எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 17 ஜூன், 2013

பதின்பருவப் பெண்களின் பிரச்சனைகள்..

”வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா.”என்ற பாட்டை பொதுவா பதின்பருவப் பெண்களைக் கவரவே எழுதி இருக்காங்களோ என நினைப்பதுண்டு. மேக்கப் என்பது இப்போவெல்லாம் குழந்தைகள் கூட உபயோகப்படுத்தும் விஷயம் ஆகிவிட்டது. எவ்வளவுக்கெவ்வளவு நீங்க மேக்கப் சாதனங்கள் உபயோகப்படுத்தாம இருக்கீங்களோ அவ்வளவுக்கவ்வளவு உங்க தோல் மென்மையா இருக்கும். முன்ன எல்லாம் பெண்கள் ஒரு 20 வயதுல திருமணத்தை ஒட்டி அல்லது கல்லூரியில் படிக்கும் பெண்கள் மேக்கப் போடுவாங்க. மத்தபெண்கள் எல்லாம் சோப்புக் குளியல், எண்ணெய்க் குளியல் அதன் பின் பவுடர் போட்டு பொட்டு வச்சுக்குவாங்க. சிலபேர் ஃபேர்னஸ் க்ரீம் உபயோகிப்பாங்க. கண்மை போடுறது உண்டு.


ஆனா இன்றைய உலக மார்க்கெட் லெவலில் இந்த அழகு சாதனப் பொருட்கள்தான் அழகிப் போட்டியில் கலந்துக்குற பெண்கள் கிட்டேயிருந்து ஒரு உலக அழகியையே/ப்ரபஞ்ச அழகியையே தேர்ந்தெடுக்குதுன்னு சொல்லலாம். வளர்ந்த நாடுகள், வல்லரசு நாடுகளை விடுத்து வளர்ந்து வரும் நாடுகளில் அழகுசாதனப் பொருள் விற்கும் நிறுவனங்கள் தங்களுடைய அழகு சாதனப் பொருட்களை விற்கத் தேர்ந்தெடுத்த கருவிதான் இந்த அழகிப் போட்டிகள் எல்லாம். சிவப்புத்தான் அழகுன்னு திரும்பத் திரும்பச் சொல்லி நம்ப வைக்கும் முயற்சி.

நம்ம ஊரில் எல்லாம் பொண்ணு நிறம் என்னன்னா புது நிறம். அல்லது மாநிறம்னு சொல்வாங்க. அது என்னன்னா மாந்தளிர் இருக்கில்லையா அது புதுசா தளிர் விடும்போது கொஞ்சம் அரக்கும் பசுமையும் கலந்த நிறமா இருக்கும். அதுதான் நம்ம நிறம். மாநிறம். இப்படி ஒரிஜினல் கலரே மாநிறமா இருக்கும்போது மெலனின் குறைவா உள்ள வெள்ளைச் சிவப்பா நம்ம தோலையும் முகத்தையும் மாத்த ஏன் கடும் முயற்சி எடுக்குறாங்க பெண்கள். ஏன்னா சிவப்புதான் அழகுன்னு நம்பப்படுது. விளம்பரங்கள்லயும் திரும்பத் திரும்பக் காட்டப்படுது. பல ஆண்டுகளா சிவப்பானவங்கதான் சிறப்பானவங்க என்ற நம்பிக்கை நம் மனங்களில் ஊட்டப்பட்டிருக்கு.

இதை எல்லாம் கடந்து நம் பதின்பருவப் பெண்கள் வெளி வரணும். பொதுவா பதின் பருவப் பெண்களுக்கு உள்ள பிரச்சனைகள் என்னன்னா

1. உடல்கூறு சார்ந்த பிரச்சனைகள்

2. மனம் சார்ந்த பிரச்சனைகள்

3. கல்வி, சமூகம் மற்றும் குடும்பம் சார்ந்த கட்டுப்பாடுகள்.

