எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மனத்திரையில் மின்னல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனத்திரையில் மின்னல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 10 செப்டம்பர், 2026

எதிர்நீச்சல் சௌகார் ஜானகி

எதிர்நீச்சல் சௌகார் ஜானகி


கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கு மேலாகத் திரையுலகில் கோலோச்சி வரும் சௌகார் ஜானகிக்கு வயது 94. எப்போதும் இளமையாக உணரும் அவர் இந்த வயதிலும் டிவி தொடர்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு ஜெயித்த பெண்மணிகளில் இவரை முதல் இடத்தில் வைக்கலாம்.

டிசம்பர் 12, 1931 ல் அப்போதைய மெட்ராஸ்  ராஜமுந்திரியில் பிறந்தார். பெற்றோர் வெங்கோஜி ராவ், சசி தேவி. இவரது தங்கை கிருஷ்ணகுமாரியும் பிரபல நடிகைதான். 1947 இல் சங்கரமாஞ்சி ஸ்ரீனிவாசராவ் என்பவரை மணந்தார். மூன்று குழந்தைகள். 1949ல் இருந்து தற்போது வரை நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி எனக் கிட்டத்தட்ட 400 படங்கள்.

இவர் மட்டுமல்ல இவருடைய பேத்தி வைஷ்ணவியும் மிகச் சிறந்த நடிகைதான். இவர் முதலில் நாடக நடிகையாகத்தான் அறிமுகமானார். ஒரு பேட்டியில் குழந்தைகளுக்குப் பால் வாங்க வேண்டியே தான் நடிக்க வந்ததாகக் குறிப்பிட்டு இருப்பார். அவ்வளவு போராட்டம் நிறைந்த மணவாழ்க்கையில் இருந்து வெளியேறி இவர் எதிர்நீச்சல் போட்டுத் தனியாகக் குழந்தைகளை வளர்த்து இன்றும் தன்னம்பிக்கைப் பெண்ணாக மிளிர்கிறார்.

சனி, 22 ஆகஸ்ட், 2026

மக்கள் திலகம் எம்ஜிஆர்

 மக்கள் திலகம் எம்ஜிஆர்


மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்.. உள்ளம் என்றொரு ஊர் இருக்கும். அந்த ஊருக்குள் எனக்கொரு பேரிருக்கும்.. கடமை அது கடமை.. எத்தனை எத்தனையோ நூறு பாடல்கள் இருந்தும் இப்பாடல்தான் மக்கள் திலகம் எம்ஜியாரை மக்கள் தலைவனாக வடிவமைத்த பாடல். நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் என்பதோடு முதன்மையாகத் தாயைத் தெய்வமாகப் போற்றியவர், மக்களிடம் பரிவு கொண்டவர், மனிதாபிமானம் மிக்கவர், விருந்தோம்பல் மற்றும் கொடைக்குணம் கொண்டவர் எம்ஜியார்.

கொடுத்துச் சிவந்த கரம்,  கலியுகக் கடவுள்,  பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர்,  இதய தெய்வம்,  வாத்தியார்,  இதயக்கனி என்றெல்லாம் புகழப்படும் திரு எம் ஜி ராமச்சந்திரன் தமிழகத் திரைப்பட உலகையும் தமிழக அரசியலையும் ஒருசேரக் கலக்கியவர். இவருக்கு எத்தனையோ பட்டங்கள் இருந்தாலும் திரு.தமிழ்வாணன் அவர்கள் வழங்கிய மக்கள் திலகம் என்ற பட்டமே மிகப் பொருத்தமானதாக தோன்றுகிறது. நடிகர்களில் ஆலயம் கட்டப்பட்டது என்றால் அது முதலில் எம்ஜிஆருக்கு என்றே சொல்ல வேண்டும். இன்றும் இருக்கும் அந்த ஆலயம் திருநின்றவூர் நத்தம்மேடு கிராமத்தில் உள்ளது. கலைவாணன் சாந்தி தம்பதியினர் எம்ஜிஆருக்காகக் கோவிலை அமைத்துக் கும்பாபிஷேகம் செய்து உள்ளார்கள்.

