எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

பெண் அறம் வெளியீட்டில்..

 என்னுடைய பதினொன்றாவது நூலான பெண் அறம் நமது மண்வாசத்தின் பட்டறிவு பதிப்பகம் மூலம் 2020 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதியன்று ( சென்ற பெண்கள் தினத்தில் )  வெளியிடப்பட்டது. இந்நூல் இவ்வளவு செறிவாக சிறப்புடன் வெளிவரப் பெரிதும் காரணமானவர் எடிட்டர் திரு ப திருமலை சார்தான். அவருக்கு மனமார்ந்த நன்றிகள். 

புதன், 24 பிப்ரவரி, 2021

போகணியும் காப்பித்தட்டும் பால்பானைச் செம்பும் கூஜாவும்

 164.


1791*காப்பி ஆற்றும் தட்டு என்று ஒரு பாத்திரத்தை இங்கே குறிப்பிடுவார்கள். அந்தப் பெயர் ஏன் வந்தது என்று தெரியாது. ஆனால் அது எது என்று பின்னே வருது..  பார்ப்போம். 

நண்பர் திரு வைகோ சார் ( வை கோபாலகிருஷ்ணன் சார் )எங்க ஊர் பக்கம் புழங்கும் பாத்திரத்துக்கு எல்லாம் என்ன பேர் என்று குறிப்பிட்டு எழுதும்படி முன்னே ஒரு இடுகையில் சொன்னதாக ஞாபகம். எனவே கிடைத்தவற்றைப் புகைப்படம், பேரோடு போட்டிருக்கிறேன். 

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

காதல் வனத்தின் பதிப்பாளர் வேடியப்பன்

 சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலைய உரிமையாளர் வேடியப்பனை 2009 இலிருந்தே தெரியும். அவர் புத்தக நிலையம் ஆரம்பித்த புதிது. அப்போது அகநாழிகையின் புத்தக வெளியீடு. நாகரத்னா பதிப்பகம். லாவண்யா சுந்தராஜன், பாரா ஆகியோரின் நூல்கள் வெளியாகின. 

அதன் பின் கேபிள் சங்கர் & பரிசல் கிருஷ்ணா ஆகியோரின்  நூல் வெளியீடு அங்கே மாடியில் நடந்தது. அரங்கம் கொள்ளாத வலைப்பதிவர் கூட்டம். இதுவரை மூன்றுமுறை தன் தோற்றத்தைப் பொலிவு படுத்திக் கொண்டது டிஸ்கவரி. 

சகோ வேடியப்பனைச் சந்திக்கும்போது அவர் தன் வலைப்பதிவு பற்றிக் கூறினார். மதிவதனி கைக்குழந்தை. அதன்பின் அவரது சகோதரன் சஞ்சயின் திருமணம். வேடியப்பன் மகன், சஞ்சயின் பிள்ளைகள் என அவர்கள் குடும்பத்தினர் நட்பு தொடர்ந்து கொண்டிருந்தது. 2012 இலேயே நான் சென்னையிலிருந்து வந்துவிட்டாலும் அவ்வபோது முகநூல், கைபேசி மூலம் தொடர்பு கொண்டிருந்தோம். 

இதுவரை வெளியான பதிமூன்று நூல்களில் எனது எல்லா நூல்களும் அங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. எனது முதல் நூல் நண்பர் செல்வகுமாரின் மூலம்  கரிசல் மீடியாவால் ( மகேந்திரன் )  பதிப்பிக்கப்பட்டது. ஆனால் வெளியீடு 36 ஆவது புத்தகக் கண்காட்சியில் டிஸ்கவரியின் அரங்கில்தான். மாபெரும் கூட்டம். ஓரளவு நல்ல விற்பனையும் கூட. அதன் தொகையையும் எனக்கு அவர் அப்படியே கொடுத்தார். 

எனது ஐந்தாவது நூலான சிவப்புப் பட்டுக் கயிறை அவரே வெளியிட்டார். கிருஷ்ணப் ப்ரபு அவர்களின் எடிட்டிங்குடன் அந்நூல் சிறப்பாக வெளிவந்தது. டிஸ்கவரியின் க்ளாசிக் நூல் பிரிவில் வெளிவந்த அதை கிருஷ்ணப் ப்ரபு “இந்நூல் வெகு ஜனம், மற்றும் இலக்கியம் இரண்டுக்கும் நடுவில் ஒரு தடத்தில் பயணிக்கிறது. நல்ல ரீச் ஆகும் என்றார்.” அதன்படியே அந்நூல் இரண்டாவது பதிப்பும் கண்டது. 

ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள், ஒன்பதாவது நூலான காதல்வனம் நாவல், பன்னிரெண்டாவது நூலான கீரைகள், பதிமூன்றாவது நூலான ஆத்திச்சூடிக் கதைகள் ஆகியனவும் டிஸ்கவரியின் படி பதிப்பகத்தின் மூலம் வெளிவந்தன. 

இவை எல்லாவற்றுக்கும் அட்டைப்படம், எடிட்டிங், பிடிஎஃப், பிரிண்டிங், டிஸ்கவரி அரங்கத்தில் வெளியீடு எல்லாமே அவர்தான். நூல்வழிச் சகோதரர்கள் என்று அவரையும் சஞ்சுவையும் கூறலாம். 

பார்க்கப் பார்க்கவே டிஸ்கவரியும் சென்னையின் முக்கிய நூல் நிலையத்தில் ஒன்றாகவும், சர்வதேச புத்தகக் கண்காட்சிகளில் பங்கு கொண்டும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. எனது சிவப்புப் பட்டுக்கயிறு நூலையும் ஷார்ஜா கண்காட்சிக்குக் கொண்டு சென்று ஜெர்மனி வரை ( நிம்மி சிவா அவர்கள் ) சேர்த்தது. அதன் இன்றைய பிரம்மாண்ட வளர்ச்சியை அதன் வேரிலிருந்து விழுது விட்டிருப்பது வரை பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். 

எனது காதல் வனம் நாவல் வெளியீட்டில் நண்பர் ( கல்லூரித்தோழி ஏர்னஸ்டினின் கணவர் ) அருளானந்த குமார் சார் அவர்கள் கலந்துகொண்டு நிறையப் புகைப்படங்கள் எடுத்தார்கள். அருமையான புகைப்படங்கள். அழகான கோணங்கள். நிகழ்வு முழுவதையும் கவர் செய்து அனைவரையும் எழிலார்ந்த சிற்பம் போல் செதுக்கிக் கிட்டத்தட்ட 500 புகைப்படங்கள்  எடுத்து அனுப்பினார்கள். இந்த அன்பிற்கெல்லாம் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம். மலர்ந்த புன்னகையோடு சகோ வேடியப்பன் உரையாற்றிய இந்தப் புகைப்படங்களைப் பகிர்வதில் மகிழ்கிறேன். அவர் மட்டுமல்ல இதில் அவர் மனைவி மகன் எனக் குடும்பமே பங்கேற்றது குறித்து நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சி. பதிப்பாளரான அவர்களுக்கு அன்புத் தோழி சாஸ்திரி பவன் யூனியன் லீடர் மணிமேகலை அவர்கள் பொன்னாடை போர்த்தி மகிழ்ந்ததும் இதில் இனிக்கும் நிகழ்வு. இனி அனைத்துப் புகைப்படங்களும் உங்கள் பார்வைக்கு. 


திருவோடு தொலைந்த மாயம்.

திருவோடு தொலைந்த மாயம்.

நம்மேல் நம்பிக்கை வைத்து ஒருவர் ஒரு பொருளைக் கொடுத்துப் பாதுகாப்பாய் வைக்கச் சொன்னால் அதன்படி வைத்து அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். அதுதான் தர்ம நியாயம். ஒரு வேளை அது தொலைந்துவிட்டால் அதற்கு நாம்தான் பொறுப்பேற்க வேண்டும். அப்படி ஒரு சிவயோகி கொடுத்த திருவோடு தொலைந்ததால் நீலகண்டம் என்பவர் பட்ட இன்னல்களைப் பார்ப்போம் குழந்தைகளே.

திங்கள், 22 பிப்ரவரி, 2021

”விழுதல் என்பது எழுகையே” நூலாக்கம்.

 நாங்கள் 26 பேர் எழுதிய ( சர்வதேச எழுத்தாளர்கள் - பன்னாட்டுப் புலம்பெயர் எழுத்தாளர்கள் பங்களிப்புச் செய்தது.  ) “விழுதல் என்பது எழுகையே “ என்ற புதினம் நூலாக்கம் பெற்றுள்ளது என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 


இந்தியா, இலங்கை, ஐரோப்பா ( ஜெர்மனி, சுவிட்ஜர்லாந்து, ஃப்ரான்ஸ், இத்தாலி ) கனடா, அமெரிக்கா, லண்டன் ஆகிய ஊர்களில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர்களை ஒருங்கிணைத்துத் ”தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தின்” திரு கந்தையா முருகதாசன் அவர்களும், ஊடக வித்தகர் திரு பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி அவர்களும் - ஒரு வருடக் கடின உழைப்பின் மூலம் உருவாக்கிய கதைக்கருவைக் கொண்டு  - ஜெர்மனியிலிருந்து இந்நூலைக் கொண்டு வந்துள்ளார்கள். 