 இதில் உடல் கூறு சார்ந்த பிரச்சனைகளில் வெள்ளை/ சிவப்பு மட்டுமே அற்புதமான நிறம்னு எப்படி கற்பிக்கப்பட்டு எல்லார் மனதிலும் பதிய வைக்கப்பட்டு இருக்கோ அது போலவே ஒல்லியாய் இருப்பதுதான் மிக அழகுன்னும் பதிய வைக்கப்பட்டிருக்கு. இந்த ஒல்லியாகத் தோன்றவேண்டும் என்ற தாகம் எல்லா இளவயதுப் பெண்களையும் போட்டுத் தாக்குவதால் ஒழுங்கான சத்தான உணவை உண்பதில்லை. மாடல்கள் பலர் அனரெக்சியா போன்றவற்றால் பாதிப்படைந்தது பார்த்தாலும் ஒல்லி என்பது அழகு என பெண்கள் மனதில் பதிந்து போயிருக்கு.

உங்க உறவினர்கள், அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா எப்படி இருப்பாங்களோ அதை ஒட்டித்தான் உங்க உடலமைப்பும் இருக்கும். அதுனால அநாவசியமா உடம்பைக் குறைக்கிறேன்னு குலைப் பட்டினி கிடப்பது கூடாது. சத்தற்ற ஃபாஸ்ட்புட், பாஸ்டா,கோக் போன்றவற்றை சாப்பிட்டு உடலுக்குத்தேவையான விட்டமின்ஸ் , மினரல்ஸை பின் காலத்துல மாத்திரையா சாப்பிட வேண்டி வரும்.

ஹார்மோனல் இம்பாலன்ஸ் என்பது இப்போது அதிகம் கேட்கும் ஒரு சொல்லாக இருக்கிறது. நல்ல பப்ளிமாஸ் மாதிரி பெண்களும் பெருகி வர்றாங்க. கவுச் பொட்டட்டொ, அல்லது டொமெட்டோ என கிண்டல் செய்யுமளவு. இதுக்கு இவங்க மட்டும் காரணமில்லை. சரிவிகிதமா கொடுக்கப்படாத உணவும்., உடற்பயிற்சி இன்மையும்தான் காரணம் . மரபு ரீதியாவும் பெரும்பகுதி இந்த ப்ரச்சனை இருக்கு, தைராய்டு சுரப்பிகள் தாறு மாறா வேலை செய்வதைப் பொறுத்து மிக ஒல்லியாகவோ ( கழுத்தில் வீக்கம் இருக்கும், படபடப்பாக எந்நேரமும் இருப்பார்கள். ) மிக குண்டாகவோ ( அதீதமாக குண்டாகிக் கொண்டே போவார்கள் . சிறிது உணவு உண்டாலும் பெருமூச்சு விடுவார்கள். சிறிது தூரம் நடந்தாலும் களைத்துப் போவார்கள் ). இருப்பார்கள். இவர்களுக்கு தைராய்டு செக்கப் செய்து அதற்கான மாத்திரை சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். ஏனெனில் தைராய்டு சுரப்பியின் இந்த அதீத செயல்பாடுகளைக் கவனிக்காமல் விட்டால் பெண்கள் பூப்பெய்துவதும். கர்ப்பம் தரிப்பதும் தள்ளிப் போகும்.

தவறான உணவுப் பழக்கம் மூலம் பெண் குழந்தைகள் சிலர் 10 , 12 வயதிலேயே பூப்பெய்துகிறார்கள். முன்பு 14 , 15 வயதில்தான் பெண்கள் பூப்பெய்துவார்கள். இன்று உணவுப் பழக்கம், தொலைக் காட்சி , கம்யூட்டர் போன்ற தொலைத் தொடர்பு சாதனங்கள் பெருகிவிட்ட நிலையில் பெண் குழந்தைகள் சீக்கிரமே பருவம் ( முதிர்வது) எய்துவது நிகழ்கிறது.

