எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 17 ஜனவரி, 2026

அம்மையப்பருக்காய்த் தம்மையே அர்ப்பணித்த அமர்நீதியார்

 அம்மையப்பருக்காய்த் தம்மையே அர்ப்பணித்த அமர்நீதியார்


பொன் பொருள் திரவியம் எதுவுமே இறைவன் தந்த பொருளுக்கு ஈடானதல்ல. திருத்தொண்டும் இறைப்பற்றுமே நிறைப் பொருள் என்று தம் வாழ்க்கை மூலம் நிறுவி இறைப் பொருளுக்கு ஈடாகத் தம்மை மட்டுமல்ல தம் குடும்பத்தையே அர்ப்பணித்தார் நாயனார் ஒருவர். அவர்தான் அமர்நீதி நாயனார். இகலோக வாழ்விலும் அவர் மெய்ப்பொருளைப் பற்றிச் சிவலோக வாழ்வினை அடைந்தவிதம் பார்ப்போம்.

சோழ நாட்டில் பழையாறை என்னும் ஊரில் பிறந்தவர் அமர்நீதியார். வணிகக் குலத்தைச் சார்ந்த இவர் தொட்டதெல்லாம் பொன்னாகத் துலங்கியதால் பெரும் பொருட்செல்வம் கொண்டிருந்தார். திருநல்லூரில் வாழ்ந்து வந்த அவர் பெருஞ்செல்வந்தராய் இருந்தாலும் சிவன்மேல் பேரன்பு பூண்டு சிவனடியார்களுக்குத் திருவமுது படைத்தல், கௌபீனம் அளித்தல், ஆகிய திருத்தொண்டுகளைச் செய்துவந்தார்.


இதற்கெனவே அவர் திருநல்லூரில் திருமடம் ஒன்றைக் கட்டி அதில் சிவனடியார்களுக்குத் திருவமுது செய்வித்து மகிழ்ந்து வந்தார். மகேசன் தொண்டில் விருப்புற்ற அவர் தம் உற்றார் சுற்றத்தாரோடு திருநல்லூரில் திருவிழாக்களையும் நடத்தி வந்தார்.

ஒருநாள் அவரது திருமடத்துக்குப் பிராமண பிரம்மச்சாரி ஒருவர் சிவனடியாராக எழுந்தருளினார். அவர் வேறு யாரும் அல்ல சிவபெருமானேதான் அமர்நீதியாரைச் சோதிக்கத் திருவுள்ளம் கொண்டு அவ்வாறான வடிவத்தில் வந்திருந்தார். இரு கௌபீனங்கள் முடிந்த தண்டுடன் வந்த அவர் இடையில் ஒரு கௌபீனம் அணிந்திருந்தார். திருமடத்தை அடைந்தவரை எதிர்கொண்டு வரவேற்ற அமர்நீதியார் அன்போடு அவரை வணங்கி உபசரித்தார்.

“தேவரீர்! தங்கள் வருகையால் திருமடம் பொலிவுற்றது. எந்தப் பிறவியில் யான் செய்த புண்ணியமோ நீங்கள் இங்கே எழுந்தருளியது. இன்று என் மனம் மிகவும் மகிழ்கிறது. தாங்கள் இங்கே திருவமுது செய்தருளவேண்டும்” என வேண்டிக் கேட்டுக் கொண்டார். இளம் பிரம்மச்சாரியோ,” நாம் எப்போதும் ஸ்நானம் செய்தபின்தான் போசனம் கொள்வோம். எனவே காவேரியில் நீராடி வருகிறோம். “ என்று கூறினார்.

வெளியே செல்லக் காலடி எடுத்து வைத்த அவர் அமர்நீதியாரிடம் திரும்பி” மேகமூட்டமாய் இருக்கிறது. மழை வரும்போல் தெரிகிறது. எனவே எனது ஒரு கௌபீனத்தை ஈரம் படாமல் இங்கேயே வைத்துக் கொள்ளுங்கள். எனது தண்டில் கொண்டு செல்லும் கௌபீனம் மழையில் நனைந்துவிட்டால் இதை நான் வாங்கி அணிந்து கொள்வேன்” என்று கூறித் தனது தண்டில் இருந்த ஒரு கௌபீனத்தைக் கழற்றி அமர்நீதியாரிடம் கொடுத்தார்.

அமர்நீதியாரும் அதை வாங்கிச் சென்று திருமடத்தின் ஒரு அறையில் பத்திரமாக வைத்துவிட்டு வந்தார். நீராடச் சென்ற சிவனடியாரோ அமர்நீதியாரைச் சோதிக்க எண்ணி அவரிடம் கொடுத்த கௌபீனம் மறையும்படிச் செய்தார். மழை கொட்டிக் கொண்டிருந்தது. காவேரியில் நீராடி மழையிலும் நனைந்தபடி திருமடம் வந்து சேர்ந்தார் அந்தச் சிவனடியார்.




அவர் அணிந்த கௌபீனமும் தண்டில் முடிந்த கௌபீனமும் ஈரமாய் இருக்க அமர்நீதியாரிடம் தான் அளித்த கௌபீனத்தைக் கொணரும்படிச் சொன்னர். அமர்நீதியாரும் தான் அவரது கௌபீனத்தை வைத்த அறையில் சென்று தேட அதுவோ மாயமாய் மறைந்திருந்தது. துணுக்குற்ற அமர்நீதியார் அக்கௌபீனத்தைத் தேடித் தேடிச் சோர்ந்தார்/. அங்கே யாரும் சென்றிருக்கவோ அதை எடுத்திருக்கவோ வாய்ப்பேயில்லை.

