எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 13 ஜூன், 2023

7.பிறப்புறுப்பு அழற்சியும் பூஞ்சைத் தொற்றும்

 7.பிறப்புறுப்பு அழற்சியும் பூஞ்சைத் தொற்றும்


பொதுவாகப் பெண்களுக்குப் பூப்படையும் பருவத்திலும், மாதவிடாய்க்கு முன்னிரு பின்னிரு நாட்களிலும், கர்ப்பகாலங்களிலும் வெள்ளைப்படுதல் ஏற்படும். இது இயற்கை. வழுவழுப்பான இந்தத் திரவம் இனப்பெருக்கப்பாதையைச் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கப் பயன்படும்.

பூப்படைந்தபின் மாதாந்திரத் தீட்டு ஏற்படும். ஆனால் மாதாந்திரத் தீட்டுக்கு இடைப்பட்ட காலங்களில் பிறப்புறுப்பில் வஜினிடிஸ் எனப்படும் அழற்சியுடன் வெள்ளைப்படுதலோ அல்லது மற்ற நிறங்களில் கசிவு ஏற்பட்டாலோ, கர்ப்பக் காலத்தில் இரத்தப் போக்கைக் கண்டாலோ, மெனோபாஸுக்குப் பின்னும் பிறப்புறுப்பில் வெளியேற்றம் ஏற்பட்டால் அதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. 

முதல் காரணம் தொற்றுப் பிரச்சனை. பிறப்புறுப்பிலிருந்து வெளிப்படுவது நிறமற்ற, வாசனையற்ற, லேசான பிசுபிசுப்பான திரவம். அமிலத்தன்மை நிறைந்த இத்திரவம் பிறப்புறுப்பைத் தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கிறது. பால்வினைத் தொற்று, பூஞ்சைக் காளான் தொற்று ஏற்பட்டால் பிறப்புறுப்பில் வீக்கம், புண், கொப்புளங்கள் போன்றவை ஏற்படும். நிறமற்ற அந்தத் திரவத்தின் அமிலத்தன்மை காரத்தன்மையாக மாறி வெள்ளை, மஞ்சள், சிவப்பு, பச்சை, சாம்பல் ஆகிய நிறங்களிலும் பால், தயிர் போன்று கெட்டியாகவும் நூல் போன்றும், மீன் வாசனையோடும், நுரையுடன் அல்லது பாலாடைக் கட்டி போன்றும் வெளியாகும். இப்படி நிறம் மாறித் தொடர்ச்சியாக வெளியாகித் துர்நாற்றமும் வீசினால் முறையான சிகிச்சை எடுப்பது அவசியம்.

பாக்டீரியா, ஈஸ்ட் போன்ற தொற்றுக் கிருமிகளின் தாக்கம் ஏற்பட்டால் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலும், பிறப்புறுப்பில் புண்ணும், வலியும் ஏற்படும், சிலசமயம் அலர்ஜி போல் அரிப்பும் கூட ஏற்படும். அதனால் கர்ப்பப்பைவாய் சிவந்து தடித்து வீக்கம் ஏற்படலாம். உடலுறவின் போதும் கடுமையான வலி இருக்கும். இதனால் உடல் அசதி சோர்வு, கீழ் முதுகு வலி போன்றவை ஏற்படும்.

மேலும் புரோட்டோசோவா அல்லது வைரஸ்களால் ஏற்படும் தொற்று, இவை இல்லாமல் அதிகப்படியான டாம்பான்களின் பயன்பாடு, பாதுகாப்பற்ற உறவினால் ஏற்படும் தோல் தொற்று, பிறப்புறுப்புச் சுகாதாரம் பேணாமல் உறவு கொள்ளுதல், மெனோபாஸ் சமயத்தில் யோனியின் சுவர்கள் மெலிவதால் அரிப்பு, வறட்சி ஏற்படுதல், காசநோய், மலேரியா, மஞ்சள் காமாலை, அஜீரணக் கோளாறு, ஹார்மோன் கோளாறு, பாலுறவு நோய்கள், பிறப்புறுப்புப் புற்றுநோய், வல்வார் புற்றுநோய் இருந்தாலும், மேலும் கருத்தடை மாத்திரை மற்றும் கருத்தடை சிகிச்சை சாதனங்களை நீண்ட காலம் உபயோகிப்பதாலும், ஆண்டி பயாட்டிக்குகளை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எடுத்துக் கொள்வதாலும், கார்டிகோஸ்டிராய்டு மருந்துகள் எடுத்துக் கொள்வதாலும், அலர்ஜியாலும் பிறப்புறுப்பில் தொற்று ஏற்பட்டுப் பல நிறங்களில் பிறப்புறுப்பு வெளியேற்றம் ஏற்படலாம்.


