மஹிஷனை வதைத்த பராசக்தி
பெண் அன்னை பெண் சக்தி என்கிறோம் ஆக்கும் சக்தியும் அவளே ரௌத்திரம் வந்தால் அழிக்கும் சக்தியும் அவளே. பெண்ணைத் துச்சமாக எண்ணி வரம் கேட்ட ஒரு அசுரன் பெண்ணால் அழிந்த கதையே மகிஷாசுரவதம்.
முன்னொரு காலத்தில் தநு என்னும் அரசனுக்கு ரம்பன், கரம்பன் என்ற இரு புதல்வர்கள் இருந்தார்கள். ஏற்கனவே பலசாலிகளாக இருந்த இருவரும் தவம் இயற்றி இன்னும் பலம் பெற விரும்பினார்கள். கரம்பன் நீரில் மூழ்கி மாபெரும் தவம் இயற்றினான். ரம்பன் நெருப்பின் நடுவில் நின்று தவம் செய்தான். கரம்பனுடைய தவத்தின் வேகத்தை கண்டு, எங்கே தன்னுடைய இந்திர பதவிக்கு ஆபத்து வந்து விடுமோ எனப் பயந்த இந்திரன் முதலை உருவில் வந்து நீருக்குள் கரம்பனை இழுத்துச் சென்று கொன்று விட்டான்.
இதனை அறிந்த ரம்பன் பஞ்சாக்னியின் நடுவில் இன்னும் உக்கிரமாகத் தவம் செய்து தன் தலையை வெட்டி நெருப்பில் ஆகுதியாகத் தர முனைந்தான். இதனை மெச்சிய அக்னி தேவன் ரம்பனுக்குக் காட்சி அளித்து, அவனுக்கு ''ஒப்புயர்வற்ற, கீர்த்தி வாய்ந்த, வலிமையுடைய மகன் பிறப்பான்'' என்று வரம் அளித்தார்.
அந்த நேரத்தில் ரம்பன் முன்பு ஒரு கருத்த எருமை வர அவன் அதனோடு இணைந்ததில் ஒரு குழந்தை உருவானது. அந்நிலையில் ஒரு எருமைக்கடா அந்தப் பெண் எருமையுடன் இணைய விரும்பி வர, ரம்பன் பெண் எருமையைக் காக்க வேண்டி அக்கடாவுடன் பாதாளம் வரை புகுந்து போர் புரிந்தான். அப்போரில் கடா ரம்பனைக் கொன்றுவிட, பெண் எருமை ரம்பனோடு உடன்கட்டை ஏற விழைந்தது.
அப்போது அதற்கு எருமைத் தலையும் அசுர உடலும் கொண்ட ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவனே மஹிஷன் ஆவான். தன் பிறப்பை அறிந்த மஹிஷன் தேவர்களிடம் விரோதம் கொண்டு அவர்களை அழிக்கவும், இன்னும் பலம் பெறவும் வேண்டிப் பிரம்மதேவனை நோக்கித் தவம் இருந்தான். கடுந்தவம்.
பிரம்மலோகத்தில் இருந்து பிரம்ம தேவரே பிரத்யட்சமாகத் தோன்றி, ''வேண்டிய வரம் என்ன'' என்று கேட்டார். அதற்கு அவன் 'பெண்களைத் தவிரத் தனக்கு யாராலும் மரணம் நேரக்கூடாது' என்ற வரம் கேட்டான். பெண்களால் தன்னை எதுவும் செய்ய முடியாது என்ற ஆணவத்தாலேயே அவ்வாறு கேட்டான் ஆனால் அதுவே அவனது முடிவுக்கு காரணமானது.
வரத்தைப் பெற்ற மஹிஷன் செருக்கு மிகக் கொண்டு இந்திரனுடன் போர் புரிய வேண்டித் தூதன் ஒருவனை அனுப்பினான். அவன் மஹிஷனுடைய வீர பிரதாபங்களைக் கூறி சரணடையுமாறு சொல்ல, இந்திரன்தூதனிடம் 'புல் தின்பவன் அமுதம் உண்டவனோடு போர் செய்ய முடியுமா? பிழைத்துப் போக சொல்' என்று பரிகசித்தான்.
இந்திரனின் இகழ்ச்சியுரை மஹிஷனைக் கடுங்கோபம் கொள்ளச் செய்ய, அவன் தேவர்களுடன் போரை ஆரம்பித்தான். பிரம்மன், திருமால் ஆகியோர் துணையைப் பெற்று இந்திரனும் மகிஷனுடன் பெரும் போரைத் தொடர்ந்தான். பயங்கரமான அப்போரில் அசுரப் படை தேவர்களை எல்லாம் விரட்டி அடிக்க, இந்திரன் தோற்று ஓடினான்.
மஹிஷன் தேவர்களைத் தனக்குப் பணியாளர்களாக அமர்த்தினான். ஐராவதத்தின் மீது ஏறி இந்திரபுரியை அடைந்தான். தோற்றோடிய இந்திரன் பிரம்மாவிடம் ஆலோசனை கேட்க, அவர் சிவபெருமானைத் தஞ்சமடையுமாறு கூறினார். சிவபெருமானை அவர்கள் துதிக்க அவர் அம்பிகையைப் போருக்கு அனுப்பலாம் என்று யோசனை கூறினார். அவர்கள் அனைவரும் அம்பிகையைத் துதிக்கப் பராசக்தி தோன்றினாள்.
