புனிதப் போராளி மாய் பாகோ
நாட்டிற்காகப் போராடியவர்களைப் பார்த்திருக்கிறோம். அந்நியர்கள்
வசப்படலாகாது என்று ஆத்மஹத்தி செய்து கொண்டவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் தன்னுடைய
சீக்கிய மதத்தைக் காக்கவும் அதன் குருவான குரு கோவிந்த் சிங் ஜிக்குக் காவலாக இருக்கவும்
மாபெரும் முகலாய சாம்ராஜ்யத்துடன் தைரியமாக மோதியவர் மாய் பாகோ. சீக்கியர்களின் மீட்பர்
இந்த மாய் பாகோ எனப்படும் மாதா பாக் கவுர் என்ற பெண்மணி என்று சொன்னால் மிகையாகாது.
17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வடமேற்கு
இந்தியாவில் வாழ்ந்தவர். துணிச்சல் மிக்கவர். சமத்துவ சமூகத்தைப் பாதுகாக்க விரும்பியவர்.
கவுர் என்றால் இளவரசி. மாய் மற்றும் மாதா என்றால் அம்மா என்று பொருள்படும்
மாய் பாகோ 1705 இல் முகலாயர்களுக்கு எதிரான முக்த்சார் போரில் முகலாயர்களின் 10,000 வீரர்கள் கொண்ட படையுடன் 40 சீக்கிய வீரர்களை மட்டுமே கொண்டு போரிட்ட, அசாத்தியத் துணிச்சல் கொண்ட பெண் துறவி. ஆனந்த்பூர் சாஹிப்பின் முற்றுகையின் போது 40 சீக்கியர்கள் சாலி முக்தே) குரு கோவிந்த் சிங்கைக் கைவிடும்படி நேர்ந்தது. ஒரு பெண்ணாய் இருந்தும் ஆண்போல் துணிவு கொண்டு அவர்களை குருவுக்கு ஆதரவாக ஒன்று திரட்டி மீண்டும் முகலாயர்களுக்கு எதிராகச் சண்டையிடும்படிக் கொண்டு வந்தார்.
மாய் பாகோ பஞ்சாபின் டர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள ஜபல்கலனில்
தில்லான் ஜாட்டின் குடும்பத்தில் பிறந்தார். பயபக்தியான சீக்கியக் குடும்பம் அது. எனவே
பிறப்பாலும் வளர்ப்பாலும் ஒரு தீவிர சீக்கியராய் இருந்தார். மாய் பாகோவின் தந்தையான
மாலோ ஷா குரு கோவிந்தின் இராணுவத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு ஆயுதப் பயிற்சி பெற்றார்.
மாய் பாகோவும் சாஸ்டர் வித்யா எனப்படும் அதே ஆயுதப் பயிற்சியைக் கற்றுக் கொண்டார்.
சீக்கியர்களின் ஐந்தாவது குரு அர்ஜன் தேவ். ( 1563 – 1606).
இவர் காலத்தில் பஞ்சாபின் 84 கிராமங்களின் தலைவரான பாய் லங்காஹ் சீக்கிய மதத்திற்கு
மாறினார். பாய் லங்காஹா குரு அர்ஜன் தேவ் அவர்களுக்கு பொற்கோயிலைக் கட்டுவதற்கு உதவியிருந்தார்,
மேலும் குரு அர்ஜன் தேவ் லாகூர் தியாகத்திற்காகச் சென்றபோது உடன் சென்ற ஐந்து சீக்கியர்களில்
ஒருவர்.
இவரின் இளைய சகோதரரான பாய் பெரோ ஷாவின் பேத்திதான் மாய் பாகோ.
இளவயதிலேயே அவள் ஒருமுறை ஆனந்த்பூர் சாஹிப்பிற்குச் சென்றிருந்தபோது குருகோவிந்த் சிங்கின்
தரிசனம் பெற்றாள். முதல் பார்வையிலேயே அவள் அவரைத் தன் குருவாக முழுமையாக ஏற்றுக் கொண்டாள்.
எனவே அவருடைய இரத்தத்திலேயே சீக்கிய மதம் ஊறிப் போயிருந்தது. தில்பாக் சிங் மற்றும்
பாக் சிங் ஆகியோர் மாய் பாகோவின் சகோதரர்கள். மொத்தம் நான்கு சகோதரர்கள் அவருக்கு.
