எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 31 டிசம்பர், 2024

நவரசா டெல்லி கணேஷ்

 நவரசா டெல்லி கணேஷ்


ஆஸ்த்ரேலியாவிலிருந்து வெளிவந்த ”மெல்லினம்” என்றொரு மாதாந்திரியில் 2010 இலிருந்து நான்கு வருடங்கள் நான் ”பெண்மொழி” என்றொரு கட்டுரைத் தொடர் எழுதி வந்தேன். அது சமயம் அதில் “அது ஒரு நிலாக்காலம் என்றொரு தொடர் எழுதி வந்தார் திரு. டெல்லி கணேஷ் அவர்கள். சிறுவயதிலேயே அம்மாவை இழந்ததால் பாட்டியால் வளர்க்கப்பட்டது, வான்படையில் சேர்ந்தபோது ஏற்பட்ட அனுபவங்கள், ஜம்முவிலிருந்து அத்தை பெண் தங்கத்தைக் காதலித்து அதன் பின் தமிழகம் வந்து மணந்து கொண்டது அனைத்தையும் அதில் குறிப்பிட்டு இருந்தார்.

முகநூல் நண்பரும் கூட. ஒருமுறை வை.மு.கோதை நாயகி அம்மாளில் இருந்து இன்றைய இணைய எழுத்தாளர்கள் வரை குறிப்பிட்டு எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் மற்றும் அவர்களின் படைப்புகளையும், புத்தகங்களையும் லிஸ்ட் வாரியாகப் பட்டியலிட்டிருந்தேன். அந்த போஸ்டில் “இவ்வளவு எழுத்தாளர்களைப் பற்றியும் பட்டியலிட்ட நீங்கள் கரிச்சான் குஞ்சுவையும் அவரின் பசித்த மானுடத்தையும் விட்டு விட்டீர்களே’ என்று பின்னூட்டமிட்டிருந்தார். அப்போது நான் பெண்ணிய எழுத்துக்களில் தோய்ந்திருந்த காலம் என்பதால் அவரைப் பட்டியலில் சேர்க்க எண்ணவில்லை.

1944 இல் கீழப்பாவூரில் பிறந்தார். கூடப் பிறந்தவர்கள் எட்டு சகோதர சகோதரிகள். மதுரை டி வி எஸ்ஸில் வேலை, அதன் பின் இந்திய வான்படையில் பணி. டெல்லியின் தக்ஷிண் பாரத் நாடக் சபாவில் உறுப்பினர். பத்தாண்டுகள் கழித்துத் தமிழ்நாடு திரும்பிய பின் காத்தாடி ராமமூர்த்தியின் நாடகக் குழுவில் சேர்ந்து டௌரி கல்யாண வைபோகத்தில் குசேலராக நடித்துப் புகழ்பெற்றார்.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக 400 படங்களுக்கு மேல் நடித்தவர். துணைக் கதாபாத்திரம், நகைச்சுவை அல்லது வில்லன் மற்றும் குணச்சித்திரப் பாத்திரங்களில் மட்டுமே நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு, ஹிந்தித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கலைமாமணி விருது பெற்றவர். பசி படத்துக்காகத் தமிழ்நாடு மாநில அரசின் தேசிய விருது பெற்றவர்.

பாடி லாங்குவேஜ், மானரிஸம், கேரக்டருக்கேற்றபடி குரல், முகபாவனைகளை உடனுக்குடன் மாற்றுதல், டயலாக் டெலிவரி, அஸால்டான நடிப்பு என எல்லாவற்றிலும் அசத்தக் கூடியவர். நாயகன் படத்தில் அவர் நடித்துத் திரையிடலில் வெட்டுப்பட்ட ஒரு காட்சியை நடித்துக் காட்டினார், சுகாசினியின் டிவி ஷோ ஒன்றில். தவறான நட்பால் தன் மகள் இறந்துவிட்டதை அவர் ஸ்டார்ட், ஆக்‌ஷன், கேமிரா சொல்லாமல் க்ளிசரின் இல்லாமல் உதடு நடுங்க முகம் சுருங்க, கண்கசிய நடித்துக் காட்டி நம்மையும் ஒரு நொடியில் கலங்கும்படிச் செய்துவிட்டார்.