அவர்கள் துதியைக் கேட்டு மகிழ்ந்த அவள் அவர்களிடம் ''வேண்டியது யாது'' என வினவினாள். அவர்கள் மஹிஷனைக் கொல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்து, தமக்குரிய தெய்வப் படைகளையும் தேவியிடம் அளித்தார்கள். அவர்கள் மேலும் மேலும் துதிக்கவும் தேவியானவள் சிம்ம வாகனத்தில் ஏறி, "தேவர்களே! அச்சம் வேண்டாம். நான் மகிஷாசுரனை வதம் செய்வேன்" என்று உறுதி கூறினாள்.
பலவித ஆயுதங்களோடு அசுரர்கள் இருக்கும் இடத்தை அடைந்த தேவி பயங்கரமாகக் கர்ஜனை செய்தாள். அப்பொழுது அவள் அழகைக் கண்டு மயங்கிய மகிஷன் தன் மந்திரிகளில் ஒருவனை அழைத்துத் தேவியிடம் சென்று 'என் பெருமைகளை எடுத்துக் கூறி என்னை மணந்து கொள்ளும்படிச் செய்' என்று சொல்லி அனுப்பினான்.
மந்திரி அவ்வாறே சென்று மஹிஷனின் பெருமைகளை உரைத்து அவனை மணந்து கொள்ளும்படிச் சொல்ல, அதைக் கேட்ட பராசக்தி கைகொட்டி நகைத்தாள்." நான் பரமேஸ்வரனுடைய பத்னி. நாங்கள் இருவரும் ஒருவரே. எங்களை பற்றிய உண்மையை வேதம் கூறும். இதை உன் தலைவனிடம் உறைக்கும்படிச் சொல். இங்கிருந்து ஓடி விடு. உன்னை மன்னித்தேன்" என்றாள்.
ஆனால் மஹிஷனுக்கோ விநாச காலே விபரீத புத்தி என்ற வாக்கியத்திற்கு ஏற்பப் புத்தி கெட்டுப் போய் இருந்தது. அவன் அன்னையுடன் போர் புரியத் தீர்மானித்தான். போர் தொடங்கியது. கடுமையான போர். ரத்த ஆறு ஓடியது. போரில் தாமிரன், சிட்சு அசிலோமன் போன்ற அசுரர்கள் இறந்து பட மகிஷாசுரனே தேவியுடன் போர் செய்ய வந்தான்.
மஹிஷனுக்கும் தேவிக்கும் வீரவாதம் நிகழ்ந்தது. தேவியின் மீது தீராத காதல் கொண்டு "அழகியே! என்னை மணப்பாயாக" என்றான். அடாத அச்சொல்லை கேட்ட தேவி "அடா எருமையே! நீயோ எருமை. நான் தெய்வமகள் மற்றும் இன்னொருவருடைய மனைவி. உன்னை வதம் செய்வதற்காக வந்திருக்கிறேன். இந்நிலையில் என்ன உரை பேசிக் கொண்டிருக்கிறாய்? எடு படையை. தொடங்கு உன் போரை" என்று வீரமுழக்கம் செய்தாள்.
தேவிக்கும் மஹிஷனுக்கும் இடையே கடுமையான போர் நிகழ்ந்தது. மஹிஷன் பல மாயப் போர்களை நிகழ்த்தியும் அவனுக்குத் தோல்வியே ஏற்பட்டது. காலம் நீண்டு கொண்டே செல்லத் தேவர்கள் கலங்கினார்கள். முடிவில் அன்னை பராசக்தி அடக்கமாட்டாத சினம் கொண்டு அவனைக் கீழே தள்ளி மூர்ச்சை ஆகும்படிச் செய்தாள். அவன் திரும்ப மயக்கம் தெளிந்து மீண்டு வந்த போது தன் சக்கராயுதத்தால் அவனது தலையை அறுத்து வீழ்த்தினாள்.
தொடர்ந்து சக்கராயுதம் மற்ற அசுரர்களையும் வீழ்த்தத் தொடங்கியது. தேவர்கள் அன்னை முன் தோன்றி," மகிஷாசுரனைக் கொன்ற மகேஸ்வரியே! உனக்கு நமஸ்காரம்" என்று போற்றித் துதித்தார்கள். இதன் பின் சும்பநிசும்ப வதம், அதற்குப் பிறகு மகாகாளியின் தோற்றம், அவளுடைய கோரமான போர் நடைபெற்றது. சாமுண்டீஸ்வரியின் எல்லையற்ற பராக்கிரமம் வெளிப்பட்டது. சப்தமாதாக்ககளின் பெருமையும் தேவி பாகவதத்தில் கூறப்படுகிறது.
இவ்வாறாக அன்னை என்பவள் பெண் சக்தி. ஆக்கும் சக்தியும் அவளே, அழிக்கும் சக்தியும் அவளே. பெண் தானே, அவள் தன்னைவிடப் பலமற்றவள்தானே என்று நினைத்து விட்டதால் மகிஷாசுரனுக்கு அவள் மூலமே அழிவு ஏற்பட்டது. ஆகையால் மஹிஷனை வதைத்த பராசக்தி மகிஷாசுரமர்த்தினியானாள்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)