முள்முடி
”டண்டணக்கா டணக்கு னக்க.. டண்டணக்கா டணக்கு னக்க” பள்ளிக்கூடப் பக்கவாட்டுக் காம்பவுண்டை ஒட்டித்தான் இந்தச் சத்தம். செல்வி டீச்சரின் காதுகளில் மட்டும் ஊரில் இருக்கும் எல்லா ஒலியும் எப்படியோ கேட்டு விடும். என்ன ஒரு திடுக்கிட வைக்கும் சத்தம்.
பள்ளியை ஒட்டி இருந்தது அந்த நீத்தார் விடுதி. அதன் முன்புறம் மாபெரும் ரோடு இருந்தது. அதன் வழியாகத்தான் தினம் நீத்தார் ஊர்வலம் முன்பு இடுகாட்டுக்குச் செல்லும். இப்போது ஒரு வாரமாகப் பள்ளியை ஒட்டி இருந்த அந்தப் பத்தடி சந்தில் சென்று கொண்டிருந்தது.
கோபம் மேலிட பள்ளியின் மெயின் கேட்டை விட்டு வெளியே வந்த செல்வி டீச்சர் பிண ஊர்வலம் திரும்பும் வரை காத்திருந்து அந்த நீத்தார் விடுதிக்குச் சந்தின் வழியாகவே சென்று சேர்ந்தார். அங்கே பெண்களின் கூட்டம் குளியலறையில் முண்டியடித்துக் கொண்டு இருந்தது.
நெல்லும் குந்தாணியும் கவிழ்த்து விடப்பட்டு இருக்கப் பாயைச் சுருட்டி எடுத்துச் சென்றாள் ஒரு பெண். முன்புறம் அந்த நீத்தார் விடுதியினை மேற்பாத்து வரும் நிர்வாகியிடம் சென்றார் செல்வி டீச்சர்.
“இந்தப் பக்கம் பள்ளிக்கூடம் இருக்கு. ஐநூறு பிள்ளைகளுக்கு மேலே படிக்கிறாங்க. தெனம் இந்த மாதிரிச் சத்தம் வந்தா பிள்ளைங்க எல்லாம் பயப்படுறாங்க. மெயின் ரோட்டுல போன ஊர்வலம் இப்ப ஏன் பின்பக்கமா வருது.”
“அந்தப் பக்கம் வீடு இருக்கவங்க எல்லாம் தினம் தினம் இதென்ன இழவுச் சத்தம். இந்தப் பக்கம் வரக்கூடாதுன்னு கோர்ட்ல வழக்குத் தாக்கல் செய்திருக்காங்கம்மா. வேற வழி எங்க இருக்கு” என்று பரிதாபமாகக் கேட்டார் நிர்வாகி. என்ன செய்வதெனப் புரியாமல் விழித்தார் செல்வி டீச்சர்.
“சார் சத்தமில்லாமப் போனாலும் பரவாயில்லை. சொந்தக் காரங்க வரும்போதெல்லாம் கொட்டுக் கொட்டுறீங்க. அப்புறம் எடுக்கும் போதும். எங்க ஸ்கூல் காம்பவுண்டை ஒட்டித்தான் போகுது. அட்லீஸ்ட் எடுத்துட்டுப் போகும்போதாவது கொட்டுக் கொட்டாம போகச் சொல்லுங்க சார். எங்களுக்கே நெஞ்சப் பாரடிக்குது. பச்சப் புள்ளங்க நடுங்குதுங்க”
“சரிம்மா. அதச் சொல்லிடுறேன். இனி கொட்டு சத்தம் ரொம்ப வராமப் பார்த்துக்குறோம்மா” என்றார்.
பள்ளிக்குத் திரும்பி வந்த செல்வி டீச்சர் யாரோ காம்பவுண்டின் பக்கமாகப் பதுங்குவதைப் பார்த்தார். மெயின் கேட் வழியாக உள்ளே நுழைந்தவர் மரத்தடிகளில் யாரையும் காணாமல் கழிவறை செல்வதற்காக வராண்டாவில் நடந்து சென்றார். கழிவறைக்குப் பின்புறமாக யாரோ சென்றது போல் அசைவு தென்பட வேகமாகச் சென்று பார்த்தார்.
