பகைவனுக்கும் அருளிய மெய்ப்பொருள் நாயனார்
தன் குடிமக்களுக்கு நன்னெறியின் எடுத்துக்காட்டாய் விளங்கி, பகைவரிடத்தும் அறநெறி தவறாத அரசர் ஒருவர் முற்காலத்தில் இருந்தார். அவர் சிவனடியார்களை எல்லாம் சிவத் திருவுருவாகவே எண்ணிப் போற்றிப் பூசித்தவர். அப்படிப்பட்டவரைத் தன் தவ வேடத்தால் ஏமாற்றினான் பகைவன் ஒருவன். அவனது திருவேடத்தை உண்மை என்று நம்பியது மட்டுமல்ல, அவன் அடுத்துக் கெடுத்தபோதும் அத்திருவேடத்துக்காகவே அவனை நமர் என்று கூறிக் காப்பாற்றினார் அவ்வரசர்.
சோழவள நாட்டிற்கும் தொண்டை நாட்டிற்கும் இடையில் அமைந்திருந்தது திருக்கோவிலூர் என்னும் ஊர். அதை ஆண்ட குறுநில மன்னர் மாபெரும் சிவபக்தர். சிவனையே மெய்ப்பொருள் என்று கருதியதால் அவர் மெய்ப்பொருள் நாயனார் என்றும் அழைக்கப்பட்டார். சிவாலயங்களில் ஆறுகால பூசைகளையும், விழாக்களையும் குறைவற நடத்தி வந்தார். சிவனடியார்கள் யார் வந்தாலும் அவர்களுக்கு வேண்டியதை எல்லாம் வாரி வாரி வழங்குவார்.
எப்பேர்ப்பட்ட நல்லவர் என்றாலும் அல்லவர்கள் அவர்மேல் அழுக்காறு கொண்டிருப்பார்கள் அல்லவா. சேதிநாட்டு மன்னரான அவரைப் பற்றிய இச்செய்திகளை அவரது பகை நாட்டரசனான முத்தநாதன் கேள்வியுற்றான். அவருடன் அடிக்கடிப் போர்புரிந்து தன் யானைகளையும் குதிரைகளையும் காலாட்படைகளயும் இழந்துபட்டுத் தோற்றோடி மானம் அழிந்திருந்தான். எனவே போர்புரிந்து வெல்ல இயலாத அவரைச் சிவவேடம் பூண்டு சென்றாவது கொன்றுவிட வேண்டும் என்று பழி உணர்வு மேலிட்டது அவனுக்கு.
மேனியெங்கும் திருநீற்றைப் பூசிக்கொண்டான். கழுத்தில் உருத்திராக்கத்தை அணிந்துகொண்டான். சிவனடியாரைப் போல் உடை உடுத்திச் சடாமுடிகளை முடிந்து கொண்டான். ஒரு ஓலைச்சுவடிக்குள் தன் உடைவாளை மறைத்து எடுத்துச் சென்றான். அவன். உள்ளமெங்கும் பகைமை என்னும் இருள் நிறைந்திருக்க வெளிப்புறமோ அவன் சிவனடியார் வேடத்தில் ஒளிவிடும் விளக்கைப் போல் தோன்றினான்.
இரவு நேரம் அது. சிவனடியார்கள் வந்தால் அவர்களை எந்நேரமாயினும் திருக்கோயிலூர் அரண்மனை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்பது மெய்ப்பொருளாரின் அரச கட்டளை. அதனால் காவலர் யாருமே தடுக்காததோடு சிவனடியார் வந்திருக்கிறார் என்று வணங்க, அகந்தையுடன் உள் நுழைந்தான் முத்தநாதன். பல வாயில்களைக் கடந்த அவன் அரசரின் அந்தப்புரம் வந்து சேர்ந்தான்.
அரசர் துயில்கொள்ளும் நேரம் என்பதால் அவரது மெய்க்காப்பாளனான தத்தன் முத்தநாதனை உள்ளே செல்லக்கூடாது எனத் தடுத்தான். ”நான் அரசர்க்கு உறுதிப் பொருள் பற்றிக் கூற வந்துள்ளேன். தடுக்காதே” என்று அவனைத் தள்ளிவிட்டு உள்ளே சென்றான். அங்கே மன்னர் பொற்கட்டிலில் துயின்று கொண்டிருந்தார். பட்டத்து மாதரசியாரும் அருகே இருந்தார்.
அரவம் கேட்டு அரசர் துயில் எழவும் அரசியாரும் எழுந்து நின்றார். தவவேடத்தில் ஒரு சிவனடியாரை அந்நேரத்தில் தன் எதிரே காணவும் அகமகிழ்ந்த அரசர் உடனே தம் திருக்கரங்கள் கூப்பி அடியாரைப் பணிந்து வணங்கினார். ”மங்கலம் பெருக இவ்விடத்தில் தாங்கள் எழுந்த காரணம் என்னவோ?” என மன்னர் வினவ முத்தநாதனோ” முன்னம் உம் தலைவராம் சிவபெருமான் அருளிச் செய்த ஆகமநூல்களுள் ஒன்றை, இம்மண்ணின் மீது எங்கும் கிடைத்திராத ஒன்றை உமக்கு உபதேசிக்கவே வந்துள்ளேன்” என்று கூறித் தன் ஓலைச் சுவடியைக் காட்டினான்.
