எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 12 ஆகஸ்ட், 2026

இரண்டாவது நாவல் - அத்யாயம் - 8

 

8

கல்யாணப் படைப்பு படைக்க வேண்டிக்கொண்டு அக்கினியாத்தா வீட்டில் படைச்சிக்கினு இருந்தாக ஆவுடையப்பன் குடும்பத்தார். ”இது கோழிப்படைப்புன்ன. ராத்திரி வெகு நேரமாகும். இந்த ரொட்டியத் தின்னுட்டு நீ போய் ஒறங்கப்பச்சி. சாமி கும்பிடும்போது எழுப்பிவிடுறேன்” என்று சாஞ்சாடிக் கொண்டிருந்த பேரனைச் சீராட்டிக் கொண்டிருந்தாக பங்காளி வீட்டு வள்ளியாச்சி.

சிவகாமிக்கும் சொக்கலிங்கத்துக்கும் கல்யாணமாகி மறுவீடு, மூணாம் வீடு வந்து போய் ஒருவாரம் கழிச்சு வீட்டுப் படைப்பு. எடயில பால்பழம் வைச்சுக் கும்பிடவும் பால்பழம் சாப்பிடவும் ஆத்தாவீடு வந்து போனாக. ”பாட்டையா பாட்டியாயா ஆத்தா எல்லாரையும் நெனைச்சுக் கும்பிட்டுக்காத்தா.” கல்கண்டுபோட்டுப் பாலைக்காய்ச்சி வெள்ளைப் பணியாரம் சுட்டு வைத்திருந்தார் கருப்பையாண்ணன்.  கருப்பஞ்செட்டி வகைப்பழங்களும் பூமாலைகளும் பூச்சரமும் வாங்கி வைத்து இருந்தாக. புதுமணத் தம்பதிகள் பேழையின் முன் விழுந்து வணங்கி ஆவுடையப்பன், கருப்பஞ்செட்டி கையால் விபூதி பூசிக்கினாக.

கல்யாணஞ் சேய்ஞ்சதில் இருந்து ஒரே சாமியும் கோயிலும்தான். முனியையா கோவிலில் அபிஷேகமும் அர்ச்சனையும் பண்ணிக்கொண்டு வரப் போனாக மொதல்நாள். மறுநாள் மாமியாவீட்டுக் குலதெய்வம் ராங்கியம் கருப்பரையும் அடுத்தநாள் ஆத்தாவீட்டுக் குலதெய்வம் நரியங்குடி கருங்குளம் ஆதினமிளகி ஐயனாரையும், காட்டுக் கருப்பரையும் தரிசிச்சாக. வர்க்கானம் படைச்சு, முன்னோடிக்குப் பொரியும் கடலையும் வெல்லமும் வைச்சு எளநி கண் தொறந்துவைச்சாக. இரணிக்கோவிலுக்கும், வைரவன்பட்டிக்கும் போய் சாமிகும்பிட்டு வந்தாக மறுநாள்.

வேலு மாப்பிள்ளை பெண்ணோடு கார் ஓட்டிய மணியமாக இருந்தான். கல்யாணச்சீர் பரப்புறதில் இருந்து குடி ஊதுறது, வேற வைக்கிறது வரைக்கும் அவுக கூடவே திரிஞ்சான். வெள்ளமாய் வச்ச சீரை எல்லாம் மேவீட்டுலயும் மச்சுலயும் கிராமத்து ஆக்களோடு சேர்ந்து அடைஞ்சான். ”யாத்தே கப்பலத்தான் வைக்கலை இவுக” என்று ஆச்சர்யப்பட்டுப் போனாக கல்யாணத்துக்கு வந்திருந்த வயல் வேலை செய்யும் கிராமத்தாளுக.