அரக்கு நிற பாட்டில் ஒன்றை வீசிவிட்டு வேக வேகமாக ஓடியது ஒரு உருவம். தட தடவென ஓடியதையும் கூடை போன்ற தலை முடியையும் பார்த்தால் எசக்கியோ எனத் தோன்றியது. பின் தொடர்ந்து ஓடத் தொடங்கிய செல்வி டீச்சருக்கு மூச்சு வாங்கியது. வாசல் பக்கம் ஓடிய உருவத்தை மடக்கிப் பிடிக்க வந்தார் கேட் கீப்பர் முருகன். அவரையும் தள்ளிவிட்டுக் காம்பவுண்டுச் சுவரில் கை வைத்து எம்பிக் குதித்து ஓடியது அவ்வுருவம்.
“யார் சார் அது எசக்கியா” எனக் கேட்டார் செல்வி டீச்சர். ”அந்தத் தறுதலப் பயதான். அவந்தாத்தா முனியாண்டி பாவம் உக்கி உருகி ஒழைக்கிறாரு. தாய் தகப்பனில்லாத பிள்ளைன்னு ரொம்பச் செல்லம் கொடுத்து வளத்திட்டாரு”.
“அவரத் தெரியுமா ஒங்களுக்கு. நான் பார்க்கணும்னு வரச் சொன்னேன்னு சொல்லுங்க” என்று கூறிவிட்டுத் திரும்பிச் சென்றார் செல்வி டீச்சர். நாளைய பாரதம் எங்கே போகுது? இவர்களா நாட்டை நல்வழியில் செலுத்தப் போகிறவர்கள்?
“வணக்கம் மா. நாந்தான் முனியாண்டி. எசக்கியோட தாத்தா. வரச் சொன்னீங்களாம். முருகன் சொன்னாரு.” கைலியும் பனியனும் அணிந்து மெலிந்த உருவிலிருந்தார் அந்த மனிதர். அவரின் பக்கத்தில் முறைத்தபடி நின்றிருந்தான் எசக்கி.
“ஐயா. ஒங்க பேரன் பள்ளிக்கூடத்துக்குச் சரியாவே வர்றதில்ல. பக்கத்துல எழவுக்கு ஆடுறவங்க கூடப் போயி எல்லாம் ஆடுறான். சமயத்துல அவங்களோட சேர்ந்து குடிச்சிப்புட்டு எல்லாம் ஸ்கூலுக்கு வர்றான். இங்க கட்டுப்பாடு முக்கியம். தலைமை ஆசிரியை வரை செய்தி போச்சுன்னா டிசியக் கொடுத்து அனுப்பிடுவாங்க.”
சங்கடத்தில் நெளிந்து கொண்டிருந்தார் முனியாண்டி. பேரனைப் பற்றிய செய்திகள் எல்லாம் அவர் அறிந்ததுதான் என்றாலும் பள்ளியை விட்டே அனுப்பிடுவாங்களா. பதட்டமாய் இருந்தது அவருக்கு. பேரனைத் திரும்பிப் பார்த்து ”இப்பிடி எல்லாம் ஏண்டா செய்றே. இனி இப்பிடிச் செய்ய மாட்டேன்னு டீச்சர்கிட்ட மன்னிப்புக் கேளு”. கோபமாய் உறுத்து விழித்தான் எசக்கி. போட்டுக் கொடுத்த செல்வி டீச்சரை இன்னும் அதி உக்கிரமாய்ப் பார்த்து விழித்தான். பல்லைக் கடித்து வாய்க்குள்ளே கெட்ட வசவுகளால் திட்டிக் கொண்டிருந்தான்.
கையைப் பிடித்த தாத்தாவின் கையை உதறினான். “எலே மன்னிப்புக் கேக்காட்டி நீ வீட்டுப் பக்கம் வந்திராதே. ஒங்க அப்பன் ஆத்தா மாதிரி நானும் தொலைஞ்சிட்டேன்னு வைச்சிக்க.” அப்பன் ஆத்தா என்ற வார்த்தைகளைக் கேட்டதும் எசக்கிக்குள்ளும் ஒரு மாறுதல்.
