குபேரர் ஆன குசேலர்
நண்பர்கள் ஒருவருக்காக இன்னொருவர் உதவி செய்வதும், அதே இன்னொருவர் ஒரு சில சமயங்களில் சுயநலமாய் நடந்து கொள்வதும் நாம் காணக்கூடியதே. அப்படிப்பட்ட ஒருவர்தான் சுதாமா. யார் அந்த சுதாமா என்று கேட்கிறீர்களா? அவர்தான் கிருஷ்ண பரமாத்மாவின் பால்ய தோழர். சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் குருகுலக்கல்வி முறையில் கிருஷ்ணருடன் பயின்றவர். குசேலனான அவர் எப்படிக் குபேரன் ஆனார் என்று பார்ப்போம்
உஜ்ஜினியில் உள்ள சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் கிருஷ்ணரும் குசேலரும் பயின்று வந்தார்கள் அக்காலங்களில் குருகுலங்களில் பயில்பவர்கள் குருசேவை செய்ய வேண்டும். குருபத்தினி கூறும் பணிகளை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறாக ஒருமுறை குருவின் வயலில் நீர்வரத்து அதிகம் இருந்ததால் பயிர் அழிந்துவிடும் என்று வரப்பில் மண்ணை வெட்டிப்போட்டு அடைக்க கிருஷ்ணர் செல்லவேண்டிய முறை வந்தது.
அச்சமயம் தன் அத்யந்த நண்பர் கிருஷ்ணருக்காகக் குசேலர் தானே கிளம்பி அடைக்கச் சென்றார் நீர் கட்டுப்பட்டு நிற்காமல் வரப்பை உடைத்துக் கொண்டே இருந்தது. எங்கும் இருளும் குளிரும் பெருகி வந்தது. ஒரு பக்கம் அடைக்க இன்னொரு பக்கம் உடைபடுத்தது. இப்படி உடைப்புப் பெரிதாகியதும் வயலில் உள்ள பயிர் மூழ்கி அழுகி விடும் என்று வரப்பின் உடைபட்ட பகுதியில் அவர் தானே படுத்துக்கொண்டார்.
அப்படிக் குறுக்கே படுத்ததன்மூலம் தண்ணீரை ஒரு இரவு முழுவதும் அவர் அடைத்து நிறுத்தினார். மறுநாள் வரை அவரைக் காணாததால் கிருஷ்ணர் மற்ற மாணவர்களுடன் ஓடிச்சென்று உதவி செய்தபின் வரப்பு முழுவதுமாக அடைபட்டது. குசேலரைத் தழுவி அணைத்துக் கிருஷ்ணர் அவருக்கு மிகுந்த நன்றி கூறினார்.
இன்னொரு சமயம் கானகத்தில் சுள்ளி பொறுக்குவதற்காகக் கிருஷ்ணரும் சுதாமாவும் சென்றார்கள். அப்பொழுது இருவரும் உண்பதற்காக ஒரு துணி முடிச்சில் அவல் கட்டிக் கொடுக்கப்பட்டது. வெகுதூரம் சென்ற களைப்பில் கிருஷ்ணர் அயர்ந்து உறங்க, பசி வயிற்றைக் கிள்ளக் குசேலர் துணி முடிச்சை அவிழ்த்து ஒரு பிடி அவலை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார்.
தன்னுடைய பாதிப்பங்கை உண்ட பின்பும் அவர் பசி அடங்கவில்லை. ஆகையால் கிருஷ்ணருக்காகக் கொடுக்கப்பட்ட மிச்ச அவலையும் தாமே உண்டுவிட்டார். விழித்தெழுந்த கிருஷ்ணருக்குப் பசித்தாலும் அவர் சுதாமாவிடம் ஒன்றும் சொல்லவில்லை.
இருவரும் குருகுலக் கல்வி முடிந்ததும் தத்தமது ஊருக்கு திரும்பினர். குசேலருக்குத் திருமணம் ஆகி 27 குழந்தைகள் (27 நட்சத்திரங்கள் என்ற கணக்குப்படிப்) பிறந்தார்கள். அவர் சம்சார சாகரத்தில் மூழ்கி தத்தளித்து வந்தார். அவர் நண்பர் கிருஷ்ணரோ அப்போது துவாரகையின் மன்னராகி இருந்தார்.
