எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 10 ஜூன், 2013

மாதவிடாய் ஆவணப்படம் எனது பார்வையில்..(நம் தோழியில்..)

”மாதவிடாய் என்பது பெண்களின் உடலில் ஏற்படும் ஒரு இயற்கையான நிகழ்வு. இதற்கு இத்தனை கற்பிதங்களும் தேவையற்ற நியதிகளும் வேண்டுமா.?” என்ற கேள்விகளோடு கீதா இளங்கோவன் எடுத்துள்ள “ மாதவிடாய்” என்ற ஆண்களுக்கான பெண்கள் படம் வந்திருக்கிறது.

”மாதவிடாயை இழிவாகப் பார்க்கக்கூடிய பண்பு மதத்திற்கு, கலாசாரத்துக்கு, பண்பாட்டுக்கு எல்லாவற்றிற்குமே உண்டு”. என்று சொல்கிறார் சாலை செல்வம்.


“இதைப் பற்றி அறிவியல் ரீதியான புரிதல் இல்லை. அம்மாவும் சொல்லிக் கொடுப்பதில்லை. பள்ளிக்கூடத்திலும்  அப்படிப்பட்ட கல்வி இல்லை” என்கிறார் கல்வியாளர் கீதா.

“ இதைப் பற்றி வகுப்பெடுக்கக்கூட ஆசிரியைகள் தயங்கி மாணவர்களைத் தாங்களே படித்துப் புரிந்து கொள்ளச் சொல்வதாக பணியாளர் அமுதா கூறுகிறார்.

இதுமட்டுமல்ல.  பூப்படைதல் என்பதையும் , மாதாமாதம் ஏற்படும் மாதவிடாய் என்பதையும் ஒரு பெண் எப்படி எதிர்கொள்கிறாள். அவரது குடும்பம், சமூகம் எப்படி எதிர்கொள்கிறது என்பதையும் இதன் தொல்லைகள், துயரங்கள், பொது இடங்களில் , அலுவலகங்களில் ஏற்படும் வசதிக் குறைபாடுகள் என்பனவற்றை எல்லாம் பட்டியலிடுகிறது இந்தப் படம்.

தன்னுடைய உடலில் ஏற்படும் நிகழ்வுகளைப் பெண்களே புரிந்து கொள்வதில்லை. தன்னுடைய உடலையே ரத்தப் போக்கு ஏற்படும் குறிப்பிட்ட காலங்களில்  அருவருக்கத்தக்கதாகப் பார்க்க இந்த சமூகம் பழக்கி இருக்கிறது
.
கோயிலுக்குச் செல்லக்கூடாது. வீட்டினுள்ளேயும் குறிப்பிட்ட இடத்தில்தான் இருக்கவேண்டும். ஊறுகாயைத் தொட்டால் கெட்டுவிடும். கிணற்றில் நீர் இறைத்தால் வற்றி விடும். பாத்ரூம் போனால் இரும்பு, விளக்குமாற்றுக் குச்சி கொண்டு செல்லவேண்டும். சடங்கான பெண் ஆண்களைப் பார்த்தால் பரு வந்துவிடும். என்று ஏற்படுத்தப்பட்ட கற்பிதங்களை எல்லாம் கேள்விக்குறியாக்குகிறது இந்தப் படம்.

”முட்டு வீடு ” என்று சில கிராமங்களில் பெண்கள் பூப்படைந்தாலோ, மாதத்தீட்டு அடைந்தாலோ, பிள்ளைப் பெற்றாலோ தனியாக விளக்குக்கூட இல்லாத வீடுகளில் தங்கவைக்கப்படுவதைப் பார்க்கும்போது இன்னும் இருக்கிறதா இதெல்லாம் என்று தோன்றியது. மாதவிடாயின் போது பயன்படுத்தும் பாத்திரங்கள் ஒரு மரத்தில் கட்டித் தொங்கவைக்கப்பட்டிருந்தன.

