எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
திருநெல்லை இதழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருநெல்லை இதழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 செப்டம்பர், 2026

படிக்காசு பெற்ற முத்துத் தாண்டவர்

படிக்காசு பெற்ற முத்துத் தாண்டவர்


பாடலே பாடத் தெரியாதவர் பல நூறு கீர்த்தனைகள் பாடியதும் அதற்குப் பரமேஸ்வரனின் திருச்சன்னதியில் தினந்தோறும் படிக்காசு பெற்றதும் வியப்பான செய்திகள் தானே? 15 ஆம் நூற்றாண்டில் பிறந்து அப்படிப் படிக்காசு பெற்ற சிறப்பான ஒருவரைப் பற்றி பார்ப்போம்.

சீர்காழியில் இசை வேளாளர் குடும்பத்தில் தோன்றியவர் தாண்டவர். தில்லையில் தாண்டவம் ஆடும் மூர்த்தியை எண்ணி தம் மகவுக்கு அப்பெயரை இட்டனர் பெற்றோர்.

சீரும் சிறப்புமாகக் கழிந்தது அவரது குழந்தை பருவம். என்ன நிகழ்ந்ததோ தெரியவில்லை வளரிளம் பருவத்தில் அவர் உடம்பில் இன்னவென்று சொல்ல  இயலாத ஒரு நோய் புகுந்து துன்புறுத்தியது. அதைத் தொழுநோய் என்று நினைத்த பெற்றோர் அவரை வீட்டுக்குள்ளேயே ஒதுக்கி வைத்தார்கள்.

திங்கள், 24 ஆகஸ்ட், 2026

பந்த பாசங்களைச் சீர்ப்படுத்தும் ஸ்ரீதேவி மந்திரம்


உலகில் உள்ள பெண் வடிவங்கள் எல்லாம் நம் தாயின் வடிவங்களே என்று கூறும் மந்திரம் ஒன்று உள்ளது. மேலும் நம் மனக்கவலையை நீக்கவும், பந்தபாசங்களை அறுக்கவும், அதே சமயம் ஞானம் கிட்டவும் அம் மந்திரம் உதவுகிறது என்று அறியும்போது வியப்பு மேலிடுகிறதுதானே. அது என்ன மந்திரம் என்று அறிய ஆவலாய் இருக்கிறது அல்லவா!  மேலும் அந்த மந்திரம் எப்படி ஒரு மன்னனுக்கும் மனிதனுக்கும் உதவியது என்றும் பார்ப்போம்.


முன்னொரு காலத்தில் சுரதன் என்னும் அரசன் தன்னுடைய நாட்டை ஆண்டு வந்தான். திடீரென அவனுடைய அண்டை நாட்டு மன்னர்கள் அவன் மீது படையெடுத்தனர். அவனுடைய நாட்டை சூழ்ந்து வளைத்து முற்றுகையிட்டனர். எதிர்பாராத அந்தத் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த மன்னன் அதற்குத் தயாராக தன்னுடைய படையை வைத்து இல்லாததால் தோல்வி அடைந்தான். எனவே நாட்டை விட்டு வெளியேறும்படி ஆயிற்று. மனம் நொந்து அவன் காட்டை அடைந்தான். மரங்கள் சூழ்ந்த அந்த அடர்வனத்துக்குள் மனம் போன போக்கில் நடந்து கொண்டிருந்தான்.

புதன், 5 ஆகஸ்ட், 2026

சிம்மவர்மன் இரண்யவர்மன் ஆன கதை

 சிம்மவர்மன்  இரண்யவர்மன் ஆன கதை



எப்பேர்ப்பட்ட நோயாக இருந்தாலும் இறைவனின் கருணை இருந்தால் அது சூரியனைக் கண்ட பனி போல விலகி விடும் என்பதற்குச் சிம்மவர்மன்  என்ற மன்னனின் கதையே எடுத்துக்காட்டு.