சனி, 8 ஆகஸ்ட், 2026

வசந்த மாளிகை வாணிஸ்ரீ

வசந்த மாளிகை வாணிஸ்ரீ


"இனியவளே என்று பாடி வந்தேன், மயக்கம் என்ன மௌனம் என்ன, பால் போலவே வான்மீதிலே யார் காணவே நீ காய்கிறாய்,கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம், முல்லைப்பூ பல்லக்குப் போவதெங்கே, ஓ மைனா ஓ மைனா,  ஜனகனின் மகளை மணமகளாக, மேளதாளம் கேட்கும் காலம், என் ராஜாவின் ரோஜா முகம்" இப்பாடல்களில் நடித்த வாணிஸ்ரீக்கு 77 வயதாகிவிட்டதாம். இத்தனைக்கும் தமிழில் 39 படங்களே நடித்திருக்கிறாராம்.

அழகு பொழியும் முக லாவண்யம், ஓங்குதாங்கான உருவம் , பளிச்சென்று பெரிய கண்கள், வில் போன்ற புருவங்கள், தீர்க்கமான நாசி, பளபள கன்னங்கள், மலர்ச்சியான புன்சிரிப்பு, உயரத் தூக்கிப் போட்ட பன் கொண்டை, லிப் க்ளாஸ் போட்ட ரோஜா உதடுகள், மாடர்ன் உடைகளிலும் புடவையிலும் கூடக் கவர்ச்சிகரமாக இருப்பார், பரிபூரண அழகி. சிவாஜியின் ஜோடிகளில் மிகப் பொருத்தமானவர். இவர் நடித்ததில் எனக்கு பிடித்த படங்கள் சிவகாமியின் செல்வன், வாணி ராணி, வசந்த மாளிகை, உயர்ந்த மனிதன்.

சனி, 4 ஜூலை, 2026

சின்னத்தம்பி பிரபு


என் காதலே என் காதலே என்ன செய்யப் போகிறாய், மழைவருது மழை வருது குடை கொண்டு வா, எனக்கெனப் பிறந்தவ ரெக்கை கட்டிப் பறந்தவ, குண்டு ஒண்ணு வைச்சிருக்கேன், கத்திரிக்காய் குண்டுக் கத்திரிக்காய், குளிச்சா குற்றாலம் கும்பிட்டா பரமசிவம், அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி, மழையின் துளியில் லயம் இருக்குது, பூவே இளைய பூவே, ஏதோ மோகம் ஏதோ தாகம், மாறுகோ மாறுகோ, பூங்காற்று உன் பேர் சொல்ல எனக் காதலும் காமெடியும் கலந்தவை பிரபுவின் படப்பாடல்கள்.

 

25, டிசம்பர் 1956 இல் பிறந்தார். நடிகர் திலகத்தின் இளைய மகன். பரந்த முகம். அகண்ட நெற்றிநிறைந்த தலைமுடி கன்னக்குழி, நிறைவான புன்னகை எப்போதும் ஹை எனர்ஜி லெவலில் இருப்பது இவரது ஸ்பெஷாலிட்டிஜாலி பால். தந்தையின் புகழ் விசிட்டிங் கார்டாகப் பயன்பட்டாலும் அதையும் மீறித் தன்னை நிலை நாட்டி ஜெயித்தவர்.

வெள்ளி, 9 ஜனவரி, 2026

கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி

கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி


 

நான் பார்த்ததிலே, தொட்டால் பூ மலரும், ஜவ்வாது மேடையிட்டு, உள்ளம் என்றொரு கோயிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா, நமது ராஜ சபையிலே ஒரே சங்கீதம், பாலும் பழமும் கைகளில் ஏந்தி, ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் என எத்தனை எத்தனை இதயம் கவர்ந்த பாடல்கள், கன்னடத்துப் பைங்கிளி அபிநய சரஸ்வதி எனப்படும் சரோஜாதேவி அவர்களின் நளினமான நடிப்பிலே.

ராதாதேவி கவுடா எனப்படும் சரோஜாதேவி ஜனவரி 7, 1938, பெங்களூருவில் பிறந்தார். தந்தை பைரப்பா, தாயார் ருத்ரம்மா, நான்கு சகோதரிகள் உண்டு. 17 வயதில் நடிக்க வந்தார். கணவர் பெயர் ஹர்ஷா. 1967 மார்ச்சில் திருமணம். கணவர் 1986 இல் மறைந்தார். இவர்களுக்கு இரு குழந்தைகள் கௌதமராமச்சந்திரன், இந்திரா ஆகியோர். ஜூலை 14, 2025 இல் தனது 87 ஆம் வயதில் மறைந்தார்.

