பிச்சாடனரின் ஆனந்த தாண்டவம்
முன்னொரு காலத்தில் ஆறு சாத்திரங்களையும் நன்கு கற்று, நான்கு வேதங்களையும் முறைப்படி ஓதி அதன்படி வாழ்ந்து வந்தார்கள் சில முனிவர்கள். அக்னி காரியம் செய்வதும், வேதங்கள் ஓதுவதும் மட்டுமே தமக்குப் போதுமென்று எண்ணி, எல்லாவற்றிற்கும் காரணமான ஈஸ்வரனை மறந்தார்கள். என்னதான் தவவலிமை பெற்றிருந்தாலும், அகந்தையுற்று ஈஸ்வரத் தியானம் செய்யாததால் முனிவர்கள் பட்ட துயரையும், அவர்களை நெறிப்படுத்த ஈஸ்வரன் ஆடிய தாண்டவத்தையும் பற்றிப் பார்ப்போம்.
தாருகாவனம் என்ற வனத்தில் முனிவர்கள் தங்கள் பத்தினிகளுடன் வசித்து வந்தார்கள். சாஸ்திர முறைப்படி அவர்கள் அக்னி ஹோமங்களை வளர்த்து வணங்கி வந்தார்கள். ஆனால் எல்லாவற்றிற்கும் காரணமான ஈஸ்வரனின் நினைவே இல்லாமல் இருந்தார்கள். அவர்களை நல்வழிப்படுத்தும் எண்ணம் கொண்டு ஈஸ்வரன் மகாவிஷ்ணுவோடு அங்கே எழுந்தருளினார். அதுவும் எப்படி?
ஈஸ்வரன் பிச்சாடனராகவும் மகாவிஷ்ணு மோகினி ஆகவும் அவதாரம் எடுத்துத் தாருகாவனம் முழுமையும் உலவினார்கள். அவர்கள் இருவரின் தோற்றமும் காண்பவர் மதி மயங்கும் வண்ணம் இருந்தது. பிச்சாடனர் பிச்சை கேட்டு பர்ணசாலை முழுவதும், அங்கும் இங்குமாய்த் திரிந்து கொண்டிருந்தார். மோகினி இளம் முனிவர்கள் தவம், ஹோமம் செய்யும் இடத்தில் சொக்க வைக்கும் அழகோடு சுற்றிச் சுற்றி வந்தார்.
அந்த இளம்வயது முனிவர்கள் இந்த மோகினியின் அழகு ரூபத்தைக் கண்டு, தங்கள் தவத்தை விட்டுவிட்டு இம்மோகினியைத் தாமே அடைய வேண்டும் என்று மயக்கத்தோடு சுற்றி வந்தார்கள். அங்கே பர்ணசாலையின் பக்கமோ முனிபத்தினிகள் பிச்சாடனரின் உருவைக் கண்டு அவரை அடைய விரும்பி அவர்களும் அவரைச் சுற்றிக் கொண்டார்கள்.
இவற்றையெல்லாம் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த வயது முதிர்ந்த முனிவர்கள் வருத்தம் அடைந்தார்கள். ஒரு பக்கம் பிச்சாடனருடன் தங்கள் பத்தினிகள் சுற்றுவதையும், மற்றொரு பக்கம் மோகினியின் பின் இள முனிவர்கள் அலைவதையும் கண்டு கோபமும் வெட்கமும் கொண்டார்கள். தாம் செய்யும் தவத்தையும் தம் பெருமையையும் கெடுக்கின்ற அந்தப் பிச்சாடனரையும், மோகினியையும் விரட்டும் வழி தெரியாமல் அவதியுற்றார்கள்.
அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்ற ஆவேசத்தில் தங்களுடைய முக்கிய ஆயுதமான அக்கினியில் அதர்வண வேதத்தில் சொல்லி இருக்கின்ற எதிரியைக் கொல்லக் கூடிய ஹோமத்தைச் செய்தார்கள். அவ்வாறு அவர்கள் செய்ததும் அந்த அக்னியில் இருந்து ஒரு புலி வெளிப்பட்டது.
பயங்கரமான அப்புலியைப் பிச்சாடனரைக் கொல்லும்படி முனிவர்கள் ஏவினார்கள். அந்த புலி தனது தீ உமிழும் கண்களையும், கத்தி போன்ற பல், நகங்களையும் கொண்டு அவர் மேல் பாய்ந்தது. அவ்வாறு பாய்ந்து வந்த புலியைப் பிடித்துப் பெருமான் தன்னுடைய நகங்களால் இரண்டாக வகிர்ந்து, அதன் தோலை உரித்து இடையாடையாக உடுத்திக் கொண்டார்.
அதை கண்ட முனிவர்கள் மீண்டும் ஹோமம் செய்ய அவ்வக்கினியிலிருந்து நஞ்சு பொதிந்த பாம்புகள் உருவாகின. அவற்றையும் முனிவர்கள் பெருமான் மீது ஏவ, அவை கொத்தும் எண்ணத்தோடு சீறிப்பாய்ந்து வந்தன. பெருமான் அவற்றைப் பிடித்துத் தனக்கு அணிகலன்களாகக் கழுத்திலும் இடையிலும் அணிந்து கொண்டார்.
