தந்தைக்காக
வாழ்ந்து மடிந்த ஜஹனாரா பேகம்
இளவரசிகளில்
சக்கரவர்த்தினி, நிழல் இளவரசி, காலத்தின் எஜமானி, சிம்மாசனத்தின் எஜமானி, பாதுஷா பேகம்(
பெண் பேரரசி ) , பேஹம் சாஹிப் ( இளவரசிகளின் இளவரசி) என்றெல்லாம் புகழப்பட்ட முகலாய இளவரசி ஜகனாரா பேகம்
நாட்டின் ”முதல் பெண்மணி” என்ற தகுதி பெற்றதாலேயே குடும்ப வாழ்க்கையை மேற்கொள்ளாமல்
தனித்து வாழ்ந்தவர். சொல்லப்போனால் தன் தந்தையைப் பேணிக் காக்கவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.
முகலாய சாம்ராஜ்யத்தின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் பின்னால் எண்ணற்ற ராணிகளின் வாழ்வும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர்களுள் முதன்மையானவர் ஜகனாரா. பதினாறாம் நூற்றாண்டிலேயே இந்தியாவில் நுழைந்த ஆங்கிலேயர்களுடன் அவர்களின் மருத்துவ சேவைக்காக முகலாய சாம்ராஜ்யத்துடன் முதன் முதலாக இணைப்பு ஏற்படுத்தியவர்.
நாட்டையும், ஆட்சியையும், தந்தையையும் காக்கும் யத்தனத்திலும்
சகோதரர்களை நல்வழிப்படுத்துவதிலும், மக்களுக்குக் கல்வியறிவு புகட்டுவதிலும் தன் வாழ்நாளைச்
செலவிட்டவர். சூபி மார்க்கத்தில் பற்றுடையவர். கவிதாயினி. ஓவியர், கட்டிடக் கலை வல்லுநர்.
நிர்வாகத் திறமையில் எவ்வளவுதான் சிறப்பானவராக இருந்தாலும்,
சகோதர, சகோதரிக்களுக்கிடையேயான உட்பகை, பொறாமைப் போராட்டங்களில் அழிந்தொழிந்தவர். உரிமைப்
போராட்டத்தில் தன் சொந்த சகோதரியால் தீக்காயம் பட்டவர், ஆட்சிப் போராட்டத்தால் தன்
சொந்த சகோதரரால் தந்தையுடன் சிறைவைக்கப்பட்டவர்.
ஷாஜகானாபாத் என்று அன்று அழைக்கப்பட்ட இன்றைய டெல்லியில் சாந்தினி
சௌக் என்னும் அங்காடிச் சந்தையை வடிவமைத்தவர். ஆக்ராவின் ஜமா மஸ்ஜித் மற்றும் பொதுமக்களுக்கு
மதக் கல்வி புகட்டுவதற்காக மதரஸாவைத் தன் சொந்தப் பணத்தில் உருவாக்கியவர். ஏழைகளுக்கு
அன்னதானம் செய்தவர். மெக்கா மதினாவுக்குப் புனிதப் பயணம் மேற்கொள்வோருக்கும் உதவியவர்.
பொதுமக்கள் தங்கிச் செல்லக்கூடிய சத்திரம் சாவடியைத் தோட்டங்களுடன்
எழிலாக உருவாக்கினார். அவ்வளவு ஏன்.. தான் வாழ்ந்த காலத்திலேயே தன் கல்லறையை வடிவமைத்துக்
கட்டியவர். மேற்புறம் எந்தக் குவிமாடமும் அமைக்கப்படாமல் தன் கல்லறை பசும்புற்களால்
மூடப்படவேண்டும் என ஆசைப்பட்டராம்.
ஜகனாரா பேகம் 1614 ஆம் ஆண்டில் மார்ச் 23 ஆம் தேதி குர்ரம் என்ற
இயற்பெயருடைய மன்னர் ஷாஜகானுக்கும், அர்சுமந்த் பானு பேகம் என்ற இயற்பெயருடைய ராணி
மும்தாஜ்மஹலுக்கும் மூத்த புதல்வியாகப் பிறந்தவர். முத்த மகளாக இருந்தாலும் பெண்கள்
ஆட்சிக்கு வர முடியாது என்ற நிலை அக்காலத்தில். புதல்வர்கள்தான் ஆட்சி புரியலாம். கல்வியிலும்
நிர்வாகத்திறமையிலும் சிறந்து விளங்கிய இவரை நாட்டின் முதல் பெண்மணி என்ற அந்தஸ்து
வழங்கி ஷாஜஹான் கௌரவித்துள்ளார்.