திங்கள், 15 டிசம்பர், 2025

சகலகலா வல்லவர் கமல்ஹாசன்

சகலகலா வல்லவர் கமல்ஹாசன்


ஜெர்மனியின் செந்தேன் மலரே, உன்ன விட, இஞ்சாருங்கோ, சுவாசமே, என்னோடு காதலென்று, ஒரே நாள் உனை நான், அந்திமழை பொழிகிறது, எங்கேயும் எப்போதும், சுந்தரி நீயும் சுந்தரன் நானும், இதழில் கதை எழுதும் நேரமிது, சிப்பி இருக்குது, மாயா மச்சீந்த்ரா, காதலா காதலா இன்னும் பல நூறு பாடல்கள் சகலகலா வல்லவனான கமல் நடிப்பில் நாங்கள் மயங்கிய பாடல்கள்.  

பிறந்தது நவம்பர் 7, 1954. மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் தலைவர். 4 தேசிய விருது, 10 தமிழக அரசு திரைப்பட விருதுகள், 19 ஃபிலிம்பேர் விருதுகள், பத்மபூஷண், பத்மஸ்ரீ விருதுகள், கலைமாமணி, செவாலியே, கௌரவ முனைவர் பட்டம், மேலும் உலகநாயகன், ஆஸ்கார் நாயகன் எனப் புகழப்படும் இவரைப் போத்தீஸ் சுவரிலும் பிக் பாஸ் வீட்டிலும் காணப் பிடிப்பதில்லை.

திங்கள், 3 நவம்பர், 2025

சம்சாரம் அது மின்சாரம் மனோரமா

 சம்சாரம் அது மின்சாரம் மனோரமா


நடிப்புக்காகத் தன்னையே நேர்ந்து கொண்டவர் மனோரமா. அண்ணா, எம்ஜியார், என் டி ஆர், கருணாநிதி, ஜெயலலிதா என ஐந்து முதல்வர்களுடன் நடித்த பெருமைக்குரியவர். பள்ளத்தூரில் வசித்த காரணத்தால் ஆச்சி எனப் பிரியமாக அனைவராலும் அழைக்கப்பட்டவர். நாயகி, துணை நாயகி, நகைச்சுவை நாயகி எனக் கிட்டத்தட்ட 1500 படங்களிலும் 5000 க்கு மேற்பட்ட நாடகங்களிலும் நடித்த சாதனை நாயகி.

1937 மே 26 இல் பிறந்த இவர் 2015 அக்டோபரில் தனது 78 ஆவது வயதில் மறைந்தார். இவருடைய பெயர் கோபிசாந்தா. இவரது கணவர் எம். எஸ். இராமநாதன். மகன் பூபதி. மருமகள் மற்றும் தனது மூன்று பேரக்குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்தார். தனது பன்னிரெண்டாவது வயதிலிருந்து நாடகங்களில் மனோரமா என்ற பெயரில் நடிக்கத் தொடங்கினார். முதலில் எஸ் எஸ் ஆருடன் நடித்திருக்கிறார். ஏன் எம் ஜி யாருடனே ஜோடியாகத் தன் முதல் படத்தில் நடித்துள்ளார். ஆனால் அது வெளிவரவில்லை.

ஞாயிறு, 21 செப்டம்பர், 2025

சிறை இராஜேஷ்

சிறை இராஜேஷ்


”ஆவாரம்பூவு ஆறேழு நாளா நீ போகும் பாதையில் பூத்திருக்கு. ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்தை. சேர்த்துச்சோ சேரலையோ செவத்த மச்சான் நெத்தியிலே.. பட்டுவண்ண ரோசாவாம் பார்த்த கண்ணு மூடாதாம். பாசம் என்னும் நீர் எறைச்சு ஆசையிலே நான் வளர்த்தேன். நான் பாடிக்கொண்டே இருப்பேன் உன் பக்கத்துணை இருப்பேன். என் ஜென்மம் இருக்கும் வரை என் ஜீவன் காக்கும் உனை..”என்ற உயிர்த்துடிப்பான பாடல்கள் இவரது படங்களில் இடம்பெற்றிருக்கும்.

நடிப்புத் துறையில் 50 ஆண்டுகள் 150 படங்கள். அவள் ஒரு தொடர்கதை, கன்னிப் பருவத்திலே, அறை எண் 305 இல் கடவுள், ஆட்டோகிராஃப், ஒரு கல் ஒரு கண்ணாடி, தனிக்காட்டு ராஜா, தீனா, நிலவே மலரே, மெட்டி, ரமணா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜி, ஜெய்ஹிந்த் இவற்றோடு கமலுடன் விருமாண்டி, சத்யா, மகாநதி என்று மூன்று படங்களில் நடித்துள்ளார். இதில் இரு படங்களில் நேர்மையான காவலராக வருவார்.