அங்கே தாம் சேமித்து வைத்திருந்த கௌபீனங்களில் ஒன்றை எடுத்து வெளியே வந்து சிவனடியாரிடம் கொடுத்து ”தேவரீர்! மன்னித்தருள வேண்டும். தாங்கள் தந்த கௌபீனத்தைப் பாதுகாப்பான ஓரிடத்தில்தான் வைத்திருந்தேன். தற்போது அதைக் காணவில்லை. இது கௌபீனமாகவே முழுமையாக நெய்யப்பட்டது. எனவே இதை அணிந்து வந்து தேவரீர் திருவமுது செய்ய வேண்டும்” என வேண்டிக் கொண்டார்.

வந்ததே கோபம் சிவனடியாருக்கு, ”அமர்நீதியாரே! இது என்ன மாய்மாலம். நான் தந்த கௌபீனத்தைத் தாரும். இதெல்லாம் யாருக்கு வேண்டும். சிவனடியார்களுக்குத் திருவமுது செய்வித்துக் கௌபீனம் தருவதெல்லாம் என் போன்றோரின் கௌபீனத்தைக் கவர்வதற்கா” எனச் சீறினார்.

அமர்நீதியாரோ.”தேவரீர். அறியாமல் நிகழ்ந்த இத்தவறைப் பொறுத்தருள வேண்டுகிறேன். இந்தக் கௌபீனத்துக்கு ஈடாகப் பொன் பொருளைத் தருகிறேன்” என்று கூறவும், சிவனடியாரோ, “ எமக்கெதெற்கு உம்முடைய பொன்னும் பொருளும். எம்முடைய கௌபீனத்துக்கு ஈடாக நிறையுள்ள கௌபீனத்தைத் தந்தால் போதும்” என்றார்.

அப்பாடா என மனம் மகிழ்ந்த அமர்நீதியாரோ தராசைக் கொணரச் செய்து சிவனடியாரின் கௌபீனத்தை ஒரு தட்டில் வைத்து மறுதட்டில் தம்மிடமிருந்த உயர்தரமாய் நெய்யப்பட்ட கௌபீனம் ஒன்றை வைத்தார். சிவனடியாரின் கௌபீனம் இருந்த தட்டு சமமாய் எழும்பவில்லை.


அடியார்களுக்கு அளிப்பதற்கென்று இன்னும் இன்னும் தன்னிடமிருந்த அனைத்துக் கௌபீனங்களையும் வைத்த அவர் தட்டு சமமாக ஆகாததால் மிரட்சி அடைந்து தம்மிடமிருந்த அனைத்துப் பட்டு வஸ்திரங்களையும் வைத்தார், சிவனடியாரின் கௌபீனம் இருந்த தட்டு மேலேறாததால் திகைத்த அவர் சிவனடியாரிடம்,”ஐய! எவ்வளவு குவித்தாலும் என்னுடைய தட்டு உயர்ந்தே இருக்கிறதே. என்னுடைய மற்ற திரவியங்களையும் வைக்கலாமா” எனப் பவ்யத்துடன் கேட்க, அனுமதித்த சிவனடியார் ”எதை வேண்டுமானாலும் இடுங்கள். ஆனால் அது என்னுடைய கௌபீனத்துக்கு ஈடான நிறையில் இருக்கவேண்டும். அவ்வளவே” என்றார்.

பொன் பொருள் திரவியங்கள் நவமணிகள் இட்டும் சிவடியாரின் தட்டு உயராததால் சிவனை வணங்கித் தன் மனைவியையும் மகனையும் தராசில் அமர்த்தினார் அமர்நீதியார். அப்போதும் தட்டு சமமாகாததால் ”சிவனடியார்களுக்குச் செய்யும் திருத்தொண்டை நாங்கள் பிழைபடாமல் மனநிறைவோடு செய்கின்றோம் என்றால் இத்தட்டு இரண்டும் சமமாக நிற்பதாக” என்று கூறித் திருநல்லூரில் கோயில்கொண்ட சிவபெருமானை வணங்கித் திருவைந்தெழுத்தை மனமுருக ஓதித் தானும் ஏறித் தராசுத் தட்டில் அமர்ந்தார். என்னே அற்புதம்!!. அடுத்த கணம் தட்டுக்கள் இரண்டும் சமமாய் நின்றன.


இறைப்பொருளுக்குச் சமமாக அமர்நீதியாரின் இறைப்பற்றும் திருத்தொண்டும் விளங்கியது கண்டு திருமடத்திலிருந்தோர் வியந்து ஆகாகாரம் செய்தனர். சிவனும் சிவனடியார்களும் ஒன்றே என்றுணர்ந்த தேவர்களோ இக்காட்சியைக் கண்டு மலர்மாரிப் பொழிந்தனர். கௌபீனம் வேண்டிய பிரம்மச்சாரிச் சிவனடியார் தாம் இருந்த இடத்தில் இடபாரூடராகத் தோன்றித் தம் திருக்கோலத்தை அமர்நீதியாருக்குக் காண்பித்தார். அமர்நீதியாரும், அவர் புதல்வனும், மனைவியாரும் அவரைத் தொழுது வணங்க இகலோகத்திலே சிவலோக வாழ்வினைப் பெரும் பேறு பெற்றார்கள் அம்மூவரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...