ஜகன்னாராவுடன் கூடப்பிறந்தவர்கள் குரால்னிஷா, தாரா ஷிக்கோ, முகமது
சுல்தான் ஷா, ரோஷனாரா, ஔரங்கசீப், உமித்பக்ஷி, சுரையாபானு, சுல்தான் முராத், கௌஹரா.
பதினான்கு குழந்தைகளுக்குத் தாயான மும்தாஜ் மஹல் தன் கடைசிப் பிரசவத்தில் உயிரிழந்தார்.
முப்பத்தி எட்டு வயதான தாய் இறந்தபோது மூத்த மகளான ஜகனாராவுக்குப்
பதினேழு வயது. தன் மனைவியை இழந்து பரிதவித்து நின்ற தந்தை ஷாஜகானுக்கு ஆறுதலும் தேறுதலும்
கூறித் திரும்ப அரசாட்சியில் ஈடுபட உதவி செய்தவர் ஜகனாரா. அதனால் பேகம் சாஹிப் என்ற
பட்டம் பெற்றார்.
இருந்தும் அவர் தன் மனைவியின் ஞாபகமாகவே இருந்து வெள்ளைச் சலவைக்
கற்களால் தாஜ்மஹல் என்றொரு நினைவுச் சின்னத்தை எழுப்பிக் கொண்டிருந்தார். தாய் தந்தையின்
காதல் வாழ்வும், நினைவுச் சின்னத்துக்காகத் தந்தை நேரத்தைச் செலவிட்டு அரசு நிர்வாகத்தைச்
சரிவரக் கவனிக்காமல் இருப்பதும், கஜானாவைக் காலி செய்வதும் ரோஷனாராவுக்கும் ஔரங்கசீப்புக்கும்
கோபத்தை ஏற்படுத்தியது. தாஜ் மஹல் வடிவமைப்பில் ஜகனாரா அக்கறை எடுத்து மேலும் செலவை
அதிகப்படுத்தியதும் இவர்கள் ஜகனாராமேல் அதீதக் கோபம் கொள்ளக் காரணமாகியது.
ஷாஜகான் சோர்ந்த நேரங்களில் அவரின் ஆலோசனைப்படி முக்கிய முடிவுகளை
எடுத்து ஆணைகள் பிறப்பித்தாள் ஜகனாரா. இம்பீரியல் முத்திரை வழங்கும் அளவு மிகச் சக்தி
வாய்ந்த இளவரசியாக விளங்கிய அவளது பலம் அரண்மனையில் நிறைய எதிரிகளை உருவாக்கியது. குறிப்பாக
ரோஷனாராவும் ஔரங்கசீப்பும் முடிசூடா ராணியாகத் திகழ்ந்த அவளை மிக வெறுத்தார்கள்.
ஜகனாராவுக்குத் தன் தம்பிகளில் தாரா ஷிக்கோவை அதிகம் பிடிக்கும்.
அவரே தன் தந்தைக்குப் பின் அரியணை ஏறத் தகுதியானவர் எனக் கருதினார். ஏனெனில் தாரா ஷிக்கோ
ஜகனாராபோல் சூபி மார்க்கத்தில் பற்றுடையவர். இருவரும் முல்லா ஷா படாக்ஷியின் சீடர்களாக
இருந்தார்கள்.
சதி அல் நிஸா என்பவர் இவர்கள் அனைவருக்கும் குரான் கல்வி, மருத்துவம்,
வீட்டுப் பராமரிப்பு, பாரசீக இலக்கியங்களைக் கற்பித்தார். வாசிப்பு, ஓவியம், கவிதை,
போலோ விளையாட்டு, வேட்டையாடுதலில் மட்டுமின்றி, பாரசீக, இந்திய, துருக்கிய மற்றும்
உலக இலக்கியங்களில் பரிச்சயம் பெற்றிருந்தனர். அக்பர் உருவாக்கிய நூலகமும் இவர்கள்
அறிவை விரிவாக்கிக் கொள்ளத் துணை புரிந்தது.