செவ்வாய், 2 செப்டம்பர், 2025

தில்லானா மோகனாம்பாள் பத்மினி

தில்லானா மோகனாம்பாள் பத்மினி


”உன்னழகைக் கன்னியர்கள் சொன்னதனாலே, முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே, பச்சைக் கிளி பாடுது, மன்னவன் வந்தானடி தோழி, மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்” இப்பாடல்களைக் கேட்கும்போது எதுகை, மோனை, சந்தலயம் போல் சிவாஜியும் பத்மினியும் நம்முள் கலந்து நிற்பார்கள்.

திருவனந்தபுரத்தில் பூஜாப்புர பகுதியில் பிறந்தவர். தந்தை தங்கப்பன், தாய் சரஸ்வதி. ஜூன் 12, 1932 இல் பிறந்தார். செப்டம்பர் 24, 2006 இல் மறைந்தார். இவரது சகோதரிகள் லலிதா, ராகினி, மூவருமே புகழ் பெற்ற நடனமணிகள் மற்றும் நடிகைகள். இவர்கள் திருவிதாங்கூர் சகோதரிகள் என்று அழைக்கப்பட்டார்கள். நடிகை ஷோபனா இவரது அண்ணன் மகள். இவரது கணவர் பெயர் ராமச்சந்திரன். ஒரே மகன் பெயர் ப்ரேம் ஆனந்த். பத்மினி அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் பத்மினி ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் என்ற பெயரில் நடனப் பள்ளியை நடத்தி வந்தார்.

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2025

கவலை இல்லாத மனிதன் சந்திரபாபு

 கவலை இல்லாத மனிதன் சந்திரபாபு


 

”பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே.. தங்கச்சிலை போல் வந்து மனதைத் தவிக்க விட்டாளே.. குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே தங்கமே உன்னைக் கண்டதும் நெஞ்சம் பொங்குது தன்னாலே.. கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே.. தனியா தவிக்கிற வயசு.. இந்தத் தவிப்பும் எனக்குப் புதுசு..தடுக்காதே என்னைத் தடுக்காதே.”. என்றெல்லாம் கூடக் காதலில் உருகிப் பாடியவர் சந்திரபாபு என்று பார்க்கும்போது ஆச்சர்யமாகத்தான் இருந்தது. ஆனால் பொருத்தமாகவும் இருந்தது.

 

ஏனெனில் சந்திரபாபுவின் சோகப் பாடல்கள், தத்துவப் பாடல்கள்தான் அநேகம் ஹிட் ஆகி இருக்கின்றன. குமார ராஜாவில் “ பிறக்கும் போதும் அழுகின்றாய், இறக்கும் போதும் அழுகின்றாய்.. ” என மந்தை மனிதர்களை எள்ளியவர். ஏவி எம்மின் சகோதரி என்ற படம் ஹிட்டாகக் காரணமே ”நான் ஒரு முட்டாளுங்க.. ரொம்ப நல்லாப் படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க” என்ற பாடல்தானாம்!

ஞாயிறு, 25 மே, 2025

நெஞ்சில் ஓர் ஆலயம் தேவிகா

 நெஞ்சில் ஓர் ஆலயம் தேவிகா


”நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய், நேற்றுமுதல் ஓர் நினைவுதந்தாய், நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ இன்றுமுதல் நீ வேறோ நான் வேறோ, நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா, கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே கண்டபோதே சென்றன அங்கே, நான் என்ன சொல்லி விட்டேன் நீ ஏன் மயங்குகிறாய்.. பால் இருக்கும் பழம் இருக்கும் பசி இருக்காது, அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்” என்று எத்தனை தேவிகாவின் பாடல்கள். அதுவும் பி சுசீலா, பி பி ஸ்ரீனிவாஸின் சந்தனக் குரலில், எம் எஸ் வியின் இசையில், கண்ணதாசனின் வரிகள் நம்மைக் கிறங்கடிக்கும்.

