அன்பர் பூசையில் அயர்வுறாத தம்பதிகள்
தம் இல்லத்துக்கு வரும் உறவினர்களை வரவேற்று உபசரிப்பது உலக வழக்கம். ஆனால் தம் இல்லத்துக்கு வரும் சிவனடியார்களுக்கும் பூசை செய்வதில் அயர்வடையாத தம்பதியர் இருந்தார்கள். கடுமையான வறுமையில் உழன்ற போதிலும் இருப்பதைக் கொண்டு சிறப்பாக உணவு படைத்த அவர்களைப் பற்றிப் பார்ப்போம்.
இளையான்குடி என்றொரு ஊரில் உழவுத் தொழில் புரிந்து வந்தார் மாறன் என்பார். இவர் சிறந்த சிவபக்தர். இவர் மட்டுமல்ல இவரது மனைவியாரும் தன் பர்த்தாவுக்கேற்ற பத்தினி. எந்நேரமும் பஞ்சாட்சரத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பார்கள். தம் இல்லத்துக்கு வரும் சிவனடியாரை இருவருமே இன்சொற்கள் கூறி வரவேற்று உபசாரம் செய்து அறுசுவை விருந்து படைப்பார்கள்.
செய்யும் தொழிலில் வரும் பொருளை எல்லாம் அவர் சிவத்தொண்டுக்கே அர்ப்பணித்ததால் பெரும் செல்வம் சேர்ந்தது. இல்லத்துக்கு எழுந்தருளும் ஒவ்வொரு சிவனடியாரையும் தம்பதிகள் கரம் கூப்பி வரவேற்று ஆசனம் அளித்து அவர்கள் அகமும் முகமும் குளிரும் வண்ணம் விருந்து படைப்பார்கள். மகேசுவர பூசையும் மக்களுக்கு உணவு படைப்பதையும் பெரு மகிழ்வோடு செய்து வந்தார்கள். இப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்தால் எப்படி? சிவன் அவர்களுடன் ஒரு திருவிளையாடல் செய்ய எண்ணம் கொண்டார்.
பொருள் இருக்கும் காலத்தில் மட்டுமல்ல பொருள் அற்றுப் போகும் காலத்திலும் அருளற்றுப் போகாமல் தொண்டு செய்யக் கூடியவர்கள் இவர்கள் என்று இவ்வுலகுக்கு உணர்த்த விரும்பினார் எம்பெருமானார். இதனால் உழவின் அறுவடை குறைந்து வர உணவு படைக்க வேண்டிய சிவக்கூட்டமோ பெருகி வர செல்வமோ சுருங்கி கொண்டே வந்தது. உழவு செய்ய சிறிது நிலத்தை மட்டும் வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் விற்றும் கடன் வாங்கியும் கூட உணவு படைக்க ஆரம்பித்தார் மாறனார்.
மாட மாளிகையில் வசித்தவர்கள் கால மாற்றத்தால் ஒரு குடிசையைக் கட்டிக் கொண்டு இடம் பெயர்ந்தார்கள். ஒரு நாள் நள்ளிரவு இருக்கும். வெளியே காற்றும் புயலும் மழையும் இடியும் மின்னலுமாக இருந்தது. குளிரும் பசியும் அவர்களை வாட்டியது. பொட்டுத் தூக்கமில்லை. அவர்கள் வீட்டுக் கதவைத் தட்டினார் ஒரு சிவனடியார். அந்நேரத்திலும் அகம் மலர எழுந்து வந்து அவரை உபசரித்து ஆசனம் அளித்தார்கள் மாறனாரும் அவர் மனைவியும். ”கொஞ்சம் பொறுங்கள் சாமி. சூடாக அமுது படைத்து அளிக்கிறோம்” என்று மாறனார் சொல்ல சிவனடியாரும் சம்மதிக்கிறார்.