இந்தத் தாத்தனை விட்டால் அவனுக்கும் யாரிருக்கிறார்கள். சும்மா வெள்ளாட்டுக்குக் குடிச்சுப் பார்த்தது தப்பா. தரையைப் பார்த்தபடி வாய்க்குள் ”மன்னிச்சுக்குங்க டீச்சர்” என்றான். ”ஒங்க தாத்தாவே வந்து கேட்டுட்டாருன்னு இந்தத் தடவை மன்னிச்சு விடுறேன். இனி ஒழுங்கா வகுப்புக்கு வந்து சேரு. இந்த வயசுல படிப்புத்தாண்டா முக்கியம்.” சொல்லிவிட்டு செல்வி டீச்சர் திரும்பிச் செல்ல கொரக்களி பிடிச்சவன் போல பக்கத்துத் தூங்குமூஞ்சி மரத்தை எத்திவிட்டுத் தாத்தாவின் பின்னேயே வீடு திரும்பினான் எசக்கி.
ஆணழகன் சலூனில் கூட்டம் நிரம்பி வழிந்தது. கல்லூரிப் பையன்கள் மஷ்ரூம் கட், சீஸர் கட், ஸ்பைக்கி என்று இளைஞர்கள் விதம் விதமாக முடிவெட்டிக் கொண்டு வெளியே செல்ல, அவனது தாத்தா முனியாண்டியோ ”நல்லாக் கரைச்சு விடுப்பா” என்று சலூன்காரரிடம் சொல்லி அவனை விட்டு வந்தார்.
எப்பப்பாரு இந்தக் கெழவனோட ஒரே ரோதனையாப் போச்சு. சின்னப் புள்ளைலேருந்து சட்டியத் தலையில கவுத்துவிட்டா மாதிரி மொட்டை அடிக்காத கொறையா முடிய ஒட்ட வெட்டி விடச் சொல்லிடுவாரு. இந்த சலூன்கார அண்ணனும் பாரு.. நமுட்டுச் சிரிப்போட இப்பிடியே வெட்டிக்கிட்டு இருக்காரு.
“அண்ணே அண்ணே ப்ளீஸ் அண்ணே எனக்கு வித்யாசமா வெட்டி விடுங்கண்ணே. எவ்ளோ பணம்னு சொல்லுங்க. தரேன்”. தாத்தாவின் பெட்டியில் இருந்து அடித்து டவுசரில் வைத்திருந்த நூறு ரூபாய் நோட்டுக்களைக் காண்பித்தான். ”இல்லப்பா அவரு கோச்சுக்குவாரு. பசங்களுக்கு இப்பிடி முடி வைச்சா ஸ்கூலுக்குள்ள கூட ஒன்னய விட மாட்டாங்க.”
முடிவெட்டிக் கொண்டிருக்கும் போதே சலூன்காரருக்கு ஃபோன் வந்துவிட இருப்பா ஒரு நிமிஷம் என்றபடி சிக்னல் கிடைக்காமல் வெளியே சென்றார்.
பக்கத்தில் இருந்தது அவர் முன்பு ஒருவருக்கு வெட்டி விட்ட எலக்ட்ரிக் ஹேர் ட்ரிம்மர். ப்ளக்கைக் கூட அவர் நீக்க மறந்திருந்தார். தன்னைப் போர்த்தியிருந்த சலூன் துண்டை நீக்கி எழுந்து அதை எடுத்துக் கையில் வைத்துப் பார்த்தான். பட்டனை அமுக்கிப் புறங்கையில் வைத்து இழுக்க அது சர் என்று முடியை வழித்துக் கொண்டு போனது.
திருட்டுத்தனமாக வெளியே பார்த்துக் கொண்டே காதின் பக்கவாட்டில் வைத்து அழுத்தினான். சரசரவென முடியை வழித்தபடி இறங்கியது அது. ஒருபக்கம் முடி முழுதும் கீழே கொட்டியது. பயங்கர சந்தோஷமாகி விட்டது அவனுக்கு. கொஞ்சம் துணிச்சல் வந்தவனாக இன்னொரு புறமும் வழித்தான்.
சலூன் கடைக்காரரின் குரல் வெளியே கேட்டு கொண்டிருந்தது. கண்ணாடியில் பார்த்தான். மேலே ஸ்பைக்கி என்று போட்டிருந்த படத்தை ஒட்டியிருந்தது அவனது தலை. இன்னும் சிறிது மேலே இருபுறமும் தைரியமாக வழித்து எடுத்தான். பயங்கரக் குஷியாகி விட்டது. நடுவில் வரலாற்றுப் பாடத்தில் என்றோ பார்த்த ரோமானிய அரசர்கள் மாதிரி முடி நீட்டிக் கொண்டிருந்தது.