பட்டி என்னும் ஊரைச் சேர்ந்த பாய் நிதன் சிங் வாராய்ச் என்பவருடன் மாய் பாகோவுக்குத்
திருமணம் ஆகியிருந்தது.
1700 களில் முகலாய சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் முயற்சியில்
ஔரங்கசீப்பின் இராணுவம் பட்டிதொட்டி எல்லாம்
புகுந்து புறப்பட்டது. இஸ்லாம் மட்டுமே பின்பற்றத்தகுந்த மதம் என்று கருதிய ஔரங்கசீப்
, மக்களிடையே சீக்கிய மதத்தைப் போதித்துப் பெருகி வரும் ஆதரவோடு திகழ்ந்த குரு கோவிந்த்
சிங்கைக் கைது செய்யும்படி உத்தரவிட்டார்.
பெண்களுக்கான அதிகாரம் அளித்தல், அனைத்து மக்களுக்கும் சமத்துவம், மத சுதந்திரம் ஆகியவற்றைக்
கற்பிக்கும் ஆன்மீக சமூக இயக்கம்தான் சீக்கியம். சீக்கிய சமூகம் பெண்களுக்கு சமத்துவ
உரிமை அளித்து வந்தது வேறு அவரது கோபத்தைத் தூண்டியது. அவரது ஆணையை ஏற்று வசீர் கான்
என்ற தளபதியின் தலைமையில் பெரிய படை ஒன்று புறப்பட்டு லாகூர் மற்றும் காஷ்மீரின் முகலாயப்படைகளுடன்
ஆனந்த்பூர் சாஹிப்பிற்குச் சென்றது.
குரு கோவிந்த் சிங் ஜிக்கு முந்தைய குருவுக்கு ஒன்பது வயதாக
இருந்தபோது ஔரங்கசீப்பால் தூக்கிலிடப்பட்டார். அதனால் குரு அவரைப் பின்பற்றுபவர்களுக்கு
ஜாதி அமைப்பைத் தவிர்க்கவும், அவர்களின் குடும்பப் பெயர்களைத் துறக்கவும், துறவிகளாக
ஞானஸ்நானம் எடுக்கவும் உத்தரவிட்டார். அதை முதலில் பின்பற்றியவர்களில் மாய் பாகோவும்
ஒருவர்.
ஆனந்த்பூர் சாஹிப்பில் குருவிற்கு ஆதரவாக 40 சீக்கியர்கள் இருந்தார்கள். 1704ஆம் ஆண்டில் வசீர்கானின்
படைகள் ஆனந்த்பூர் சாஹிப்பைச் சுற்றி வளைத்து உணவுப் பொருள் போக்குவரத்தைத் துண்டித்தது.
உணவுத் தட்டுப்பாடு வந்ததும் அங்கே இருந்த சீக்கியர்கள் முற்றுகையை விலக்குமாறு வசீர்கானின்
இராணுவத்திடம் கோரியபோது அவன் ’குரு கோவிந்த்
சிங்கினைக் குருவாக ஏற்று சீக்கிய மதத்தைப் பின்பற்றுபவர்கள் தாங்கள் இனி அவரைக் குருவாகப்
பின்பற்றமாட்டோம் என்று உறுதி கூறினால் உயிர் பிழைக்கலாம், இல்லையேல் இராணுவத்தின்
கையால் மாள வேண்டியதுதான்’
என்று சொல்லி அனுப்பினான்.
முகலாயர்களின் இடைவிடாத தாக்குதல்களால் சீக்கியர்கள் இன்னல்கள்
பல அடைந்தார்கள். அடுத்த ஆண்டு கோடையில் கோட்டையில் கொட்டைகள் மற்றும் இலைகள் தவிர
வேறு ஒரு உணவும் இல்லை. எனவே அவர்கள் சீக்கிய
மதத்தைத் துறந்து கல்சாவை விட்டு வெளியேற நினைத்தார்கள்.