முன்னொரு காலத்தில் கௌட தேசம் என்ற ஒரு தேசம் இருந்தது. அதை அரசாண்ட மன்னனின் மூத்த குமாரனின் பெயர் சிம்மவர்மன். பெயர்தான் கம்பீரமாக சிம்மவர்மன் என்று இருந்ததே தவிர அவன் உடல் முழுதும் நோயால் பீடிக்கப்பட்டிருந்தது. ஆகையால் அவன் தன் நாட்டில் இருக்க விருப்பமின்றி, முடிசூட்டி அதை ஆளும் எண்ணமும் இன்றி ராஜ்யத்தைச் சுற்றிப் பார்க்க கிளம்பினான்.

வெள்ளி, 24 ஜூலை, 2026

குபேரர் ஆன குசேலர்

 குபேரர் ஆன குசேலர்


நண்பர்கள் ஒருவருக்காக இன்னொருவர் உதவி செய்வதும்அதே இன்னொருவர் ஒரு சில சமயங்களில் சுயநலமாய் நடந்து கொள்வதும் நாம் காணக்கூடியதேஅப்படிப்பட்ட ஒருவர்தான் சுதாமாயார் அந்த சுதாமா என்று கேட்கிறீர்களாஅவர்தான் கிருஷ்ண பரமாத்மாவின் பால்ய தோழர்சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் குருகுலக்கல்வி முறையில் கிருஷ்ணருடன் பயின்றவர்குசேலனான அவர் எப்படிக் குபேரன் ஆனார் என்று பார்ப்போம்

உஜ்ஜினியில் உள்ள சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் கிருஷ்ணரும் குசேலரும் பயின்று வந்தார்கள் அக்காலங்களில் குருகுலங்களில் பயில்பவர்கள் குருசேவை செய்ய வேண்டும்குருபத்தினி கூறும் பணிகளை நிறைவேற்ற வேண்டும்அவ்வாறாக ஒருமுறை குருவின் வயலில் நீர்வரத்து அதிகம் இருந்ததால் பயிர் அழிந்துவிடும் என்று வரப்பில் மண்ணை வெட்டிப்போட்டு அடைக்க கிருஷ்ணர் செல்லவேண்டிய முறை வந்தது.

புதன், 29 ஏப்ரல், 2026

பிச்சாடனரின் ஆனந்த தாண்டவம்

 பிச்சாடனரின் ஆனந்த தாண்டவம்


முன்னொரு காலத்தில் ஆறு சாத்திரங்களையும் நன்கு கற்று, நான்கு வேதங்களையும் முறைப்படி ஓதி அதன்படி வாழ்ந்து வந்தார்கள் சில முனிவர்கள். அக்னி காரியம் செய்வதும், வேதங்கள் ஓதுவதும் மட்டுமே தமக்குப் போதுமென்று எண்ணி, எல்லாவற்றிற்கும் காரணமான ஈஸ்வரனை மறந்தார்கள்.  என்னதான் தவவலிமை பெற்றிருந்தாலும், அகந்தையுற்று ஈஸ்வரத் தியானம் செய்யாததால்  முனிவர்கள் பட்ட துயரையும், அவர்களை நெறிப்படுத்த ஈஸ்வரன் ஆடிய தாண்டவத்தையும் பற்றிப் பார்ப்போம்.

தாருகாவனம் என்ற வனத்தில் முனிவர்கள் தங்கள் பத்தினிகளுடன் வசித்து வந்தார்கள். சாஸ்திர முறைப்படி அவர்கள் அக்னி ஹோமங்களை வளர்த்து வணங்கி வந்தார்கள். ஆனால் எல்லாவற்றிற்கும் காரணமான ஈஸ்வரனின் நினைவே இல்லாமல் இருந்தார்கள். அவர்களை நல்வழிப்படுத்தும் எண்ணம் கொண்டு ஈஸ்வரன் மகாவிஷ்ணுவோடு அங்கே எழுந்தருளினார். அதுவும் எப்படி?

வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

மஹிஷனை வதைத்த பராசக்தி

 மஹிஷனை வதைத்த பராசக்தி


பெண் அன்னை பெண் சக்தி என்கிறோம் ஆக்கும் சக்தியும் அவளே ரௌத்திரம் வந்தால் அழிக்கும் சக்தியும் அவளே. பெண்ணைத் துச்சமாக எண்ணி வரம் கேட்ட ஒரு அசுரன் பெண்ணால் அழிந்த கதையே மகிஷாசுரவதம்.

முன்னொரு காலத்தில் தநு என்னும் அரசனுக்கு ரம்பன், கரம்பன் என்ற இரு புதல்வர்கள் இருந்தார்கள். ஏற்கனவே பலசாலிகளாக இருந்த இருவரும் தவம் இயற்றி இன்னும் பலம் பெற விரும்பினார்கள். கரம்பன் நீரில் மூழ்கி மாபெரும் தவம் இயற்றினான்.  ரம்பன் நெருப்பின் நடுவில் நின்று தவம் செய்தான். கரம்பனுடைய தவத்தின் வேகத்தை கண்டு, எங்கே தன்னுடைய இந்திர பதவிக்கு ஆபத்து வந்து விடுமோ எனப் பயந்த இந்திரன் முதலை உருவில் வந்து நீருக்குள் கரம்பனை இழுத்துச் சென்று கொன்று விட்டான்.

சனி, 17 ஜனவரி, 2026

அம்மையப்பருக்காய்த் தம்மையே அர்ப்பணித்த அமர்நீதியார்

 அம்மையப்பருக்காய்த் தம்மையே அர்ப்பணித்த அமர்நீதியார்


பொன் பொருள் திரவியம் எதுவுமே இறைவன் தந்த பொருளுக்கு ஈடானதல்ல. திருத்தொண்டும் இறைப்பற்றுமே நிறைப் பொருள் என்று தம் வாழ்க்கை மூலம் நிறுவி இறைப் பொருளுக்கு ஈடாகத் தம்மை மட்டுமல்ல தம் குடும்பத்தையே அர்ப்பணித்தார் நாயனார் ஒருவர். அவர்தான் அமர்நீதி நாயனார். இகலோக வாழ்விலும் அவர் மெய்ப்பொருளைப் பற்றிச் சிவலோக வாழ்வினை அடைந்தவிதம் பார்ப்போம்.

சோழ நாட்டில் பழையாறை என்னும் ஊரில் பிறந்தவர் அமர்நீதியார். வணிகக் குலத்தைச் சார்ந்த இவர் தொட்டதெல்லாம் பொன்னாகத் துலங்கியதால் பெரும் பொருட்செல்வம் கொண்டிருந்தார். திருநல்லூரில் வாழ்ந்து வந்த அவர் பெருஞ்செல்வந்தராய் இருந்தாலும் சிவன்மேல் பேரன்பு பூண்டு சிவனடியார்களுக்குத் திருவமுது படைத்தல், கௌபீனம் அளித்தல், ஆகிய திருத்தொண்டுகளைச் செய்துவந்தார்.

வியாழன், 1 ஜனவரி, 2026

பகைவனுக்கும் அருளிய மெய்ப்பொருள் நாயனார்

பகைவனுக்கும் அருளிய மெய்ப்பொருள் நாயனார்


தன் குடிமக்களுக்கு நன்னெறியின் எடுத்துக்காட்டாய் விளங்கி, பகைவரிடத்தும் அறநெறி தவறாத அரசர் ஒருவர் முற்காலத்தில் இருந்தார். அவர் சிவனடியார்களை எல்லாம் சிவத் திருவுருவாகவே எண்ணிப் போற்றிப் பூசித்தவர். அப்படிப்பட்டவரைத் தன் தவ வேடத்தால் ஏமாற்றினான் பகைவன் ஒருவன். அவனது திருவேடத்தை உண்மை என்று நம்பியது மட்டுமல்ல, அவன் அடுத்துக் கெடுத்தபோதும் அத்திருவேடத்துக்காகவே அவனை நமர் என்று கூறிக் காப்பாற்றினார் அவ்வரசர்.