லெச்சுமிப் பாட்டி வேறு முத்தாத்தாள் திருவிழாவில் பொங்க வைக்கோணுமின்னு சொல்ல அங்கேயும் போய் ராமாயி அக்கா பொங்க வைக்க சாமி கும்பிட்டுட்டு வந்தாக.

பொங்கலன்னிக்கு அக்கா நெல்லி மரத்துப் பிள்ளையார் கோவில்ல பொங்க வைக்கும். அதுக்குப் பொறத்தாடித்தான் மாசம் பொறக்குற நேரம் சாமி வீட்டுல பொங்கல். அதுக்கும் அப்புறம்தான் வீட்டுல பொங்கலிடுறது. இரும்பு அடுப்பு, முறித்தவலையில கோலம் போட்டுப் பொங்கலிடுறது.

அதுபோலக் கூடையிலே சுருட்டைத் தூளு, சிராய்த்தூளு, தவலை, வாளி, சருவச்சட்டி, கரண்டி, பச்சரிசி, வெல்லம், நெய், பாசிப்பருப்பு, முந்திரி கிஸுமிஸு எல்லாம் கொண்டுவந்து அக்கா சித்திரைப் பொங்கல் வைச்சு முத்தாத்தாளுக்குப் படைச்சவோடனே புரச இலையில வைச்சுக் கொடுத்துச்சு. சொக்கலிங்கமும் சிவகாமியும் ஒருத்தர ஒருத்தர் பாத்துக்கினே சாப்பிட்டாக. அக்கா தூக்குச்சட்டியில வெல்லத்தைக் குடுத்துட்டுப் பானகம் வாங்கப் போயிருந்துச்சு.

ஒருவாய்ப் பொங்கல சொக்கலிங்கம் அங்கிட்டும் இங்குட்டும் பாத்துக்கினே சோகிக்கு ஊட்டி விட்டான். இம்புட்டு இனிப்பாவும் ருசியாவும் பொங்கல அதுக்கு முன்னாடியும் பின்னாடியும் தின்னதா சோகிக்கு எப்பவுமே யாபகத்துல இல்ல.

கரும்புல தொட்டி கட்டிப் பிள்ளைகளைப் போட்டுக்கிட்டு வேண்டுதல நிறைவேத்த வேகாத வெய்யில்ல நாகசுரம் மேளம் சகிதமா மக்க மனுசா ஓடிக்கினே இருந்தாக. ’ஆத்தா அய்த்தானை மாதிரி ஒரு ஆம்புள்ளப் புள்ளையக்குடு. உனக்குத் தொட்டி கட்டுறேன்’னு மனசார நேர்ந்துக்குனா சோகி.

ஆச்சு ஒருவாரம் ஆகிப்போச்சு. இப்பிடியே சாமி சாமியாக் கும்பிட்டுக்குனே இருந்தவுகள மெய்யாத்தா படைப்புக்கும் கூட்டிப் போனாக. அது பொதுப்படைப்பு. அங்கே பெருங்கூட்டம். நல்லவடியா சாமியக் கும்பிட்டுச் சாப்பிட்டுட்டு வந்தாக.

அதுக்கும் பின்னே லெச்சுமி ஆச்சி சொன்னதுலதான் கோவம் வந்திருச்சி சோகிக்கு. ஒரு நாளாவது சாயங்காலத்துல ஆம்புள்ளையானோட ஒரு டிராமா, சினிமான்னு போக விடுறாகளா. இந்த சீதை ஆயாவாவது பரவாயில்லை. சொக்கலிங்கத்தோட ஆத்தா மீனா அம்மாமுண்டியும் நல்ல மாதிரி. ஒண்ணுஞ் சொல்லுறதில்லை. ஆனா இந்த லெச்சுமிப் பாட்டி இருக்கே. ஆத்தாடி. ! ஒன்னொண்ணத்தையும் கண்ணுல வெளக்கெண்ணெய் விட்டுப் பார்த்துக்கினு கொறை சொல்லிக்கினு இருந்தாக.