அதிலும் பிராமண ஐயராக அவர் நடித்த நாயகன், அவ்வை ஷண்முகியில் நடிப்பில் வெளுத்து வாங்கி இருப்பார். நாயகனில் லோக்கல் தாதாவாக இருந்த வேலு நாயக்கரை மக்கள் ரட்சகனாக, நிழலுலக நாயகனாக மாற்றுவார். சாமி படத்தில் திரிஷாவின் அப்பா ஸ்ரீனிவாச ஐயங்காராக நடித்திருப்பார்.  மைக்கேல் மதன காமராஜனில் பாலக்காடு மணி ஐயராக கிரேஸி மோகனின் வசனத்தில் ”ஆக்கும், ஏ, ஓ” என “ உச்சரிப்பு முதற்கொண்டு மலையாளியாக மாறி நம்மைச் சிரிப்புக் கடலில் மூழ்க வைப்பார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது க்ரேஸி மோகனே கமலிடமும் டெல்லி கணேஷிடமும் ”நாம மலையாளப் படம் எடுக்கல, தமிழ்ப் படம்தான் எடுக்கிறோம். அதில் மலையாள உச்சரிப்பு இருந்தால் போதும்” என்று கிண்டலடித்தாராம் அந்த அளவு பாத்திரத்தோடு ஒன்றியவர்கள் கமலும் டெல்லி கணேஷும். பிறவி நடிகர்கள்.


பட்டினப் பிரவேசத்தில் சிவச்சந்திரனின் மூத்த அண்ணன் முருகனாகக் கதாபாத்திரம். குடும்பத்தோடு பட்டிணம் வந்து ஒரு மளிகைக்கடை ஆரம்பிப்பார். முதல் போணியாக வரும் பெண்மணி எள்ளு கேட்பார். பின்னர் நட்டமடைந்து கடையை மூடும்போது வந்து அப்பெண்மணியே வந்து மஞ்சள் கேட்பார். அப்போது அவரைப் பார்த்து டெல்லி கணேஷின் நெஞ்சில் இரு கைகளையும் தட்டினாற்போல் வைத்து பேசும் வசனம் வலி மிக்கது.

புன்னகை மன்னனில் சேதுவின் தந்தையாக ரோல். சமையற்கலைஞர் பாத்திரம். சீட்டுக்கட்டு மோகம் உள்ளவராக இருப்பார். ஒரு விழாவில் பணக்கார ரேகாவின் தந்தைக்கு சீட்டுக் கட்டு விளையாட்டின் நெளிவு சுளிவுகளை சமையற்காரரான இவர் சொல்லிக் கொடுக்கப் போக அவர் இவரின் பரம எதிரியாகி விடுவார்.

பசியில் ரிக்‌ஷா ஓட்டும் முனியாண்டியாக, பொல்லாதவனில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மூர்த்தியாக, ஜூலி கணபதியில் ஆய்வாளர் கணேஷாக, சென்னை எக்ஸ்பிரஸில் கிராமத்துக்காரராக, பெண்மணி அவள் கண்மணி – கமலாவின் குடிகாரக் கணவனாக, சிந்து பைரவியில் மிருதங்க வித்வானாக, அபூர்வ சகோதரர்களில் வில்லன் ஃப்ரான்சிஸாக, நளதமயந்தியில் ராம்ஜி என்னும் மாதவனின் மாமாவாக, இந்தியன் 2 வில் ஹெல்த் செகரட்டரியாக, உன்னால் முடியும் தம்பியில் அரசியல்வாதியாக, ஸ்ரீ ராகவேந்திராவில் அப்பனாச்சாரியா என்னும் முதன்மைச் சீடராக பல்வேறு கதாபாத்திரங்களிலும் சிறப்பான பங்களித்திருப்பார்.

அச்சமில்லை அச்சமில்லையில் சரிதாவின் தந்தை பிரம்மநாயகமாக மருமகனின் அரசியல் சூழ்ச்சியில் சூழ்நிலைக்குக் கட்டுப்பட்டு வாழ்வார். சம்சாரம் அது மின்சாரமில் (மாதுரி) வசந்தாவின் தந்தையாகத் தன் மகளை நெறிப்படுத்துவார். தெனாலியில் டாக்டர் கைலாஸமாக காமெடி ட்ராக். அவரும் ரமேஷ் கண்ணாவும் பய நோயால் பாதிக்கப்பட்ட தெனாலியை டாக்டர் ஜெயராமிடம் சேர்க்குமிடம் அனைத்தும் குபீர்ச் சிரிப்பைப் பற்ற வைக்கும்.