 

சிறிது புஷ்டியான உடல்வாகு கொண்ட தேவதை தேவிகா. விஜயகுமாரி போல் பரந்த முகம். பெரிய அகலமான கண்கள். குட்டியான உதடுகள். செதுக்கி வைத்த மூக்கு

மீடியமான உயரம். முழங்கையைத் தாண்டிய ஜப்லா ரவிக்கை. அப்ளிக் வேலை செய்த பாப்ளின் ரவிக்கை, எம்பிராய்டரி புடவைகள், சரோஜாதேவி மாதிரி ரிப்பன் வைத்துப் பின்னிய கூந்தல்! எடுப்பான நீள கோபிப் பொட்டு.

வெள்ளி, 2 மே, 2025

தேன் பாடல்கள்: மாதங்களும் வாரங்களும்

 தேன் பாடல்கள்: மாதங்களும் வாரங்களும்

கலைஞர் ஒரு அரசியல் கூட்ட சுற்றுப் பயணமொன்றில் ஒரு ஊருக்கு  வர தாமதமான போது “ மாதமோ சித்திரை மணியோ பத்தரை உங்களுக்கோ நித்திரை எனக்கோ யாத்திரை “ என்று கூறிக் கூட்டத்தை நான்கே வார்த்தைகளில் கலகலப்பூட்டிச் சென்றதாக உறவினர் ஒருவர் சொல்லக் கேள்வி. இந்தச் சித்திரை மிகப் பிடித்துப் போனதால் மாதங்கள் வாரங்கள் என எனக்குப் பிடித்த சில தேன் பாடல்கள் உங்களுக்காகவும் இங்கே.

சுஜாதா சொன்னது போல சினிமா ஒரு கனவுத் தொழிற்சாலை. தமிழ் சினிமாவில் பாடல்கள்தான் அதன் உற்பத்தித் தரத்தின் அளவுகோல். பாடல் ஹிட்டாகி படம் சொதப்புவதும் உண்டு

சித்திரைச் செவ்வானம் பாடல் படமாக்கப்பட்டவிதம் சொதப்பல். கவிதாவும் முத்துராமனும். ஆனால் கவிதா பயந்து ஒதுங்கி நம்மையும் பதட்டப்பட வைத்திருக்கிறார் காட்சியமைப்பில். கெமிஸ்ட்ரி பிசிக்ஸ் எல்லாம் வொர்க்கவுட் ஆகலை போல. சித்திரை மாதம் பௌர்ணமி நேரம். வளர்ந்த குழந்தையைப் போலிருக்கும் விஜயாம்மா நடிகர் திலகத்துடன் நடித்த அழகுப் பாடல்"பூமாலைகள் உன் தோளில் விழுந்து ஊரெங்கும் பேர் பாடும் நன்னாளிலே பாமாலைகள் பல்லாக்கு வரிசை ஒன்றல்ல  பலகோடி உன் வாழ்விலே” ஈகோ இல்லாத காதல். சித்திரை மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன் என அன்பைத் தேடி சிவாஜியும் ஜெயாம்மாவும் பாடுவார்கள்.

செவ்வாய், 15 ஏப்ரல், 2025

திரையில் பெண்கள்


மார்ச் 8 பெண்கள் தினம். இயல்வாழ்விலும் திரையுலகிலும் பெண்களின் நிலை இருவேறு துருவமாகத்தான் இருக்கிறது. திரையிலும் உத்தமப் பத்தினிப் பெண்கள், கொடூர வில்லிகள், குடும்ப ஸ்த்ரீகள், கேளிக்கை நடனப் பெண்கள், கிளாமர் இளம் கதாநாயகிகள், குத்தாட்ட ஸ்பெஷலிஸ்டுகள் என எக்ஸெண்ட்ரிக் நிலைமை. 
பெண்ணியம் வீறு கொண்டு எழுந்து, எழுச்சியான பெண்கள் தினம் எல்லாம் கொண்டாடப்பட்டு, ஒரு நூற்றாண்டுக்குப் பின்னரும் திரையில் பெண்கள் சித்தரிக்கப்படும் விதம் விநோதம். 

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பமாயிற்று செல்லுலாயிட் பிம்பங்களின் ஆட்சி. இருபது வருடங்கள் பேசாப்படம் அதன் பின்பேசும் படமாக வந்து ஒரு நூற்றாண்டுக்குள் இந்தியர்களின் வாழ்விலும் செல்ஃபோனிலும் புகுந்து விட்டது.