முன்பு பூப்பெய்திய பெண்களுக்கு திருவாதிரைக்களி, உளுந்தங்களி, நல்லெண்ணெய், பச்சை முட்டை போன்றவற்றை இடுப்பு பலம் பெறவேண்டிக் கொடுப்பார்கள். இன்னும் பெண் குழந்தைகளுக்கு பேரீச்சை, பாதாம், கீரை வகைகள், பழங்கள் ஆகியன ஆரோக்கியமாக வளர கொடுக்கப்பட வேண்டும். வாரம் ஒரு முறையாவது எண்ணெய்க் குளியல் எடுத்துக்கச் சொல்ல வேண்டும்.

சின்னச் சின்ன உடற்பயிற்சிகள் , யோகாசனங்கள் செய்யச் சொல்ல வேண்டும். பூப்படைந்து பின் அடுத்த மாதவிடாய் சிலருக்கு நிகழாது. சிலருக்கு அடுத்தடுத்து அதிக ரத்தப் போக்கு இருக்கும். அதற்குத்தகுந்த கவனிப்பும், இரும்புச் சத்துள்ள உணவுகளும் கொடுக்கப்படவேண்டும். சுத்தமாய் இருப்பதும், சுகாதாரமாய் இருப்பதும் கற்பிக்கப்பட வேண்டும். தன் உடலில் நிகழும் மாற்றங்கள் குறித்துப் பெண்ணுக்குப் பல்வேறு சந்தேகங்கள் ஏற்படக் கூடும். அதை எல்லாம் காது கொடுத்துக் கேட்டு சிநேகிதியைப் போல நடத்தித் தீர்த்து வைக்க வேண்டும்.

சரியான உடைகள் அணியக் கற்பிக்க வேண்டும். தன் உருவத்துக்கும்., நிறத்துக்கும் பொருத்தமாகவும் கண்ணியமாகவும் வசதியாகவும் எது இருக்கிறதோ அதை அணியலாம். உடை விஷயத்துல இப்போவெல்லாம் பிள்ளைகளை விட அம்மா அப்பாக்கள் அட்வான்ஸ்டா இருக்காங்க. ஆனா உங்க பிள்ளைகளின் உடையும் அவர்களுக்கு வரக்கூடிய பிரச்சனைகளுக்குக் காரணமாக இருக்கக் கூடும். எனவே சிறப்பானதை நீங்க தேர்வு செய்து அவங்களுக்குக் கொடுக்கலாம்.

அடுத்து மனம் சார்ந்த பிரச்சனைகள் என்னன்னா இந்தப் பதின் பருவத்துல பழகுற எல்லாரையும் அவங்க நம்புவாங்க. யாரும் இவங்களைப் பாராட்டிட்டாங்கன்னா அவங்களை ரொம்பப் பிடிக்கும். அவங்க நல்லவங்களா கெட்டவங்களான்னு ஆராய மாட்டாங்க. அப்பா அம்மாவை விட சிநேகிதிகளையும், தோழியா பழகுற எல்லாரையும் பிடிக்கும். இந்த சமயத்துல ஆண் நண்பர்களோடு பழகும் பெண்கள் அவங்க பாராட்டுல மயங்கி விடலாம். எப்பவும் தங்களோட குழந்தைக்கு நல்லது கெட்டது புரிய வைச்சு வழி நடத்தும் பெற்றோர் இருந்தா எந்த சூழ்நிலையிலும் அந்தப் பிள்ளைகள் தவறிழைக்கத் துணிய மாட்டார்கள். தங்கள் அம்மா அப்பாவிடம் எல்லா வற்றையும் கலந்து கொண்டு செய்வார்கள். அதீத பணம் ., அதீத சுதந்திரம் கொடுக்கக் கூடாது. செல்ஃபோன், தனி ரூம், லாப்டாப் கொடுத்தாலும் என்ன பண்றாங்க, என அவ்வப்போது அக்கறையோடு கவனித்துக் கொள்வது நல்லது.

