எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 1 ஜூன், 2023

பாஸிகர் ஓ பாஸிகர்...

பாஸிகர் ஓ பாஸிகர்… 


ஷாருக்கான், கஜோல், ஷில்பா ஷெட்டி நடித்த விறுவிறுப்பான படம். பாஸிகர் என்றால் தமிழில் சூதாடுபவன். தன் வாழ்க்கையையே பிணையாக வைத்துச் சூதாடும் ஷாரூக்கானை மையப்படுத்திய படம் இது. இதில் நாயகன் வில்லன் என இரு பாத்திரங்களிலும் நடித்து நம்மை மிரள வைத்திருப்பார் ஷாரூக். 

நுக்கட், நயா நுக்கட்டில் பார்த்த ஷாரூக்கா இது என ஆச்சர்யமாக இருந்தது. முதன் முதலாக கஜோலின் சுட்டித் தனமான நடிப்பும் இதில் அதிரடிதான். சிரித்துச் சிரித்து நம்மை ஒரு வழி பண்ணி விடுவார் ஷில்பா ஷெட்டி.  யே காலி காலி ஆங்கே என்று அந்த நவ்வாப்பழக் குண்டுக் கண்களும் நம்மை மயக்கும். இதன் கதை, திரைக்கதை, காட்சி அமைப்பு, இசை, நடிப்பு, எடிட்டிங் எல்லாமே பர்ஃபெக்ட்.

அதிரடி திரில்லர் என்றாலும் காதலிகளையே கொல்லத் துணியும் அதிரடிக் கதை. தன் குடும்பத்தை அழித்த வில்லனின் மகள்களான சீமா, பிரியா இருவரையும் அடுத்தடுத்துக் காதலிக்கிறான் ஹீரோ. அதில் முதலாமவளைக் கொலை செய்து இயற்கை மரணம் போல் ஒரு தோற்றம் உண்டாக்குகிறன். இரண்டாமவளும் காதல் வயப்படுகிறாள். ஆனால் தன் தங்கையின் மரணம் அவளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துவதால் கரண் சக்ஸேனா என்னும் தன் போலீஸ் நண்பர் மூலம் இன்வெஸ்ட் செய்துகொண்டே இருக்கிறாள். 

முதலாமவளின் கொலையில் துப்புத் துலங்கும் போதெல்லாம் உண்மையைச் சொல்ல வரும் சீமாவின் நண்பர்களான ரவியும் அஞ்சலியும் கொலையாகிறார்கள். முடிவில் உண்மை வெளியாகிறது. 

அஜய் ஷர்மாவின் தந்தையின் தொழிலில் பார்ட்னராயிருந்தவர் மதன் சோப்ரா. அஜயின் தந்தையிடமிருந்து ஒரு தருணத்தில் சோப்ரா கம்பெனியைப் பறித்துக் கொள்கிறார். இந்த நம்பிக்கைத் துரோகத்தால் அஜய் ஷர்மாவின் (ஷாரூக்கின்) தந்தை ( ஆனந்த மகாதேவன்) , தாய்,( ராக்கி குல்சார்),  தங்கை ஆகியோருக்கு நிகழ்ந்த துயரங்கள் அனைத்தும் சிறுவனான ஷாரூக்கின் மனத்தில் இரத்தக் களறியாகப் படிகிறது. 

கார் ரேஸில் விருப்பமுள்ளவர் சோப்ரா. அவருடன் விக்கி மல்ஹோத்ரா என்பவர் கலந்துகொள்ளும்போது அவருக்குப் பதிலாக அஜய் கலந்துகொண்டு தான் தோற்று சோப்ராவை ஜெயிக்க வைத்து அவரைக் கவர்ந்து விடுகிறார். இப்போது அஜய் இளைஞனாகி விட்டதால் சோப்ராவுக்கு அவனை அடையாளம் தெரிவதில்லை. மேலும் சோப்ராவை எல்லா விதத்திலும் கவரும் இவர் ஒரு தருணத்தில் தன் தந்தையின் கம்பெனியை அவரிடமிருந்து சோப்ரா பறித்த அதேவிதத்தில் பறித்துத் தன் வசம் ஆக்குகிறார். முடிவில் சோப்ரா, பிரியாவுக்கு உண்மை தெரிகிறது. 

க்ளைமேக்ஸில் அஜய் எதிரியைக் கொல்ல இரத்தம் வழிய நகர்ந்து நகர்ந்து நெருங்குவார். அப்போது தாய் ஓடி வந்து தடுக்க முடிவில் ஒரு வாக்கியம் சொல்வார். ” அம்மா இதெல்லாம் இரத்தம் இல்ல. நீ எனக்கு ஊட்டி வளர்த்த தாய்ப்பால்தான் இரத்தமா வடியுது” அந்த சமயம் அவரின் நடிப்பைப் பார்த்துக் கண்கள் கலங்கியது உண்மை. 

பொதுவாக ஹிந்திப் படங்களில் அதிரடி வசனங்கள், அமர்க்களக் காட்சிகள், ஆரவாரப் பாடல்கள் இடம்பெற்றிருக்கும். இதிலும் அப்படித்தான். ”பாஸிகர் ஓ பாஸிகர்” பாடலும். ”யே காலி காலி ஆங்கே .. யே கோரே கோரே கால்” குமார் ஷானுவின் குரலுக்காக சிறந்த ஆண் பின்னணிப்பாடகர் விருதைப் பெற்றுத் தந்த பாடல். சுப்னா பி நஹி ஆதா, ஏய் மேரே ஹம்ஸஃபர், தேரா செஹ்ரே பே ஆகிய பாடல்கள் மக்களின் மனம் கவர்ந்தன. 

இதன் கதை எ கிஸ் பிஃபோர் டையிங் படத்தைத் தழுவியது என்று சொல்கிறார்கள். இயக்கம் அப்பாஸ்-மஸ்தான்.கதை ராபின் பட். தயாரிப்பு கணேஷ் ஜெயின், சம்பக் ஜெயின், பாடல்கள் இசை அனுமாலிக். வீன்ஸ் பிக்சர்ஸ் 1993 இல் வெளியானது.  40 மில்லியன் முதலீட்டில் தயாரிக்கப்பட்டு 320 மில்லியன் வசூலித்தது மெகா வெற்றிதானே. 

அனில் கபூர், சல்மான்கான், அக்ஷய் குமார் ஆகியோர் இக்கதையின் நாயகனாக நடிக்க மறுக்க ஷாரூக்தான் இதை ஒப்புக் கொண்டார்.  ஷாரூக்கும் கஜோலும் அதன் பின் வெற்றிகரமான திரை ஜோடிகள் ஆனார்கள். ஷாரூக்கும், அனுமாலிக்கும் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார்கள். இன்னும் இரு விருதுகளும் வென்றுள்ளது இப்படம். 

ஹிந்திப் படத்திற்கென்று சில ஃபார்முலாக்கள் உண்டு. முடிவில் கட்டாயம் ஹீரோ மற்றும் வில்லன்களின் ரத்த ஆறு பாய வேண்டும். அதன் அட்சரம் பிசகாமல் எடுக்கப்பட்ட படம் இது. எனவே 30 ஆண்டுகளுக்குப் பிறகும் மக்களின் நினைவில் தங்கி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...