எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 12 ஜனவரி, 2023

பூப்படைதல் & மாதவிடாய் ஒரு இயற்கை நிகழ்வு

2.பூப்படைதல் & மாதவிடாய் ஒரு இயற்கை நிகழ்வு

தங்கள் குடும்பத்தில் ஒரு பெண், எதிர்கால குடும்ப வாழ்க்கைக்குத் தயாராகிவிட்டாள் என்பதை உணர்த்துவதற்காக `பூப்பு நீராட்டு விழாக்கள்கிராமம், நகரம் என வித்தியாசமில்லாமல் இப்போது நடத்தப்பட்டு வருகின்றன. க்ரீடங்கள், நகைகள், பட்டாடைகள் அணிவித்துப் பலவித அலங்காரங்கள் செய்து மேடையில் அம்மன் உருவில் காட்சிப் பொருளாகப் பெண்ணை ஆக்கிவிடுகின்றன.

விழாவாகக் கொண்டாடவில்லையென்றாலும் இதற்குரிய சடங்குகள் பெரும்பாலான சமூகங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இன்றைக்கு நாம் பூப்படைதலைப் பற்றிப் பேசவேண்டிய அவசியம் உள்ளது. காரணம், இப்போது நடைபெறும் சில பூப்பு நீராட்டு விழா மேடையில் வீற்றிருப்பது இளம் பெண்கள் அல்ல, குழந்தைகள்.

புட்டு சுத்துதல் என்றும், நலுங்கு வைத்து நீராட்டல் என்றும் சில சமூகத்திலும், பெண் சடங்கானதைப் பேரனுண்டா எனக் கேட்டு இல்லம் வரும் உறவினர்களுக்கு மிட்டாய்த்தட்டு வைத்தும், ரொட்டி சுட்டு ருதுவான பெண்ணின்மேல் நொச்சி இலையில் வைத்து சடங்கு கழித்தும்,
உறவினர்களுக்கு வடித்தும் இந்நிகழ்வைச் சில சமூகத்தினரும் தம் இல்லங்களிலேயே கொண்டாடுகின்றார்கள்.
பூப்படைதலைக் கொண்டாடும் நிகழ்வாகவும் மாதாந்திரத் தீட்டைத் தீண்டத்தகாக நிகழ்வாகவும் ஆக்கி வைத்திருக்கிறது இந்தச் சமூகம்.

பூப்படைதல் என்பது பெண்களின் உடலில் ஏற்படும் இயற்கை நிகழ்வு. அதைக் கண்டு அச்சப்படவோ பயப்படவோ தேவையில்லை. இதைப் பற்றிய முறையான கல்வியும் சுகாதாரப் பயிற்சியும் இல்லாமையே இது தொடர்பான பல நோய்களையும் அதன் காரணமான பயத்தையும் ஏற்படுத்துகிறது.பூப்படையும் முன்பே பெண்ணுக்கு இதுபற்றிய தெளிவு ஏற்பட்டால், உடல் பற்றிய புரிதல் ஏற்பட்டால் எந்த அச்சமும் அருவருப்பும் இல்லாமல் எளிதாகக் கையாள முடியும்.

பெற்றோர்கள், ஆசிரியர்கள் , சக உறவினர்கள் ஆகியோர் பருவமடையும் வயதில் உள்ள பெண்ணுக்கு இது பற்றிய விஞ்ஞானக் கல்வியைப் போதித்தல் முக்கியம். உடலில் ஏற்படும் மாறுதல்கள், மனதில் ஏற்படும் மாறுதல்கள், ஹார்மோன்களில் ஏற்படும் குளறுபடிகளைப் புரிந்து கொள்ள வேண்டும். பெண்ணுக்கும் புரியவைக்க வேண்டும்.

முதன் முதலில் ஏற்படும் வெள்ளைப் படுதல்  பெண் பூப்படையத் தயாராகிவிட்டாள் என்பதைப் பெற்றோருக்கு உணர்த்திவிடும். மாதவிடாய் பற்றிக் குழந்தைகளுடன் உரையாடுவது சங்கடத்தை ஏற்படுத்தினாலும் அதைப்பற்றிய விஞ்ஞான விபரங்களைப் பெண் குழந்தைக்கும், அச்சமயத்தில் பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை ஆண்குழந்தைக்கும் தெளிவுபடுத்த வேண்டும்.

முதல் பூப்பின் போது இரத்தம் வெளிப்படுவதைக் கண்டு பயப்படவோ அருவருக்கவோ தேவையில்லை. இயற்கையாகவே ஒரு பெண் கருவைச் சுமக்க உடலைப் பக்குவப்படுத்தும் முயற்சிதான் இந்தப் பூப்படைதலும் மாதாந்திரத் தீட்டும். பெண்ணின் கர்ப்பப் பையில் குழந்தைப் பேற்றுக்கான கருமுட்டைகள் மாதாமாதம் உருவாகின்றன. கர்ப்பமுறாதபோது ஒவ்வொரு மாதமும் அந்தக் கருமுட்டையானது முதிர்ச்சி அடைந்து தேவையில்லாத திசுக்களோடு வெளியே வருகிறது. இதுவே இரத்தப் போக்கு. இது ஒவ்வொரு மாதமும் 28 நாட்களில் இருந்து 30, 35 நாட்களுக்குள் வெளியாகும்.

இந்த மாற்றத்தைப் பெண்குழந்தைகள் மனதளவில் ஏற்று உடலளவில் தன்னை நிர்வகிக்கத் தேவையான ஆதரவையும் ஆலோசனையையும் பெற்றிருந்தால் இது மிகவும் எளிதானதே. பெண்ணை அக்காலம் போல் விலக்கி வைக்காமல் முடிந்தவரை அவர்களின் உணர்ச்சி நிலை, மனநிலை, வாழ்க்கை முறை, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றில் அக்கறை செலுத்தினால் அது பெரிய அளவில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.


