொருட்கள் குறிப்பாக கறுப்புத் தங்கம் என்று கூறப்பட்ட மிளகு வர்த்தகத்தைக் கைப்பற்றித் தங்கள் ஏகபோக உரிமை ஆக்க ஆங்கில அரசு முயன்றது. தங்கள் வாணிபப் பயணங்களுக்காக அஞ்சுதெங்குவில் ஒரு கோட்டையைக் கட்ட நினைத்தது. துப்பாக்கி மற்றும் பீரங்கிகளுடன் அவர்கள் உள்ளூர் மக்களுக்கு அச்சுறுத்தலாக மாறத் தொடங்கினர்.

1694ஆம் ஆண்டு அஞ்சு தெங்குவில் தொழிற்சாலை கட்ட ஆங்கிலேயருக்கு அட்டிங்கல் ராணி அனுமதி அளித்தார். வஞ்சிமுட்டம் பிள்ளையும் கொடுமான் பிள்ளையும் அரசியின் அமைச்சர்கள் குழுவில் முக்கியமானவர்கள். வர்த்தகம் செய்வது, வரி விலக்கு, வரி வசூலிப்பு அதன் மூலம் நாட்டை ஆக்கிரமிப்பது அகியவற்றில் ஆங்கிலேயர்களின் நோக்கத்தை ராணிக்கு இவர்கள் தெளிவுறுத்தினர். அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் ராணி அஞ்சுதெங்குவில் கோட்டை கட்டுவதை நிறுத்தும்படிக்கூறியும் ஆங்கிலேயர்கள் செவிமடுக்கவில்லை.

1695 ஆம் ஆண்டில் உமையம்மா தனது மிளகு முழுவதையும் ஆங்கில நிறுவனத்திற்கு வழங்க ஒப்புக்கொண்டார்,இருந்தும் தன் மக்களுக்குத் தொல்லை கொடுத்ததால் அவர்களுக்கு இனி என் நிலத்தில் ஒப்பந்தங்கள் கொடுக்க வேண்டாம் என உத்தரவிட்டேன் எனக் கூறியுள்ளார்.

அரசாட்சி அரசியின் வசம் இருந்தாலும் உண்மையான அதிகாரம் நிலப்பிரபுக்களான பிள்ளைகளின் வசம் குவிந்திருந்தது. நாயர்களும் தங்கள் சொந்தப் படையைக் கொண்டிருந்தனர்.

1675 இல் அரசர் ஆதித்யவர்மா ஒரு அரண்மனை கட்டினார். அது புத்தன் கோட்டா – புதிய அரண்மனை என்று அழைக்கப்பட்டது. ஆதித்யவர்மாவின் வாரிசான ராணி உமையம்மையின் வசிப்பிடமாக அது திகழ்ந்தது. எட்டுவீட்டுப் பிள்ளைமார்களுடன் அட்டிங்கல் அரசகுடும்பத்தினருக்குப் பிணக்கு இருந்து வந்துள்ளது. அவர்கள் அட்டிங்கல் ராஜாவுக்கு விஷம் கொடுத்துக் கொன்றதோடு ராணி உமையம்மாவின் ஐந்து குழந்தைகளை புத்தன்கோட்டாவிலிருந்து வெகு தொலைவில் இருந்த கலிப்பன் குளத்தில் மூழ்கடித்துக் கொன்றார்கள் என்று கூறப்படுகிறது. இந்த துர்நிகழ்வுகளுக்குப் பின் ராணியும் அவரது ஒரு மகனும் நெடுமங்காட்டில் உள்ள கோயிக்கால் அரண்மனைக்கு மாற்றப்பட்டனர்.

இதன் பின் புத்தன்கோட்டாவைக் கைப்பற்ற முகாமிட்டிருந்த முகிலன் என்ற முஸ்லீம் தளபதி அதை உடனே ஆக்கிரமித்தார். அவரை அகற்ற ராணி உமையம்மை வீர கேரள வர்மா என்னும் ராஜாவின் துணையைக் கோரினார். அவர் துணையுடன் ஆக்கிரமிப்பாளர்களை ஓட ஓட விரட்டினார்.