சோழவள நாட்டிற்கும் தொண்டை நாட்டிற்கும் இடையில் அமைந்திருந்தது திருக்கோவிலூர் என்னும் ஊர். அதை ஆண்ட குறுநில மன்னர் மாபெரும் சிவபக்தர். சிவனையே மெய்ப்பொருள் என்று கருதியதால் அவர் மெய்ப்பொருள் நாயனார் என்றும் அழைக்கப்பட்டார். சிவாலயங்களில் ஆறுகால பூசைகளையும், விழாக்களையும் குறைவற நடத்தி வந்தார். சிவனடியார்கள் யார் வந்தாலும் அவர்களுக்கு வேண்டியதை எல்லாம் வாரி வாரி வழங்குவார்.

வியாழன், 4 டிசம்பர், 2025

கிருஷ்ணர் கொடுத்த குரு தட்சணை

கிருஷ்ணர் கொடுத்த குரு தட்சணை


புராணக் காலங்களில் குழந்தைகள் குருகுல முறைப்படிக் கல்வி பயின்றனர். குருகுலக் கல்வி முடியும்போது தங்கள் குருவுக்குத் தக்க முறைப்படிக் குரு தட்சணை அளித்து வணங்கி மகிழ்வார்கள். கிருஷ்ணர் சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் குருகுலக் கல்வி முடித்தபோது தட்சணை தர முன் வந்தும் அவரது குரு அதை மறுத்தார். ஆனால் தன் குருவுக்கு ஏதாவது தட்சணை தந்தே ஆக வேண்டும் என விரும்பிய கிருஷ்ணர் வித்யாசமான குரு தட்சணையைச் சமர்ப்பித்தார்.

மதுராவில் பலராமருக்கும் கிருஷ்ணருக்கும் கர்கர் என்ற மகரிஷி மூலம் பூணூல் சடங்கையும், காயத்ரி மந்திர உபதேசத்தையும் செய்வித்தார் வசுதேவர். அதன் பின் அவர்கள் சாஸ்திரங்களிலும் அஸ்த்ர சஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்துக்கு வந்தனர்.

திங்கள், 6 அக்டோபர், 2025

பக்தியால் வென்ற சுதர்சனன்

 பக்தியால் வென்ற சுதர்சனன்


பிறந்த சில காலத்திற்குள் பெற்ற தந்தையையும் பிறந்த பொன்னாட்டையும் விதிவசத்தால் இழந்தான் ஒரு ராஜகுமாரன். ஆனால் பராசக்தியின் மேல் பக்தி வைத்ததால் தான் இழந்த நாட்டையும் அரச பதவியையும் திரும்பப் பெற்றான் அவன். அவனது அபரிமித பக்தியால் அன்பகலாத மனைவியும் கிடைத்தாள். அவனுடைய கதையைப் பார்ப்போம்.

கோசல நாட்டை சூரிய வம்சத்தில் தோன்றிய துருவசிந்து என்ற மன்னன் ஆண்டுவந்தான். இவனுக்கு மனோரமா என்ற பட்டத்து ராணியும், லீலாவதி என்ற ஆசை மனைவியும் உண்டு. ஒரே சமயம் இருவரும் கருத்தரித்து மனோரமாவுக்கு சுதர்சனன் என்ற மகனும், லீலாவதிக்கு சத்ருஜித் என்ற மகனும் பிறந்தார்கள்.

ஒருமுறை காட்டிற்கு வேட்டையாடச் சென்றான் துருவசிந்து. பாய்ந்து வந்தது சிங்கம் ஒன்று. மன்னன் தன் வலிமை முழுவதும் காட்டிப் போரிட்டும் அது மன்னனைக் கடித்துக் கொன்று விட்டது. உடனே நாட்டில் ஆரம்பித்து விட்டது சத்ருஜித் மற்றும் சுதர்சனனின் வாரிசுரிமைப் போராட்டம்.

ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

சாபம் நீங்கி ஞானம் பெற்ற சத்தியதவன்

 சாபம் நீங்கி ஞானம் பெற்ற சத்தியதவன்


முன்னோர் செய்த புண்ணியம் தலைமுறை தலைமுறையாகத் தொடரும். அதேபோல்தான் அவர்கள் செய்த பாவமும். நாகாவாமல் தன் தந்தை செய்த பிழையால் சாபத்தோடு பிறந்து அம்பிகையின் பீஜாக்ஷரத்தால் ஞானம் பெற்ற சத்தியதவனைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

வேத காலத்தில் கோசல தேசத்தில் தேவதத்தன் தன் மனைவி ரோகிணியுடன் வசித்து வந்தான். பல்லாண்டுகாலம் பிள்ளைப்பேறு இல்லாததால் இருவரும் மனம் வருந்தினார்கள். புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால் பிள்ளைப் பேறு உண்டாகும் என்று சொல்லப்பட அதற்கான யத்தனங்களில் இறங்கினான் தேவதத்தன்.

வெள்ளி, 18 ஜூலை, 2025

சேந்தன் இட்ட களியைக் கூடக் களிப்போடு உண்ட ஈசன்

 சேந்தன் இட்ட களியைக் கூடக் களிப்போடு உண்ட ஈசன்


என்னது ஈசன் களி உண்டாரா.. அதுவும் களிப்போடு உண்டாரா என ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா. ஆம் அடிமுடி அறிய ஒண்ணாதவர், ஆதியந்தம் அற்றவர், தில்லையின் அம்பலவாணர், தன் பக்தனான சேந்தன் இட்ட களியை உண்டு அதைக் களிப்போடு உலகத்தாருக்கும் அம்பலப்படுத்தினார். அக்கதையைப் பார்ப்போம் வாருங்கள்.

பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருவெண்காடர் எனப்படும் பட்டினத்தடிகளின் முதன்மைக் கணக்காளர் சேந்தனார். மருதவாணன் கொடுத்த ஞானத்தால் துறவறமேற்ற பட்டினத்தடிகள் தனது கருவூலத்தில் உள்ள பொருட்களை ஏழை எளியோருக்கு வழங்கிவிடும்படித் தனது கணக்காளரான சேந்தனாரிடம் கட்டளையிட்டார்.

புதன், 2 ஜூலை, 2025

பிரலம்பாசுரனுக்கு முக்தி அளித்த பலதேவர்

பிரலம்பாசுரனுக்கு முக்தி அளித்த பலதேவர்


தேவகிக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தையினால் தனக்கு அழிவு ஏற்படும் என்பதை அசரீரி கூறக் கேட்ட கம்சன் ஒவ்வொரு நாளும் கோகுலத்துக்குக் கிருஷ்ணரை அழிக்கப் பூதனா, சகாட்சுரா, பகாசுரா என்று அரக்கர்களை அனுப்பிக் கொண்டிருந்தான். இவர்களை எல்லாம் குழந்தை கிருஷ்ணர் அழித்ததால் அடுத்துப் பிரலம்பாசுரன் என்பவனை அனுப்பினான். இவனிடமிருந்தும் குழந்தைக் கிருஷ்ணரும், பலராமரும் எப்படித் தப்பினர் என்பதைப் பார்ப்போம்.

யமுனை நதிக்கரையில் பாண்டீரவனம் என்றொரு வனம் இருந்தது. ஆநிரைகளின் மேய்ச்சலுக்கு உகந்த இடம் பசும்புற்களும், சுனைப் புற்களும், நிரம்பிய இடம் அது.  மேலும் குழந்தைகள் எல்லாம் ஊஞ்சலாடி மகிழ ஆலம் விழுதுகளும் கைகோர்த்துக் காட்சி அளிக்கும். ஆயர்பாடிச் சிறுவர்களுக்குப் பிடித்த அற்புத வனம் அது.