பெண் ஒரு கருவைச் சுமக்க இயற்கை அவளைப் பக்குவப்படுத்தும் நிகழ்ச்சிதான் பூப்படைதல் என்பதும், மாத விடாய் என்பதும். பதின் பருவப் பெண்ணுக்கு மார்பகங்கள் பெரிதாவதும் வெள்ளைப்படுவதும் பூப்படையும் முன்னாள் நடக்கும் நிகழ்வுகள். தன் உடம்பில் ஏற்படும் மாற்றங்களை ஒரு பெண் குழந்தை தன் தாயிடம் பகிர்ந்து கொண்டால் ஒரு சினேகிதியைப் போல இது பருவமடைய ஏற்படும் ஒரு நிகழ்வு என்றும், அவள் சிறுமியிலிருந்து இளம்பெண்ணாகப் பரிணாமம் அடைய இயற்கை பக்குவப்படுத்துகிறது என்றும் தாய் கூற வேண்டும். வெள்ளைப் படுதல் ஏற்பட்ட சிலகாலத்துக்குப் பின் ரத்தப் போக்கு ஏற்பட்டால் தன்னிடம் கூற வேண்டும். அதைக் கண்டு பயப்பட வேண்டாம் என்பதையும் தெளிவு படுத்த வேண்டும்.

இந்த மாதிரி எதுவுமே பகிர்ந்து கொள்ளப்படாமல் பெண்  குழந்தைகளை தீட்டு என ஒதுக்கி வைப்பது தவறு. இது எஸ்ட்ரஸ் சைக்கிள் எனப்படும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பதால் உண்டாகிறது. மாதா மாதம் உருவாகும் கரு முட்டை யுடன்  ஆணின் விந்தணு சேரும்போது குழந்தை உருவாகிறது. அப்படி உருவாகாத போது  அழிந்து மாதா மாதம் அது ரத்தப் போக்காகாக வெளியேறுகிறது. இதுவே மாதவிடாய்.

முன் காலங்களில் பெண் குழந்தைகள் பூப்படைந்தால் உடல் ரீதியாக ஓய்வெடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தனியாக வேலை ஏதும் செய்யாமல் அமர வைத்தார்கள். நல்லெண்ணெய், பச்சை முட்டை, உளுந்துக் களி கிண்டிக் கொடுப்பார்கள்.  பெண்ணுக்கு இடுப்பு பலமாக இருக்க வேண்டும் என்று. ஆனால் இது ஒரு சடங்காக மாறி பெண்ணை தீட்டு என்றும் தூரம் என்றும் ஒதுக்கி வைக்கும் பழக்கமாக மாறிவிட்டது.

இந்த ஆவணப் படத்தில் மாற்றுத் திறனாளிகள், கண் பார்வையற்றோர் , மெண்டலி சேலஞ்சுடு, ஆகியோரும் எப்படி மாதவிடாயை எதிர் கொள்கின்றனர். அவர்கள் பொது இடங்களில் அதற்கான வசதிகள் இல்லாமல் எப்படித் துயருறுகின்றனர் எனக் கூறியுள்ளனர். பஸ்டாண்டுகளில் அசிங்கமான பொதுக் கழிப்பறைகளில்  கையூன்றி செல்ல வேண்டி இருக்கிறது என ஒரு மாற்றுத் திறனாளி சொன்ன போது சொரேர் என்றது. கிராமங்களில் துணிகளைப் போட முள் குத்தும் இடங்களில் செல்ல வேண்டியதாகவும் கூறினார்.

எல்லாப் பொதுக் கழிப்பிடங்களிலும் பெண்கள் உபயோகப்படுத்திய நாப்கின்களை டிஸ்போஸ் செய்ய டின் போன்ற அமைப்புக்கள் இல்லை. அநேக தனியார், அரசு அலுவலகங்களிலும் இதே நிலைதான் என்பதை உயர் பதவிகளில் இருக்கும் மகளிர் பகிர்ந்துள்ளனர்.