”இவ்வாழ்வில் இதைவிட எனக்குப் பெரும்பேறு ஏதும் உண்டா? இதை வாசித்துச் சிவப்பொருளை எமக்கருள்க” என அகமகிழ்ந்து அவனுக்கு உயர்ந்த ஓர் ஆசனம் அளித்த அரசர் அவ்வுபதேசத்தைக் கேட்கத் தயாரானார். :இதை உபதேசிக்கும்போது நறுமலர்க் கூந்தலுடைய மாது இங்கிருக்கலாகாது. நானும் நீயும் மட்டும் தனித்திருக்க வேண்டும்” என்று முத்தநாதன் உரைக்க அரசியார் எழுந்து அவ்விடம் விட்டகன்றார்.
அரசி அகன்றதும் தரை மேல் அமர்ந்த அரசரிடம் திருவெண்ணீறை அளித்துத் தானும் மேலெல்லாம் பூசிக் கொள்வதாய்ப் பாசாங்கு செய்தான் முத்தநாதன். அவ்வெண்ணீறை அரசர் குனிந்து தரிக்கும் நேரம் தன் ஓலைச்சுவடிக்குள் பதுக்கி இருந்த தன் உடைவாளை உருவி கண்ணிமைக்கும் தருணத்தில் அவரின் மேல் பாய்ச்சினான். குருதி பெருக மன்னர் சாய அதுவரையில் மன்னர் மேலும் வந்தவன் மேலும் கண்ணாக இருந்த தத்தன் இக்கொடூரச் செயலைக் கண்டு அதிர்ந்து தன் உடைவாளை உருவியபடி முத்தநாதனை வெட்ட ஓடி வந்தான்.
முத்தநாதனின் தவவேடத்தையும் சிவனடியார் திருவேடமாகக் கருதிய மன்னர் குத்துண்டு வீழும் போதும் “தத்தா நமரே காண்” எனத் தத்தன் முத்தநாதனைத் தாக்காமல் தடுத்தார். வீழ்ந்து கிடந்த மன்னரைக் கண்டு கண்ணீர் பெருகியது தத்தனுக்கு. இவ்வகை அரவங்கள் கேட்டு உள்ளே சென்ற மன்னரின் பட்டத்துராணி ஓடிவந்து பார்த்துக் கண்ணீர் பெருக்கினார்.
மன்னரை வணங்கி அவர் தம் தலையைக் கையால் தாங்கிய தத்தன்” இனி யான் செய்ய வேண்டியது என்ன அரசே” என வினவ ,”இச்சிவனடியாருக்கு எந்த ஊறும் நேராமல் நாட்டு எல்லைவரையில் கொண்டுபோய்ப் பாதுகாப்பாக விட்டுவா” என்று மெய்ப்பொருள் நாயனார் கட்டளை இட்டார். மன்னனுக்கு நிகழ்ந்த கொடுமையைக் கேட்ட குடிமக்கள் கொந்தளித்து அக்கொடும்பாதகனைக் கொன்றொழிக்கத் திரண்டனர்.
அனைவரையும் ”மன்னரின் ஆணை” என்று தடுத்த தத்தன் முத்தநாதனை நாட்டுஎல்லை தாண்டி மக்கள் வராத காட்டுக்குள் பாதுகாப்பாகக் கொண்டு சேர்ப்பித்துத் திரும்பினான். அரண்மனக்கு வந்து அரசரின் எதிரில் நின்றன். திரண்ட கண்ணீரை மறைத்து ”தவவேடம் பூண்டு வந்து தன் கொடுங்காரியத்தில் வென்றதாக நினைத்த அச்சிவடினயாரை எந்த இடையூறும் இன்றிப் பாதுகாப்பாக விட்டு வந்தேன்” எனக் கூறினான்.
அப்போதும் மெய்ப்பொருள் நாயனார், “இன்று எனக்கு ஐயனாக நீ செய்த இவ்வுதவியை யார் செய்ய வல்லார்?” எனக் கனிவுடன் இயம்பினார். அரசியாருக்கும் இளவரசருக்கும் ஏனையோருக்கும் ”திருநீற்று நெறியைக் காத்து வாழ்வீர்” என்று அறப்பொருள் கூறி சிவபெருமானின் திருவடி நீழலைச் சிந்தை செய்தார். சிவபெருமானாரும் தம் திருவடி நிழலில் கலந்து இன்புறுமாறு அரசர் தமக்கு அருள் செய்தார். தவ வேடத்தையும் மெய்ப்பொருளாகக் கருதிப் பகைவனுக்கும் அருள் செய்தவர் மலையைப் போல் உயர்ந்த மலையமநாட்டு மன்னரான மெய்ப்பொருள் நாயனார் என்றால் அது மிகையில்லை.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)