எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 8 ஆகஸ்ட், 2026

வசந்த மாளிகை வாணிஸ்ரீ

வசந்த மாளிகை வாணிஸ்ரீ


"இனியவளே என்று பாடி வந்தேன், மயக்கம் என்ன மௌனம் என்ன, பால் போலவே வான்மீதிலே யார் காணவே நீ காய்கிறாய்,கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம், முல்லைப்பூ பல்லக்குப் போவதெங்கே, ஓ மைனா ஓ மைனா,  ஜனகனின் மகளை மணமகளாக, மேளதாளம் கேட்கும் காலம், என் ராஜாவின் ரோஜா முகம்" இப்பாடல்களில் நடித்த வாணிஸ்ரீக்கு 77 வயதாகிவிட்டதாம். இத்தனைக்கும் தமிழில் 39 படங்களே நடித்திருக்கிறாராம்.

அழகு பொழியும் முக லாவண்யம், ஓங்குதாங்கான உருவம் , பளிச்சென்று பெரிய கண்கள், வில் போன்ற புருவங்கள், தீர்க்கமான நாசி, பளபள கன்னங்கள், மலர்ச்சியான புன்சிரிப்பு, உயரத் தூக்கிப் போட்ட பன் கொண்டை, லிப் க்ளாஸ் போட்ட ரோஜா உதடுகள், மாடர்ன் உடைகளிலும் புடவையிலும் கூடக் கவர்ச்சிகரமாக இருப்பார், பரிபூரண அழகி. சிவாஜியின் ஜோடிகளில் மிகப் பொருத்தமானவர். இவர் நடித்ததில் எனக்கு பிடித்த படங்கள் சிவகாமியின் செல்வன், வாணி ராணி, வசந்த மாளிகை, உயர்ந்த மனிதன்.

1948 ஆகஸ்ட் 3 அன்று நெல்லூரில் பிறந்தவர். இவருடைய மற்ற பெயர் கலா அபினேத்ரி. இயற்பெயர் ரத்னகுமாரி. பெற்றோர் வெங்கடாசலமூர்த்தி, ராதாரணி. கணவர்  டாக்டர் கருணாகரன். இரண்டு பிள்ளைகள். ஒரு மகள், ஒரு மகன். இவர் பிலிம்ஃபேர் விருது, கண்ணதாசன் விருது, மீனாகுமாரி விருது மாதவாபெட்டி பிரபாபதி விருது, வம்சி விருது, நந்தி விருது ஆகியன பெற்றுள்ளார். தெலுங்கில் 147  படங்கள் நடித்துள்ளார். 

ஏ வி எம் ராஜனுடன் நடித்த இருளும் ஒளியும் மிகச்சிறப்பான கதை அம்சம் கொண்ட படம். இதில் முத்துராமனும் ஒரு ஜோடி. ஓஹோ மிஸ்டர் பிரம்மச்சாரி கலாட்டாவான பாடல். திருமகள் தேடி வந்தாள் என்பது அற்புதமான பாடல். இருளும் ஒளியும் என்பது போல அப்பாவி ஒருத்தியும் அவள் மேல் பொறாமை கொண்ட இன்னொருத்தியுமாக நடித்த படம். ரோஜாவின் ராஜா இதுவும் ஒரு வித்தியாசமான படம். அலங்காரம் கலையாத சிலை தான் அவர். விதம் விதமான கொண்டைகள், கழுத்து, காது அணியாரங்கள் இவரது ஸ்பெஷல்

வாணி ராணி இன்னொரு இரட்டை வேடப் படம்.  சிவாஜி, முத்துராமன் ஜோடி. இதில் அப்பாவி ஒருத்தியும் துடுக்குத்தனமான பெண்ணொருத்தியுமாக நடித்த படம். கழைக்கூத்தாடும் ராணி என நினைத்து உயரக் கட்டிய கயிற்றில் சிவாஜி   ஏறி நடக்கச் சொல்ல அதில் ஏறத் தெரியாமல் வாணி தடுமாறக் கூட்டத்தார்  சிவாஜியைப் பந்தாடி விடுவார்கள். அதன் பின் கிழிந்த அவரது சட்டைப் பாக்கெட்டை அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே தைத்து விடுவார் வாணி. சின்ன குழந்தையில் விரும்பி ரசித்து சிரித்து பார்த்த படம் இது. இதில் வாணியின் அமைதியும் ராணியின் லூட்டியும் மிகப் பிடிக்கும். அதிலும் நாக்கை துரத்திக்கொண்டு ஒற்றை கண்ணை மூடி அவர் செய்யும் சேட்டைகள், கோலிகுண்டு அடித்துப் பையன்களோடு விளையாடுவது, ரோட்டில் சுற்றுவது என்று ஒரு சந்தோஷ நாடோடி போலத் திரிவார்

