///குன்றக்குடியின் சுப்புலெட்சுமி .
பள்ளி முழுப்பரிட்சை விடுமுறை தினங்களில் காரைக்குடி வரும்போது குன்றக்குடிக்குப் பாதயாத்திரையாக அத்தைமக்கள் அம்மான் மக்களுடன் சென்றதுண்டு. அங்கே ஆயா வீட்டுக்கு வேதபாடசாலை ஒன்று உண்டு. கிழக்கில் இருக்கும் - கீழ வேதபாட சாலை. அதில் கிருஷ்ணமூர்த்தி கனபாடிகள் குடும்பத்தார் வசித்து வந்தார்கள். மேலூரில் பாடசாலை போஷணைக்காக பாட்டய்யா நிலம் எழுதி வைத்திருக்கின்றார்கள். அதிலிருந்து வரும் குத்தகைப் பணம் இதை நடத்த உதவியது.
இப்போது பாடசாலையைப் புதுப்பித்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறை குன்றக்குடி ஷண்முகநாதனைத் தரிசிக்கச் செல்லும்போதும் இங்கே போய் தங்கி எதிர்த்தாற்போலிருக்கும் பிரம்மாண்ட விநாயகரையும் மயிலாடும் பாறை வேலையும் தரிசித்து மலை ஏறுவது வழக்கம்.
மிக லேசான உயரமுள்ள தன்மையான படிகள். 200 படிகள் இருக்கலாம்.நல்ல அகலமான படிகள். கீழே சுப்ரமண்யர் சன்னதியும் அதன் பின்புறம் பொய்கையும் உண்டு. அதன் பக்கவாட்டில்தான் சுப்புலெட்சுமி ( சுப்ரமண்யரின் கோயில் யானை ) தங்குமிடம். மிக அழகாக அவள் காதை அசைத்தபடி கம்பீரமாகக் காட்சி தருவாள். எப்போது சென்றாலும் அவளைச் சுற்றி இரு நிமிடங்கள் நின்று ரசிப்பதுண்டு.
குன்றக்குடியே எங்கள் மனங்கவர்ந்த இடம்தான். மலையிலேறியவுடன் லேசான வியர்வையை வருடியவாறு அடிக்கும் இதம் தென்றலும், சுற்றிலும் தெரியும் பசுமைக் காட்சிகளும், பொய்கைகளும், சந்தையும், ஊர் அமைப்பும் ஊரணிகளும், காவல் நிலையமும்,அடர்ந்த மரங்களும், தூரத்தே தெரியும் பச்சைப் பசேல் வயல்வெளிகளும் அழகோ அழகு.
கீழே சுப்ரமண்யர் சன்னதிக்குப் பின்னால் முடி இறக்கும் இடம் உண்டு. குழந்தைகள் பிறந்ததும் அநேகமாக முதல் முடி இங்கேதான் இறக்குவார்கள். ஆறு மாதக் குழந்தைக்கே முடி இறக்கிவிடுவார்கள். ! :)
இங்கே மலையில் சமணர் படுகையும் கோயிலின் கீழ்ப்புறம் பாண்டிய மன்னனால் கிபி ஏழாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட குடைவரைக் கோயிலும் ஸ்பெஷல். இது பற்றி முன்னேயே எழுதி இருக்கிறேன்.
குன்றக்குடியின் குடைவரைக் கோயிலும் சமணர் படுகைகளும் (குமுதம் பக்தி ஸ்பெஷலில்)
குன்றக்குடியில் கார்த்திகை முதல் சோம வாரம் ஆண்டிக்கு வடித்தல்
எங்கள் குடும்பத்தில் அநேகருக்கு சுப்ரமண்யம், ஷண்முகநாதன், சுப்பையா - முருகன், வேலன், வடிவேலன், ஷண்முகம், அழகப்பன், குமரன், செந்தில், பழனியப்பன், முருகப்பன், குமரப்பன், (வள்ளியப்பன்) , என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும். கார்த்திகை முதல் சோமவாரம் இங்கே விசேஷமாக ஆண்டிக்கு வடித்தல் என்று முருகப்பெருமானைப் பற்றிப் பரவும் சாது சன்னியாசிகளை அழைத்து உணவிட்டு, ஊரோடு அனைவருக்கும் உணவிட்டுத் தாமும் உண்டு மகிழ்வார்கள்.