இதன்படி 40 சீக்கியர்களும் மகான் சிங் ரதாவுல் தலைமையில் குரு
கோவிந்த் சிங்கிடம் தாங்கள் இனி அவரைப் பின்பற்றப் போவதில்லை என்று கூறினார்கள். அப்படியானால்
அதை ஒரு ஆவணமாக எழுதிக் கையெழுத்திட்டுத் தரவேண்டும் என அவர் கூற பெடவா என்ற ஒரு சீக்கியரைத்
தவிர மற்றவர்கள் அந்த ஆவணத்தில் தங்கள் கையெழுத்தினைப் போட்டுக் கொடுத்து விட்டு அவரை
விட்டு வெளியேறினர்.
முகலாய இராணுவத்தின் அட்டூழியத்தையும் 40 சீக்கியர்களின் வெளியேற்றத்தையும்
கேள்வியுற்ற மாய் பாகோ சீற்றமடைந்தார். தன் குரு கோவிந்த் சிங்கிற்குத் துரோகம் செய்து
விட்டு வெளியேறியதற்காக அவர்களுக்குக் கண்டனம் தெரிவித்ததுடன் அவர்கள் அனந்த்பூர் சாஹிப்புக்குச்
சென்று குருவிடம் மன்னிப்புக் கேட்கும்படி வற்புறுத்தினாள். மேலும் சீக்கியர்களாக மீண்டும்
நிலைநிறுத்தப்படுவதற்கு குருவின் அனுமதியைப் பெற அவள் அவர்களைக் கோரினாள். அப்போது
அவள் மால்வா பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்தாள்.
ஔரங்கசீப்பின் தூதர் ஒருவன் குரான் பிரதி ஒன்றில் ஔரங்க்சீப்பின்
கையொப்பம் இட்ட பிரமாணத்துடன் வந்தார். அவர் கோட்டையை விட்டு வெளியே வந்தால் அவருடன்
கௌரவமான முறையில் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று சமாதானத் தூதர் உறுதி அளித்தார்.
என்னதான் முகலாயச் சக்கரவர்த்தியின் ஒப்பமும் மற்ற இராணுவத்தினர் தளபதிகள் மலைத்தலைவர்களின்
கையெழுத்து ஒப்பம் கொண்ட உறுதிமொழிகளும் குரு கோவிந்த் சிங்கிடம் கொடுக்கப்பட்டாலும்
அவர் இந்த உறுதி மொழிகளை எல்லாம் நம்பவே இல்லை. ஆனால் முகலாயர்களின் வெளிவேஷத்தை வெளிப்படுத்த
அவர் கோட்டையை விட்டு வெளியேற முடிவு செய்தார்.
குரு தன் குடும்பத்தைப் பிரிந்து ஆனந்த்பூர் கோட்டையிலிருந்து
வெளியே வந்தார். ஆனால் அதற்கு முன்னரே அவரது குடும்பம் முகலாய இராணுவத்தினரால் பிரிக்கப்பட்டது.
சாஹிப்சாதா ஜோராவர் சிங் மற்றும் சாஹிப்சாதா ஃபதே சிங் ஆகிய இளைய குமாரர்கள் குருகோவிந்த்
சிங்கின் தாயாரான தங்கள் பாட்டி மாதா குஜாரி கவுருடன் சென்றனர். மூத்த மைந்தர்கள் சாஹிப்சாதா
அஜித் சிங் மற்றும் சாஹிப்சாதா ஜுஜார்சிங் ஆகியோர் தங்கள் தந்தையான குரு கோவிந்த் சிங்குடன்
சென்றனர். ஆனால் முகலாய இராணுவம் தன் சொல்லைக் காப்பாற்றாமல் சம்கௌர் போரில் குருவின்
மூத்த மகன்களைக் கொன்றது.
பஞ்ச் பியாரின் உத்தரவின்படி குரு சம்கௌரை விட்டு வெளியேறினார்.
அவரது படைகள் மால்வாவின் காடுகளில் ஔரங்கசீப்பின் படைகளுடன் அல்லும் பகலும் தொடர்ந்து
போரிட்டது. சீக்கியத் தலைவர் குரு கோவிந்த் சிங் தலைமறைவாக வாழும் நிலை ஏற்பட்டது.
மால்வாவின் காடுகளில் சுற்றித் திரிந்த மாய் பாகோவும் அவரது குழுவினரும் தங்கள் குருவைக்
கண்டு பிடித்தனர்.