இராஜபார்வை, புதுக்கவிதை, சிம்லா ஸ்பெஷல், எங்கேயோ கேட்ட குரல், மூன்று முகம், பரிட்சைக்கு நேரமாச்சு, பூவிழி வாசலிலே, காணி நிலம், பாசப் பறவைகள், உன்னால் முடியும் தம்பி, அரங்கேற்ற வேளை, ஜாதி மல்லி, நம்மவர், அரிச்சந்திரா, சங்கமம், பூவெல்லாம் கேட்டுப் பார், ஹே ராம், பிரியமானவளே, ஆனந்தம், பாபா, காதல் சடுகுடு, சாமி, பொற்காலம், இருவர், தலைநகரம், போக்கிரி ராஜா,தமிழ் படம், காதலா காதலா ஆகியவற்றிலும் நடித்துள்ளார்.

அவ்வை சண்முகியில் ஜெமினி கணேசனின் செகரட்ரி சேதுராம ஐயராகக் காதில் பூச்சூடியபடி தோன்றுவதும், அவ்வை ஷண்முகியின் ஆதிக்கம் வீட்டில் அதிகமானவுடன், “மாமி நீங்க சொல்லலாம், தப்பில்லை ”என்று கூறி ”சித்த நகர்ந்துக்கறேளா” என்று கூறி முதுகை வளைத்துப் பவ்யமாக வெளியேறுவதும், நாசர், ஜெமினி, மணிவண்ணனுடனான உரையாடல்கள் எனப் படம் முழுக்கவே அப்பாவி முகத்தோடு நச் வசனங்கள். சின்னத்திரையிலும் சில தொடர்களில்  நடித்துள்ளார்.

நவரசா என்ற நெட்ஃப்ளிக்ஸ் வலைத் தொடரில் தி ஜானகிராமனின் பாயாசம் என்ற கதையின் பொறாமைக்கார பெரியப்பாவாக வேடம். காவேரிக் கரையில் வாழும் பிராமணனாகத் தன் மகள் வாழாவெட்டியாக இருக்கும்போது தனது தம்பியின் பிள்ளைகள் பிள்ளையும் குட்டியுமாக வாழ்வது பார்த்து வயிறெரிந்து தம்பி மகளின் திருமணத்தின்போது பின் கட்டில் தயாராகும் பால் பாயாசத்தைக் கொதிக்கும் அண்டாவோடு கவிழ்த்து விடுவார். இந்த அநியாயாச் செயலை யார் செய்தது என யாருக்கும் தெரியாத போதும் அவரது மகள் தனிமையில் கேட்பாள் “” எப்பிடிப்பா அவ்ளோ பெரிய அண்டாவைக் கவிழ்த்த. “ இப்படிக் கேட்கும்போது அந்தப் பிஞ்சு விதவையின் முகத்தில் வருத்தம் தெரியும்.  தந்தையான டெல்லி கணேஷின் முகத்திலோ குரோதம் கொப்பளிக்கும்.

உடனடி நகைச்சுவை போல நவ ரசங்களையும் அவர் தனது படங்களிலும் தொடர்களிலும் வழங்கிள்ளார். இந்த நவம்பர் 2024 இல் தனது எண்பதாவது வயதில் மறைந்தார். அவரது உடலுக்கு விமானப் படையின் கொடி போர்த்தி மரியாதை செய்யபட்டது. அதன் பின் விமானப் படையினர் அந்தக் கொடியை மடித்து அவர் மனைவி தங்கத்திடம் வழங்கியபோது ஒரு குழந்தையை அணைப்பது போல் அக்கொடியில் அவர் முகம் புதைத்துகொண்டது மனதை நெகிழ்த்தி வருத்தியது. துணைப் பாத்திரங்களே செய்திருந்தாலும் தமிழ் சினிமா உலகின் நவரசப் பிதாமகரான திரு டெல்லி கணேஷ் அவர்களுக்கு நமது அஞ்சலிகளும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...