மாதவிடாயின் போது கருப்பை எண்டோமெட்ரியத்திலிருந்து சவ்வைக் கொட்டுவதால் சிவப்பு நிறத்திலும், அதன் பின்னர் வெள்ளை அல்லது லேசான மஞ்சள் நிறத்திலும் ஏற்படலாம். பொதுவாக 21 நாட்களில் இருந்து 35 நாட்கள் வரை நபருக்கு நபர் மாதவிடாயின் காலகட்டம் மாறுகிறது. ஒரு வருடம் வரை ஒருவருக்கு மாதவிடாய் ஏற்படாமல் திடீரென ஏற்பட்டால் அது எண்டோமெட்ரியல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

பாலியல் தூண்டுதலின் போதும், கர்ப்பக்காலத்திலும் சாதாரண வெள்ளைப்படுதல் ஆரோக்கியமானதுதான். இது இளஞ்சிவப்பு, சாம்பல், பிங்க் நிறத்திலும் வெளியாகலாம். மஞ்சள் நிற வெளியேற்றம் உடலின் அதிகப்படியான உஷ்ணத்தினாலும் ஏற்படும். மஞ்சள் & பச்சை நிறத்தில் வெளியேறினால் அது பாக்டீரியா அல்லது ட்ரைகோமோனியாசிஸ் எனப்படும் பாலியல் ரீதியான தொற்றாகும். இளஞ்சிவப்பு அல்லது பிங்க் நிற வெளியேற்றம் அல்லது புள்ளிகள் பொதுவாக மாதவிடாய்க்கு முன்னும், மாதவிடாய்க்குப் பின்னும் ஏற்படும். சாம்பல் நிற வெளியேற்றம் பிவி எனப்படும் பாக்டீரியா வஜினோசிஸ் எனப்படும் தொற்றின் அறிகுறியாகும். இது 15 வயது முதல் 44 வயதுடைய பெண்களுக்கு ஏற்படுகிறது. பிறப்புறுப்பில் இருக்கும் நல்ல மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களுக்கு நடுவில் ஏற்றத்தாழ்வு ஏற்படும்போது இந்த பாக்டீரியா தொற்று நிகழ்கிறது. பிறப்புறுப்பில் அதிகப்படியான கேண்டிடா என்னும் பூஞ்சை வளரும்போது கேண்டிடியாஸிஸ் எனப்படும் ஈஸ்ட் தொற்று ஏற்படுகிறது.

இதனால் கருப்பை வாய் புற்றுநோய், கருப்பை நீர்க்கட்டிகள், நார்த்திசுக் கட்டிகள், பின்னோக்கி வளைந்த கருப்பை, கருப்பை முன்னோக்கி இறங்குதல், மலச்சிக்கல், நீரிழிவு, ரத்தசோகை ஆகியவற்றை உண்டாக்கும். கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவம் ஏற்படும், ஃபெலோபியன் குழாயில் அடைப்பு ஏற்பட்டுக் கர்ப்பக் காலத்தைச் சிக்கலாக்கும்.  இதற்கு மகளிர் மருத்துவரிடம் சிகிச்சை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் அது கர்ப்பப் பையையும் இனப்பெருக்க உறுப்பையும் சினைப்பையையும் பாதிக்கும். சிறுநீர்ப் பாதையும் பிறப்புறுப்பும் அடுத்தடுத்து அமைந்திருப்பதால் இத்தொற்று வேகமாகப் பரவும் அபாயமும் உண்டு.

பால்வினைத் தொற்றுக்காக ரத்த மாதிரியை எடுத்து வி டி ஆர் எல் பரிசோதனை செய்ய வேண்டும். வீக்கம் மற்றும் வெளியேற்றத்தைக் கண்டறிய இடுப்புப் பரிசோதனை, வெளியேற்றத்தின் மாதிரியை எடுத்து பூஞ்சையின் வளர்ச்சியை நுண்ணோக்கி மூலம் கணித்துச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பி விக்கு மெட்ரோனிடசோல் மாத்திரை 200 மி.கி ஒரு வாரத்திற்கு தினமும் மூன்று முறை கொடுக்கப்படுகிறது. நிஸ்டாடின், க்ளோட்ரிமாசோல் அல்லது மைகோனசோல் போன்ற க்ரீம்களும், களிம்புகளும், மாத்திரைகளும், ஈஸ்ட்ரோஜன் ஜெல் போன்றவையும் பயன்பாட்டில் உள்ளன.