வியாழன், 20 மார்ச், 2025

காதல் கெமிஸ்ட்ரி

காதல் கெமிஸ்ட்ரி


நாட்காட்டியில் இருக்கும் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு விசேஷ நாளாக அறிவித்து அதை வணிகமயமாக்கும் முயற்சியில் மேற்குலகம் ஈடுபட்டிருக்கிறது. தந்தையர் தினம், அன்னையர் தினம், காதலர்தினம் என்று. அந்த வணிகத்தில் அதிகம் கொள்முதல் ஆவது காதலர் தினத்தில்தான். உலகெங்கும் மில்லியன் கணக்கில் புறாக்கள், சிறகுள்ள தேவதைகள் கொண்ட காதலர்தின வாழ்த்து அட்டைகளும், சிவப்பு இதயங்களும் ( சாக்லேட்டுகள் ) சிவப்பு ரோஜாக்களும் , பரிமாறிக்கொள்ளப்படுவது அன்றுதான். அதை ஒட்டி ஒரு வாரம் விழாக்கோலம்.

ஐயன்மீர் காதல் என்பது என்ன என்று கேட்டார் ஜேகே. காதல் என்பது எதுவரை. ? கல்யாணகாலம் வரும்வரை என்ற சந்திரபாபு பாட்டு கேட்டிருக்கலாம். காதல் என்பது கல்யாணம் வரைதானா. அதற்குப் பின் அது அழிந்து போய்விடுகிறதா. ? ரோமியோ ஜூலியட், க்ளியோபாட்ரா மார்க் ஆண்டனி, ஹெலன் பாரிஸ், ஷாஜகான் மும்தாஜ் மஹல், அம்பிகாபதி அமராவதி, லைலா மஜ்னு, அனார் சலீம் எல்லாமே காவியத்தில் கண்ட அமரத்துவக் காதல்.

புதன், 19 பிப்ரவரி, 2025

திரையிலும் கோலோச்சும் நகரத்தார் நட்சத்திரங்கள்

திரையிலும் கோலோச்சும் நகரத்தார் நட்சத்திரங்கள்


பல்கலைக் கழகங்கள், பதிப்பகங்கள், பத்திரிக்கைகள், பங்குவர்த்தகம், வங்கிகள், தனவணிகம் மட்டுமல்ல திரைப்படத் துறையில் தயாரிப்பிலும் இயக்கத்திலும் ஏன் நடிப்பிலுமே கூட ஜொலிப்பவர்கள்தான் நம் நகரத்தார் நட்சத்திரங்கள். சிலர் ஹீரோ ஹீரோயின் ரோலிலும் மற்றும் அநேகர் குணச்சித்திர, துணைக் கதாபாத்திர மற்றும் எதிர்நாயகன் பாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

கானாடுகாத்தான் ஆணழகன் சிதம்பரம் அவர்களின் மகன் திரு அருண் சிதம்பரம் கனவு வாரியம் என்ற படத்தைத் தயாரித்து அதில் கதாநாயகனாக ஒரு மாதிரி கிராமத்தைப் படைத்துள்ளார். படிக்காதவனாக இருந்தாலும் சாதனை படைக்க முடியும் என்பதுதான் கரு. இரண்டு ரெமி விருதுகள், ஏழு உலகப்பட விருதுகள் பெற்ற படம் அது.

காரைக்குடியைச் சேர்ந்த திரைப்பட நடிகர் திரு சிதம்பரம் அவர்களுக்கு 80 வயது. ரஜனியின் எஜமானில் ஆரம்பித்துக் கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழின் அனைத்து ஹீரோக்களின் படங்களிலும் ஏதோ ஒரு பாத்திரத்தில் தோன்றி இருக்கிறார். வாங்க எஜமான் என்று ரஜனியை அழைக்கும் விவசாயிகள் சீனிலும் நாடகக் கொட்டாய் சீனிலும் எஜமானில் நடித்துள்ளார். சிவகாசியில் விஜய் வீட்டை வாங்க வரும் அப்பச்சியாகத் தோற்றம் தருவதும் இவரே. அவ்வை ஷண்முகியில் ஒரு இண்டர்வியூ காட்சியிலும் விஜய்காந்துடன் ஆறேழு படங்களிலும் நடித்துள்ளார். விஷாலுடன் பூஜை படத்திலும் விக்ரமுடன் சாமி படத்திலும் ஓரிரு சீன்களில் தோன்றியுள்ளார்.