மத நல்லிணக்கத்துக்காக உபநிஷத்துக்களை பாரசீகமொழியில் மொழிபெயர்த்தவர்
தாரா. ஜகனாராவுமே ஷேக் மொய்னுதீன் சிஸ்டியின் வாழ்க்கை வரலாறான முனீஸ் அல் அர்வாஹ்
என்ற நூலை எழுதியவர். ரிஸாலாஹ்-ஐ-ஸாகிபியாங் என்ற முல்லா ஷாவின் வாழ்க்கை வரலாற்றையும்
எழுதியவர்.
தாரா எழுதிய “மஜ்மஉல்பஹ்ரெயின்” என்ற நூல் சூபி இசம், இந்துமதம்
ஆகியவற்றுக்கிடையேயான பொதுத்தன்மையைக் கூறுகிறது. இதை மத விரோதச் செயலாக எண்ணியே ஔரங்கசீப்
தாராவை எதிர்த்தார்.
தன் தாயின் கடைசி ஆசைப்படி ஜகனாரா தாராஷிக்கோவுக்கும் நாதிராபானுவுக்கும்
திருமணத்தை முன்னின்று நடத்தினார். அப்போது அந்நிகழ்வுக்காக இவர் அணிந்திருந்த விலையுயர்ந்த
பட்டாடைகளில் எதிர்பாராதவிதமாகத் தீப்பற்றியது. இது அவர்மேல் பொறாமை கொண்ட தந்திரக்காரச்
சகோதரி ரோஷனாராவால் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்பது வதந்தி. முகத்திலும் கழுத்திலும்
தீக்காயம் ஏற்பட்டது.
தன் அன்பிற்கும் அபிமானத்துக்கும் உரிய மகளின் அழகுமுகம் தீக்காயத்தால்
கோரமாக ஆனதைக் கண்ட பேரரசர் ஷாஜகான் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தார். தன் மகளின்
நோவு தீரவும் அவளின் முகம் பழைய அழகைப் பெறும் வரையிலும் தினமும் ஏழைகளுக்கு ஆயிரம்
பொற்காசுகள் வழங்கி வந்தார்.
ஈரானிய மருத்துவரோ, ஆங்கிலேய மருத்துவரோ கொடுத்த சிகிச்சையில்
ஜகனாரா ஓரளவு குணமடைந்தார். அந்த மகிழ்வில் தந்தை கொடுத்த சூரத் துறைமுகத்தின் வரி
வசூல் இவர் வசம் வந்தது. தாய் இறந்த பிறகு அவரின் சொத்தில் பாதியைப் பெற்றிருந்தார்.
மேலும் ஜகனாரா தோட்டம், நூர் தோட்டம், சஃபா தோட்டம் ஆகியவையும் அச்சோல், ஃபர்ஜகாரா,பச்சோல்,
சஃபாபூர், தோஹாராஹ் ஆகிய கிராமங்களும் சொந்தமானது. டச்சுக்காரர்களோடு கப்பல் வணிகமும்,
ஆங்கிலேயர்களோடு பட்டு, மசாலாப் பொருட்கள், இண்டிகோ எனப் பல்வேறு வணிகமும் செய்து வந்தார்.
தனக்கெனத் தனி அரண்மனை கட்டி வசிக்கும் அளவு வசதி பெற்றிருந்தார் ஜகனாரா.
1658 இல் ஷாஜகான் உடல் நிலை சீர்கேடு அடைய அவரின் புதல்வர்களுக்குள்
அரசாட்சிக்கான பதவிப் போட்டி தொடங்கியது. ஜகனாரா நேர்மையான தாராஷிக்கோவை ஆதரித்தாலும்
பெற்றோர் மேல் ஏகப்பட்ட அதிருப்தியில் இருந்த ரோஷனாரா, ஔரங்கசீப் கூட்டணியே வென்றது.
தாரா ஷிக்கோ உட்படத் தன் மற்ற சகோதரர்களை அழித்து ஒழித்து விட்டு ஔரங்கசீப் ஆட்சிக்கு
வந்தார்.
ஆட்சிக்கு வந்ததும் ஔரங்கசீப் செய்த முதல் வேலை தன் தந்தையைத்
தனிமைச் சிறையில் அடைத்தது. தந்தையினை ஆதரித்த
தன் சகோதரி ஜகனாராவையும் போனால் போகிறது என்று அதே ஆக்ராச் சிறையில் தள்ளினார். தன்
பஞ்சடைந்த கண்களால் ஷாஜகான் அங்கிருந்தே யமுனை நதியைத் தாண்டித் தெரிந்த சிறு பிம்பமான
தாஜ்மஹலை ஒரு கண்ணாலும் தன் அன்புக்குரிய மகளை இன்னொரு கண்ணாலும் பார்த்து வருந்திக்
கொண்டிருந்தார்.