கல்விச் சுமையும் அதிகம் இருக்கும் காலகட்டம் இது. நன்கு படித்தால்தான் நல்ல வேலை கிடைக்கும். ஆணும் பெண்ணும் ரேஸ் குதிரைகளைப் போல வேலையைத் தொட ஓடும் காலகட்டம் இது. யாரு முன்னே ஓடுகிறார்களோ அவர்களுக்குத்தான் ஜாக்பாட். அடுத்து அடுத்து காம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆகிறவர்களுக்கு இவர்கள் அளவு சம்பளம் உள்ள வேலை கிடைப்பதில்லை. எனவே முதன்மையா ஓடணும். அதுவும் பிடரியில் பின்னங்கால் பட ஓடணும் இதுதான் இப்போதைய வேலைகள் கிடைப்பதற்கான தாரக மந்திரம். பெண் குழந்தைகளுக்கும் காரியர் என்பது முக்கியமாகக் கருதப்படுவதால் அவங்க கல்வியை தங்கள் உடல், மனம் சார்ந்த பிரச்சனைகளூடே கான்சண்ட்ரேட் செய்து படிப்பது கடினமாகிறது. மேலும் நட்பு, அன்பு, பாசம், காதல் போன்ற பல பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் பருவம் இது.

இந்தக் காலகட்டத்தில் எது எது தேவை, எது நிஜம், எது பொய், வாழ்நாள் முழுமைக்குமான தேவை என்ன எனப் புரிய வைக்க வேண்டும். அதுக்குன்னு எல்லா நட்பையும் முறித்துப் போட வேண்டாம். பெண் குழந்தைகளுக்கு பெண் தோழிகளைப் போலவே ஆண் நண்பர்களும் முக்கியம். பெண் குழந்தைகள் பெண் தோழிகளுடன் அளவளாவுவதைப் போல ஆண் நண்பர்களுடனும் நல்ல நட்பைப் பேணச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்படியானால் எல்லா நட்பும் ஆக்கப்பூர்வமான நட்பே.

சமூகம் மற்றும் குடும்பம் சார்ந்து பதின் பருவப் பெண்கள் சந்திக்கும் பிரச்சனை கொஞ்சம் விசித்திரமானதுதான் அந்தப் பெண்ணின் நோக்கில். பத்து வயது வரை நன்கு விளையாடிய பெண்ணை உள்ளே போ என விரட்டுவது, நீ பெண் எனவே வேலை செய் என வேலைகளைச் சுமத்துவது, பெண் என்றால் விட்டுக் கொடுத்துப் போவதுதான் எனக் கட்டாயப்படுத்துவது. இது எல்லாம் பருவ வயதுப் பெண்களுக்கு மனச் சங்கடத்தை அளிக்கும். இப்போவெல்லாம் தாய்மார்கள் பெண்கள் நன்கு படித்து வேலைக்குச் சென்றால் போதும் என நினைத்து எதையுமே கற்பிப்பதில்லை. அவ படிக்கிறா என விட்டு விடுகிறார்கள். திருமணமானதும் பெண்ணுக்கு தனக்கானதை சமைக்கக் கூடத் தெரிவதில்லை. அப்படி இல்லாமல் ஆண் குழந்தையாயினும்., பெண் குழந்தையாயினும். ரொம்பவும் அடக்காமலும், அல்லது எதையுமே பயிற்றுவிக்காகமலும் இராமல் அவசியம் ஏற்பட்டால் எல்லாவற்றையும் சுயமாகச் செய்து கொள்ளக் கற்பிக்க வேண்டும்.