புதன், 11 ஜூன், 2025

விஸ்வேஸ்வரருக்குப் பிடித்த வாரணாசி

விஸ்வேஸ்வரருக்குப் பிடித்த வாரணாசி


காசி என்னும் ஆனந்தவனம் பற்றிக் கேள்வியுற்றிருப்பீர்கள். ஒருமுறை இந்த ஆனந்தவனத்திலிருந்து ஒரு வேண்டுகோளினால் மந்த்ராசலத்துக்குத் தன் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டார் விசுவநாதர். எங்கும் உறையும் இறைவனே ஆனாலும் தனக்குப் பிடித்த இடத்தில் கோவில் கொள்வதைத்தான் விரும்புவார் என்பதை காசி மாநகருக்கே அவர் திரும்பி வந்த கதை உணர்த்துகிறது. அது பற்றிப் பார்ப்போம்.

பத்ம கல்பத்தின் போது உலகெங்கும் வறட்சி ஏற்பட்டதால் உயிரினங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டன. படைப்புக் கடவுள் பிரம்மாவுக்கே இனித் தான் படைக்கும் தொழிலில் ஈடுபட முடியுமா என்று நினைக்கும் அளவில் புதிய உயிர்களைத் தோற்றுவிப்பது கடினமாக இருந்தது. அந்த அளவு அழிவின் விளிம்பில் அனைத்து உயிர்களும் உடலைப் பற்றிக் கொண்டிருந்தன.

ஆனந்தவனம் என்னும் காசியும் அதற்கு விதி விலக்கல்ல. இதைக் காப்பாற்ற வல்லவன் யார் என்று பிரம்மா தேடியபோது ரிபுஞ்செயன் என்னும் மன்னன் மிகுந்த அர்ப்பணிப்புடன் தவத்தில் ஈடுபட்டிருந்தான்.அந்நகரைக் காப்பாற்ற வல்லவன் என்று பிரம்மா தான் கணித்த மன்னன் அவனுக்குத் திவோதாசா என்று பெயரிட்டு காசிக்கு மன்னனாக இருக்கும்படிக் கூறினார்.

புதன், 23 ஏப்ரல், 2025

ஆத்ம சமர்ப்பணம் செய்து ஈசனை அடைந்த நந்தனார்

ஆத்ம சமர்ப்பணம் செய்து ஈசனைக் அடைந்த நந்தனார்


இறை பக்தி என்றால் அது எந்த அளவு இருக்க முடியும்? இறைவனைத் தரிசிக்க நாம் மலை மீதும் பனி மலை மீதும் ஏறிச் செல்வோம், பள்ளத்தாக்கைச் சுற்றுவோம், நதி மீது பயணிப்போம், கடல் தாண்டியும் செல்வோம். இதுவே நம் அதிகபட்ச பக்தி. ஆனால் மற்றையோரைப் போலத் தான் நேரில் காணமுடியா இறைவனின் திருவுருவைக் காணக் கொழுந்து விட்டெரியும் நெருப்பினில் புகுந்து இறைவனுடன் ஐக்கியமானார் நந்தனார் என்னும் பெயர் கொண்ட ஒரு நாயன்மார். உச்சபட்ச பக்தியின் எடுத்துக்காட்டாய் விளங்கிய இவருக்குத் திருநாளைப் போவார் என்னும் பெயருமுண்டு.

சிதம்பரத்துக்கு அருகே காவிரி பாயும் கொள்ளிடம் என்னும் கிளைநதியின் கரையில் அமைந்திருந்தது ஆதனூர். அந்த ஊரில் எந்நேரமும் சிவசிந்தனையுடன் வாழ்ந்து வந்த நந்தனார் என்றொரு நல்மனிதர் இருந்தார். இவர் கோயில்களின் பயன்படுத்தப்படும் வாத்தியங்கள், பேரிகைகள், முரசங்களுக்காக தோல்களைப் பதப்படுத்தித் தரும் பணியில் ஈடுபட்டு வாழ்ந்தார். கோயில்களின் தேவைக்கு ஏற்ப விசிவார், கோரோசனை போன்ற பொருட்களையும் கொடுத்து வந்தார்.

