எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 27 ஜூன், 2023

அறிந்தும் அறியாமலும் ப்ரகாஷ்ராஜ்.

 அறிந்தும் அறியாமலும் ப்ரகாஷ்ராஜ்


உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே..” எனத் தபுவின் கூந்தல் பரந்து விரிந்திருக்க, தமிழகத் தலைவரின் கவிமொழியில் ப்ரகாஷ்ராஜ் தன் இணையின் காதோரம் உச்சரிக்க, மணிரத்னத்தின் இருவர் படத்தில் ஆண்சிங்கமும் பெண்சிங்கமும்போல் இருவரும் காட்சி கொடுப்பது க்ளாசிக்.

1994 இல் கே பி யின் டூயட் படத்தில் வில்லனாக அறிமுகமாகி ஹீரோ, வில்லன், குணச்சித்திரப் பாத்திரம் என அனைத்தையும் செல்லுலாய்டில் சிற்பமாய் வார்த்தவர் ப்ரகாஷ்ராஜ். டூயட்டில் அறிமுகமானதால் தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு டூயட் மூவீஸ் எனப் பெயரிட்டிருக்கிறார். நாங்கள் சென்னையில் இருந்தபோது டூயட் படத்தை இப்போது மூடப்பட்டுள்ள ஏவி எம் இராஜேஸ்வரி தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சி பார்த்தோம்.

தயா, அழகிய தீயே, நாம், கண்ட நாள் முதல், பொய், மொழி, வெள்ளித்திரை, அபியும் நானும் ஆகியன அவர் தயாரித்த படங்கள். 2010 இல் அவர் தயாரித்த இனிது இனிது படத்தின் போஸ்டரின் பின்னால் என்னுடைய சுவாரசியமான வலைப்பூ குறிப்பு ஒன்றும் உள்ளது. என்னுடைய வலைப்பூவில் ஹாலிவுட் சினிமா பெயர்கள் கண்டுபிடிக்கும் போட்டி ஒன்றுக்குப் பரிசு வழங்குவதாக அறிவித்து வென்றவர்களுக்கு எனது முகநூல் நண்பரான ப்ரகாஷ்ராஜின் இனிது இனிது போஸ்டர் இனிது என்று போஸ்டரைப் பரிசாக அளித்து வாசகர்களைக் கலாய்த்திருந்தேன்.

பிரகாஷ்ராய் எனப்படும் ப்ரகாஷ்ராஜ் பிறந்தது மார்ச் 26 , 1965. சொந்த ஊர் பெங்களூர். தந்தை மஞ்சுநாத்ராய், தாய் ஸ்வர்ணலதா, சகோதரர் பிரசாத்ராய். 1994 இல் லலிதா குமாரியை மணந்தார். இத்தம்பதியின் மகள்கள் மேக்னா & பூஜா. இவரை 2009 இல் விவாகரத்து செய்தபின் நடன இயக்குநர் போனி வர்மாவை மணந்தார்.  இவர்களுக்கு வேதாந்த் என்றொரு மகன் உண்டு. மனைவிகளையும், மகள்களையும் விட மகன்களை உயிராய் நேசிக்கும் தந்தை.

இவரது வாழ்க்கைச் சரிதம் விகடனில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியானது. அதில் தான் உயரமானவன் அழகன் என்ற அகந்தையை லலிதகுமாரியின் அன்பு அழித்ததாகவும் அதனால் அவரை மணந்து கொண்டதாகவும், மறைந்துவிட்ட தன் மகனுக்காக லலிதகுமாரி ஆங்கிலமும் கம்ப்யூட்டரும் கற்றதும், ஒரு கட்டத்துக்குப் பின் லலிதகுமாரிக்கும் அவரது மாமியாருக்கும் ஏற்பட்ட கருத்து மோதல்களும், அதேபோல் ரசனை அடிப்படையில் லலிதகுமாரியும், பிரகாஷ்ராஜும் வேறு பட்டதும் ஒரே வீட்டில் இரு தளங்களைத் தங்களுக்குப் பிடித்தபடி அமைத்துக் கொண்டு தனித்தனியாக வசித்து வந்தது பற்றியும், தனது தாயின் மேலான ஆழ்ந்த நேசம் பற்றியும் ப்ரகாஷ் ராஜ் அந்த சுயசரிதையில் விவரித்திருந்தார். வடிவேலு, சேரன், பிரகாஷ்ராஜ் ஆகிய நடிகர்களை வெகு ஜனங்களின் மனத்துக்கு நெருக்கமாகக் கொண்டு வந்ததில் விகடனின் கட்டுரைகளுக்குப் பெரும் பங்குண்டு.

