எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 2 ஏப்ரல், 2026

சில மொக்கைக் குறிப்புகள் - 1

 **கவிதை மயிலாடக்
காதல் மேகம் பொழிய
மனமெங்கும் மழை.

 

 

**வலமும் இடமும்
தலையை ஆட்டிப்
பிடிவாதமாய் உதடு இறுக்கி
பாராமல் பார்க்கும்போது
விருட்டென அணைத்து
விழுத்தாட்டிச் செல்கிறாய்
கொத்தும் முத்தத்தால்

 

 

**நூறு மணி நேரத்துக்குப் பிறகு
முகமனுப்பி இருக்கிறாய்.
போட்ட நூறு நொடிகளுக்குள்
நூறாயிரம் தரம் நான் இரசித்ததறியாமல்
நன்றி இப்பவாவது நினைவில் வந்தேனே

 

**சாரல் மழை சாய்ந்தாடும் பூ
சுடச் சுட சாயா, சுற்றிவரும் உன் வாசனை
என்னன்னமோ சொல்ல நினைக்கிறேன்
உன்னைப் பார்த்ததும் விழிக்கிறேன்
ஒரு புன்னகை மட்டுமே வீசி
எப்படி  உண்டாக்குகிறாய்
ஞாபகமறதி நோயை.


**
மழைத் துளியைப் போல்
சொட்டுச் சொட்டாய்ச் சிதறும்
உன் நினைவில்
நனைந்து கொண்டிருக்கிறேன்.


**சடை பிடித்திழுக்கும் தம்பியும்
சண்டை போடும் தங்கையும்
தொலைதூரம் போய்விட்டார்கள்
பால்யத்திலிருந்து இளமைக்கு.
விட்டுக் கொடுத்துவிடுவதால்
சப்பென்றாகிவிடுகிறது எதுவுமே.

**நனையும் நிலவில்
நாம் கைகோர்த்து 
அலைந்ததெல்லாம் உண்மைதானா
கை விரித்துப் பார்க்கிறேன்
உள்ளங்கையில் களங்க நிலவாய்க்
கலைந்து கிடக்கின்றன ரேகைகள்


**தென்னதோப்பில்
நடந்துகொண்டிருந்தோம்
குறுக்கே விழுந்த கீற்று
நம்மைப் பிரித்தது
பதற்றத்தோடு கீற்றை விலக்கி
பயந்திருந்த முகம் பிடித்து
இரவு வானின் நிலவு இதென்றாய்
இரண்டிலும் கலங்கல்கள் என
பாளைகள் சலசலத்துச் சிரித்தன


**யார் நீ யார் நீ என்கிறாய்
முகமற்றவள் என்கிறேன்
நிலவைப் பொருத்துகிறாய்
நெருப்பைப் பூசுகிறேன்
நீரைத் தெளிக்கிறாய்
தாரையாய் ஓடுகிறேன்
மிதிக்க வேண்டுமெனவே
கல்லாய் ஆக்குகிறாய்
பிறன்மனை நயக்கிறாய்
பொறுத்துப் போகிறேன்
பாண்டவர் துணை என்கிறாய்
பஞ்சமா பாதகத்தாய்
பழிக்காமல் என்னைப் பார்
பால்குடிப் புன்னகை மாறா 
பஞ்ச கன்னிகை நான்


**காடு பார்க்க 
அழைத்துப் போனான்.
சீறும் சிங்கங்கள்
சிலிர்க்கும் சிறுத்தைகள்
கோப ஓநாய்கள்
கொடி தாவும் குரங்குகள்
பயப்படுத்தும் பாம்புகள்
சே இவைதானா.. 
வீட்டைவிட ஒன்றும் 
பயமாயில்லை காடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...