வெள்ளி, 11 ஏப்ரல், 2025

திருப்பாற்கடலை வரவழைத்த திருமூலநாதர்

 திருப்பாற்கடலை வரவழைத்த திருமூலநாதர்


திருப்பாற்கடல் என்றால் திருமால் பள்ளி கொண்டிருக்கும் இடம்தானே, அது எப்படி பூமிக்கு வந்தது அதுவும் அதை வரவழைத்தவர் திருமூலநாதர் என்றால் சிவபெருமான் ஆயிற்றே என்று எண்ணலாம். ஆனால் பூமியில் பசியோடு அழுத ஒரு பாலகனுக்காகத் திருமூலநாதர் திருப்பாற்கடலை வரவழைத்தார். அது எங்கே எனக் காண்போம்.

முன்னொரு காலத்தில் மத்யந்தினர் என்றோர் முனிவர் இருந்தார். அவருடைய குமாரன் பெயர் மாத்யந்தினர். தந்தையான மத்யந்தினர் தனது மகனுக்கு நால் வேதங்களையும் ஆறு சாத்திரங்களையும் பயிற்றுவித்தார். அதன் பின் ஆத்ம ஞானம் பெறுவதற்குத் தில்லைவனத்தை அடைந்து சிவபெருமானைப் பூசிக்கும்படிக் கூறினார்.

தந்தையின் சொற்படி மாத்யந்தினரும் அவ்வாறே தில்லைவனத்தைத் தேடிச் சென்றார். பலகாடுகள், நாடுகள் கடந்தன. பலரிடமும் கேட்டு ஒருவழியாகத் தில்லைவனத்தை வந்து சேர்ந்தார். இறுதியாக ஒரு தில்லை மரத்தின் கீழ் சுயம்புவாக எழுந்தருளி இருந்த திருமூலநாதரைக் கண்டடைந்தார். அந்த மூர்த்தியின் அருகிலேயே இருந்த சிவகங்கைத் திருக்குளத்தில் நீராடி அனுட்டானம் முடித்தார். சிவனின் திருமுன்பு வந்து பஞ்சாங்க அட்டாங்க வணக்கம் செய்தார்.

சனி, 15 மார்ச், 2025

கோபத்தால் அறிவிழந்த இந்திரமயில்

கோபத்தால் அறிவிழந்த இந்திரமயில்


முருகப்பெருமானுக்கு நான்கு மயில்கள் வாகனமாக இருப்பதை அறிவோம். அதில் தேவமயில் என்றும் இந்திர மயில் என்றும் சிறப்பிக்கப்படும் மயிலானது தனது அறியாமையால் அறிவழந்து கோபப்பட்டது. எந்த விஷயத்திலும் உண்மையை ஆராய்ந்து தெளிவதே அறிவு. கேட்பார் பேச்சைக் கேட்டு அறிவிழப்பது எவ்வளவு தவறு என்பதை அது உணரவில்லை. இதனால் முருகப் பெருமானின் சாபம் பெற்று அது மலையானது. அது என்ன கதை என்று பார்ப்போம்.

வைகாசி விசாகத்தில் முருகன் அவதரித்தவுடன் சூரிய பகவானும் அக்னியும் தங்கள் திருமேனியிலிருந்து மயிலையும் சேவல் கொடியையும் உருவாக்கி அளித்தார்கள். அன்றுமுதல் முருகப் பெருமானின் வாகனமாக ஆனது அது.

வெள்ளி, 7 பிப்ரவரி, 2025

அரனே பரமென்றுணர்த்திய சுதர்சனர்

அரனே பரமென்றுணர்த்திய சுதர்சனர்


பரம வைணவக் குடும்பத்தில் பிறந்த ஒருவர் அரனே பரமென்று சொல்ல முடியுமா. அப்படிச் சொல்ல மட்டுமல்ல அது உண்மை என்றும் நிரூபித்தார் ஒருவர். அவர்தான் சுதர்சனர் என்னும் அரதத்தர். சிவனே அவருக்கு அரதத்தர் என்னும் இப்பெயரைச் சூட்டினார் என்பதெல்லாம் இறைச் செயல்தானே.