இதிலிருந்து விடுபட வேம்பு இலைக்கஷாயம் அருந்தலாம். அரிசி களைந்த நீரைச் சுடவைத்துப் பிறப்புறுப்பைக் கழுவலாம். பாடி ஸ்ப்ரே, வாசனை சோப்பு உபயோகத்தைத் தவிர்க்க வேண்டும். ஒரு நாளைக்கு இருமுறையாவது நேப்கின்களை மாற்றவும். பொது இடங்களில் கழிவறையை உபயோகப்படுத்துவதில் எச்சரிக்கை தேவை. உள்ளாடைகளில் ஈரப்பதம் இருக்கக் கூடாது. இறுக்கமான உள்ளாடை அணியவேண்டாம். பருத்தி உள்ளாடைகளைப் பயன்படுத்தவும். சிறுநீர்கழிக்கும் ஒவ்வொருமுறையும் சுத்தமாகக் கழுவித் துடைக்கவும். நீரிழிவைக் கட்டுக்குள் வைக்கவும்.

முதல் தீட்டுக் காலத்தில் ஒரு முட்டையையும் அந்த முட்டை அளவு நல்லெண்ணெயையும் காலையில் வெறும் வயிற்றில் வாயில் ஊற்றி விழுங்கக் கொடுக்க வேண்டும். கீழா நெல்லியை அரைத்துப் பசும்பாலில் கலந்து ஒரு வாரம் காலையில் குடிக்கக் கொடுக்கலாம். கற்றாழை ஜெல்லை அருந்துவதும் நலம் பயக்கும். இதற்கான மருந்துணவுகள் தேன் நெல்லிக்காய், ஜவ்வரிசிக் கஞ்சி, வெண்பூசணி லேகியம், மணத்தக்காளியின் காயும் இலைகளும் கூட நல்ல மருந்துணவுகள்தான்.

தேன் நெல்லி :- தேவையானவை :- முழு நெல்லிக்காய்கள் - 5, வெல்லம் - ஒரு கைப்பிடி, தேன் - 1 டேபிள் ஸ்பூன்.செய்முறை:- நெல்லிக்காயில் மேற்புறமெங்கும் ஊசியால் துளையிட்டு ஆவியில் நன்கு வேகவைக்கவும். நெல்லிக்காய்கள் ஆறியபின் தேனும் வெல்லமும் கலந்து குலுக்கி வைக்கவும். மூன்று நாட்கள் வெய்யிலில் வைத்து எடுத்து  பத்து நாட்கள் நன்கு ஊறியபின் உபயோகிக்கவும்.

மணத்தக்காளிக் கீரை மண்டி :- தேவையானவை:- மணத்தக்காளிக் கீரை ஒரு கட்டு. சின்ன வெங்காயம் - 10 தோலுரித்து இரண்டாக நறுக்கவும். அரிசி களைந்த கெட்டித்தண்ணீர் - 2 கப்,தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் நைசாக அரைக்கவும்., எண்ணெய் - 2 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், வரமிளகாய் - 1 இரண்டாகக் கிள்ளி வைக்கவும்., உப்பு - 1/2 டீஸ்பூன். செய்முறை:- கீரையை நன்கு கழுவி ஆய்ந்து நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்து போட்டு சிவந்ததும், சீரகம் போட்டுப் பொறிந்ததும், வரமிளகாய் சின்ன வெங்காயம் தாளிக்கவும். ஒரு நிமிடம் வதக்கிய பின் கீரையை சேர்க்கவும்.  2 நிமிடம் கீரையை வதக்கியபின் அரிசி களைந்த கெட்டித் தண்ணீரை ஊற்றவும். கொதித்து வரும்போது சிம்மில் 5 நிமிடம் வைக்கவும். வெங்காயமும் கீரையும் வெந்தபின் உப்பு,  அரைத்த தேங்காய் அல்லது தேங்காய்ப் பால் சேர்த்து இறக்கவும். இதை சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம். சூப் போல அப்படியேயும் குடிக்கலாம்.  

4 கருத்துகள்:

 1. மிக நல்ல பயனுள்ள விழிப்புணர்வுக் கட்டுரை. கூடவே இயற்கை வைத்தியமும்...சூப்பர்

  கீதா

  பதிலளிநீக்கு
 2. உங்கள் ஊர்ப்பகுதி மண்டி என்றாலே அரிசி களைந்த நீர் oஊற்றிச் செய்வது ரொம்பப் பிடிக்கும். செய்வதுண்டு.

  இப்ப உங்கள் குறிப்பும் பார்த்துக் கொண்டேன்...மணத்தக்காளிக் கீரைக் குறிப்பு..சூப்பர்

  கீதா

  பதிலளிநீக்கு
 3. நான் அறியாத தகவல்கள் பல உள்ளன.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 4. நன்றி கீத்ஸ், ஆமாம்பா மண்டி செய்து பார்த்தீங்களா?

  நன்றி கூமுட்டை!

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்!!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...