28 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படும். இது ஒரு உடல் இயங்கியல் மாற்றம். கருத்தரிக்க ஏற்றபடி ஒவ்வொரு மாதமும் கர்ப்பப் பை கருமுட்டையை உருவாகும். கருப்பையினுள் எண்டோ மெட்ரியம் என்ற குருதி நிறைந்த உள்மடிப்புக்கள் உள்ளன. பெண் கருவுறாத போது கருமுட்டையில் உள்ள திசுக்களோடு இந்த மடிப்புக்களில் உள்ள திசுக்களும் நுண்ணிய குருதிக் குழாயில் உள்ள குருதியும் சேர்ந்து கழிவாக வெளியேறுகின்றன. எனவே மாதவிடாய் இரத்தப் போக்கு மூன்று முதல் எட்டு நாட்கள் வரை நீடிக்கிறது.   

இச்சமயம் உடலில் துர்நாற்றம் ஏற்படலாம். இதைக் கண்டு வெறுப்படையாமல் இச்சமயங்களில் உடலைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். சானிடரி நாப்கின்ஸைப் பயன்படுத்த வேண்டும். பருவ வயதிலும் மெனோபாஸ் நேரங்களிலும் அதிக இரத்தப் போக்கு ஏற்படலாம். இந்நாட்களில் நரம்பு மண்டலம் மிகவும் பலவீனமாக இருக்கும் எனவே உணர்ச்சி வசப்படுதலைத் தவிர்ப்பது நல்லது. ஓய்வும் உறக்கமும் தேவை. அதிக வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும். சுத்தமான் நாப்கின்களை உபயோகிக்கவும் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை நாப்கின்களை மாற்றவும் வேண்டும்.

அன்று என்ன செய்தோம்? இன்று என்ன செய்யலாம் ?

அன்று பூப்படைந்த பெண்ணுக்கு பூப்படைந்தவுடன் குளிக்க வைத்து கோலமிட்ட இடத்தில் கிழக்குப் பார்த்து நிற்கவைத்துச் சிறிதளவு முளைக்கீரை விதையை வாயில் போட்டு நீரோடு விழுங்கச் செய்வார்கள். காரைக்குடியில் இன்றும் இருக்கும் நடைமுறை இது.

மேலும் ருதுவான பெண்ணுக்குத் தினம் விடிகாலையில் ஒரு பச்சை முட்டையையும் ஒரு முட்டை அளவு நல்லெண்ணெயையும் கொடுத்து விழுங்கச் சொல்வார்கள். ஒருவாரம் முதல் பத்து நாட்கள் வரை இவ்வாறு கொடுத்து வர கழிவுகள் சரளமாக வெளியாவதோடு முதல் தீட்டால் ஏற்படும் உடல் உஷ்ணம், வயிற்றுவலி, சூதகவலி, இடுப்புவலி, கால்வலி ஆகியன நீங்கும். நான்காம் நாள் ஒருமுறையும் எட்டாம் நாள் ஒருமுறையும் எண்ணெய்க் குளியல் எடுக்க உடல் வெப்பம் சீராகி குளிர்ச்சி கொடுக்கும்.

மேலும் உளுந்துக் களி, கும்மாயம், உளுந்துச் சுண்டல், வேங்கரிசிமா, கோதுமைப் பொரியரிசிமா, கவுனி அரிசி, குறுவை அரிசி,  சிவப்பரிசி, கேழ்வரகு, வாழைப்பூ, முருங்கைக்கீரை, வேர்க்கடலை, சோளம், ஆகியவற்றையும் பக்குவமாகச் சமைத்துக் கொடுப்பார்கள். (இவை பற்றிய குறிப்புக்களைத் தொடர்ந்து எழுதுவேன்.)

இன்று என்ன நடக்கிறது ? எல்லாமே ரெடிமேட் உணவுகள். டின் உணவுகளும், பேக்கரி ஐட்டங்களும், ஃபாஸ்ட் ஃபுட் வகையறாக்களும், பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களும்தான் அதிகம் உண்ணப்படுகின்றன. அதன் விளைவுகளால் இன்றைய காலகட்டத்தில் பூப்படைதல் மற்றும் மாதவிடாயால் ஏற்படும் தொந்தரவுகள் அதிகளவில் பேசுபொருளாகின்றன.

அதிகமாகப் பழங்களையும் காய்களையும் சாப்பிடுவதால், பூப்பெய்துவது முறைப்படுத்தப்படும்என்கிறது `தி நியூ பியூபெர்ட்டி’  எனும் ஆய்வுப் புத்தகம். இளம் வயது முதலே நொறுக்குத்தீனிகளுக்குத் தடைவிதித்து, இயற்கையான பழங்களையும் காய்களையும் பயறுவகைகளையும் சாப்பிடச் சொல்லிக் கொடுங்கள். பள்ளிகளிலும், வீடு திரும்பிய பின்னர் மாலை வேளைகளிலும் ஓடியாடி விளையாடும்படி ஊக்கப்படுத்துங்கள்.  

மாத விடாய் கோளாறு, சுழற்சியில் மாற்றம், இரத்தப் போக்கின் அளவு ஆகியவை குறித்தும், சீரற்ற ஒழுங்கற்ற இரத்தப் போக்கு, வலி, சீக்கிரம் பூப்படைதல், தாமதப் பூப்படைதல், ஹார்மோன்கோளாறுகள் குறித்து அடுத்துப் பார்ப்போம்.


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...