இவரது படங்களில் எனக்குப் பிடித்தவை அந்நியன், அபியும் நானும்,, மொழி, அறிந்தும் அறியாமலும், கல்கி, டூயட், வெள்ளித்திரை, என் சுவாசக் காற்றே, கில்லி, இருவர், வேட்டையாடு விளையாடு, வசூல்ராஜா எம் பி பி எஸ். முகபாவனைகளையும் உடல் மொழியையும் அதிரடியாக மாற்றக் கூடிய சிறந்த நடிகர் அவர். என் சுவாசக் காற்றேயில் வளர்ப்பு மகன் அரவிந்தசாமி அன்பாயிருக்கச் சொந்த மகனான பிரகாஷ்ராஜ் தந்தையாலே வெறுக்கப்படும் அளவு கொடுமையானவராய், சுயநலமானவராய்ச் சித்தரிக்கப்பட்டு இருப்பார்.

அந்நியன் போல் மிரட்டலான படம் அந்தப்புரம். விசாரணைக் காட்சிகளில் அந்நியனில் விக்ரம் மட்டுமல்ல ப்ரகாஷ்ராஜும் விசித்திரமான முகபாவனைகளோடு போட்டி போட்டு நடித்திருப்பார். கண்ணோரம் லேசாகச் சிரித்துக் கொண்டே வில்லனாகப் பரிமளிப்பது இவரது ஸ்பெஷல். கில்லியில் ஏய்.. ஏய் எனக் கத்துவதும், செல்லம் எனத் த்ரிஷாவைக் கொஞ்சி விளிப்பதும் கூட விநோத அழகுதான். 2008 இல் வெளியான அபியும் நானும் மிகவும் பேசப்பட்டது.

வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் ஹ்யூமர் க்ளப்பின் அங்கத்தினர் போல் பிரகாஷ்ராஜ் விதம்விதமாகச் சிரிக்கும் காட்சி அட்டகாசம். திடீர் திடீர் எனச் சிரிப்பதும் சட்டென்று முகத்தை சீரியஸாய்க் கோபக்காரராய் வைத்துக் கொண்டு கத்துவதும் அவருக்கே உரிய நடிப்புப் பாணி. இதையே வெள்ளித்திரையிலும் அமர்த்தலாகச் செய்திருப்பார். மத்திம வயதில் நடிக்க வரும் கன்னையாவின் அலப்பறைகள் அதகளம். அதை ப்ருத்விராஜ் எதிர்கொள்ளும் விதம் அமர்க்களம். கார் பார்க்கிங்கில் அந்த க்ளைமாக்ஸ் சீனில் ப்ரகாஷ்ராஜ் பிறவி நடிகனாய்ப் பட்டையைக் கிளப்பி இருப்பார்.

நானா படேகர், சாயாஜி ஷிண்டே, ப்ரான், சஞ்சய் தத், அம்ரிஷ் பூரி போன்றவர்களின் நடிப்பை ஒத்தது ப்ரகாஷ்ராஜின் நடிப்பு. சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட குணங்கள் கொண்ட கதாபாத்திரம், ரோமானிய மூக்கு, ஏறு நெற்றி,  சிறிது மிகை உணர்ச்சி கலந்த நடிப்பு, முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு பேசும் டயலாக்குகள், குணம் பிறழ்ந்த காரக்டர்களில் அவன் இயல்பானவன் இல்லை என்பதை இயல்பானது போல் கொண்டு வரும் எளிதான நடிப்பு அவருடையது. 


