18.கருச்சிதைவு, கருத்தடை முறைகள், பிரச்சனைகள்
கர்ப்பமாக இருக்கும் போது ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட்டால் கருச்சிதைவு ஏற்படும். பிரசவத்தின் போதும் மிகப்பெரும் சிக்கல்கள் உருவாகும். இதனால் பிள்ளைகளின் எலும்பு வளர்ச்சியில் பாதிப்பு நேரலாம். இரத்தசோகை ஏற்பட்டு வழக்கத்தை விடக் குறைவான இரத்தச் சிவப்பணுக்கள் காணப்படும். இதனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும். ஊட்டச்சத்துக் குறைபாட்டால் இரத்தத்தில் நஞ்சு கலக்கவும் கூடும். இதைத் தவிர்க்க காய்கறிகள், பழங்கள், தண்ணீர், நார்ச்சத்து உணவு, புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கர்ப்பத்தின் முதல் பதிமூன்று வாரங்களில் அநேக கருச்சிதைவுகள் நிகழ்கின்றன. குழந்தையின் குரோமோசோமில் ஏற்படும் சிக்கல்கள், தாயின் ஹார்மோன் பிரச்சனை, தொற்று, உடல்நலக் கோளாறு, புகைபிடித்தல், ஊட்டச்சத்துக் குறைபாடு, கதிர்வீச்சு வெளிப்பாடு, போதைப் பொருள் உபயோகம், அதிகப்படியான காஃபின் மற்றும் நச்சுப் பொருள், அதிர்ச்சி, தாயின் வயது, நீரிழிவு நோய், இரத்தம் உறைதல் கோளாறு, குறுகிய கருப்பை வாய் அல்லது அசாதாரண ஒட்டுதல்களுடன் கூடிய கருப்பை, உடல் பருமன், சுற்றுச்சூழல் மாசு ஆகிய முக்கியப் பங்கு வகிக்கின்றன.