தங்கள் குடும்பக் கஷ்டங்களைப் பொறுக்காமல் அவர் மனைவி சுசீலை துவாரகையை ஆளும் அவரது நண்பரிடம் உதவி பெற்று வருமாறு ஒரு சிறுமுடிச்சில் கிருஷ்ணார்ப்பணம் என்று கூறி அவல் கட்டிக் கொடுக்கிறார். தம் ஊரிலிருந்து பலகாதம் நடந்து களைத்து கிருஷ்ணரின் அரண்மனையை அடைகிறார் குசேலர்.
குசேலர் வந்திருக்கிறார் என்ற செய்தியறிந்ததும் ஓடிவருகிறார் கிருஷ்ணர். அவருக்கு வரவேற்பு, உணவு உபசாரங்கள் செய்து ஒரு ஆசனத்தில் அமர வைக்கிறார்.ருக்மணி தேவியும் கணவருடன் சேர்ந்து மயிற்பீலியால் வீசி அதிதியை ஆசுவாசம் அடையச் செய்கிறாள்.
அப்போது அவர் குசேலரிடம், “உங்கள் மனைவி உங்களுடன் இயைந்து குடும்பம் நடத்தும் குணவதியாக இருப்பாள். உங்களைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொள்வதோடு உங்கள் குடும்பம் பற்றிய எந்த விஷயங்களையும் வெளியே சொல்லாத நற்குணத்தாளாக இருப்பாள். உங்கள் குழந்தைகள் எல்லாம் மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்தவர்கள். உங்கள் மனைவி வந்த விருந்து கவனித்து வரும் விருந்தை எதிர்நோக்கும் மனத்தவளாக அமைந்திருப்பாள் என்பதே என்னுடைய எண்ணம். அப்படிப்பட்டவள் எனக்காக என்ன கொடுத்து விட்டிருக்கிறாள்” என்று ஆவலுடன் கேட்கிறார்.
கிருஷ்ணரின் செல்வத்தைப் பார்த்துத் தான் கொண்டு வந்திருக்கும் மிகச்சிறிய பரிசான அவலை நினைத்து மிகவும் நாணத்துடன் அமர்ந்திருந்தார் குசேலர். அவர் கொண்டு வந்த தண்டம் போன்ற குச்சியில் கட்டப்பட்டிருந்த சிறு முடிச்சைப் பார்த்துத் தானே அதன் முடிச்சைப் பிரித்து அவலை எடுத்துக் கிருஷ்ணர் மகிழ்வோடு உண்கிறார்.
இப்பேர்ப்பட்ட நண்பனிடம் எப்படி உதவி கேட்பது என்று தயங்குகிறார் குசேலர். தன்னிடம் உதவி கேட்க வந்தும் ஏதும் கேட்காமல் திரும்பிச் செல்லும் குசேலரின் நிலையை மானசீகமாக உணர்ந்து கொள்கிறார் கிருஷ்ணர். முன்னொரு நாள் குசேலர் தனக்காகச் சென்று வயல்வரப்பில் நீர்வரத்தை அடைத்துச் செய்த அரும்பெரும் உதவியை மறக்காத கிருஷ்ண பரமாத்மா குசேலரின் தேவைகள் எல்லாம் நிரம்பிடச் செய்தார்.
அவர் ஒரு பிடி அவலை உண்ண குசேலரின் வீடு இங்கே குசேலரின் குடிசை வீடு மாளிகையாகி இருந்தது. இன்னொரு பிடி அவலை உண்ண குசேலரின் வீட்டில் ஆடைகளும் ஆபரணங்களும் நிரம்பி வழிந்தன. மூன்றாவது பிடி அவலை உண்ண வீட்டில் சர்வ திரவியங்களும் நிரம்பி அனைவரும் சந்தோஷமாக இருந்தனர்.
மூன்று கைப்பிடி அவலை உண்டதற்கே கிருஷ்ண பரமாத்மா குசேலரைக் குபேரராக்கி விட்டார். எதிர்பார்ப்பு இல்லாத தூய பக்தி, தூய நட்பு எதையும் அளிக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம் குசேலர் தன் வீட்டிற்கு திரும்பி சகல சௌபாக்கியங்களுடன் தம் குடும்பத்தார் மகிழ்ந்து இருப்பதைக் கண்டார். தனக்கென எதையும் விரும்பாத அவர் இந்த லோகாயதப் பொருட்களில் பற்றில்லாமல் கடவுளின் பால் பற்றுக் கொண்டு வாழ்ந்து சென்றார் சுதாமா என்ற குசேலர்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)