செவ்வாய், 31 டிசம்பர், 2024

நவரசா டெல்லி கணேஷ்

 நவரசா டெல்லி கணேஷ்


ஆஸ்த்ரேலியாவிலிருந்து வெளிவந்த ”மெல்லினம்” என்றொரு மாதாந்திரியில் 2010 இலிருந்து நான்கு வருடங்கள் நான் ”பெண்மொழி” என்றொரு கட்டுரைத் தொடர் எழுதி வந்தேன். அது சமயம் அதில் “அது ஒரு நிலாக்காலம் என்றொரு தொடர் எழுதி வந்தார் திரு. டெல்லி கணேஷ் அவர்கள். சிறுவயதிலேயே அம்மாவை இழந்ததால் பாட்டியால் வளர்க்கப்பட்டது, வான்படையில் சேர்ந்தபோது ஏற்பட்ட அனுபவங்கள், ஜம்முவிலிருந்து அத்தை பெண் தங்கத்தைக் காதலித்து அதன் பின் தமிழகம் வந்து மணந்து கொண்டது அனைத்தையும் அதில் குறிப்பிட்டு இருந்தார்.

முகநூல் நண்பரும் கூட. ஒருமுறை வை.மு.கோதை நாயகி அம்மாளில் இருந்து இன்றைய இணைய எழுத்தாளர்கள் வரை குறிப்பிட்டு எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் மற்றும் அவர்களின் படைப்புகளையும், புத்தகங்களையும் லிஸ்ட் வாரியாகப் பட்டியலிட்டிருந்தேன். அந்த போஸ்டில் “இவ்வளவு எழுத்தாளர்களைப் பற்றியும் பட்டியலிட்ட நீங்கள் கரிச்சான் குஞ்சுவையும் அவரின் பசித்த மானுடத்தையும் விட்டு விட்டீர்களே’ என்று பின்னூட்டமிட்டிருந்தார். அப்போது நான் பெண்ணிய எழுத்துக்களில் தோய்ந்திருந்த காலம் என்பதால் அவரைப் பட்டியலில் சேர்க்க எண்ணவில்லை.

வெள்ளி, 20 டிசம்பர், 2024

தென்னக ஜேம்ஸ்பாண்ட் ஜெய்ஷங்கர்

 தென்னக ஜேம்ஸ்பாண்ட் ஜெய்ஷங்கர்


அன்புள்ள மான்விழியே, இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால், நான் மலரோடு தனியாக, குயிலாக நானிருந்தென்ன, பார்வை ஒன்றே போதுமா, நாணத்தாலே கண்கள் மின்ன மின்ன ஆகியன அமைதியான காதலைச் சொல்லும் பாடல்கள் என்றால் பளிங்கினால் ஒரு மாளிகை எனக் குபீரெனப் பாயும் இசை வெள்ளமும் ஆங்கில நடிகைகள் போன்ற உடையலங்காரத்தில் சுழலும் விஜயலலிதாவின் நடனமும் இன்ப லாகிரியில் ஆழ்த்தும். மெர்மெய்ட் போன்று அவர் ஆடும் ஆட்டத்தில் தூண்டிலில் சிக்கிய மீனின் நிலைதான் ரசிகர்களின் நிலையும். ஜெய்சங்கரின் ஸ்மார்ட்டான ஸ்டைலும் கூட அசத்தல்தான்.

ஜூலை 12, 1938 இல் சுப்ரமணியன், யோகாம்பா இவர்களுக்கு மகனாகப் பிறந்தார் சங்கர்.  இவர் புதுக்கல்லூரியில் பட்டப்படிப்புப் படித்தவர். தந்தை வக்கீல். மகன்கள் இருவரையும் டாக்டர் ஆக்கியுள்ளார். ஆனால் இவர் தேர்ந்தெடுத்ததோ நடிப்புத்துறை. முதலில் சோவின் நாடகக்குழுவிலும் அதன்பின் கூத்தபிரானின் நாடகக் குழுவிலும் நடித்து வந்தார். ஜோஸப் தளியன் என்ற இயக்குநர் இரவும் பகலும் என்ற சினிமாவுக்காக இவர் பெயருடன் ஜெய் சேர்த்து ஜெய்சங்கர் என்று அறிமுகப்படுத்தினாராம்.

