எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 23 மார்ச், 2026

ஷோபனா நாராயணன் அவர்கள் பார்வையில் செட்டிநாட்டுப் பெண்கள்

 தேவானை திருநிலை ஒப்பிலாள் உண்ணா ஒமையா மற்றும் சில செட்டிநாட்டுப் பெண்கள்



16 கதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்பு. அனைத்து கதைகளும் செட்டிநாட்டுப் பெண்களின் வாழ்வியலை பேசுபவை.

ஒவ்வொரு சாதி அமைப்பின் வழக்கங்கள், உணவுகள், திருமண சடங்குகள் சீர் வகைகள், வழிபாட்டு வகைகள், நோன்புகள், கொண்டாட்டங்கள், பலகாரங்கள், மரணங்கள் என அனைத்தும் ஒவ்வொரு முகம் கொண்டவை. ஆனால் இந்த அனைத்திற்கும் அச்சாணி பெண்கள் தான். 

செட்டிநாட்டு மக்கள் கடல் கடந்து வாணிபம் செய்தவர்கள். அவர்கள் வீடுகள் பழக்கவழக்கங்கள் என அனைத்தும் தனி பாரம்பரியம் கொண்டவை.  அது கால ஓட்டத்தில் எவ்வாறு இருந்து எவ்வாறு பரிணமித்திருக்கின்றது என்பவற்றினை கதை மாந்தர்களின் மூலம் சொல்ல வருகின்றார் ஆசிரியர். 

கடல்கடந்து போகும் ஆண்கள் பலருக்கும் அங்கு ஒரு துணை அமைவதனையும் அதை அவர்தம் மனைவியர் பொறுத்து ஏற்றுக்கொண்டது காட்சிப்படுத்தப்படுகிறது. அதே வேளையில் இன்றய கால கட்டத்து செட்டிநாட்டின் மகன்களுக்கு பெண் கிடைக்காமல் அல்லலுறும் சூழலும் சொல்லப்படுகிறது. முதல் கதை அப்படியும் கடைசிக் கதை இப்படியுமாக முடியும் போது 100 ஆண்டுகளின் ஒரு சாதியில் நிகழ்ந்துள்ள மாற்றங்களை மொத்தமாக சொல்கின்றன கதைகள்

செட்டிநாடு வீடுகள் அவற்றின் மதிப்பு தெரியாமல் அழிக்கப்படுவதும், அவர்கள் வாணிபம் தவிர்த்து ஐடி உள்ளிட்ட துறைகளுக்கு போய் விட்டதையும் வெளிநாட்டிற்கு புலம் பெயர்ந்ததையும் அதன் காரணமாக இங்கு தனியாகிப்போன மூத்தோர்காளின் நிலையும் காட்சியாகி உள்ளன. பெரும்பாலும் அனைத்து சிக்கல்களும் இன்று பெருவாரியாக எல்லா சாதிகளும் சந்திக்கும் சிக்கல்கள் தான். 

கல்யாணங்களுக்கு அவர்கள் தரும் சீர் வகைகள் எல்லாம் படித்த போது மலைப்பாக இருந்தது. சூலாட்டுக்குட்டி முதுமையின் தீவிரத்தின் மீது அச்சம் உண்டாக்கிய கதை.

ஒரே ஒரு கதை தவிர எந்த இடத்திலும் பெண்களின் படிப்பு, வேலை தனித்தன்மை போன்றவை இல்லை. அனைத்திலும் கணவனுக்காவோ மகனுக்காவோ பேரனுக்காகவோ கஷ்டப்படும் பெண்களாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்கள். அவர்களின் தைரியமும் தன்னம்பிக்கையும் சொல்லப்பட்டிருந்தாலும், சில குறிப்பிட்ட சாதி அடுக்குகளில் இன்னமும் இருக்கும் பெண்கள் படித்தாலும் வேலைக்கு போகாமல் இருக்கும் பழக்கமும், தனக்கென்ற அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது என்னும் வழக்கமும் இவற்ரிலும் வந்து போனது. இவை உண்மை தழுவிய கதைகள் எனில் அதை மாற்ற இயலாது என கருதிக்கொள்ளலாம். 

செட்டிநாட்டு வழக்கில் எழுத்தப்பட்ட சிறுகதைகள். ஆனாலும் உரையாடல் தன்மையில் கட்டுரை வடிவ வெளிப்பாடு பல கதைகளில் இருந்தது. எல்லாம் தாண்டியும் சுவரசியமாக படிக்க முடிந்தது. 

ஆசிரியர் : தேனம்மை லஷ்மணன்
விலை : ரூ.200/-
பக்கங்கள் : 134
பதிப்பகம் : ஹெர் ஸ்டோரிஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...