”அடி பள்ளத்தூர் அழகஞ்செட்டி காளியாயா படைப்புக்கும் போயாந்துருங்க. இந்த சினிமா டிராமா என்ன ஓடியா போயிறப்போகுது. இந்தப் படைப்பு மூணு வருஷத்துக்கு ஒருக்காதான் நடக்கும். ஒங்க கொடுப்பினை இந்த வருசம் நடக்குது. பஸ்ஸுலயா போறீக , ப்ளெஷர் கார்லதானே.”

வைகாசி மாசமென்றாலும் அனல் கொளுத்திக் கொண்டிருந்தது. கம்மாய் எல்லாம் வரண்டு போய்க்கிடந்தது. அப்பச்சி அனுப்பி வைச்ச ஆஸ்டின் கார் சோகிக்காகவே ஓடிக்கொண்டிருந்தது. வீட்டில் சோகி போனதும் யாருக்கும் எங்கும் போகத் தோணல. ஐயா வயலை வித்துட்டாக. கொண்டு விக்கப் போன அப்பச்சி சுருக்கிக்கினு வந்துட்டாக. காரு பின்ன யாருக்குத்தான் தேவை.

அது பாடு சோகிக்குத் தேவையான இடமெல்லாம் ஓடிக்கொண்டிருந்தது. ”சின்னாச்சி சொல்லுங்க சின்னாச்சி” என்று வேலுவும் கூடவே ஓடிக்கொண்டிருந்தான்.

அழகஞ்செட்டி காளியாயா படைப்பு வீடு பெரிதாக இருந்தது. அங்கே கூட்டம் எக்கித் தள்ளியது. கட்டைகள் போட்டுக் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி வரிசையில் தரிசனம் செய்ய அனுப்பினார்கள். இரட்டை வீடுகள் இரண்டைச் சேர்த்துச் சாமி வீடாக்கி இருந்தார்கள். ஒரு வீட்டில் நுழைந்து மறுவீட்டில் வெளிவரலாம். நடுவில் சாமிகள் இருக்கப் படைப்பு பள்ளயம் எல்லாம் பார்த்துத் தொட்டுக் கும்பிட்டு விபூதி வாங்கி வந்தாக ஆம்பிள்ளையானும் பெண்டாட்டியும்.

வளவில் தொட்டிகட்டிப் பிள்ளைகளைப் போட்டு ராராட்டிக் கொண்டிருந்தாக சிலர். பிள்ளைகள் பிறந்தவுடன் சாமி வீட்டுக்கு எதிரில் பத்தியில் தொட்டி கட்டுவதாக வேண்டிக்கினவுக பிள்ளைகளை எடுக்கிக்கினு தனி வரிசையில் நின்னுக்கிட்டு இருந்தாக.

அக்குழந்தைகளில் சிலர் அடைசலான சூழ்நிலையில் நை நை என்று அழுது கொண்டிருந்தன. சில குழந்தைகள் போவோர் வருவோரின் உடைகளைக் கைகளில் பிடித்து இழுத்துச் சிரித்தன. தங்களுக்குப் பிள்ளை பிறந்தால் அங்கும் தொட்டி கட்டுவதாக வேண்டிக்கொண்டு பந்திக்கட்டுக்கு போனாக சொக்குவும் சோகியும்.

சாப்பிட்டு முடித்து இரண்டு பேரும் காரில் ஏறினாக. சொக்கு இருமினான். சளிபோல வந்ததும் காறித்துப்பினான். சிவப்பாகத் தெறித்தது. ”என்னங்கிறேன் சாப்பிட்டோடனே வெத்தலை பாக்கா போட்டீக” என்று கேட்டாள் சோகி. ”இல்லையே” என்றான் சொக்கு. சோகியின் பார்வை சொக்குவின் சட்டையில் சிவப்பாகத் தெறித்திருந்த கறையின் மேல் தீர்க்கமாகப் படிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...