விநாயகர், இடும்பன் , திரும்ப விநாயகர் சன்னதியும், ஓம் என்று எழுதப்பட்ட அலுவலக கவுண்டரும், மிகப் பெரும் மணியும், மிகப் பிரம்மாண்டமான கதவுகளும், நட்சத்திர வடிவத்துள் எழுதப்பட்ட பாம்பன் சாமிகள் அருளிய குமாரத்தவமும் பிரமிப்பூட்டியதுண்டு. உள்ளே பெரிய மருதுவும் சின்ன மருதுவும் கரம் கூப்பி இருக்க அகத்தியர் போன்ற முனிவர்கள் சிலையும் காணக்கிடைக்கிறது. அங்கங்கே ஜன்னல்கள் காற்றை வாரி இறைக்க ஷண்முகநாதர் மயில்மேல் காட்சி தருவதைக் காணக் கண் கோடி வேண்டும்.மலைக்கோயில் என்பதால் ஏற்ற இறக்கமாக இருக்கும். ப்ரகாரத்தின் ஒரு பக்கம் நாங்கள் ஒரு சதுரத் துவாரம் வழியாக கோபுரத்தைப் பார்த்து வணங்குவோம். இப்ப அதெல்லாம் மூடி விட்டார்கள் போலிருக்கு.
வேதபாடசாலையிலும் ஒரு சுவரலமாரியில் இருக்கும் முருகனின் வேலுக்கு பூசை உண்டு.அங்கேயிருந்து பூசைப் பொருட்கள் கொணரப்பட்டு ஷண்முகநாதனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்வார்கள்.
எங்கள் குடும்பத்துக்கு கண்கண்ட தெய்வம் என்றாலும் எனது இரண்டங்கட்டுப் பாட்டியாராலும்,எனது பெரிய அத்தையாலும் அதிகம் வழிபடப்பட்டவர் இந்த சுப்ரமண்யர். என் அத்தையார் சில சமயம் பதினோரு நாட்கள் தங்குவதாக எல்லாம் வேண்டிக்கொண்டு அங்கேயே தங்கி தினம் முருகனைப் படியேறித் தரிசித்து பதினோராம் நாள் அபிஷேக ஆராதனை செய்து மகிழ்வார்கள். செல்பவர்க்கெல்லாம் உணவு வழங்குவார்கள்.
குன்றக்குடி ஆதீனகர்த்தாக்கள் முக்கியமாகக் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தமிழ் வளர்ச்சிக்குப் பெரும் தொண்டாற்றி உள்ளார்கள். குன்றக்குடியை மாதிரி கிராமமாகவும் பெருவளர்ச்சி பெற வைத்துள்ளார்கள். முந்திரிக் காடு பலருக்கு வேலை அளிக்கிறது. இங்கே உள்ள நுட வைத்தியசாலை மிகப் ப்ரபலமானது. ( மயில் கால் எண்ணெய் கொண்டு சில்லாய் நொறுங்கிய கால் எலும்புகளைக் கூட சேர்த்துவிடுவார்கள். ! )
குன்றக்குடி ஷண்முகநாதன் கோயில் ஒரு பக்கவாட்டுப் பார்வை. கோயிலின் நாற்புறமும் சாலை. இதுவே மெயின் ஊர். பெரிய ப்ரகாரச் சுற்றில் - கிரி வலத்தில் ஒரு காளி கோயில் இருக்கு ரொம்ப விசேஷம். சுற்றி வரும்போது கந்தகுரு கவசம், சண்முகக் கவசம், சஷ்டிக் கவசம், அறுபடை முருகன் கவசம், குமாரத்தவம், எல்லாம் சொல்வதுண்டு. ஒரு ஏழெட்டுப் பொய்கைகள் கவினுற அமைந்திருக்கும் காட்சி மலைமேல் ஏறினால் தெரியும்.
தடதடவென ஒரு காலத்தில் ஓடி ஏறிய படிகள்.
இடும்பன் சன்னதில் விளக்கு மாடங்கள்.
பக்கவாட்டில் ஷண்முகநாதர்.
ஏறுமயிலேறி விளையாடும் முகம் ஒன்று.
ஈசனுடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்று
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்று
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்று
வள்ளியை மணம்புணர வந்த முகம் ஒன்று
ஆறு முகம் ஆன பொருள் நீ அருள வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே
மலைமேல் விநாயகர்.
நட்சத்திரத்துள் குமாரஸ்தவம்.
திருப்பணி செய்த சின்ன மருதுவும் பெரிய மருதுவும்.
அகத்தியரும் வீரரும்.
ஓம் முருகா !
மிகப்பெரும் மணி
மிக மிக அழகான - நான் மிகவும் ரசிக்கும் - குன்றக்குடியையும் ஷண்முகநாதனின் சுப்புலெட்சுமியையும் ( கஜபூஜை முடித்து புத்துணர்வு முகாம் எல்லாம் போயிட்டு ஃப்ரெஷாகக் காட்சி தந்தாள் ) புகைப்படம் எடுத்துப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன்.
அடிவாரத்தில்
அழகான ராட்சசி. !
அசட்டையா பார்க்குறா. :)
என்ன வேணுமாம்னு கேக்குறா.
குட்டிக் கண்ணழகி
கழுத்தெல்லாம் மணியாரம்.
சரி சரி ரசிச்சது போதும். போயிட்டு வா அப்பிடீங்கிறா. :)///
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)