ஜெர்மனி வாழ் தமிழர்கள்
அமெரிக்கா, கனடாவுக்கு அடுத்துத் தமிழர்கள் அதிக அளவில் வாழத் தகுதியான ஒரு இடம் என்றால் அது ஜெர்மனிதான். 1980 களில் வெளிநாடுகளுக்கு அதிக அளவு புலம் பெயர்ந்தவர்கள் ஈழத் தமிழர்கள். ஜெர்மனியிலும் கிட்டத்தட்ட 60 ஆயிரம் தமிழர்கள் புலம்பெயர்ந்து டுல்டுங் எனப்படும் இரட்டைக் குடியுரிமை வசதி பெற்று வாழ்ந்து வருகிறார்கள்.
2010 ஆம் ஆண்டு முதல் அங்கே ஐடி துறைக்காக வேலைக்கு சென்றவர்கள் அதிகம். ஜெர்மன் மொழியைக் கற்றவர்களுக்கு அங்கே வேலைவாய்ப்புகள் அதிகம். மருத்துவர்கள், பொறியாளர்கள் ஆகியோர் மொழியைக் கற்றிருந்தால் விசா கிடைப்பதில் சிரமம் இருக்காது. அங்கேயே மேல் கல்வி கற்போருக்கு வேலை வாய்ப்புகள் அதிகம் என்பதால் ஜெர்மன் மொழியைக் கற்று இருப்போருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
அங்கேயே குடியுரிமை பெற்று வாழ்வோர் அதிகம். அவர்களுக்கு அடுத்த தலைமுறையினர் வியாபாரம் செய்து வருகிறார்கள். உணவுக் கடைகள், உடை, நகை கடைகள் மற்றும் செல்போன் ரிப்பேர் மாதிரியான கடைகளை அங்கே தமிழர்கள் நடத்தி வருகிறார்கள்.
எட்டு மாதம் குளிர் நான்கு மாதம் தான் வெயில் என்றாலும் சென்ற முறை பார்த்ததை விட இந்த முறை அதிகம் இந்தியர்களைச் சந்திக்க நேர்ந்தது. 2019-ல் சந்தித்ததை விட இப்பொழுது மிக அதிக அளவு, கிட்டத்தட்ட இந்தியர்களும் தமிழர்களும் ஆக ஒரு லட்சம் பேர் இருக்கலாம்.
ரைன் தமிழ்ச்சங்கம் என்ற ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் கொலோன் மாநகரில் மட்டும் 70 தமிழ்க் குடும்பங்கள் சந்தித்தார்கள். அந்தக் கூட்டத்தில் செட்டிநாட்டு பெண்களின் கதைகள் என்ற என்னுடைய 25 வது நூல் வெளியிடப்பட்டது. தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகளைக் குடும்பங்களாக கூடிக் கொண்டாடுகிறார்கள்.
கொலோன் நகரில் ஒரு தமிழ்ப் பல்கலைக்கழகம் செயல் பட்டு வந்தது. அங்கே தமிழ் இருக்கையும் இருந்தது. தற்போது அது செயல்படவில்லை. டோர்ட்மெண்ட் இல் ஈழத்தமிழர்கள் இணைந்து திருவள்ளுவருக்கு ஒரு சிலை அமைத்து உள்ளார்கள். சிலைகளே அற்ற ஜெர்மனி நகரில் இது ஒரு சாதனைதான்.
குழந்தைகள் தமிழ்க்கல்வி கற்க 15 லிருந்து 25 இடங்களில் ஜெர்மனியில் தமிழ்க் கல்வி ஆலயங்கள் நடத்தப்படுகின்றன. இவற்றில் விடுமுறை நாட்களில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. நிறையத் தமிழ் குழந்தைகள் இதனால் பயனடைகிறார்கள். வீட்டில் பேசும் மொழி தமிழாகவும் வெளியில் ஜெர்மன், டொச், டர்கிஷ், போலிஷ் ஆகிய மொழிகள் பேசப்படுவதாலும், குழந்தைகள் பலமொழிகளையும் எளிதாகப் பேசக் கற்று விடுகிறார்கள்.