அடிப்படைக்கட்டமைப்பு வசதி இல்லாததால்  ஒரு பள்ளிக்கூடத்தில் படிக்கச்செல்பவர்கள் குறைந்து விட்டதாகக் கூறினார்கள். பொதுக்கழிப்பறைகளிலும்  அரசு மருத்துவமனை மருத்துவமனைகளிலும் கழிப்பறைகள் மிக மோசமாக இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.

சாஸ்த்ரி பவன் பெண் ஊழியர்கள் சங்கத்தலைவி மணிமேகலை  தன்னைப் போன்ற பெண்கள் இருக்கும் இடங்களில் டஸ்ட்பின் , கழிவறையில் இல்லை என்பதை சொன்னார். பொதுவாக சுத்தமான , நாப்கின் போட டின்கள்,  தண்ணீர் வசதிகள் பாத்ரூம்களில் இருப்பதில்லை.

“பெண் போலீஸ்கள் பொது நிகழ்வுக்கு காவலுக்குச் செல்லும் இடங்களில் கூட அவரசத்துக்கு ஏதோ ஒரு வீட்டில் ஒதுங்கிவிட்டால் அந்த சாதிக்காரருக்கு  ஆதரவாக செயல்படுவதாகக் குற்றம் சாட்டப்படும் அபாயம் இருப்பதால் எல்லா பெண் போலீசாரும் வேனில் பக்கத்தில் வேறெங்கோ திருமண மண்டபங்களில் இருக்கும் கழிவறைகளுக்கு அழைத்து செல்லப்படுவார்கள்” என்று திலகவதி ஐபிஎஸ் பகிர்ந்தார்.

”வரலாற்று ரீதியா பெண்களின் கரு உருமாற்றல்அவர்களுடைய கட்டுப்பாட்டில் அவர்களுடைய அதிகாரத்தில் இருப்பது போய் அது ஆண்களின் கட்டுப்பாட்டைச் சார்ந்த நிலவுடமையைச் சார்ந்த, ஆண்டான் அடிமை முறையைச் சார்ந்த, சமுதாய அமைப்போடு சம்பந்தப் படுத்தப்படும்போது அசிங்கமானதாகப் பார்க்கப்படுகிறது. ” என்றும் கல்வியாளர் கீதா கூறியிருக்கிறார்.

லூசி சேவியர், “ பெண்ணுக்கு தன்னுடைய உடலைப் பற்றி சரியான புரிதல் இல்லை மற்றும் பிறப்புறப்பை கேவலமாக எண்ணுவதால் அந்தப் பகுதியில் வெளியாகும் ரத்தத்தை நாம் அசிங்கமாகக் கருதுகிறோம் . இதனால் பல பெண்களின் ஆளுமைத்தன்மை பாதிக்கப்படுது” என்று சொல்கிறார்.

சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி “ உங்க ஆடையில் ..என்று பெண்கள் யாராவது ஆரம்பித்தாலே எங்காவது தீட்டுக் கறை பட்டுவிட்டதோ என்று கொலைக்குற்றம் செய்தது போன்ற உணர்வு வருவதாகக் ”கூறினார். தலைமைச் செயலகத்தில் கூட கழிவறைகளில், நாப்கின் போட வசதிகள் இல்லை என்று கூறினார்.

கிராமத்தில், நகரத்தில் இருக்கும் இளம்பெண்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள், கல்லூரிப் பெண்கள், பள்ளிப் பெண்கள்., பெண் காவலர்கள், சமூக சேவகிகள், உயர்பதவிகளில் இருப்பவர்கள், வயலில் வேலை பார்க்கும் பெண்கள், காய்கறி, பூ  விற்பவர்கள், கட்டிடத் தொழிலாளிகள்,
பத்ரிக்கையாளர்,  நடை பாதை வியாபாரி, நடை பாதையில் குடியிருப்போர், அரசு அலுவலர்,  இந்து, முஸ்லீம் , கிறிஸ்துவப் பெண்கள் என அனைத்து தரப்பு மகளிரின் கருத்துக்களும் இதில் இடம் பெற்றுள்ளன. எவ்வளவுதான் சிறப்புற்றிருந்தாலும் ஒரு கிறித்துவப் பெண்  தலைமைப் பொறுப்பேற்க முடியாது  ( முனைவர் மார்க்கரெட் சாந்தி , இறையியலாளர் ) என்பதையும்., அந்த சமயங்களில் இஸ்லாம் பெண்களும் தொழுகை செய்யக்கூடாது ( தௌலத் ஆரிஃபா ) என்பதையும் , கும்பாபிஷேகம், வீடு கிரகப்பிரவேசம் போன்றவற்றில் போகக்கூடாது என்பதை இந்துப் பெண்களும் ( பாலபாரதி ) பெண்கள் பகிர்ந்திருக்கிறார்கள்.