கேரளவர்மாவும் உமையாம்மாவும் வசிக்க தேவரத்து கோயில் மற்றும் வலியா கோயிக்கல் என்று இரண்டு அரண்மனைகள் கட்டப்பட்டன. ஆனால் எட்டாராயோகத்தாரால் வலிய கோயிக்கல் முன் கேரளவர்மா படுகொலை செய்யப்பட்டார். இது அவர் உமையம்மாவை அவர் சந்தித்தபின் நிகழ்ந்தது. அந்தச் சந்திப்பில் இருவருக்கும் தவறான புரிதல்களும் கருத்து வேற்றுமைகளும் ஏற்பட்டிருந்தன. இந்த எட்டுவீடுகளின் பேரன்களைச் சமாளிக்க உமையாம்மா மதுரை பிரதானியின் உதவியை நாடினார்.

தன்னைவிட வயதில் முதிர்ந்த அறிவில் தெளிந்த சான்றோரிடம் யோசனைகேட்பதோ அதைக் கடைப்பிடிப்பதோ இல்லாமல் அனைத்து நிர்வாகச் சுமைகளையும் தானே சுமந்து வந்தாள் உமையம்மா. அதனால் ஒரு பெரும் சரிவு ஏற்பட்டது.

இதுமட்டும் இல்லை. அந்தக்காலத்தில் கேரளத்தின் சில பகுதிகளில் ஆண்களைக் கூடக் கட்டுப்படுத்திய பாலியல் உரிமைகள் அரசிகளுக்கு வழங்கப்பட்டிருந்தன. அதன் தாராளத்தைத் தன் விருப்பப்படி அனுபவித்தவர் உமையம்மை ராணி. தன்னை சந்தோஷப்படுத்திய ஆங்கில வீரன் ஒருவனுக்கு அஞ்சுதெங்கு என்ற நிலப்பரப்பை பரிசாகக் கொடுத்தார் என்கிறது அரசு ஆவணம். தாய்வழி ஆட்சி உரிமையின் படியும் அவள் தனிப்பட்ட விருப்பத்தின்படியும் அழகான யுவன்கள் அவள் அந்தப்புரத்தை அலங்கரித்தார்கள்.

இந்த உரிமையைச் செயல்படுத்தவும் தேவை தீர்ந்ததும் அவர்களைத் திருப்பி அனுப்பவும் தயங்கியதே இல்லை அவள். இதைப்பற்றிப் பலர் கண்டனத்தோடு கூடிய எழுத்துக்களில் பதிவு செய்ய உல்லூர் எஸ் பரமேஸ்வர ஐயர் என்பவரோ உமையம்மை ராணியின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை ஒருங்கிணைத்து “உமாகேரளம்” என்ற அதி அற்புதமான நூலைப் படைத்திருக்கிறார்.

இந்த ஏகபோக உரிமை எல்லாம் ராஜா மார்த்தாண்ட வர்மா கொண்டு வந்த ஒரு உடன்படிக்கையோடு முடிவுக்கு வந்தது. ராஜாக்கள், ராணிகள் எனப்படும் தம்புராட்டிகளின் உரிமைகளை 1731 இல் வரையறுத்து,  அடுத்த ராஜாக்களோ தம்புராட்டிகளோ உரிய வயது வந்ததும் அரசாளவந்தால் இறையாண்மையுடன் ராணிகள் ராஜினாமா செய்துவிட வேண்டும் என்ற வழக்கத்தை வெள்ளித்தட்டில் எழுதி ஒரு ஒப்பந்தமாகச் செய்து கொண்டார்.

மேலும் அரசரின் ஒப்புதல் பெற்றே அசையாச் சொத்துக்களின் மேலான எந்த ஒரு உரிமையும் தம்புராட்டிகள் பெறமுடியும். இந்த ஒப்பந்தம் அட்டிங்கல் ராணிகள் தம் தாய்வழி மரபின் மூலம் அடைந்து வந்த ஆட்சித் தலைமை உரிமையைப் பறித்தது. மேலும் தம்புராட்டிகளை அரண்மனையின் மூலைகளில் முடங்கவைத்து ஆண்களின் சாம்ராஜ்யம் தலையெடுக்கத் தொடங்கியது.