உணவைப் பொறுத்தவரை போர்க் பீப் போன்ற அசைவ உணவுகள் அதிகம். அங்கே பதப்படுத்தப்பட்ட உணவுகளும் அதிகம். இறைச்சிகளில் எலும்பு தோல் நீக்கி அனைத்தையும் மென்மையாக மாவு போல ஆக்கி விடுவார்கள். பிரட்டுகளில் விதவிதமான வகைகள் உண்டு. அசைவம் சாப்பிடுபவர்களுக்குப் பிரச்சினை இல்லை.
அங்கு குடியுரிமை பெற்ற, வேலைக்கு செல்லும் ஒவ்வொரு இந்தியரும் வீடு வாங்க முடியும். கார் வாங்க முடியும் மற்றும் ஓட்டு அளிக்க முடியும். தேர்தலில் கூடப் போட்டியிட முடியும். ஓட்டு அளிப்பதில் ஒரு வித்தியாசமான முறை கடைபிடிக்கப்படுகிறது. வேட்பாளருக்கு ஒரு ஓட்டு, கட்சிக்கு ஒரு ஓட்டு என்று இரு ஓட்டுகள் அளிக்க வேண்டும். அங்கேயும் பக்கத்தில் உள்ள பள்ளிக்கூடங்கள் வாக்குச்சாவடிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
சொந்த வீடு இருந்தால் ஒன்று பிளாட் ஆகவும் இருக்கும் அல்லது தனி வீடாகவும் வசதியைப் பொறுத்து வாங்க முடியும். தனி வீடு என்றால் வீட்டைச் சுற்றிலும் தோட்டம் புல்வெளி உண்டு. வாரம் ஒரு முறை புல் வெட்டுவதும், குளிர்காலத்தில் அந்தக் கூம்பு வடிவ வீடுகளிலும் தோட்டங்களிலும் படர்ந்திருக்கும் உறைபனியைச் சுத்தப்படுத்துவதும் பெரும் பணி.
தனிவீடு அல்லது லயன் வீடு பொதுவாக மூன்று தளங்கள் கொண்டதாக அமையும். தரைத்தளத்தில் வரவேற்பறை, சமையலறை போன்றவையும், நடுத்தளத்தில் குழந்தைகள் அறை, படிக்கும் அறை, கம்ப்யூட்டர் அறை, விருந்தினர் அறை போன்றவையும், மேல் தளத்தில் மாஸ்டர் பெட்ரூம், சேமிப்பறையாகவும் பயன்படும்.
மூன்று தளங்களிலும் மூன்று கழிவறைகள், குளியலறைகள் அமைக்கப்பட்டிருக்கும். குளிர்காலப் பயன்பாட்டிற்காக அறைகளில் ரூம் ஹீட்டர் பொருத்தப்பட்டிருக்கும். துணி உலர வைக்க கூட ஹீட்டர் உண்டு. ஆனால் குளிர் தேசம் என்பதால் மின்விசிறி என்பதே காண இயலாது. கம்பிகள் இல்லாத கண்ணாடி ஜன்னல்கள், கண்ணாடிக் கதவுகள் வீடு முழுதுமே அமைக்கப்படுகின்றன. அவற்றை ஒஞ்சரித்தோ முழுமையாகவோ திறக்கலாம்.
வீட்டில் இருவர் இருந்தால் இருவருக்கும் கார்கள் உண்டு. ட்ரெயின், பஸ், மெட்ரோ போன்ற பொதுப் போக்குவரத்துகள் உண்டு என்றாலும் அங்கே இருக்கும் அனைவரும் கார்கள் வைத்திருக்கிறார்கள். ஸ்பீட் லிமிட் உண்டு. எண்பது கிலோமீட்டர் வேகத்தில் மட்டும் செல்ல வேண்டிய சாலைகளில் 80 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். சில இடங்களில் 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும்.