வைத்த துணியையே துவைத்துப் பிழிந்து காயவைத்து உபயோகப்படுத்துவதனால் புண் உண்டாகும். அதே போல  சமீப காலமாக வரும் உயர்தர நாப்கின்களும் பெண்களுக்கு அதிகப்படியான உறிஞ்சு சக்தி கொண்டதனால் ட்ரை ஃபீல் நாப்கின்கள் புண்களை உருவாக்குவதாகவும் யூரினரி இன்ஃபெக்‌ஷன் மற்றும் சின்னச்சின்ன கொப்புளங்கள் இருக்கு என்று சொல்லப்பட்டிருக்கு. இதற்கு  இயற்கை முறைப்படி நாப்கின்கள் துணியால் செய்வதும் இந்த ஆவணப்படத்தில் கற்பிக்கப்பட்டிருந்தது.

ப்ளாட்பாரத்தில் வாழும் பெண்கள் ஒரே பாவாடையுடன் இருப்பதாகவும், சில இடங்களில் சடங்கான பெண்கள் சாக்கில் அமரவைக்கப்படுவதாகவும் கூறினார்கள். வெளியே வேலைக்குச் செல்லும் பெண்கள் டிஸ்போசல் வசதி இல்லாததால் பலமணி நேரம் துணிகளை மாற்றாமல் வீட்டுக்கு வந்துதான் மாற்றுவதாகக்கூறினார்கள்.

கல்லூரி, பள்ளி இளம்பெண்களும் பாத்ரூம் வசதி இல்லாத்தால் அல்லது மிக மிக அசுத்தமாக இருப்பதால் பல மணி நேரம் பாத்ரூமே செல்லாமல் கட்டுப்படுத்தி வீட்டிற்கு வந்தபின் செல்வதாகக் கூறினார்கள். இதனால் பெண்களுக்குக்  கருப்பை தொடர்பான நோய்களும் பிறப்புறுப்புத் தொற்றுக்களும், பெல்விக் இன்ஃபெக்‌ஷன்ஸ், பெல்விக் இன்ஃப்ளமேட்டரி டிசீஸ்,  சர்விகல்கான்சர்,  கூட உருவாகலாம்.

கழிவறை சுகாதாரப் பணியில் இருக்கும் பெண்களின் கஷ்டமும் சொல்லப்பட்டிருந்தது. கடைகளில் சானிடரி நாப்கின் வாங்கச் செல்லும்போது கறுப்புப் பையில் ஒளித்துத் தருகிறார்கள். இது என்ன மறைக்க வேண்டிய பொருளா.. மறைத்துத் தரணுமான்னு கேட்டார்கள்.

ஆறுதலான ஒரே ஒரு செய்தி சில பெண்கள் கல்லூரிகளில்  நாப்கின் வெண்டிங் மெஷின்கள் இருக்கின்றன. உபயோகப்படுத்திய நாப்கின்களை அப்புறப்படுத்த சானிடரி நாப்கின் டிஸ்ட்ராயர் என்பதைப் பயன்படுத்துகிறார்கள்.

அசாமில் காமாக்கியா கோயிலில்  அம்மனின் மாதவிடாய் ரத்தம்தான் பிரசாதமாக வழங்கப்படுவதாக ஐதீகம். ராதா வெங்கடேஷ் என்ற ஸ்டெம் செல் ரத்த வங்கி ஊழியர் பல வியாதிகளை இந்த மாதவிடாய் ரத்தம் மூலம் சரிப்படுத்தலாம் என்று கூறுகிறார்.