தாய் தந்தையரை விட்டு ஹாஸ்டலில் வாழ வேண்டிய சூழ்நிலைகளும் பதின் பருவப் பெண்களுக்கு உண்டு. ஏனெனில் தாய் தந்தையர் வெளிநாடுகளில் இருக்க பெண் குழந்தைகள் இந்தியாவில் உறவினர் இல்லத்திலோ அல்லது கல்லூரி ஹாஸ்டலிலோ தங்கிப் படித்துக் கொண்டிருப்பார்கள். அப்படித் தனித்து இருக்க நேரும் பெண்களுக்கு தைரியம், தன்னம்பிக்கை ஆகியவற்றைக் கற்பிக்க வேண்டும். இரவு நேரங்களில் அல்லது சில இக்கட்டான சூழ்நிலைகளில் எப்படிச் செயல்படவேண்டும் எனவும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.தனியே பயணம் செய்தல், பண நிர்வாகம், ஒரு பிரச்சனையில் எப்படி முடிவெடுப்பது என்பனவற்றையும் கற்றுக் கொள்வார்கள். சில குழந்தைகள் தனித்து வாழ்வதாலேயே தலைமைப் பண்புகளுடன் தானே எல்லாவற்றையும் சீர் தூக்கி நிர்ணயிக்கும் ஆற்றலோடு திகழ்வார்கள்.

குடும்பம் என்ற கோயிலில் பெண் குழந்தைகள் தீபத்தைப் போல. தீபத்தின் பிரகாசம் சிறப்பாக விகசிக்கும் வண்ணம் அழகாக ஒளிவிடும்படி அவர்களைச் செய்விப்பதே சிறப்பு.


5 கருத்துகள்:

 1. எப்பவும் தங்களோட குழந்தைக்கு நல்லது கெட்டது புரிய வைச்சு வழி நடத்தும் பெற்றோர் இருந்தா எந்த சூழ்நிலையிலும் அந்தப் பிள்ளைகள் தவறிழைக்கத் துணிய மாட்டார்கள். தங்கள் அம்மா அப்பாவிடம் எல்லா வற்றையும் கலந்து கொண்டு செய்வார்கள். அதீத பணம் ., அதீத சுதந்திரம் கொடுக்கக் கூடாது. செல்ஃபோன், தனி ரூம், லாப்டாப் கொடுத்தாலும் என்ன பண்றாங்க, என அவ்வப்போது அக்கறையோடு கவனித்துக் கொள்வது நல்லது.

  - Avasaramaaga edukkum mudivu thavaragavum vaaipu athigam iruppathaal petravargalain vazhikaathul intriamaiyathathu.

  Nalla pathivu.

  பதிலளிநீக்கு
 2. மிகவும் அருமையான, அவசியமான பதிவு. இதனை பிரதி எடுத்து எல்லா பெற்றோர், பெண் பிள்ளைகளுக்கும் கொடுத்தால் நலம் என்பேன். அழகு, ஆரோக்கியம் அவசியம் ஆனால் இது தான் அழகு, ஆரோக்கியம் என்பதை உணராத போது நோய்கள் பெருகி அவதி தருகின்றன. இப்போது எல்லாம் இந்திய வனப்பும், அழகும், ஆரோக்கியமுள்ள பெண்களை ரவிவர்மா ஓவியங்களிலும், கோயில் சிற்பங்களில் மட்டுமே காணக்கூடியதாய் இருக்கின்றது.

  பதிலளிநீக்கு
 3. நன்றி மணவாளன்

  நன்றி நிரஞ்சன் தம்பி

  பதிலளிநீக்கு
 4. தாழ்வுமனப்பான்மையில்லாமலும், தப்பிதமான புரிதலில்லாமலும், கட்டுப்பாட்டுடனான சுதந்திரத்தோடும் கடமையுணர்வோடும் பெண்பிள்ளைகளை வளர்க்கவிரும்புவோர்க்குத் தேவையான நல்லதொரு கருத்தாக்கம். பாராட்டுகள் தோழி.

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...