கார்த்திகை தீபம் ஸ்பெஷல் ரெசிப்பீஸ்
குமுதம் சிநேகிதியில்.
1.கோதுமை மாவிளக்கு
2.வேங்கரிசி மாவிளக்கு
3.தினை அரிசி மாவிளக்கு
4.மாவிளக்கு
1.தினைக் கொழுக்கட்டை
2.கார்த்திகை அடை
1.கோதுமை மாவிளக்கு
தேவையானவை:- சம்பா கோதுமை – 1 கப், நெய் – கால் கப், நாட்டுச் சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன், பஞ்சுத்திரி – 2
செய்முறை:- சம்பா கோதுமையைப் பொரியரிசி போலப் பொன்னிறமாக வாசம் வரும்வரை வறுத்துப் பொடித்துச் சலிக்கவும். இந்த மாவில் முக்கால் பங்கு நெய்யை ஊற்றி நாட்டுச் சர்க்கரை சேர்த்துத் தேவையான தண்ணீர் தெளித்து மாவாகப் பிசைந்து அகல் விளக்குப் போலச் செய்யவும். அகல்களில் சந்தனம் குங்குமம் வைத்து மிச்ச நெய்யை ஊற்றிப் பஞ்சுத் திரிப் போட்டு விளக்கேற்றவும்.
2.வேங்கரிசி மாவிளக்கு
தேவையானவை :- வேங்கரிசி/ சிவப்பரிசி – 2 ஆழாக்கு, ஜீனி – ¼ ஆழாக்கு), நெய் – 1 டேபிள் ஸ்பூன், பஞ்சு உருண்டை – அரை நெல்லி அளவு. பஞ்சுத் திரி – 3.
செய்முறை:- உலை வைத்து அரிசியைக் களைந்து போடவும். ஒரு கொதி வந்ததும் நீரை வடிக்கவும். வெய்யிலில் ஒரு பாயில் துணியை விரித்து அதில் இந்த பாதி வெந்த சாதத்தைப் பரப்பிக் காய வைக்கவும். காய்ந்ததும் பொரிக்கடையில் கொடுத்துப் பொரித்து மெஷினில் அரைத்துச் சலிக்கவும். அதில் ஜீனியைக் கலந்து தண்ணீர் தெளித்துப் பிசையவும். உருண்டையாக உருட்டி நடுவில் பள்ளம் செய்து அதில் பஞ்சு உருண்டையை வைத்து நெய் ஊற்றி மூன்று திரிகளையும் அதன் மேல் கூம்பாக நெய்யில் நனைத்து வைத்து விளக்கேற்றவும்.
3.தினை அரிசி மாவிளக்கு
தேவையானவை :- தினை அரிசி – 2 ஆழாக்கு, வெல்லம் – 1 கப், தேன் - அரை கப், நெய் - அரை கப், ஏலப்பொடி - 1 சிட்டிகை, பஞ்சு உருண்டை – அரை நெல்லி அளவு. பஞ்சுத் திரி – 3.
செய்முறை:- தினை அரிசியைச் சுத்தம் செய்து வாணலியில் கொஞ்சம் கொஞ்சமாகப் பொரித்தெடுத்து ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும். (இன்னொரு விதத்தில் ஊறவைத்து வடிகட்டி இடித்துச் )சலித்து அதோடு நெய்யைக் காய்ச்சி ஊற்றி வெல்லத்தைத் தூள் செய்து தேன், ஏலப்பொடி கலந்து பிசைந்து உருண்டையாக உருட்டி நடுவில் கட்டை விரலால் பள்ளம் செய்து அதில் பஞ்சு உருண்டையை வைத்து நெய் ஊற்றி மூன்று திரிகளையும் அதன் மேல் கூம்பாக நெய்யில் நனைத்து வைத்து விளக்கேற்றவும்.
4.மாவிளக்கு
பொதுவா காரைக்குடிப்பக்கம் மாவிளக்கு இப்பிடித்தான் வைக்கப்படுது. அந்த முறையைக் கொடுக்கிறேன். சில இடங்களில் சலிக்காமல் மாவை இடித்து அப்படியே வெல்லம் போட்டுப் பிடித்து நான்கு ஐந்து மாவிளக்குகள் கூட தட்டுகளில் ஏந்தி வருவார்கள். இங்கே சட்டியில் வைக்கப்படுகிறது. தட்டில் வைப்பதில்லை. அதற்கென்று “ மாவிளக்குச் சட்டி” என்று ஒன்று வைத்திருப்பார்கள்.
தேவையானவை :- பச்சரிசி - 1 அல்லது 2 ஆழாக்கு, வெல்லம் - 2 முதல் 4 அச்சு, நெய் - 1 டேபிள் ஸ்பூன் , பஞ்சு உருண்டை – அரை நெல்லி அளவு. பஞ்சுத் திரி – 3.
செய்முறை:- பச்சரிசியைக் கழுவி அரைமணி நேரம் நன்கு ஊறவைத்து தண்ணீரை வடிக்கவும். இதை வடிக்க இங்கே எல்லாம் சிவப்பு ஓலைக்கொட்டான்கள் என்று வைத்திருப்பார்கள். இன்று சில்வர் அல்லது ப்ளாஸ்டிக் வடிகட்டிகளில் வடிகட்டுகிறார்கள். அதன் பின் அரிசியைப் பேப்பரில் போட்டு சிறிது உலர விட வேண்டும்
ஈரப்பதம் ஓரளவு இருக்கும்போதே மிக்ஸியில் போட்டுப் பொடிக்கவும். நைஸ் சல்லடையில் சலித்து மிச்ச அரிசியோடு சலித்த கப்பிகளையும் போட்டுத் திரும்பத் திரும்ப அரைத்துச் சலிக்கவும்.