கிராமப்புறப் பெண்களுக்கு முதல்வர்  இலவச நாப்கின்கள் அளித்தது பற்றி பாராட்டினார்கள். ஆனால் சில இடங்களில் அதை  அகற்றும் வசதிக்காக தற்போது எந்த வசதியும் இல்லை என்பதை தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் கீதா கேட்டறிந்திருக்கிறார்.

மொத்தத்தில் சிக்கலான விஷயத்தைக் கூட சரியான வார்த்தைப் பிரயோகம் மூலமா யாரிடமும் நாம் கொண்டு சேர்த்துவிட முடியும். தாய்ப்பாலும் ரத்தப்போக்கும் உடம்பில் ஊறும் ரத்தம்தான். தாய்ப்பாலைப் போலவே ரத்தப் போக்கும் . எனவே இதில்  அருவெறுக்க ஏதும் இல்லை. எனவே இருபாலாருக்கும் இந்த விஷயத்தைக் கொண்டு செல்ல வேண்டும். இதைப்  புரிந்து கொண்டு செயல்படவேண்டியது ஆண்களின்  கடமை என்று கீதா இளங்கோவன் கூறுகிறார்.

டிஸ்கி:- இந்த விமர்சனம் ஃபிப். 2013, நம் தோழியில் வெளிவந்தது.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. எந்திரன் .. THE ROBOT.. எனது பார்வையில்.

2. ஸ்மைலியும் க்ளாடியும் கல்கியும்.


 


 


16 கருத்துகள்:

 1. வைத்த துணியையே துவைத்துப் பிழிந்து காயவைத்து உபயோகப்படுத்துவதனால் புண் உண்டாகும். அதே போல சமீப காலமாக வரும் உயர்தர நாப்கின்களும் பெண்களுக்கு அதிகப்படியான உறிஞ்சு சக்தி கொண்டதனால் ட்ரை ஃபீல் நாப்கின்கள் புண்களை உருவாக்குவதாகவும் யூரினரி இன்ஃபெக்‌ஷன் மற்றும் சின்னச்சின்ன கொப்புளங்கள் இருக்கு என்று சொல்லப்பட்டிருக்கு. இதற்கு இயற்கை முறைப்படி நாப்கின்கள் துணியால் செய்வதும் இந்த ஆவணப்படத்தில் கற்பிக்கப்பட்டிருந்தது.
  - Nalla muyarchi.

  பதிலளிநீக்கு
 2. ****கோயிலுக்குச் செல்லக்கூடாது. வீட்டினுள்ளேயும் குறிப்பிட்ட இடத்தில்தான் இருக்கவேண்டும். ஊறுகாயைத் தொட்டால் கெட்டுவிடும். கிணற்றில் நீர் இறைத்தால் வற்றி விடும். பாத்ரூம் போனால் இரும்பு, விளக்குமாற்றுக் குச்சி கொண்டு செல்லவேண்டும். சடங்கான பெண் ஆண்களைப் பார்த்தால் பரு வந்துவிடும். என்று ஏற்படுத்தப்பட்ட கற்பிதங்களை எல்லாம் கேள்விக்குறியாக்குகிறது இந்தப் படம்.***

  The problem comes only when our people try justify all these nonsense as "அர்த்தமுள்ள இந்துமதம்" "நமது கலாச்சாரத்தை இழிவு படுத்தக்கூடாது" blah blah. We can appreciate some things we had in our culture. Also WE MUST criticize some stupid things we had in our culture without any hesitation.

  Are we REALLY DOING that???

  Now women are all worried about this "particular issue" only because IT HURTS them MOST! Do women worry about UNTOUCHABILITY and give LECTURES on that issue??? I seldom see that.

  People start rationalize some issues ONLY when they are AFFECTED. Otherwise they care LESS! Let us look at every issue in an open-minded fashion. Let us not defend some NONSENSE just because our grandpa and grandma believed that 50 years ago!