சனி, 20 பிப்ரவரி, 2021

பொங்கல் - சில குறிப்புகள்.

 163.

நுழைபுலம் குழுமத்துக்காகப் பொங்கலும் நாங்களும்  என்ற தலைப்பில் உரையாற்ற எடுத்த குறிப்புகள் சிலவற்றை இங்கே பகிர்ந்துள்ளேன். 



செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

சிவகங்கை மாவட்ட எழுத்தாளர்களுக்கு விஞ்ஞானி ரகுபதி விருது

 தமிழ்நாடு அறிவியல் இயக்கம் காரைக்குடியில் இரண்டாம் ஆண்டாகப் புத்தகத் திருவிழாவைச் சிறப்புற நடத்தியது. அதில் சிக்ரியோடு ( செண்டரல் எலக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ) இணைந்து  சிவகங்கை மாவட்ட எழுத்தாளர்களுக்கு விஞ்ஞானி  ரகுபதி விருது அளிக்கப்பட்டது. எனக்கும் விருது வழங்கிக் கௌரவப்படுத்தினார்கள். இது பற்றி முன்பே எழுதி இருக்கிறேன். மொத்தப் புகைப்படங்களையும் இங்கே பகிர்ந்துள்ளேன். 


வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

கொஞ்சம் பஞ்சாங்கம், கொஞ்சம் ஜோசியம்.

 வீட்டில் ஒரு ஜோசிய நோட்டுக் கிடைத்தது. அதில் குறிப்பிட்டிருந்த சிலவற்றை இங்கே பகிர்கிறேன். (பஞ்சாங்கம் போல் அனைத்துமே அதில் குறிக்கப்பட்டு  இருந்தன.

திக்கயங்களாவன ( திசைகளுக்கான வாகனங்கள் என நினைக்கிறேன் ) 

ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பகந்தம், சார்லபௌமம், சுப்ரதீபம். 

நாகங்களாவன

அனந்தன், வாசுகி, தக்ஷ்கன், சங்கன், குளிகன், பத்மன், மகாபத்மன், கார்க்கோடகன் 

சப்த ரிஷிகளாவன

மரீஷி, அத்திரி, ஆங்கிரஸு, புலஸ்தியன், புலகன், பிருகு, வசிஷ்டர். 


புதன், 10 பிப்ரவரி, 2021

காப்புக் கட்டுப் புதுமையும் கார்த்திகைப் புதுமையும் சுவீகாரப் புதுமையும் திருவாதிரைப் புதுமையும்.

 162. 1751. காப்புக்கட்டுப் புதுமை

வீட்டின் முதற்குழந்தைகளுக்கு ( ஆண் & பெண் ) முதலாம் ஆண்டு பிறந்த விழாவை அதை ஒட்டி வரும் ஒரு நன்னாளில் கொண்டாடுவதே ஆதி காலத்தில் காப்புக் கட்டுப் புதுமை. பின்னாட்களில் ஆறேழு வயது வந்ததும் அக்குழந்தைகளுக்குப் புதுமை கொண்டாடினார்கள். 

1752. முதலில் இருப்பது  என் கணவருக்கும் அவர் தங்கைக்கும் கொண்டாடிய காப்புக்கட்டுப் புதுமைக்கான அழைப்பிதழ் . 69 ஆம் வருடம் பங்குனி மாதத்தில் என் கணவருக்கு 7 வயதும், என் நாத்தனாருக்கு ஐந்து வயதும் ஆனபோது கொண்டாடி இருக்கிறார்கள். 

இந்நிகழ்வில் அனைத்து ஆபரணங்களும் அழகிய பட்டு உடைகளும் அணிந்த குழந்தைகளை வெள்ளித்தாம்பாளத்தில்/ தங்கத்தாம்பாளத்தில்  அமரவைத்து திருஷ்டி கழியச் சுற்றும் ஆலத்தி போல் சுற்றி இறக்குவார்கள். விருந்தினர்களும் குழந்தைகளை ஆசீர்வதிப்பார்கள். காலையும் மதியமும் விருந்து இருக்கும். 

 1753. அதன் பின் கார்த்திகைப் புதுமை.