கேபி யின் படங்கள் என்றால் இவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. டூயட்போல் இவர் கலக்கிய இன்னொரு படம் கல்கி. கேபியின் பாணியில் ஒருவரின் வார்த்தையை இன்னொருவர் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு சீண்டும் வசனங்களை இவரும் கல்கியும் போட்டி போட்டு உச்சரிப்பது படத்திற்கு நல்ல வலு சேர்த்தது. மனைவி கீதாவை சைக்கோபோல் துன்புறுத்தி விலக்கி அப்பாவி ரேணுகாவை மணப்பார். கல்கி இவருடன் பழகி வாடகைத் தாய் போல் கீதாவுக்கு இவரது குழந்தையைப் பெற்றுக் கொடுப்பார். இப்படி நடக்குமா என்ற கதைச் சிக்கலை நாம் விட்டு விடுவோம். ஆனால் ஆண், பெண், கணவன், மனைவிக்கிடையே நடக்கும் ஈகோ க்ளாஷை கேபியும் ப்ரகாஷ்ராஜும் துல்லியமாகக் காட்சிப்படுத்தி இருந்தார்கள். அவ்வளவு ஈகோ படைத்த மனிதன் தனக்கு எந்த விதத்திலும் சமமில்லாத, சம்பந்தமில்லாத அந்நியப் பெண்ணான கல்கியிடம் எந்த விளைவுகளையும் யோசிக்காமல் தன்னை இழப்பானா என்பது எனக்கு ஏற்பட்ட மில்லியன் டாலர் கேள்வி.

சந்தோஷ் சுப்ரமணியத்தில் ஜெயம் ரவியின் ஸ்ட்ரிக்ட் தந்தையாக வித்யாச ரோல். திருவிளையாடல் ஆரம்பத்தில் என்னம்மா கண்ணு என்று ரஜனி, சத்யராஜ் ஸ்டைலில் தனுஷும் பிரகாஷ்ராஜும் பாடும் ரீமேக் பாடல் சுவாரசியம்.  தலைநகரத்தில் திருந்தி வாழும் சுந்தர்சியைத் திரும்ப ரவுடியாக்க முயலும் காவல் ஆய்வாளர் பாத்திரம், ஆனால் வேட்டையாடு விளையாடுவில் நேர்மையான போலீஸ் அதிகாரி! ஆனால் அவர் மகள், அவர் மற்றும் அவர் மனைவி ஆகியோர் வில்லன்களால் கொடூரமாகக் கொல்லப்படுவார்கள்.

பீமா படத்தில் விக்ரமுடன் கேங்ஸ்டர் பாத்திரம். ஆசை படத்தில் மனைவியின் தங்கை சுவலெட்சுமியை மணக்கத் தன் மனைவியையே வித்யாசமான முறையில் கொல்லும் விபரீத வில்லன், எம் குமரன், சன் ஆஃப் மகாலெக்ஷ்மியில் மனைவியிடம் முன்கோபத்துடன் வெறுப்பு, விறைப்பு, வீறாப்புக் காட்டிப் பிரியும் கணவன் பாத்திரம் எனப் பல்வேறு பட்ட கதாபாத்திரங்களில் நமக்கு அலுப்பும் சலிப்பும் ஏற்படுத்தாமல் அநாயாசமாக நடித்துள்ளார்.

அறை எண் 305 இல் கடவுள் படத்தில் விடுதிகளில் தங்கும் இளைஞர்களின் ப்ரசனைகளுக்குத் தீர்வளிக்கும் கேலக்ஸி பாக்ஸ் வைத்திருக்கும் வித்யாசமான கடவுள் பாத்திரம், முடிவில் திருடு போய்த் திரும்பிய தன் கேலக்ஸி பாக்ஸைத் தன் சட்டைப் பையில் செயின் கொண்டு பிணைத்திருப்பது பூலோக நகைச்சுவை.