தாலியா சலங்கையா படத்தை பார்த்துவிட்டு வந்து பள்ளிக்கூடத்தில் தோழிகள் கதை சொல்வதைக் கேட்டுப் பரிதாபப்பட்டிருக்கிறோம். பொது மகளிர் தொழில் செய்யும் ஒரு தாய்க்கு பிறந்த பெண் சந்திரா. இவரை பக்கத்து வீட்டு ராமு காதலிப்பார். இவரது தந்தை தன் மனைவியைப் பார்க்க வரும் பொழுது தன் குழந்தையான சந்திராவை கட்டி அணைத்து ஒரு வைர மோதிரத்தை பரிசளிப்பார்.  இதை காணும் முத்துராமன் தவறாக எண்ணிச்  சந்திராவுடனான  தன்னுடைய காதலையும் திருமணத்தையும் ரத்து செய்வார். அவருடைய தந்தைக்கு பிறந்த இன்னொரு மகளை முத்துராமன் மணக்கும் பொழுது இவர் அந்த சலங்கை பூஜைத் தொழிலில் ஈடுபடுவதற்கான சலங்கையைக் கட்டிக்கொண்டு ஆடத் தொடங்கும் முன்பு அந்த வைரத்தை விழுங்கி மரித்து விடுவார்.


நல்லதொரு குடும்பம் மிக நல்லதொரு குடும்ப இணைப்பைச் சொல்லிய படம்.  ஈகோ க்ளாஷில் தங்கள் இரு மகன்களையும் சிவாஜியும் வாணிஸ்ரீயும் பிரித்து எடுத்துச் சென்று வளர்க்க முடிவில் கணவனும் மனைவியும் ஒற்றுமையாக வாழ்வதே குழந்தைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும் என்பதை சொல்லிய படம். வெள்ளி விழாவில் நான் சத்தம் போட்டு தான் பாடுவேன் என்ற பாடலில் வெளிப்படுவது போன்ற மிக போல்டான பெண்மணி இவர். உண்மையான அன்பு காலம் கடந்தும் ஜெயிக்கும் என்று கூறிய கதை. டீச்சர் அம்மா கண்ணன் என் காதலன் மற்றும் தாமரை நெஞ்சம் முக்கோண காதல் கதை.

வெள்ளிக் கிண்ணம் தான் தங்கக் கைகளில் முத்து புன்னகை அந்தக் கண்களில் வைரச் சிலை தான் எந்தன் பக்கத்தில் என்ற பாடலுக்கு ஏற்றபடி அவர் வைரச்சிலைதான்.  ஒருமுறை சத்தியஜித்ரே கேமராவின் எந்த கோணத்தில் பார்த்தாலும் மிக அழகான நடிகை ஜெயப்பிரதா என்று கூறி இருக்கிறார். அதேபோல கேமராவின் எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் மிகவும் அழகான நடிகை வாணிஸ்ரீயும் கூட

குலமா குணமா மிகச் சிறந்த திரைக்கதை கொண்டது உயர்ந்த மனிதனைப் போல. இதில் சிவாஜி பத்மினி ஜோடி மற்றும் ஜெய்சங்கர் வாணிஸ்ரீ ஜோடி இவர்கள் குடும்ப ஒற்றுமையையும் இவர்களுக்கு பிறக்கும் குழந்தையை வைத்தும் இந்த கதை மிக அழகாகச் செல்லும். கூட்டுக் குடும்பமாக விட்டுக் கொடுத்தல், சேர்ந்து இருத்தல், குற்றம் பாராட்டாமல் இணைந்திருத்தல் என்பதை விளக்க வந்த மிக அழகான படம்