பக்கத்தில் இருந்த ப்ரில் க்ரீமைப் பிதுக்கி எடுத்தான் முடிகளில் தடவி இரு கைகளாலும் மேல்நோக்கிக் கோதியபடிப் பார்த்தான். அட.. அடடே அவன் நினைத்த ஸ்பைக்கி ஹேர்ஸ்டைல் அவன் முன்னே. கண்ணாடியில் தெரிபவன் அவனேதான். ”டேய் முள்ளம்பன்னி மாதிரி இது என்னடா.. மேலேயும் லெவல் பண்ணனும்டா. ஒங்க தாத்தா வந்து என்னய ஒதைக்கப் போறாரு” என்று சலூன் கடைக்காரர் அவனைப் பிடிக்க முயல வேகமாக அவரது கையை உருவி விட்டு வெளியே பறந்தான் எசக்கி.
பள்ளிக்கூடம் பூரா எசக்கியின் தலைமுடிதான் பேச்சு. தன் சைக்கிளில் சுற்றியவன் க்ரவுண்டில் நடந்து கொண்டிருந்த பெண்களை ஓரக் கண்ணால் பார்த்தான். ரொம்ப நாளாக அவன் பார்த்துக் கொண்டிருந்த பூங்கொடி இன்று அவனை ஆச்சரியமாகப் பார்த்துக் கடந்தாள். ஒருகணப் பரவசத்தில் ஜிவ்வென்று பறந்தவன் எதிரே இருந்த மரத்தைப் பாராமல் இடித்து உருண்டு விழுந்தான். கைகால் எல்லாம் சிராய்ப்பு.
மதிய வகுப்புகள் ஆரம்பிப்பதற்கான மணி ஒலிக்க காவற்கார முருகன் அவனைப் பிடித்து வகுப்பறைக்கு இழுத்துச் சென்றார். வாசலை அடைத்தபடி அவர் நிற்க அவனால் வெளியே ஓட முடியாமல் இருந்தது. செல்வி டீச்சர் வகுப்பு.. அவனின் தலைமுடி கோலத்தைப் பார்த்ததும் செல்வி டீச்சருக்கு வந்ததே கோபம்.
“என்னடா சண்டியர்னு நெனைப்பா ஒனக்கு. இது என்னடா கந்தரகோலம்? ஒன்பதாம் வகுப்புப் படிக்கிறப்பவே என்ன ஸ்டைலெல்லாம் வேண்டிக் கெடக்கு.” செல்வி டீச்சர் அவனைப் பட்டென்று கன்னத்தில் அடிக்க முயல விலகிக் கொண்டான். காற்றில் கை வீசிய டீச்சருக்கு இன்னும் கோபம் அதிகமானது.
”டேய் எவனாவது பென்சில் சீவுற ப்ளேடு வைச்சிருக்கியா.” ஒருவரும் கொடுக்கவில்லை. எசக்கி மீது பயம். வெளியே வந்தால் அடித்துப் போட்டுவிடுவான். முன் பெஞ்சில் இருந்தவனது பாடப் பையை இழுத்து அதில் ஜியாமெட்ரி பாக்ஸை எடுத்தார் டீச்சர். டேபிளில் திறந்தபடி வைத்துவிட்டு அதில் இருந்த ப்ளேடை எடுத்தார்.
எசக்கி தலையைச் சாய்த்தான். அவன் கையை எட்டிப் பிடித்த டீச்சர் முன்புற முடியைக் கொத்தாகப் பிடித்தார். வலது கையில் இருந்த ப்ளேடால் கைக்கு அகப்பட்ட முடியை கோணல்மாணலாக அறுத்து அவன் கையில் வைத்தார். திகிலில் உறைந்து போயிருந்தது வகுப்பு. “ந்தா நாளைக்குப் போயி மொட்டை அடிச்சிக்கிட்டு வந்திரு. இதே முடியோட வந்தே பள்ளிக்கோடத்துக்குள்ள நொழைய முடியாது” ப்ளேடை டப்பாவில் போட்டு விட்டு விரலை மிரட்டுவது போல் ஆட்டினார் செல்வி டீச்சர்.