என்னை மிகவும் அசத்திய படம் அறிந்தும் அறியாமலும். எடக்கு நாட்டானான நவ்தீப் சமீக்ஷாவைக் காதலிக்க அவளைக் காடையனான குட்டி எனப்படும் ஆர்யா எதிர்பாராமல் சுட்டுவிடுகிறான். குட்டியை நவ்தீப் போலீசிடம் காட்டிக் கொடுக்கக் குட்டியின் கேங் நவ்தீப்பைப் பிடிக்க வருகிறது. ஆதி எனப்படும் ப்ரகாஷ்ராஜின் வளர்ப்பு மகனான குட்டி நவ்தீப் ஆதியின் சொந்த மகன் என்பதைக் கண்டுபிடித்துச் சொல்லுமிடமும், நவ்தீப்பின் கண்களைப் பார்த்து ப்ரகாஷ்ராஜ் லெக்ஷ்மியின் அதே கண்ணு உனக்கு”” என்று உருகுவதும். இவர்களுடன் ஒட்டாமல் விலகிச்செல்லும் நவ்தீப், ஆதி காட்டிய தன் தாயின் சங்கிலியை மட்டும் யாருக்கும் தெரியாமல் எடுத்துச் செல்வதும், அதைக் குட்டி ஆதியிடம் தெரியப்படுத்தும் இடத்தில் டயலாக் இல்லாமல் ம்ம் என்று கையை மட்டும் நீட்டிச் சொல்லிக் காட்டுமிடமும் அழகு.

தன் மனைவியின் வீட்டு ஆட்களைப் பார்த்து ஆதி சொல்லும் வசனம் என்னை அதிகம் யோசிக்க வைத்தது “ இந்த உலகத்துல உங்களுக்கெல்லாம் கெட்டவன்னு சுட்டிக்காட்ட ஒருத்தன் வேண்டியிருக்கு. அதோ போறான் பாரு கெட்டவன் என்று சொல்லும்போது உங்களை எல்லாம் நல்லவங்களா நீங்க காட்டிக்க விரும்புறீங்க. அப்பிடித்தான் என்னையும் லெக்ஷ்மிகிட்ட அவன் கெட்டவன் அவன் கெட்டவன்னு சொன்னீங்க. ஆனா அவ ஒருத்திதான் நான் நல்லவன்னு நம்புனா. இப்ப என் புள்ள கிட்டயும் நான் கெட்டவன்னு சொல்லி ஒதுங்க வைச்சிட்டீங்க  

திரைப்பட இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும், தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் ஏன் அரசியல்வாதியாகவும் அறியப்பட்டவர் ப்ரகாஷ்ராஜ். கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம், ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் நடித்துள்ளார். 398 படங்களில் நடித்துள்ளாராம்! 300 மேடை நிகழ்ச்சிகளிலும், 2,000 தெரு நாடக நிகழ்ச்சிகளையும் நடத்தி உள்ளாராம் !.

ஐந்து தேசிய விருதுகள், எட்டு நந்தி விருதுகள், எட்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், ஐந்து ஃபிலிம்ஃபேர் விருதுகள் , தென்னிந்திய விருதுகள், நான்கு SIIMA விருதுகள், எட்டு cineMAA விருதுகள், மூன்று விஜய் விருதுகள் என வாங்கிப் பிரமிக்க வைத்தவர். இவற்றில் இருவர், அந்தப்புரம், காஞ்சிவரம் ஆகிய படங்களுக்கான விருதுகளும் அடங்கும்.

சிங்கம் ஹிந்திப் படத்துக்காகக் கன்னடப் பிரியர்களால் மன்னிப்புக்கேட்கக் கோரப்பட்ட பிரகாஷ்ராஜ்தான் கர்நாடகா, சித்ரதுர்க்கா மாவட்டத்தில் உள்ள பண்ட்லரஹட்டி கிராமத்தைத் தத்தெடுத்து வளர்ச்சி பெறச் செய்து வருகிறாராம். வாழ்க அவரின் நல்மனம், வளர்க அவரின் சேவைகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...