கார்த்திகை மாதம் கொண்டாடப்படும் புதுமைக்குக் கார்த்திகைப் புதுமை என்று பெயர். இது கல்வி கற்கச் செல்லும் பருவத்தில் உள்ள குழந்தைகளுக்காக நிகழ்த்தப்படும் கொண்டாட்டம். இந்நிகழ்வில் குழந்தைகளுக்கு அழகிய ஆடை அணிவித்து அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்குக் குதிரையில் ஏற்றிச் சென்று வணங்க வைத்து அழைத்து வந்து வித்யாப்பியாசம் செய்து வைப்பார்கள். குழந்தைகள் கோயிலுக்கு குதிரையில் ஏறிச் செல்லும்போது விடிகாலை நேரமாக இருப்பதால் குதிரையின் முன்னே 1754*சூள்பிடி ( தீப்பந்தம்போலப் பிடித்துச் செல்வது ) எடுத்துச் செல்வார்கள். இதுவே சூப்பிடி என்று பேச்சு வழக்கில் மருவி உள்ளது. அதன்பின் பள்ளியில் ( ஏட்டுப் பள்ளிக்கூடம், திண்ணைப் பள்ளிக்கூடம் ) சேர்ப்பார்கள். 

///குழந்தைகளுக்கு வரும் முதல் பிறந்தநாளை புதுமை எனக் கொண்டாடுகிறார்கள். முதன் முதல் பள்ளி செல்லும் போது பிள்ளைகளை கார்த்திகைத் திருநாளில் வீடுகளில் வாழை நட்டு  விளக்கேற்றி விநாயகர் கோயிலுக்கோ, சிவாலயத்துக்கோ குதிரை ஏற்றிச் சென்று சோதி தரிசனம் செய்து வரச் செய்கிறார்கள். இதை சூள்பிடி ( சூப்பிடி என்று இப்போது பேச்சு வழக்கு மருவி விட்டது ) என்ற அணையாத லாந்தர் விளக்குகள், மெழுகுதிரி விளக்குகளைக் குதிரை முன் பிடித்துக் கொண்டு கோயிலுக்கு அழைத்துச் சென்று வருவார்கள்.////

1755*திருவாதிரைப் புதுமை என்பது பாவை நோன்பு போல மார்கழி மாதம் திருவாதிரையின்போது கொண்டாடப்படுவது. பருவ வயதில் அல்லது எட்டிலிருந்து பதின்பருவங்களில் இருக்கும் குழந்தைகளுக்குப் பட்டுச் சிற்றாடை கட்டி ( தாவணி போல் ஒன்று, புடவையை விட கஜம் குறைவாக இருக்கும் ) ஜம்பர் ரவிக்கை போட்டு நெத்திச் சுட்டியில் இருந்து வைரப்பதக்கம் வெள்ளிக் கொலுசு ஈறாய நகைகள் போட்டு அழகு படுத்தித் திருவாதிரைப் பாடல்கள் பாடுவார்கள்.  

1756*திருவாதிரைப் புதுமையின்போது  திருவாதிரைப் பெண்ணின் கையை மாமக்காரர் பிடித்து 108 முறை எழுத்தாணியால் திருவாதிரைத் தோசையக் குத்துவது.

இதை இங்கேயும் பாருங்க. 

மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.



திங்கள், 8 பிப்ரவரி, 2021

தலைவி தந்த அண்ணல்.

 காதல் வனம் நூல் வெளியீட்டின் போது எனக்கு முழு ஊக்கம் கொடுத்தவர் அன்புத் தோழி மணிமேகலை அவர்கள். இவர் சாஸ்த்ரி பவன் பெண்கள் சங்கத்தலைவி மற்றும் தலித் பெண்கள் நலச் சங்கத்தலைவி. இரு முறை சிறப்பு விருந்தினராகப் பெண்கள் தினத்தில் அழைத்துச் சிறப்புச் செய்தவர். மகப்பேறு சிறப்பு மருத்துவர்  கமலா செல்வராஜ் மற்றும் அடையார் புற்றுநோய் மையத்தின் தலைவர் மருத்துவர் சாந்தா ஆகியோருடன் சம மேடையில் அமர வைத்தவர். 

நமது நூல் வெளியீடு என்றால் நாம்தான் , நினைவுப் பரிசு, சிறப்புப் பரிசு வழங்கிப் பொன்னாடைபோர்த்துவோம். ஆனால் எனது நூல் வெளியீட்டைத் தனது நூல் வெளியீடாக மகிழ்ந்து எங்கள் இருவருக்கும் பொன்னாடை போர்த்தி மகிழ்ந்ததோடு மட்டுமல்ல. சிறப்புப் பேச்சாளர்களுக்கு அண்ணல் அம்பேத்கார் படத்தை நினைவுப் பரிசாகவும் வந்திருந்த பெண்களுக்குப் “ பெண் ஏன் அடிமையானாள் ?” என்ற பெரியாரின் நூலை நினைவுப் பரிசாகவும் வழங்கி மகிழ்ந்தவர். 