கையில் பிசிறு பிசிறாய் முடி. அவன் தலையைப் பார்த்து வகுப்பே சிரிப்பது போலிருந்தது. உக்கிரமாய் டீச்சரை உறுத்து விழித்தான். ஆத்திரத்தில் என்ன செய்வதெனத் தெரியவில்லை. கண்ணில் திறந்திருந்த ஜியாமெட்ரி பாக்ஸ் தென்பட்டது. அதில் பென்சில் மாட்டியிருந்த காம்பஸ் இருந்தது. எதையும் யோசிக்காமல் அதை எடுத்து டீச்சரின் மேல் குத்த ஓங்கினான். அவர் லேசாக விலக அது அவரின் இடது பக்க வயிற்றுப் பக்கம் சரக்கென இறங்கியது.
ஆ என்ற சத்தம் டீச்சரிடம் இருந்து எழும்பியது. ஒருகணம் அதிர்ச்சியில் தடுமாறிய எசக்கி வாசலில் நின்றிருந்த காவற்காரர் முருகனைத் தள்ளிக்கொண்டு ஓடினான். டீச்சரின் வயிற்றில் ரத்தப் பொட்டுக்கள் தோன்றி வழியத் தொடங்கியது.
எவ்வளவு தூரம்தான் ஓடுவது. எவ்வளவு நாள்தான் ஓடுவது. ஒரு வாரம் இருக்கும், எசக்கி ஊரையும் வீட்டையும் பள்ளிக்கூடத்தையும் விட்டு ஓடிவந்து. கையில் இருந்த காசில் கிடைத்ததை வாங்கித் தின்று கொண்டு திரிந்தான். இன்றோடு காசும் காலியாகிவிடும். ஆளும் புழுதியில் புரண்டமாதிரி அழுக்கோடு இருந்தான்.
தாத்தா அழுதுக்கிட்டு இருக்கும். நினைத்ததும் வருத்தமாக இருந்தது அவனுக்கு. டீச்சருக்கு என்னாச்சோ. முடிய வெட்டுன்னு சொல்லலாம். அதுக்குன்னு பொம்பளப் புள்ளைக முன்னாடி எப்பிடி முடிய இப்பிடி அறுத்துப் போடலாம். எவ்வளவு கேவலம்.
தான் செய்ததை நியாயப்படுத்திக் கொண்டபோதும் ஊருக்குச் செல்லவேண்டும், தாத்தாவைப் பார்க்கவேண்டும் என்று அவனது மனசின் அரிப்பு அதிகமானது. ஊருக்கு வெளியே ஒரு முத்தையா கோயில் இருந்தது. அங்கே இருந்த பிரம்மாண்ட சிலைகளுக்குப் பின்னால் படுத்துக் கிடந்தான்.
“செல்வி டீச்சருக்கு இப்ப எப்பிடிப்பா இருக்கு.” “அந்த டீச்சருக்கு வயித்துல தையல் போட்டாங்களாம். தகுந்த நேரத்துல பார்த்ததால இப்பப் பரவாயில்லையாம்.” ”குத்துன பயலை ஜெயில்ல போடணும்.” “ சின்னப் பயல்தானே சிறுவர் ஜெயில்லதான் போடுவாங்க. இல்லாட்டி சீர்திருத்தப் பள்ளியில” இதை எல்லாம் கேட்கக் கேட்க எசக்கிக்குக் கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது.
முத்தையா கோவிலுக்குப் பக்கத்திலிருந்த வயலில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளைப் பத்தி விட்டார் வயலுக்குச் சொந்தக்காரர். கொம்போடு அவர் துரத்த ஒரு பொலி காளை முத்தையா கோவிலை நோக்கித் தாறுமாறாக ஓடி வந்தது. வேகமாக எழுந்த எசக்கி அங்கிருந்தும் ஓடிப்போக எண்ணினான். இரண்டு நாட்களாக உணவு எதுவும் இல்லாமல் பட்டினி. கை கால் எல்லாம் பலகீனமாக இருந்தது.
முத்தையா சிலையைச் சுற்றிக் கொண்டு வெளியே வந்தால் எதிரே ஓடிவரும் மாடு. ஒரு கணம் எதிர்வந்த எசக்கியைப் பார்த்த மாடு அவனைத் தன் கொம்பால் கெந்திவிட்டு ஓடியது. கொம்பு பட்ட இடத்தில் ரத்தம் குபுகுபுத்தது. அது அவன் டீச்சரைக் குத்திய அதே இடப்புற விலா. குடல் பிதுங்க மயங்கிச் சரிந்தான் எசக்கி.