புதன், 27 நவம்பர், 2024

தமிழ்த் திரையிசைப் பாடகர்கள் – ஒரு ஜூகல்பந்தி

தமிழ்த் திரையிசைப் பாடகர்கள் – ஒரு ஜூகல்பந்தி


மதியம் இரண்டு மணிக்கு ரேடியோவில் முகம்மட் ரஃபி கிஷோர் குமார் பாடிய ஹிந்தி பாடல்கள், மாலையில் சிலோன் ரேடியோவில் பி ஹெச் அப்துல் ஹமீதும், ஏ எஸ் ராஜாவும் விளம்பர இடைவேளைகளுக்கு நடுவில் தொகுத்தளிக்கும் தமிழ்த் திரையிசைப் பாடல்கள் எனக் கேட்டு வளர்ந்த சமூகத்தில் பிறந்தவள் நான். ஒருநாளில் ஒரு அரைமணிநேரம் ஆறேழு பாடல்கள் கேட்போம். தொலைக்காட்சியில் வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும் பார்ப்போம். இன்றோ நினைத்த இசையை நினைத்த போது கேட்டிடும் வசதி படைத்துள்ளோம்.

இசை என்னும் போதை மீது எல்லாப் பருவத்தினருக்கும் ஈர்ப்பு உண்டு.  நம் குழந்தை பருவத்தில் ஆடியோ ரிலீசாகி அந்தப் படம் திரைக்கு வரும் முன்பே நாம் அந்தப் பாடல்களுடன் பரிச்சயமாகி இருப்போம். சங்கீதம் பாடக் கேள்வி ஞானம் அது போதும் என ஸ்ம்யூல் ட்ராக் இசை அமைத்துத் தர அனைவருமே பாடகர்கள் பாடகிகளாகும் காலம் இது.

வெள்ளி, 1 நவம்பர், 2024

மூடு பனி ஷோபா

 மூடு பனி  ஷோபா


என் இனிய பொன் நிலாவே, செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல், ஏதோ நினைவுகள் கனவுகள், பூவண்ணம் போல நெஞ்சம் பூபாளம் பாடும் நேரம், பூந்தேனில் கலந்து பொன்வண்டு எழுந்து, அடிப் பெண்ணே பொன்னூஞ்சலாடும் இளமை என்ற பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் பதின் பருவத்தில் மறைந்த எளிமையும் அழகும் நிறைந்த ஷோபா மனதுக்குள் நிழலாடுவார்.

பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றம். அறியாமையில் அதே சமயம் முதிர்ச்சியிலும் மின்னும் கண்கள். நடுவில் லேசாய் மடிந்த கவர்ச்சிகரமான உதடுகள். பாலு மகேந்திராவின் நாயகிகள் மாதிரி அலை அலையான சுருட்டைக் கூந்தல். மெல்லிய ஆனால் திண்ணியமான உருவம், கண்களைச் சுருக்குவதிலாகட்டும், உதட்டைக் குவித்துப் புன்முறுவல் செய்வதிலாகட்டும் எதையும் அலட்சியமாகக் கையாளும் சோபனையான பாவனையோடு அநாயாசமாகக் கடந்து விடும் அவரது நடிப்பு..  

சனி, 21 செப்டம்பர், 2024

சிந்து பைரவி சிவக்குமார்

 சிந்து பைரவி சிவக்குமார்


உன்னிடம் மயங்குகிறேன், உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது, ஒரே நாள் உன்னோடு ஒரே நாள், தேன் சிந்துதே வானம், ஓடம் கடலோடும் அது சொல்லும் பொருளென்ன, தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது என்ற மென்காதல் பாடல்களைக் கேட்டால் சிவக்குமார் ஞாபகம் வருவார். எம்ஜியார், சிவாஜி, ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ஆர், கமல், ரஜினி, விஜய்காந்த், சத்யராஜ் சரத்குமார், பிரபு, விக்ரம் விஜய், சூர்யா, அஜித் என நான்கு தலைமுறை நடிகர்களோடு நடிப்புலகில் பயணம் செய்தவர்.

சிறந்த ஓவியர். ஒரு முறை குமுதத்திலோ விகடனிலோ இவர் வரைந்த ஓவியம் ஒன்று வெளியானது. சூரிய உதயத்தில் மரங்களைத் தங்கமஞ்சள் நிறப்பின்னணியில் ஒளீரிடும்வண்ணம் வரைந்திருந்ததைக் கண்டு அசந்துள்ளேன். மேடைப் பேச்சாளர். கம்பராமாயணம், திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசுவது மட்டுமல்ல. நூறு பூக்களின் பெயர்களையும் கூட மனப்பாடமாகச் சொல்லக் கூடியவர்.