அவர் தனது பால்யகால நினைவுகளையும் தைர்யலெக்ஷ்மியாய்ச் சிறுவயதிலிருந்தே தன்னுள் ஊறிய புரட்சிகர சிந்தனைகளையும் தொகுத்து வரும் மகளிர் தினத்தில் நூலாக்கம் செய்யவிருக்கிறார். அந்நூலை உங்களைப் போல நானும் எதிர்பார்த்து நிற்கின்றேன். 

என் புத்தக வெளியீட்டில் என்னைச் சிறப்பு செய்த அவருக்கு நாங்களும் ஒரு பொன்னாடை போர்த்தி மகிந்தோம்.


எளிமையை விரும்பும் அன்பு மனுஷி இவர். மிகக் கூச்சத்தோடு ஏற்றுக் கொண்டார் :) 

சனி, 6 பிப்ரவரி, 2021

பசுக்கள் மேய்த்து ஞானம் பெற்ற சுவேதகேது.

 பசுக்கள் மேய்த்து ஞானம் பெற்ற சுவேதகேது.


பள்ளிக்கூடத்தில் சரியாகப் படிக்காத மாணவர்களை ஆசிரியர்கள் நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு எனத் திட்டுவார்கள். மாடு மேய்ப்பது அவ்வளவு சுலபமா என்ன ? நன்கு படித்திருந்தும் தன் ஆசிரியர் மாடு மேய்க்கச் சொன்னதற்காகக் கோபப்படாமல் பசுக்களை மேய்த்து அவற்றின் மூலம் ஞானம் பெற்ற சுவேதகேது என்பவன் கதையைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
உத்தாலக ஆருணி என்றொரு முனிவர் இருந்தார். அவருடைய மகன்தான் சுவேதகேது. அறிவும் ஆற்றலும் நிரம்பப் பெற்றவன். உத்தாலக முனிவரே சுவேதகேதுவுக்குக் கற்பித்து வந்தார் . ஆனாலும் அவனுக்கு உரிய வயது வந்ததும் அவனைக் கல்வி கற்க வேறொரு குருவிடம் அனுப்பினார்.

வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

கொலோஸியத்தில்.. COLOSSEUM, ROME.

ஏழு புதிய உலக அதிசயங்களுள் ஒன்று இந்த கொலோசியம். 

பண்டைய ரோமாபுரியின் கட்டிடக்கலைகளுள் ஒன்று கொலோசியம். க்ளாடியேட்டர் என்றொரு படம் பார்த்திருப்பீர்கள். மனிதர்களும்( கைதிகள் )  மிருகங்களும் ஏன் அடிமைகளும் அடிமைகளுமே குபீரென பாதாளப் பாதைகளில் இருந்து உக்கிரத்துடன் வெளிப்பட்டு ஆக்ரோஷத்துடன்  மோதும் இடம். 

யூரோப் டூரின் நான்காம் நாள் இந்த அரங்கத்தைப் பார்த்தோம். பல்லாயிரக்கணக்கான உயிர்களை மன்னர்களின்  கேளிக்கைக்காகக் காவு கொண்ட இடம் இது. இதுவும் பாரிஸின் ப்ரெஞ்ச் தொழிற் புரட்சி நடந்த இடமும் ( OBILISH OF LUXOR ) - ப்ளேஸ் டி கன்கார்ட் மனதை வருத்திய இடங்கள். 

மதனின் “ மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்” என்ற நூலில் இந்தக் கொலோசியம் பற்றியும் அதன் கொடுங்கோல் மன்னன் பற்றியும் விவரித்து இருக்கும் விதம் படிக்கும்போதே சில்லிடக்கூடியது. 

நாம் காணும் இந்தக் கொலோசியம் 20 நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்று சொன்னால் பிரமிப்பாய் இருக்கும். சலவைக்கல், இரும்பு கொண்டு திடமாய்க் கட்டப்பட்ட இக்கட்டடம் நிலநடுக்கத்தாலும் இயற்கைச் சேதங்களாலும் பாழடைந்து இந்நிலையை எட்டியுள்ளது. 


இது மினி கொலோசியம் என்ற ஒன்று.கொலோசியம் செல்லும் வழியில் காணக் கிடைத்தது. 
வட்டவடிவமாக அமைக்கப்பட்ட இந்த மினி கொலோசியத்தை ஆம்பிதியேட்டர் என்றும் கொலோசியத்தை ஃப்ளேவியன் ஆம்பிதியேட்டர் என்றும் அழைக்கிறார்கள். 
Related Posts Plugin for WordPress, Blogger...