மேரி சப்னோங்கி ராணி கப் ஆயேகி து என்ற ஆராதனா படப் பாடல்  போல உள்ளம் இரண்டும் ஒன்றை ஒன்று மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம் ஜிகுபுகு ஜிகுபுகு என்ற பாடல் ரயில்வே ட்ராக்கும் சாலைப்போக்குவரத்தும்  அருகருகே உள்ள ஒரு இடத்தில் எடுக்கப்பட்டது. சிவகாமியின் செல்வனில் அஷோக் என்ற சிவாஜிக்கே ஜோடியாகவும், ஆனந்த் என்ற பெயரில் சிவாஜி அவருடைய மகனாகவும் நடித்த படம். இதில் வாணிஸ்ரீயின் பெயர் சிவகாமி,

ரோஜாவின் ராஜாவில் பெண் பார்க்கும் பொழுது பாடும் ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருந்தான் என்ற பாடலும் அதி அற்புதம். நாணம் ஒருபுறம் ஆசை ஒருபுறம் கவலை மறுபுறம் அவள் நிலைமை திரிபுரம் எப்படி இந்த படத்தை விளக்குவது? ஜானகி கலங்கிவிட்டாள் என்று அவர் கண்கள் கலங்கும் போது சிவாஜியின் கண்கள் போல்  நம் கண்களும் கலங்கும். ரோஜாவின் ராஜா ரொம்பப் பொருத்தமான பெயர். அவர் ஒரு ரோஜாவாகவும் சிவாஜி ராஜாவாகவும் மிக அற்புதம்

வசந்த மாளிகைதான் நான் விரும்பி ரசித்துப் பார்த்த படம். இதில் வாணிஸ்ரீயும் சிவாஜியும் போட்டி போட்டு நடிப்பார்கள்.  யார் யாரை வென்றார்கள் என்று சொல்வது அரிது. அதில் சுயகௌரவம் கொண்ட வாணிஸ்ரீயின் பிடிவாதம் ரொம்ப ரொம்பப் பிடிக்கும் அவ்வளவு விரும்பும் சிவாஜி தன்னை சந்தேகிக்கலாமா என்ற தார்மீகக் கோபமே இப்படத்தின் வெற்றி. முதலில் சிவாஜி இறப்பது போல் க்ளைமாக்ஸ் எடுக்கப்பட்டிருந்ததாம்.  பின்னர் ரசிகர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று உயிர் பிழைப்பது போல் காட்டி இருக்கிறார்கள்.

ஓரிரு குத்துப் பாடல்களோடு ஆகச் சிறந்த பாடல்களும் இப்படத்தில் உண்டு.  கலைமகள் கைப் பொருளே உன்னைக் கவனிக்க ஆளில்லையோ என்று தன் நிலையைப் போல எண்ணி வீணையை மீட்டி வாணிஸ்ரீ பாடுவது உண்மைக் கலைவாணியைப் போன்ற தோற்றம் தரும்.   மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன என்று சிவாஜி மயங்கிப் பாடுவது, காதலி பிரிந்த பின் இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன் என்று ஏங்குவது,  யாருக்காக என்று மனம் பொறாமல் இறைந்து பாடுவது அனைத்தும் ஏ கிளாஸ் பாடல்கள். வாணிஸ்ரீ மற்றும் சிவாஜியின் உன்னதமான உண்மைக் காதல் கதை என்று எண்ண வைத்த மிகச் சிறப்பான படம்.

எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திரு மகளே என்ற அவரது படப் பாடல் போல் காலம், இதுவும் கடந்து போகும் என்று உணர்த்துகிறது. மனத்திரையில் மின்னல் வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.   சிவாஜியின் ஹீரோயின்களின் வரிசையில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வாணிஸ்ரீ என்னும் தேவதையின் அழகுக்கும் நடிப்புக்கும் அன்பான வந்தனங்கள்.


டிஸ்கி:- சின்னத்தம்பி பிரபு பற்றிய கட்டுரையைப் பாராட்டிய விரையாச்சிலை வாசகர் திரு. ஏஎன். சிதம்பரம் அவர்களுக்கு நன்றி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...