சிசிடிவி கேமரா அனைத்தையும் கண்காணித்து ஸ்பீட் லிமிட் அதிகமாகவா குறைவாகவோ ஓட்டுபவர்களுக்கு தண்டனைக் கட்டண ரசீது அனுப்பி விடும். ஹாரன் அடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது நமக்கு முன்பு செல்லும் வண்டிகள் சாலை விதியை பின்பற்றாமல் ஏதாவது முன்னே பின்னே சென்றால் அந்த சமயங்களில் மட்டும் எச்சரிக்கை செய்வதற்காக ஹாரன் அடிக்கலாம். போக்குவரத்தில் முந்திச் செல்ல வேண்டும் என்பதற்காக சும்மா சும்மா ஹார்னடித்தாலே இங்கே அது குற்றமாக கருதப்படும்.
பொதுப் போக்குவரத்தும் உண்டு. ரயில்வே போக்குவரத்து மற்றும் பஸ் போக்குவரத்தும் செயல்படுகிறது. கல்வி கற்கும் மாணவர்களுக்கும், வயதானவர்களுக்கும், குறைந்த தொகையில் போக்குவரத்துப் பாஸ் வழங்கப்படுகிறது. ட்ரெயின் டிக்கெட்டை முன்பே எடுத்தால் மிக அதிகச் சலுகை விலையில் வாங்கிவிடலாம்.
முதியவர்கள் நலனுக்காக ஜெர்மனி அரசாங்கம் அவர்களுக்கான வாழ்வியல் தொகை அளித்து வருகிறது. சமூகநிலைக் கலன்கள் உள்ளன அதற்காக. மற்றும் அங்கே குடியுரிமை பெற்று வேலை செய்யும் ஒருவருக்குத் திருமணமானால் மனைவிக்கான ஒரு தொகையும், குழந்தைகள் பெற்றுக் கொண்டால் அதற்கும் அரசாங்கம் ஊக்கத்தொகையும் அளிக்கிறது. ஐந்து குழந்தைகள் உள்ள குடும்பத்துக்கு ஒரு வீட்டையே இலவசமாக அளிக்கிறது. இது போக அவரவர் தம் சொந்த விருப்பத்தின் பேரில் சிறிய இடங்களை வாங்கித் தோட்டங்கள் அமைத்துக் கொள்கிறார்கள். தாங்களே பயிர்செய்து விளைவித்த இயற்கையான காய்கனிகளை எடுத்துக் கொள்கிறார்கள்.
ஒவ்வொரு வீட்டிலும் முன்புறமும் பின்புறமும் புல்வெளிகளும் செடிகளும் அழகூட்டுகின்றன. பூக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் இவர்கள். நம் தமிழர்களும் ஒருவரை ஒருவர் சந்திக்கச் செல்லும் பொழுது பூக்களை, பூங்கொத்துகளை, பூந்தொட்டிகளைப் பரிசளித்து மகிழ்கிறார்கள்.
சினிமா தியேட்டர்களை அதிகம் காண முடியவில்லை. யூ தியேட்டர் போன்ற பாலே தியேட்டர்கள், நாடகத் தியேட்டர்கள் போன்றவை ஓரளவு உண்டு. சினிமா எடுப்பதற்குத் தடை உள்ளது. அவுட்டோர் ஷூட்டிங் எடுக்க முடியாது.
ஜெர்மனியின் செந்தேன் மலரே என்று பாடலில் நாம் காணும் சிலைகள் எல்லாம் ஒருவேளை ஃப்ராங்க்பர்ட்டில் இருக்குமோ என்று நினைத்தேன். ஆனால் அவை அனைத்தும் ஃப்ரான்ஸில் எடுக்கப்பட்டவை என்று அறிந்து கொண்டேன். ஜெர்மனியில் டிவித் தொடர்களுக்காக இன்டோர் ஷூட்டிங் நடத்துகிறார்கள். ஐ டி என் என்னும் தொலைக்காட்சி உண்டு. வெற்றிமணி, நமது இலக்கு, பண்ணாகம் ஆகிய தமிழ் இதழ்கள் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து வெளிவருகின்றன. இவை அனைத்துக்கும் ஈழத் தமிழர்களின் பங்களிப்பு அதிகம்.
