எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 12 செப்டம்பர், 2026

படிக்காசு பெற்ற முத்துத் தாண்டவர்

படிக்காசு பெற்ற முத்துத் தாண்டவர்


பாடலே பாடத் தெரியாதவர் பல நூறு கீர்த்தனைகள் பாடியதும் அதற்குப் பரமேஸ்வரனின் திருச்சன்னதியில் தினந்தோறும் படிக்காசு பெற்றதும் வியப்பான செய்திகள் தானே? 15 ஆம் நூற்றாண்டில் பிறந்து அப்படிப் படிக்காசு பெற்ற சிறப்பான ஒருவரைப் பற்றி பார்ப்போம்.

சீர்காழியில் இசை வேளாளர் குடும்பத்தில் தோன்றியவர் தாண்டவர். தில்லையில் தாண்டவம் ஆடும் மூர்த்தியை எண்ணி தம் மகவுக்கு அப்பெயரை இட்டனர் பெற்றோர்.

சீரும் சிறப்புமாகக் கழிந்தது அவரது குழந்தை பருவம். என்ன நிகழ்ந்ததோ தெரியவில்லை வளரிளம் பருவத்தில் அவர் உடம்பில் இன்னவென்று சொல்ல  இயலாத ஒரு நோய் புகுந்து துன்புறுத்தியது. அதைத் தொழுநோய் என்று நினைத்த பெற்றோர் அவரை வீட்டுக்குள்ளேயே ஒதுக்கி வைத்தார்கள்.

எந்தப்பொழுதிலும் யாரும் அவரிடம் பேசுவது இல்லை. இவ்வாறு இருக்கையில் அவ்வூரில் சிவனைப் பரந்து தொழுது பாடும் புலமை பெற்ற சிவபாக்கியம் என்னும் தேவதாசி குலத்தைச் சேர்ந்த பெண்ணின் பரிச்சயம் அவருக்கு வாய்க்கிறது.


வீட்டாரின் ஆதரவுக்கு ஏங்கிய அவர் சிவபாக்கியத்தின் இனிமையான குரலாலும் அன்பான அணுகுமுறையாலும் ஈர்க்கப்பட்டார். அதனால் அவர் தினமும் அவள் வீட்டுக்குச் சென்று வர, கோபமுற்ற குடும்பத்தார் அவரை மொத்தமாக ஒதுக்கி வைத்தார்கள். இதனால் அவர் தங்க இடமில்லாமல் சீர்காழியில் தோணியப்பர் திருக்கோயிலிலேயே தங்கி இருந்து கோவில் பிரசாதங்களையே வாங்கி உண்டு வாழ்ந்து கொண்டிருந்தார்.

அங்கே தோணியப்பரின் திருச்சந்நிதியில் தேவாரம், திருவாசகம் முதலியவற்றை பாடி அவரிடம் அதிக அன்பு பூண்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு ஒரு நாள் இரவு சரியானபடி ஆகாரம் கிடைக்கவில்லை. அதனால் அவர் பசியின் மிகுதியால் களைத்துப் போய்க் கோயில் பிரகாரத்திலேயே படுத்து உறங்கி விட்டார். கோயில் பூஜைகள் முடிந்த பின் இருளில் அவர் படுத்திருப்பது தெரியாமல் போனதால் கோவிலில் ஊழியம் செய்வோர் திருக்கதவைப் பூட்டிக்கொண்டு போய்விட்டார்கள்.

நட்டநடுச் சாமத்தில் விழிப்பு வந்தது முத்துத் தாண்டவருக்கு. தம் உடம்பின் நோய் மிகுதியாலும், வறுமையின் காரணத்தாலும், பசிக் கொடுமையாலும் மிகுந்த களைப்போடு படுத்துக் கிடந்த அவர் தன் நிலையை எண்ணி எண்ணிக் கண்ணீர் விட்டார்.  காக்கும் கருணாமூர்த்தியான தோணியப்பரிடம் தன் இடர்பாடுகளைக் கூறி வருந்தியும், இறைவனின் திருவடிகளை வேண்டியும் அவர் கழிவிரக்கம் கொள்ள  அங்கே தோணியப்பரும் அம்பிகையும் தோன்றினார்கள்.


திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்தது போல இவருக்கும் ஞானப்பாலன்னம் கொடுத்து அருளினார்கள். "தாண்டவா! நீ தில்லை சென்று அங்கு தில்லையாண்டவனைப் பாடு. தினமும் ஒரு பாடல் நீ பாடப் பாட  உன் புறநோயும் அகநோயும் ஒருங்கே நீங்கும்" என்று ஒரு அசரீரி ஒலித்தது.

இதைக் கேட்டதும் பேருவகை கொண்டு எழுந்து அமர்ந்த முத்துத் தாண்டவர் அந்தப் பாலன்னத்தை மகிழ்வோடு உண்டார். பசி நீங்கப் பெற்றதால் களைப்பு நீங்கி எழுந்து அமர்ந்த அவர் உடலில் புது உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. அப்போதுதான் அவர் தான் கோவிலிலேயே இரவு படுத்து உறங்கி விட்டதை அறிந்தார். இறைவன் கூறியதை எல்லாம் எண்ணி எண்ணி ஆனந்தக் கூத்தாடினார்.

பொழுது விடிந்து கோயில் திருக்கதவம் திறக்கும் வரை காத்திருந்தார். கோயில் திறந்தவுடன் அங்கே பூசை செய்யும் அர்ச்சகரிடம் முத்துத் தாண்டவர் இரவில் நிகழ்ந்தவற்றைக் கூறி மகிழ்ந்தார்.

திருக்கோயிலின் திருக்குளத்தில் நீராடி தன்னுடைய நித்தியக் கடமைகளை முடித்துக் கொண்டு தோணியப்பர் திருச்சன்னதிக்குச் சென்று விழுந்து வணங்கி எழுந்தார். அதன் பின் தில்லை நோக்கிச் செல்லத் தொடங்கினார். ஆனால் மனம் முழுவதும் 'எனக்கு ஒன்றுமே பாடத் தெரியாதே? நான் என்ன செய்வேன்? எப்படிப் பாடுவேன்? என்னை வழிநடத்துங்கள் பெருமானே' என்று  தோணியப்பரிடம் வேண்டிக்கொண்டே சென்றார்.


ஓங்கி உயர்ந்த கோபுரங்களுடன் அமைந்திருந்தது தில்லை அம்பல நடராஜனின் திருக்கோவில். அங்கே சென்றவர் சிவகங்கைத் தீர்த்தத்தில் மூழ்கி நீராடினார். பின்னர் திருமூலநாதரைக் கண்டு வழிபட்டார். தோணியப்பர் கூறியதுபடி தாம் எவ்வாறு பாடுவது என்று மன சஞ்சலம் கொண்டு இறைவனை நோக்கி இறைஞ்சியபடி அமர்ந்திருந்தார்.

அப்போது ஒரு பக்தர் திருமூலநாதர் சன்னதிக்கெதிரில் நின்று "பூலோக கைலாசம்" என்று உரக்கக் கூறி ஸ்தோத்திரம் செய்து கொண்டிருந்தார். அந்த வார்த்தைகள் முத்துத் தாண்டவரின் செவியில்பட்டதும் முத்துத் தாண்டவர் அந்த வார்த்தைகளைக் கொண்டே தில்லையம்பலவாணனின் திருவருளால் "பூலோக கைலாசகிரி சிதம்பரம் அல்லால் புவனத்தில் வேறுமுண்டோ" எனத் தொடங்கும் பாடலைப் பாடினார்.

இந்தப் பாடலை அவர் பாடி முடித்தது தான் தாமதம் உடனே அவருடைய உணவுச் செலவுக்கான ஐந்து பொற்காசுகள் சுவாமியின் திருச்சந்நிதியின் பஞ்சாட்சரப் படிகளில் கிடைத்தன. படிக்காசு பெற்ற முத்து தாண்டவர் பெரிதும் அகமகிழ்ந்து போனார்.