அதையும் கண்ட முனிவர்கள் கடும் கோபம் கொண்டு மிக உக்கிரமாக ஹோமம் செய்ய அவ்வக்கினியில் இருந்து பயங்கரமானதும் வலிமை மிக்கதுமான அபஸ்மாரம் என்னும் பெரும் பூதம் உண்டானது. முனிவர்கள் அதையும் பெருமானைக் கொல்லும்படி ஏவ, பெருமான் அப்பூதத்தைப் பிடித்துக் கீழே போட்டுத் தனது வலது காலை அதன் முதுகில் மேல் வைத்து ஏறி நின்று கொண்டார்.
இவற்றையெல்லாம் கண்ட முனிவர்கள் அச்சமுற்றார்கள். தங்களால் ஏவப்பட்ட புலி, பாம்பு, பூதம் முதலியவற்றை ஆடையாகவும் அணிகலனாகவும் ஆசனமாகவும் அவர் செய்து கொண்டதைப் பார்த்து அடுத்து என்ன செய்வதென்று யோசித்தார்கள். தங்களால் பன்னெடுங்காலமாகப் பூசிக்கப்பட்டு வரும் மாபெரும் அக்னியையே பெருமானை எரிக்கும்படி ஏவினார்கள். அந்த அக்னியும் இரு முகங்களுடன், மாபெரும் ஜ்வாலையுடன் பெருமானை நோக்கி வந்தது. அந்த அக்னிக்கே சக்தியைக் கொடுக்கும் சிவன் தன் இடது கையில் அந்த அக்னியைத் தாங்கி ஏந்திக் கொண்டார்.
அதைக் கண்ட முனிவர்கள் நடுநடுங்கிப் போனார்கள். தங்களுக்கு புலி, பாம்பு, பூதம் ஆகியவற்றைக் கொடுத்த அக்னியை இழந்து விட்டதால் அவர்கள் அதுவரை உபாசித்து வந்த தங்களுடைய வேத மந்திரங்களை இறுதிக் கட்டமாக ஏவினார்கள்.
வேதங்களுக்கெல்லாம் இருப்பிடமானவரும் வேதங்களால் புகழப்பட்டவருமான பெருமான் அம்மந்திரங்களைத் தம்முடைய பாதத்தில் சிலம்புகளாக மாற்றி அணிந்து கொண்டார்.இவ்வாறு தம்முடைய தவம், அக்னி, மந்திரம் என அனைத்தையும் இழந்தும் பெருமானை வெல்ல முடியாமல் போகவே அவரிடம் தங்கள் தோற்றுவிட்டதாக அவர்கள் சொல்லொணாத் துக்கம் அடைந்தார்கள்.
அப்பொழுது கருணாமூர்த்தியான சிவபெருமான் அம்முனிவர்களுக்கு ஞானம் வழங்க வேண்டித் தன்னுடைய சடைகளை எட்டுத்திக்கிலும் விரித்தபடி, அண்டங்கள் குலுங்கக் குலுங்கத் தாண்டவம் ஆடினார். அத்தாண்டவத்தைக் கண்டு மிரட்சியுற்றார்கள் முனிவர்கள். அஞ்சிப் பயந்து ஒடுங்கினார்கள் அவரே ஈஸ்வரன் என்று உணர்ந்தார்கள்.
தாங்கள் செய்த குற்றங்களைப் பொறுத்தருளும்படி வேண்டினார்கள். முனிவர்களின் அகந்தையை அழிக்க வந்த சிவன் அவர்களை மன்னித்துத் தன்னுடைய தாண்டவத்தையே ஆனந்த தாண்டவமாக ஆடி அவர்களுக்கு ஆனந்தம் உண்டாகச் செய்தார். இவ்வாறு முனிவர்களின் அகந்தையை அழித்த பிச்சாடனர் ஆடிய தாண்டவம் இவ்வுலகையே ஆனந்தம் கொள்ளச் செய்தது.
அதைக் கண்டு மோஹினியான மகாவிஷ்ணுவும் மகிழ அச்சமயத்தில் சாஸ்தா உருவானார். முனிவர்கள் அந்தத் தாண்டவத்தைப் பார்த்து அஞ்ஞானம் நீங்கி மெய்ஞானம் பெற்றார்கள். சிவபெருமானிடம் தாங்கள் மோட்சம் அடைய வழி காட்ட வேண்டும் என முனிவர்கள் வேண்டினார்கள். கருணை கொண்ட சிவபெருமான்," சிவலிங்கத்தை ஸ்தாபித்து சிவ பூஜை செய்துவர, பிரம்ம ஞானம் உண்டாகும், மோட்சம் கிடைக்கும்" என்று அருளினார். இவ்வாறாகப் பிச்சாடனர் ஆடிய ஆனந்த தாண்டவம் முனிவர்களை அஞ்ஞானத்திலிருந்து மெய்ஞானத்திற்குக் கரையேற்றியது.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)