“ஐயா.. ராசா.. எசக்கி. கண்ணத் தொறபுள்ள..” கதறிக் கொண்டிருந்தார் விஷயம் கேள்விப்பட்டு ஓடிவந்த முனியாண்டி. மாட்டைத் துரத்திய வயல்காரர் தன் வண்டியிலேயே எசக்கியைத் தூக்கி வந்து பெரியாஸ்பத்திரியில் சேர்த்திருந்தார். பெரிய டாக்டர் மற்ற டாக்டர்கள் புடைசூழ ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்தார். மூன்று மணி நேரம் கடந்திருக்கும். செல்வி டீச்சர் தேடி வந்திருந்தார். ”அம்மா நீங்க ஏம்மா இங்கே. ஒங்களுக்கு இப்ப எப்பிடி இருக்கும்மா” எனப் பரிதவித்தார் முனியாண்டி.
“வயித்துல லேசா தோல்பக்கம் கிழிச்சிருச்சுய்யா. ஆழமாப் போகல. தையல் போட்டுட்டாங்க. இப்பப் பரவாயில்லை.”
ஆபரேஷன் தியேட்டருக்குள் நர்ஸுகளும் டாக்டர்களும் போவதும் வருவதுமாக இருந்தார்கள். பரபரப்பாக இருந்தது சூழ்நிலை. ஒரு நர்ஸைப் பிடித்து என்னாச்சு என விசாரித்தார் செல்வி டீச்சர். ”ரத்தம் ரொம்பப் போயிட்டதால ரத்த வங்கில ரத்தம் கேட்டிருக்காங்க. ஆனா கெடைக்கல, இந்தப் பையன் ரத்தம் ஏபி நெகட்டிவ்னு அரிய வகை.”
செல்வி டீச்சர் “எனக்கும் அதே வகைதான். என் ரத்தத்தையே அந்தப் பையனுக்குச் செலுத்தலாம். நான் தர்றேன்” என்றார். “அம்மா ஒருவாரம் மின்னாடிதான் உங்களுக்குக் காயமாச்சே” என்று தழுதழுத்த முனியாண்டியின் கையைப் பிடித்து மெல்ல அடக்கிவிட்டு நர்ஸுடன் உள்ளே சென்றார் செல்வி டீச்சர்.
ஒரு மாதம் கழித்துப் பள்ளிக்கு வந்தான் எசக்கி. தலை மொட்டை அடிக்கப்பட்டிருந்தது. ”தாத்தா ஏதோ கோயிலுக்கு நேர்ச்சைன்னு சொல்லி மொட்டை அடிச்சிட்டாருடா” என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தான்.
ப்ரேயர் முடிந்ததும் வகுப்புகள் ஆரம்பமாயின. செல்வி டீச்சர் வகுப்புக்குள் நுழைந்தார். அவர் கண்கள் எசக்கியைத் தேட எசக்கியின் கண்களும் அவரைத் தேடின. டீச்சரின் இடது பக்க வயிற்றுத் தழும்பு பூரான் போல ஓடி இருக்க அதைக் கண்ட எசக்கி பயந்து தலையைத் தாழ்த்திக் கொண்டான். தன் வயிற்றைத் தடவிக் கொண்டான். அவன் வயிற்றிலும் பட்டைத் தழும்புகள் இன்னும் வலித்தன. அன்று அவர் தந்த ரத்தத்தால் அவன் உயிர்த்திருக்கிறான். அவர் போட்ட பிச்சை அவன் வாழ்வு. அவன் கண்கள் தன்னையறியாமல் கசிந்தன.
கிட்டே வந்த செல்வி டீச்சர் அவன் முகத்தை நிமிர்த்திக் கண்ணைத் துடைத்துவிட்டார். ”இது படிக்கிற பருவம். படிச்சு முடிச்சு நீ வெற்றியடைஞ்ச மனுஷனான பின்னாடி எந்த ராஜா மாதிரி வேணாலும் முடி சுமந்துக்க. இப்பவுலேருந்தே எதுக்கு முள்முடியைச் சுமக்குற.” தலையைத் தடவிக் கொடுத்தார். இப்போது அவன் பார்வையில் செல்வி டீச்சர் அவன் பிறந்தபின் இறந்துவிட்ட அவன் எப்போதுமே கண்டிராத அவனது தாயின் மறு உருவம் போலத் தோன்றினார்.
-- தேனம்மைலெக்ஷ்மணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)