தில்லை அம்பல நடராஜனின் பெருங்கருணையை எண்ணி எண்ணி வியந்து மகிழ்ந்தார். தம்மையும் பாடும்படிச் செய்து முதல் நாளிலேயே படிக்காசு அளித்த பெருமான் மீது அவருக்குப் பேரன்பு ஏற்பட்டது. முதல் நாள் பாடிய முறையிலேயே தினந்தோறும் கோவிலுக்குச் செல்வதும் அங்கே தம் காதில் முதலில் என்ன வார்த்தை கேட்கின்றதோ அதையே தன் பாடலின் தொடக்கமாகக் கொண்டு பாடி வருவதும் வழக்கமானது.

பெருமானும் அவர் பாடலுக்கு நாள்தோறும் படிக்காசு அளித்து வந்தார். அதைக்கொண்டு முத்துத் தாண்டவர் தன்னுடைய அன்றாடச் செலவுகளைச் செய்து வாழ்ந்து வந்தார்.

தினமும் முத்துத் தாண்டவர் சீர்காழியிலிருந்து தில்லைக்கு நடந்து வந்து சிவபெருமானைப் பாடுவதும் பஞ்சாட்சரப் படிகளில் பொற்காசுகளைப் பெறுவதும் அதைக் கொண்டு வாழ்வை நடத்துவதுமாக நாட்கள் கழிந்தன.

தினமும் இரவு சீர்காழிக்குச் சென்று விடுவார் முத்துத் தாண்டவர். இவ்வாறு வாழும் பொழுது அவருக்குச் சிலமுறை தில்லை வருவதில் இடையூறுகள் ஏற்பட்டன. ஒருமுறை பாம்பு ஒன்று தீண்டி விட "மருந்தொன்று  தனிமருந்து அம்பலத்தே கண்டேனே" என்று அவர் பாட அவர் உடம்பில் ஏறிய பாம்பின் விஷம் விறுவிறுவென்று இறங்கி நீங்கியது.


இன்னொரு முறை சீர்காழியிலிருந்து அம்பலத்தானைத் தரிசிக்கத் தில்லை வரும்பொழுது கொள்ளிடத்தில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதைக்கண்டு வருந்திய அவர் "காணாமல் வீணிலே காலம் கழித்தோமே" என்று மனம் வருந்திப் பாட, கொள்ளிடம் இரண்டாகப் பிளந்து அவர் தில்லை செல்வதற்கு வழி விட்டது. சிதம்பரம் செல்ல வழி பிறந்ததும் "தரிசனம் செய்வேனே" என்ற பாடலைப் பாடியபடியே சென்றார் அவர். இதனால் அவர் அகநோயும் புறநோயும் நீங்கியது.

இவ்வாறு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடராஜரைப் பாடுவதைத் தம் கடமையாகவே கொண்டு அவர் தடங்கல்களை எல்லாம் பொருட்படுத்தாது தினம் வந்து பொன்னம்பல வாணரைப் போற்றிப் பாடினார்.

1640 ஆம் வருடம் ஆவணிப் பூச நாளில் "மாணிக்கவாசகர் பேறு எனக்குத் தரவல்லாயோ அறியேன்" என்று பாடவும் ஒரு மாபெரும் ஜோதிப் பிழம்பு அவரை நோக்கி வந்து கலக்க அச்சோதியில் ஐக்கியமான அவர் பரவளியில் கலந்தார்.

இவ்வாறு நடராஜரைப் பாடி முக்தி அடைந்த முத்துத் தாண்டவர் எவ்வளவோ கீர்த்தனைகளைப் பாடியிருக்கிறார். இவருடைய பாடல்கள், பதங்கள் நடனங்களுக்கு இக்காலத்திலும் பெரிதும் பயன்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் தினம் ஒரு கீர்த்தனை பாடியதும் அதற்குப் பரமன் படிக்காசு அளித்து அவரை வாழ்வித்ததும் திருவருளின் பாற்பட்ட செயல்தானே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)