எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

தேனம்மை லெக்ஷ்மணனின் #சோகி சிவா – இரண்டாம் பதிப்பு - தோழி ஜோஸஃபின் பார்வையில்

தேனம்மை லெக்ஷ்மணனின் #சோகி சிவா – இரண்டாம் பதிப்பு




#தேனம்மைலெக்ஷ்மணன் எழுதிய சோகி சிவா நாவல், செட்டியார் சமூகப் பின்னணியில் கணவரை இழந்து வாழும் ஒரு பெண்ணின் போராட்டங்களையும் மனவலிமையையும் மையமாகக் கொண்டுள்ளது.

செல்வச் செழிப்பும் குடும்பத்தின் பெருமையும் எதிர்பார்ப்புகளும் சூழ்ந்த நிலையில் பிறக்கும் சிவா, பிறந்த சில நாட்களிலேயே தாயை இழக்கிறாள். பின்னர் தாத்தா–பாட்டியின் அன்பும் அரவணைப்பின்  மத்தியில் வளர்கிறாள். பதினாறு வயதில் பணக்காரக் குடும்பத்தில் திருமணம் செய்து வைக்கப்படுகிறாள். ஆனால் திருமண வாழ்க்கை தொடங்கிய முதல் ஆண்டிலேயே, குழந்தை பிறக்கும் முன்பே கணவர் புற்றுநோயால் உயிரிழக்கிறார்.

அதன் பின்னர், சமூக அங்கீகாரம், மரியாதை, அன்பு, பாதுகாப்பு ஆகியவற்றை இழந்த ஒரு கைம்பெண்ணின் ய வாழ்க்கை எவ்வாறு தனிமையிலும் போராட்டங்களிலும் நகர்கிறது என்பதைக் கதை நுணுக்கமாகச் சித்தரிக்கிறது. தாத்தா, பாட்டி, தந்தை ஆகியோரின் மறைவுக்குப் பிறகு, வீட்டிலிருந்த அண்டா–பானைகள் உள்ளிட்ட பொருட்களை விற்று வாழ்க்கைப் போராட்டத்தைத் தொடர்கிறாள். உறவினர்களின் புறணி அவதூறு பேச்சையும் எதிர்கொள்கிறாள்.

 நாற்பது வயதில் ஒரு மகனைத் தத்தெடுத்து வளர்க்கிறாள். பின்னர் அந்த மகனுக்கு இரு பெண் குழந்தைகள் பிறக்கின்றனர். அவர்களில் மூத்தவளுக்கு சிவாவின் பெயரே சூட்டப்படுகிறது. அப்பேத்தியை  தன்னுடன் வைத்து வளர்க்கிறாள்.

அந்தப் பேத்தி உயர்கல்வி கற்று வெளிநாட்டில் வாழும் நிலையில், கணவனை இழக்கும் துயரையும் எதிர்கொள்கிறாள். அச்சூழலிலும் பாட்டியாக இருக்கும் சிவா உறுதுணையாக நின்று, பேத்தியின் மறுமணத்தை ஏற்பாடு செய்து வைக்கிறாள். இதன் மூலம் தலைமுறைகள் கடந்த சமூக மாற்றத்தின் அவசியத்தை நாவல் வலியுறுத்துகிறது.

கதை நடைபெறும் செட்டியார் வீடுகள், தெருவின் வாழ்க்கைச் சூழலுக்கே வாசகர்களை அழைத்துச் செல்கிறார் ஆசிரியர். தனித்துவமான வட்டார மொழியும் இயல்பான உரையாடல்களும் நாவலுக்கு உயிரூட்டுகின்றன. செட்டியார் சமூகத்தின் திருமண மரபுகள், குடும்ப அமைப்பு, பண்பாடு மற்றும் வாழ்க்கை முறைகள் பற்றிய பல தகவல்களை நாவல் வழியாக அறிய முடிகிறது.

கணவரை இழந்த பெண்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய குடும்பமும் சமூகமும் பல சமயங்களில் அவர்களை எவ்வாறு புறக்கணிக்கின்றன என்பதையும் ஆசிரியர் வெளிப்படுத்துகிறார். விதவைகளின் மீது காட்டப்படும் அக்கறையின்மை, கேலி, மரியாதையற்ற அணுகுமுறை, சாஸ்திரம் மற்றும் சம்பிரதாயங்களின் பெயரில் அவர்களை ஒதுக்கி வைக்கும் நடைமுறைகள் போன்ற பல சமூகச் சிக்கல்கள் நாவலில் பதிவாகியுள்ளன.

இருப்பினும், ஒரு பேத்தியின் வாழ்க்கைப் பயணத்தின் மூலம் பெண்களின் கல்வி, தன்னம்பிக்கை மற்றும் சமூக மாற்றத்தின் சக்தியை ஆசிரியர் நம்பிக்கையுடன் முன்வைக்கிறார். நாவல் முழுவதும் சோகத்தின் நிழல் படர்ந்திருந்தாலும், இறுதியில் கல்வியும் மனவலிமையும் பெண்களுக்கு அளிக்கும் புதிய வாய்ப்புகளையும் விடுதலையையும் வலியுறுத்தி கதை நிறைவடைகிறது.

இந்த நாவலின் முதல் பதிப்பு 2013ஆம் ஆண்டு வெளியானது. தற்போது டிஸ்கவரி புக் பாலஸ் வெளியீடாக 2026ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பு வெளிவந்துள்ளது.

 சோர்வின்றி வாசிக்க வைக்கும் எளிய நடை, உயிர்ப்பான கதாபாத்திரங்கள் மற்றும் ஆழமான சமூகப் பார்வை ஆகியவை சோகி சிவா நாவலின் சிறப்பம்சங்களாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...