  பதிலளிநீக்கு
 3. நம் தமிழினத்திடம் மட்டுமே பூப்பெய்தியதை கொண்டாடும் வழக்கம் இருக்கிறது என்று நினைக்கிறேன். அடிப்படை வசதிகளாக கருதி நாப்கின்களை பொது கழிப்பறைகளில் வழங்கனும். டஸ்ட்பின் இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 4. Good Morning !

  Kopam thapam illatha
  Happy Wedding Anniversary ! Be happy !

  பதிலளிநீக்கு
 5. நன்றி மணவாளன்

  நன்றி பாண்டியன்

  நன்றி வருண்.. நிச்சயம் அது பற்றியும் எழுதுவேன்.

  நன்றி தவமணி

  நன்றி மணவாளன்.

  பதிலளிநீக்கு
 6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 7. I have "Mathavidai" cd...! I show this cd to my village people :) good movie, time to change :)

  பதிலளிநீக்கு
 8. இதையெல்லாம் சொன்ன இந்தப் படம் இன்னும் ஒன்றையும் சொல்லிருக்கலாம். இந்த நேரத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள். உதாரணமாக வாசனை.. மாதவிடாய் காலத்தில் உடலுக்குத் தேவை இல்லாத ஒன்று வெளியேற்றப்படுகிறது. இந்த நேரத்தில் பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்,சமைக்கும் பொது உணவிலும்,ஊறுகாயைத் தொடும் பொது அதிலும்,துளசி செடியைத் தொடும்போது அதிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதை காரண காரியத்துடன் சொல்லலாம். அதை தீண்டத் தகாதவர்கள் போல் சொன்னது வேண்டுமானால் தவறாக இருக்கலாம். ஆனால் ஊறுகாய் கெட்டுப் போவதும்,துளசி பட்டு
  போவதும் உண்மையே.

  பதிலளிநீக்கு
 9. பெண் பிள்ளைகள் பூப்படையும் தருணம் வரும் போது நிட்சயமாக சில
  தகவல்களை நாமே தான் அறியத் தர வேண்டும் இது போன்ற தகவல்களை
  இங்கு வெளி நாடுகளில் உள்ள பாட சாலைகளில் ஒரு பாட மாக வைத்துள்ளனர்
  இதனால் ஐயப்பாடுகள் இன்றி பெண் பிள்ளைகள் இதை ஒரு சாதாரண நிகழ்வாகவே
  உணர்வதைக் காணக் கூடியதாக உள்ளது இது வரவேற்கத் தக்க ஒன்றே .தங்களின்
  இந்தப் படைப்பினூடாக எமது நாடுகளில் பெண் பிள்ளைகள் படும் அவஸ்த்தை மிகத் தெளிவாக
  உணர்த்தப் பட்டுள்ளது இதற்காக உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்
  தோழி .

  பதிலளிநீக்கு
 10. நன்றி ஸ்டே ஸ்மைல்

  நன்றி ஜான் லீனா

  நன்றி பெயரில்லா

  நன்றி அம்பாளடியாள்

  நன்றி பெயரில்லா

  பதிலளிநீக்கு
 11. அனைவரும் தெரிந்த கொள்ள வேண்டிய விஷயம். நம்மை பெற்றவளும் தாய் தான், பெற்றோர்களும் தகுந்த வயதில் தன் பிள்ளைகளுக்குப் புரியும்படி சொல்லி வளர்க்க வேண்டும்.மாதவிடாய் என்பது இயற்கை, தும்மலைப் போல, தவறேதுமில்லை.

  சுகாரத்தைப் பற்றிக் கூரியது நிச்சயம் நிறைவேற்றப் படவேண்டும். செய்ய வேண்டியவர் ஆவண செய்தால் நன்றாக இருக்கும்.

  நல்ல பதிவு, இந்த விழிப்புணர்வு அவசியம் தேவை.

  தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Do we need to hair wash daily during periods? Is there any health issues regarding to it? Pls answer in Tamil

   நீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...