”வெள்ளைப் பாம்பு” என்று இவரைப் பற்றித் தன் சுயசரிதத்தில் குறிப்பிட்டாலும்,
தந்தை வழங்கிய நாட்டின் ”முதல் பெண்மணி” என்ற அதே பதவியைத் தம்பியும் வழங்கினார் ஜகனாரா
பேகத்துக்கு. தந்தையின் மறைவுக்குப் பின்னும் அரசியல் சுழலுக்குள் திரும்பப் புகுந்தார்
ஜகனாரா.
தன் தம்பியின் ஆட்சிக்கும் பழமைவாத மதக் கருத்துக்களுக்கும்
எதிர்க் கருத்துக்களைத் துணிவுடன் எடுத்து கூறி வாக்குவாதம் செய்யும் வல்லமையையும்
பெற்றிருந்தார் ஜகனாரா.1679 ஆம் ஆண்டில் முஸ்லீம் அல்லாதவர்கள் மீதான தேர்தல் வரியை
ரத்து செய்யும்படித் தனது சகோதரனிடம் வலியுறுத்தியவர் இவரே.
தந்தையின் மறைவுக்குப் பின் அரண்மனைப் பெண்களை இவர்தான் அரவணைத்துக்
காத்தார். முதல் பெண்மணிக்கு நிறையக் கடமைகள் உண்டு, ஆனால் உரிமைகள்தான் சொற்பம். ஜகனாரா
பேகத்துக்குக் கொடுத்த பல சலுகைகளை ஔரங்கசீப் தன்னை நம்பிய ரோஷனாரா பேகத்துக்குக் கூடக்
கொடுக்கவில்லை.
தன் தந்தையைக் கவனிக்க வேண்டியே தன் காதல் வாழ்வையும் தியாகம்
செய்தவர். அரச குடும்பங்களுக்கான சாபங்கள் அதன் வாரிசுகளின் மேல் விடியும் என்பார்கள்.
அதன் எடுத்துக்காட்டாய் வாழ்ந்து மறைந்தவர்தான் ஜகனாரா. சாதாரணப் பெண்களைப் போலத் தன் காதல் வாழ்க்கையைத்
தொடரக் கூட முடியவில்லை அவரால். மிர்ஸா நஜபத்
கானுடனான தன் காதலைத் தாயிடம் தெரிவித்து இருந்தாள் ஜகனாரா. ஆனால் அவள் திருமணத்தை
முடிக்குமுன்னே மும்தாஜ் போய்ச் சேர்ந்துவிட்டார்.
வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட முதிய தந்தைக்குத் தன்னை விட்டால்
யாரும் ஆதரவில்லை என்பதை உணர்ந்தாள் ஜகனாரா. எப்போதும் அவளது மேற்பார்வையில் தயாரிக்கப்பட்ட
உணவே அவருக்கு அளிக்கப்பட்டது. தனது 74 ஆவது வயதில் மறைந்த தன் தந்தையின் கடைசி மூச்சு
வரை அவரைப் பராமரித்து வந்த ஜகனாரா அன்பின் எடுத்துக்காட்டு.
ஜகனாராவினுடைய கடைசிக் காலமும் நோயுடன் மனச்சோர்விலும், தனிமையிலும்
துயரத்திலும் கழிந்தது. அளவற்ற சக்தியும் திறமையும் படைத்த அழகிய ஜகனாரா செப்டம்பர்
6, 1681 இல் தனது 67 ஆவது வயதில் மறைந்தார். எவ்வளவு சொத்துக்குச் சொந்தக்காரராக இருந்தும்
கடைசியில் அவரிடம் இருந்தது சில உடைகளும் சொற்ப நகைகளுமே. கடைசிக் காலங்களில் தன் தாய்
தந்தையின் காதலைத் தன் ஓவியங்களிலும், கவிதைகளிலும் வெளிப்படுத்தி அவர்களைக் கௌரவப்படுத்தினார்
ஜகனாரா. டெல்லியின் நிஜாமுதீன் தர்க்காவில்
பசும்புல் போர்த்திய அவரின் எளிய கல்லறை அமைந்துள்ளது.
மும்தாஜ்மஹல், ஜகனாரா, தாஜ்மஹல்: ஒரு முடிவற்ற காதல் கதை
(2005) என்ற மூன்று திரைப்படங்கள் இவரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)