வீட்டில் குந்துமணி அரிசி இல்லை. ஏனெனில் அன்றைய பகல் பொழுதில்தான் தன் சிறிய நிலத்தில் வீட்டில் மிச்சமிருந்த விதை நெல்மணிகளை விதைத்து விட்டு வந்திருந்தார் மாறனார். மனைவியோ மாறனாரைத் தனியே அழைத்து, “ இன்று விதைத்த அந்த நெல்மணிகளை எடுத்து வாருங்கள். நான் தோட்டத்துக் கீரைகளைப் பறித்து வெஞ்சனம் செய்கிறேன்” என்று கூறிக் கணவரிடம் ஒரு கூடையைக் கொடுத்தனுப்பினார்.
திசை தெரியாத கும்மிருட்டு. அவ்வப்போது அடித்த மின்னலில் தட்டுத் தடுமாறி நடந்து மாறனார் வயலை அடைந்தார். அங்கோ சேறும் சகதியுமாக உழப்பிக் கிடந்தது நெல் வயல். விதைத்த நெல்மணிகள் எல்லாம் வரப்போரம் நகர்ந்து மிதந்து கொண்டிருந்தன. தான் கொண்டு சென்ற கூடையில் அவற்றை எல்லாம் சேற்றோடு வாரி எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார் மாறனார்.
தோட்டக் கீரையைப் பறித்து ஆய்ந்து வைத்திருந்த மனைவியோ அடுப்பெரிக்க விறகில்லாமல் கணவருக்காகக் காத்திருந்தார். மாறன் நாயனார் உள்ளே வந்ததும் விஷயத்தைச் சொல்ல அவரோ ஒரு கணமும் யோசிக்காமல் கூரையின் ஒரு பக்க மரக்கட்டைகளை உருவி வெட்டிக் கொடுத்தார். மனைவி அந்த விதை நெல்லை வாங்கி அலசிக் களைந்து வறுத்துக் குத்திப் புடைத்து அரிசியாக்கி மரக்கட்டைகளை வைத்து அடுப்பெரித்துக் கறியமுதும் அன்னமும் சமைத்தார்.
அன்பர் பூசைக்காக அயராது கணவன் மனைவி இருவருமே ஒருமனதாகச் செயலாற்றியதை எல்லாம் பார்த்துக் கொண்டேயிருந்தார் கருணை வடிவான கடவுள். இலையில் சுடச் சுட அன்னத்தையும் கறியமுதையும் பரிமாறி அவரை வணங்கி உள்ளன்போடு ”ஐயனே அமுது செய்து அருள்வீர்” என்று பரிவுடன் அழைத்தனர் இருவரும். பரிமாறிய உணவிலிருந்து சுவையான மணத்தோடு ஆவி பறந்து கொண்டிருந்தது
கணவன் மனைவி இருவருமே எந்த இடையூரிலும் தம்மையோ விதியையோ நோகாமல் குடியிருப்பைப் பிரித்துக் கடைசிக் கையிருப்பாக இருந்தவற்றையும் சமைத்துப் பரிமாறியது கண்டு அயர்ந்த ஈசன் அச்சிறிய குடிசையில் சோதிப் பிழம்பாகத் தோன்றினார். சிவனடியார் சோதி வடிவானது கண்டு மாறனாரும் அவர் மனைவியும் திகைத்து நின்றனர்.
உமாதேவியுடன் ரிஷபாரூடராகக் காட்சி அளித்த சிவபெருமான். “ அன்பர் பூசையில் அயராத அன்பர்களே! வறுமையிலும் செம்மையாய் சிவனடியார்களுக்கு உணவிட்ட நீங்கள் சிவலோகம் அடைந்து பேரின்பம் பெறுவீர்களாக” என்று அருளிச் செய்தார். அதன் பின் ஈசனருளால் செல்வம் மீண்டும் பெருகப் பல்லாண்டு காலம் திருத்தொண்டர்களுக்கு உணவு படைத்து முடிவில் ஈசனின் திருவடி நீழலில் பேரின்பம் அடைந்தார்கள் மாறனாரும் அவர் மனைவியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)