வெல்லத்தை நைத்து ( நச்சு ) வைத்துக் கொள்ளவும். தூளான வெல்லத்தை மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றி மாவை சிறிது சிறிதாகத் தூவி விஸ்பரை சுற்றிச் சுற்றி நிறுத்தவும் . மாவை வெளியே எடுத்து மிச்ச மாவோடு சேர்த்து நன்கு கெட்டியாகப் பிசைந்து உருட்டவும். வெல்லம் அச்சின் அளவைப் பொறுத்துக் கூட்டியோ குறைத்தோ உபயோகிக்கவும். இல்லாவிட்டால் மாவிளக்கு மாப் பாயாசம் ஆகி விடும்.
இதன் நடுவில் குழி செய்து பஞ்சை நெய்யில் உருட்டி நிறைய நெய் ஊற்றி திரியைப் பதிக்கவும். சாமிக்கு எதிரில் அல்லது கோவிலில் சாமி சன்னிதியின் எதிரில் இதில் விளக்கேற்றி சிறிது நேரம் வைத்திருந்து தேங்காய் உடைத்து வெற்றிலை பாக்கு வைத்து தீபம் காட்டவும்.
மறக்காம சாமிக்கு நைவேத்தியம் செய்தபின் தீபம் எரியும்போதே இரண்டு தேங்காய் நார்களாலோ அல்லது அப்பள இடுக்கியாலோ தீபத்தை அப்படியே வெளியே எடுத்து அதற்கென வைக்கப்பட்டிருக்கும் சிமிண்ட் தட்டில் போட்டு விடவும்.
காரைக்குடியில் கார்த்திகை சோம வாரத்தில் குன்றக்குடி முருகனுக்கும், கார்த்திகை வேல் பூசையின் போதும், புரட்டாசி சனிக்கிழமைகளில் அரியக்குடி பெருமாளுக்கும் மாவிளக்கு வைக்கும் பழக்கம் உண்டு.
அது போக மகர் நோன்பின்போது குதிரை வாகனத்தில் புறப்படும் கொப்புடையம்மன், சிவன், பெருமாள், திருநெல்லையம்மன் ஆகியோருக்கும் மாவிளக்கு வைத்து வணங்குவார்கள். கோவிலூரிலிருந்து வரும் திருநெல்லையம்மனுக்கு மாவிளக்கு வைக்கவென்றே மகர்நோன்பு மண்டபம் என்று ஒன்று காரைக்குடியில் உள்ளது.
லேசாக ஓரங்களில் செந்நிறமான நெய் வாசனையுடன் கூடிய மாவிளக்கு ரொம்ப டேஸ்டா இருக்கும். அதற்கு பலத்த போட்டி இடுவோம். தேங்காயைக் கீறி அதில் மாவிளக்கை கேக் போலத் துண்டாக வெட்டி வைத்துக் கொடுப்பார்கள். பயங்கர ருசியாயிருக்கும் போங்க.
1.தினைக் கொழுக்கட்டை
தேவையானவை:- தினை – 1 கப், பாசிப்பருப்பு துவரம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், சீரகம், உளுந்து – தலா ஒரு டீஸ்பூன், கருவேப்பிலை – இணுக்கு, வரமிளகாய் – 2 பொடியாகக் கிள்ளவும். எண்ணெய்- 3 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் – 2 டேபிள் ஸ்பூன். உப்பு – அரை டீஸ்பூன்.
செய்முறை:- தினை பாசிப்பருப்பு துவரம்பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி இறக்கவும். எண்ணெயைக் காயவைத்து உளுந்து சீரகம் தாளித்து வரமிளகாய் கருவேப்பிலை போடவும். இதில் அரைத்த விழுதைக் கொட்டிக் கிளறி தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கவும். நன்கு பிசைந்து கொழுக்கட்டைகளாக உருட்டி இட்லிப் பாத்திரத்தில் 20 நிமிடம் வேகவைத்து இறக்கி நிவேதிக்கவும்.
2.கார்த்திகை அடை
தேவையானவை :- பச்சரிசி – அரை கப், புழுங்கல் அரிசி – அரை கப், உளுந்து – ஒரு கைப்பிடி, பாசிப்பருப்பு – அரை கப், துவரம் பருப்பு – அரை கப் மிளகு – 20, தேங்காய் – ஒரு துண்டு பல் பல்லாக நறுக்கவும். உப்பு – அரை டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை :- பச்சரிசி புழுங்கல் அரிசி உளுந்து மூன்றையும் ஒன்றாகப் போட்டுக் களைந்து ஊறவைக்கவும். பாசிப்பருப்பு துவரம் பருப்பை தனியாகக் களைந்து ஊறவைக்கவும். இரண்டு மணி நேரம் ஊறியதும் முதலில் புழுங்கல் அரிசி பச்சரிசி உளுந்தை கரகரப்பாக அரைத்து அதில் பாசிப்பருப்பு துவரம்பருப்பை சேர்த்து அரைக்கவும். மிளகைத் தட்டிப் போட்டு உப்பு சேர்த்துக் கலக்கி தோசைக்கல்லில் அடையாகத் தட்டவும். இதன் மேல் தேங்காய்ப் பல்லுகளைப் பதித்து சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு வேகவைத்து இறக்கி வெல்லம் வெண்ணெயோடு நிவேதிக்கவும்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)