இப்படியான ஆண்களுக்கான உலகிலும் தன் வழியில் யாரும் குறுக்கிடாதபடித் தன் விருப்பப்படி வாழ்ந்து ஏகபோகமாக அரசாண்டு சென்றவர் உமையம்மா ராணி. அதே சமயம் வியாபார நிமித்தம் வந்து ஆக்கிரமித்த வெளிநாட்டினரின் படையெடுப்பைத் தடுத்து நிறுத்தி நாட்டின் இறையாண்மையைக் காத்தும் சென்றார்.

மூத்த ராணி மகரம் திருநாளின் கீழ் இரண்டாவது ராணியாக இருந்த உமையம்மா ராணி மகரம் திருநாளின் மறைவுக்குப் பின் 1678 இல் மூத்த ராணியாக ஆனார்.  (1684 – 1718 இல்) திருப்பாபூரின் அரசராக ரவிவர்மா பதவி ஏற்ற பின்னும் தனது அதிகாரத்தைத் தக்க வைத்திருந்தார்.

இதை நிர்வகித்தபோது முறையான கணக்குகள் எழுதப்பட்டு பாக்கிகள் வசூலாகின. நிலுவைத் தொகைகள், நடப்பு நிலுவைத்தொகைகளை வசூலிக்க வலியுறுத்தி பற்றாக்குறையை உபரியாக்கி திருப்பாப்பூர் நிர்வாகத்தை சீர்படுத்தினார். மேலும் மூன்று வாரிசுகளைத் தத்தெடுத்துக் கொண்டார். தன் அடுத்த வாரிசுகளை டச்சுக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்காமல் டச்சுக்கு நேர் எதிரான போர்த்துக்கீசியர்களின் ஆதிக்கத்தில் இருந்த கொச்சி சமஸ்தானத்தில் இருந்து தத்தெடுத்துக் கொண்டார். இதுவே உள்நாட்டிலும் புதிய போர்களுக்கு வழி வகுத்தது.

1694 இலேயே அட்டிங்கல் ராணியின் இராணுவத்தில் 30,000 வீரர்கள் இருந்தார்கள். இன்றும் நிர்வாகத்திற்கான ஒரு நல்ல அடித்தளம் அமைத்தவர் என்று உமையாம்மாபுகழப்படுகிறார். 1698 இல் கொய்லாங் ராணி எனப்படும் உமையம்மா வலியத்துறாவில் இறந்தார்.

அதன்பின் ஆங்கிலேயர்கள் அஞ்சுதெங்குவில் கோட்டை கட்டி ஆயுதம் தாங்கிய வீரர்களை நிறுத்தி அட்டிங்கல் ஆட்சிக்கு அச்சுறுத்தலாக மாறினர். இதை முறியடிக்க எண்ணி ஏப்ரல் 11, 1721 அன்று இரவு அட்டிங்கலுக்குக் கில்ஃபோர்ட் தலைமையில் ஆங்கிலேயர்கள் வியாபார நிமித்தம் ஆயுதங்கள் இல்லாமல் பேச அழைக்கப்பட்டிருந்தனர். ராணியின் அமைச்சர் கொடுமான் பிள்ளை தீட்டிய திட்டப்படி நாயர் படை சிப்பாய்களும், உள்ளூர் முஸ்லீம்களும் மறைந்திருந்து காத்திருந்தார்கள். இரவு நெருங்கியதும் சுற்றிலும் முற்றுகை இட்டுத் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 150 ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டார்கள். இது ஆங்கிலேயர் மீது மேற்கொள்ளப்பட்ட முதல் பெரிய தாக்குதலாகும்.  1795 இல் திருவிதாங்கூர் ஆங்கில அரசாங்கத்தின் கீழ் வந்தது.

உமையாம்மா திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் பூசைகளின் வழக்கமான நடைமுறையை மீண்டும் ஏற்படுத்தியதோடு அகத்தீசுவரன் ஆலயத்தை புனரமைக்கவும் நிதியளித்தார். உமையம்மைக்குப் பின் அப்படி ஒரு ஆளுமைத்தன்மை மிகுந்த ராணி அட்டிங்கலுக்கு அமையவேயில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...