ஜெர்மனியில் வாழும் இந்தியர்கள் அவர்கள் தமிழர்களாக இருந்தாலும் வடநாட்டவராக இருந்தாலும் அவ்வப்போது சந்தித்து உரையாடுகிறார்கள். குடும்பத்தோடு தீபாவளி பொங்கல் போன்றவற்றைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். புனித மார்ட்டின்ஸ் தினம், ஹாலோவியன்ஸ் தினம், கிறிஸ்துமஸ் தின விருந்து ஆகியவற்றைக் குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்கிறார்கள். ஹாலோவியன் தினத்தில் விதம் விதமான முகமூடிகள், உடைகள் அணிந்து குழந்தைகள் வீடு வீடாகச் சென்று ட்ரிக் ஆர் ட்ரீட் எனக் கேட்டு அவர்களிடமிருந்து சாக்லேட், கேக் ஆகியவற்றைப் பரிசாகப் பெற்று உண்டு மகிழ்வார்கள்.
ஊர் ஊராக நடக்கும் கார்னிவல் என்னும் திருவிழா மற்றும் ஃபீஸ்ட் ஆகியன எல்லோருக்கும் ஒரு புத்துணர்வு அளிக்கும் நிகழ்வாக நடைபெறுகின்றன.
வீட்டில் தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் பேசினாலும் வெளியில் கட்டாயம் ஜெர்மனியில் பேசினால் மட்டும்தான் ஜெர்மானியர்கள் பதிலளிப்பார்கள், மகிழ்வார்கள். பேச்சு வழக்கிலேயே குழந்தைகளும் மெல்ல மெல்ல ஜெர்மன் கற்று விடுகிறார்கள். இங்கே இத்தனைக்கும் டர்கிஷ், போலிஷ் மக்களும் அதிக அளவில் வாழ்ந்து வருகிறார்கள். தென் ஆப்பிரிக்கா, எகிப்து மக்களையும் நாம் காணலாம். ஆனால் ஆட்சி மொழி ஜெர்மன் மட்டுமே. தாய் மொழிக்கும் தாய் தேசத்துக்கும் அவர்கள் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.
வாரம் ஒரு முறையாவது தமிழகத்தில் இருந்தோ இலங்கையில் இருந்தோ நம்முடைய உணவுப் பொருட்கள் அனைத்துமே அங்கே விமானம் மூலம் கொண்டுவரப்படுவதால் பூக்கள் முதல் கொண்டு எந்த வகையான பொருட்களையும் பெற முடியும். நாம் அங்கே ஒரு நிகழ்வுக்குத் தேவையான அனைத்தையுமே வாங்கி விடலாம். அங்கே வாழும் இந்தியர்கள், தமிழர்கள் சனிக்கிழமைகளில் திருமணங்களை, திருமண விருந்துகளை மாலை நேரங்களில் நடத்துகிறார்கள். முக்கால்வாசி நிகழ்வுகள், பண்டிகைகள் வீக் எண்டுகளிலேயே நடத்தப்படுகின்றன.
பாபா டெம்பிள், தமிழக கோயில்கள், வட இந்திய கோயில்கள், குருத்வாரா ஆகியன அங்கே உள்ளன. அவரவர் முறைப்படி வழிபாடு செய்யும் உரிமை ஜெர்மனியில் உள்ளது. அவரவர் முறைப்படித் திருமணம் செய்யும் உரிமை, வாக்களிக்கும் உரிமை, குடிமகனாக வசிக்கும் உரிமை அனைத்துமே வழங்கப்பட்டு உள்ளது.
முக்கியமாகச் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் அந்த வீட்டுக்கான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அடுத்த வீட்டுக்காரருக்கு தொந்தரவு தராத அளவு நாய்ஸ் பொல்யூஷன்ஸ் போன்றவை இருக்கக் கூடாது. இதுபோல சில கட்டுப்பாடுகள், சட்டதிட்டங்களும் அங்கே உள்ளன என்பதை மறுக்க இயலாது. இருந்தும் இந்தியர்களும் தமிழர்களும் தற்போது அதிக அளவில் விரும்பி வசிக்கும் இடமாக ஜெர்மனி மாறி வருகிறது என்பது உண்மை.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)