கஞ்சனூர் என்னும் ஊரில் பதினான்கு கோத்திரத்தில் உதித்த வைணவர்கள் வசித்து வந்தார்கள். அவர்களுக்குத் திருமாலே முழு முதல் தெய்வம். எனவே மாற்று சமயமான சைவத்தை நிந்தித்து வந்தார்கள். அவர்களுள் காசியப கோத்திரத்தைச் சேர்ந்த வாசுதேவர் என்ற பஞ்சாத்திர வைணவரும் இருந்தார். அவரது மகனாகப் பிறந்தவர்தான் சுதர்சனர்.

முன்பொரு சமயம் நடந்த தேவாசுர யுத்தத்தில் விஷ்ணுவின் சக்ராயுதம் அசுரகுரு சுக்ராச்சாரியாரின் மனைவி சுகீர்த்தியையும் வீழ்த்தியது. அப்போது அங்கு வந்த சுக்ராச்சாரியார் அமிர்தசஞ்சீவினி மந்திரத்தை ஜெபித்து மனைவியை உயிர்ப்பித்ததோடு தன் மனைவியைக் கொன்ற விஷ்ணு பூலோகத்தில் மனிதனாகப் பிறக்கும் படி சபித்தார். அதனால்தான் விஷ்ணுவின் அம்சமான சுதர்சனர் வாசுதேவரின் மகனாகப் பிறந்தார்.

புதன், 22 ஜனவரி, 2025

அன்பர் பூசையில் அயர்வுறாத தம்பதிகள்

 அன்பர் பூசையில் அயர்வுறாத தம்பதிகள்


தம் இல்லத்துக்கு வரும் உறவினர்களை வரவேற்று உபசரிப்பது உலக வழக்கம். ஆனால் தம் இல்லத்துக்கு வரும் சிவனடியார்களுக்கும் பூசை செய்வதில் அயர்வடையாத தம்பதியர் இருந்தார்கள். கடுமையான வறுமையில் உழன்ற போதிலும் இருப்பதைக் கொண்டு சிறப்பாக உணவு படைத்த அவர்களைப் பற்றிப் பார்ப்போம்.

இளையான்குடி என்றொரு ஊரில் உழவுத் தொழில் புரிந்து வந்தார் மாறன் என்பார். இவர் சிறந்த சிவபக்தர். இவர் மட்டுமல்ல இவரது மனைவியாரும் தன் பர்த்தாவுக்கேற்ற பத்தினி. எந்நேரமும் பஞ்சாட்சரத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பார்கள். தம் இல்லத்துக்கு வரும் சிவனடியாரை இருவருமே இன்சொற்கள் கூறி வரவேற்று உபசாரம் செய்து அறுசுவை விருந்து படைப்பார்கள்.

செவ்வாய், 24 டிசம்பர், 2024

பகிர்ந்தளிப்பதில் இன்பம் பெற்ற முத்கலர்

 பகிர்ந்தளிப்பதில் இன்பம் பெற்ற முத்கலர்


முற்காலத்தில் முத்கலர் என்றொரு மகரிஷி இருந்தார். பார்மியாசா என்றொரு முனிவரின் மகன் . தானம் தர்மம் என்பதற்கு எடுத்துக்காட்டு இவர்தான். தான் செய்த புண்ணியங்களால் தன் உடலோடு சொர்க்கம் செல்லும் வாய்ப்புக் கிட்டியும் மறுத்தவர் . அப்படி இவர் செய்த புண்ணியம் என்ன ஏன் சொர்க்க லோகம் செல்வதை மறுத்தார் என்பதைப் பற்றி அறிவோம் வாருங்கள்.  

களத்து மேட்டில் அறுவடையான சோளதானியங்கள் அடித்துத் தூற்றப்பட்டுக் கொண்டிருந்தன. அத்தனை தானியங்களையும் மூட்டைகளில் அடைத்து அந்த வயலுக்குரியவர்கள் எடுத்து சென்றபின் அந்த வயலில் இறங்கினார் முனிவர் முத்கலர். அங்கே சிதறிக் கிடந்த தானியங்களைப் பொறுக்கிச் சேர்த்தார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வயலில் இருந்தும் முடிந்த அளவு தானியங்களைக் கொண்டு சென்று வீட்டில் சேர்ப்பார் முத்கலர்.