எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 6 ஜனவரி, 2025

காப்பியக் கதைகள் முன்னுரை

 புஸ்தகாவில் என் பதிநான்காவது நூல் காப்பியக் கதைகள். 

காப்பியக் கதைகள்

 

முன்னுரை


 

ம்பெரும் காப்பியம், ஐஞ்சிறு காப்பியம் அறிவோம். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி ஆகியன முழுமையான காப்பியங்கள். இவை பற்றி நாம் ஓரளவு அறிவோம். ஐம்பெரும் காப்பியங்களுள் முழுமையாகக் கிட்டாதவை வளையாபதியும் குண்டலகேசியும். வளையாபதியில் மொத்தமே 72 பாடல்களும், குண்டலகேசியில் மொத்தமே 19 பாடல்களும் கிடைத்துள்ளன.

 

சமண மதத்தின் குறிப்புகள் வளையாபதியிலும் , பௌத்த மதத்தின் குறிப்புகள் குண்டலகேசியிலும் காணப்படுகின்றன. அறிவன் அடி - அருகக்கடவுள் அடி போற்றி என்ற இறைவணக்கப்பாடல் சமணத்தைக் குறிப்பதாகவும், இறைவன் அவன் தாள் சரண் நாங்களே - புத்தபகவான் திருவடி சரணம் என்பதாக வரும்பாடல் பௌத்தத்தைக் குறிப்பதாகவும் சுட்டுகிறார்கள். 

 

யசோதர காவியம், உதயணகுமார காவியம், நாககுமார காவியம், சூளாமணி, நீலகேசி ஆகியன ஐஞ்சிறு காப்பியங்கள். இதில் நாககுமார காவியத்தின் ஆசிரியர் சமணம் சார்ந்த ஒரு பெண் துறவி. 5 சருக்கங்கள் கொண்டது இந்நூல். மொத்தம் 170 விருத்தப்பாக்கள் உள்ளன. இதன் காலம் பதினாறாம் நூற்றாண்டு. இந்நூலினை சமண அறிஞர் ஜீவபந்து ஸ்ரீபால் அவர்களின் உதவியால் மு. சண்முகம் பிள்ளை என்பவர் பதிப்பித்து உள்ளார். 

இதில் சிரேணிக மன்னனின் வேண்டுகோளின் படி கௌதமர் என்ற முனிவர் நாகபஞ்சமியின் கதையைக் கூறுகின்ற முறையில் இந்நூல் அமைந்துள்ளது. அதிலேயே நாககுமாரனின் காவியமும் வருகிறது.

நீலகேசி என்ற நூலுக்கு உரை எழுதியவர் சமய திவாகர வாமன மாமுனிவர். இது ஒரு தருக்க நூல். குண்டலகேசிக்கு மறுப்பாக எழுந்தது என்றும் ஒரு கூற்று உண்டு. பிறர் மதத்தை விளக்கி மறுத்துத் தன் சமண மதத்தை நீலகேசி நிறுவுவதைச் சிறப்பிப்பதே இந்நூல்.

தீர்க்கமான சிந்தனைகளுடனும், தெளிவுடனும் அவள் பிரபஞ்சத்தின், உயிரின் இயல்புகளை எடுத்து வைக்கும்போது நாமும் அவற்றின் உண்மைப் பொருளைப் புரிந்து கொள்கிறோம். உயிர், ஆன்மா, உணர்வு, ஐம்பூதங்கள், பொறிகள், புலன்கள் பற்றியும், உயிர்க்கொலை தவிர்த்தல், ஊன் மறுத்தல், நல்வினை, தீவினை பற்றியும் நீலகேசி வாதம் செய்யும்போது நமக்குள்ளும் அவள் புகுந்து நம்மையும் அவளாக்கி விடுகிறாள். நீலகேசியின் மூலமாக ஞானத்தின் வாசல் நமக்கும் திறக்கிறது.

மொத்தத்தில் சமண பௌத்த மதம் சார்ந்த இலக்கியங்கள் இவை. பல்வேறு நன்னெறிகளையும் போதிப்பவை. சமணம் உயிர்க்கொலையின் தீமை பற்றியும் போதிக்கிறது. இக்கதைகளை சிறார்களும் இளையர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் எளிய முறையில் எழுதியுள்ளேன். நன்றி.

தேனம்மைலெக்ஷ்மணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...