குரு அவர்களுடன் கித்ரானா கிராமத்தை அடைந்தார். அங்கே ஒரு குளம்
இருந்தது. அதுதான் அப்பகுதியின் ஒரே நீர் ஆதாரம். குருவை ஆதரிக்க மாய் பாகோ தனது ஆட்களுடன்
அங்கே காவலாய் நின்றாள். முகலாய இராணுவம் அங்கேயும் தோன்றி அவர்களுடன் போரிட்டது.
1705 இல் மாபெரும் முகலாயப் படைக்கு எதிராக 40 சீக்கிய வீரர்களை வழி நடத்துதல் என்பது
அவ்வளவு எளிதா என்ன. போர்க்களத்தில் பல எதிரி வீரர்களை மாய் பாகோ கொன்றாள்.
டிசம்பர் 29, 1705 அன்று, 41 சீக்கியர்கள் முகலாயர்களை எப்படியும்
துண்டிக்க விரைந்தனர். மாய் பாகோவுடன் கித்ரானாவில் இருந்த அந்த வறண்ட கிணற்றைச் சுற்றி
முகாம் அமைத்தனர். முகலாய வீரர்களுக்கோ கடுமையான தாகம். அவர்களுக்கு அக்கிணறு வரண்டு
இருப்பது தெரியாததால் அக்கிணறைத் தடுத்திருந்த சீக்கியரைச் சுற்றி முற்றுகை இட்டனர்.
ஆனால் மாய் பாகோவும் சீக்கியப் படையினரும் அவர்களை எதிர்த்துத் தடுக்கவே அவர்களில்
பலர் தாகவிடாயினால் இறந்தனர். அக்கிணற்றில் தண்ணீர் இல்லை எனத் தெரிந்திருந்தால் அவர்கள்
தண்ணீர் கிடைக்கும் வேறு இடம் நோக்கிப் போய் இருப்பார்கள்.
இப்போது முகலாயப் படையினர் ஒரு வழியாகச் சீக்கியப் படைகளைக்
கடந்து அக்கிணறை அடைந்தார்கள். ஆனால் அக்கிணறு வரண்டு இருப்பதைப் பார்த்ததும் சுற்றி
முகாம் அமைத்திருந்த சீக்கியர்களைக் கொன்றொழித்துவிட்டுச் சீக்கிய குரு கோவிந்த் சிங்கைப்
பின் தொடர்வதைக் கைவிட்டுத் தண்ணீர் இருக்கும் இடம் நோக்கித் தங்கள் துருப்புகளுடன்
பின் வாங்கிச் சென்றார்கள். டிசம்பர் 29, 1705 இல் நடைபெற்ற அந்த முக்த்சார் போரில்
மாய் பாகோவும் அவரது ஆட்களும் முகலாய இராணுவத்துடன் வெகு தீரத்துடன் தான் போரிட்டு
அவர்களைத் தோற்றோடச் செய்தனர். அதிலும் மாய் பாகோ தலையில் கெஸ்கி கட்டி, கல்சா சீருடையுடன்,
கிர்பான் எனப்படும் குத்துவாள் கொண்டு பஞ்சாப் வரலாற்றில், போர்க்களத்தில் வீரத்துடன்
போரிட்ட முதல் பெண்மணி.
அதே சமயம் குருவின் படைகளும் குருவும் உயரமான மலைப்பகுதியில்
இருந்து முகலாயப் படையின் மீது அம்புமழை பொழிந்தார்கள். இருந்தும் குருவின் படையில்
மாய் பாகோ மற்றும் மகான் சிங் இவர்களைத் தவிர அனைவரும் இறந்தனர்.
திரும்பவும் சீக்கிய மதத்துக்குத் திரும்புவதாக 40 சீக்கியர்களும்
கையொப்பமிட்ட குறிப்பேட்டை உயிர் துறக்கும் நிலையிலும் மகான் சிங் ப்ரார் குருவிடம்
கொடுத்தார். குரு உயிர்த்தியாகம் செய்த அந்த 40 சீக்கியர்களையும் மன்னித்து அவர்கள்
சாலி முக்தே என்ற தியாகிகள் என்று ஆசீர்வதித்தார்.. தங்கள் மதத்திற்காகப் போராடி இறந்ததால்
அவர்கள் ஷஹீதுகள் எனவும் அழைக்கப்பட்டனர்.
பலத்த காயமுற்ற மகான் சிங் குரு தன் மடியில் அவரை ஏற்றியதும்
இறந்தார். அவரை ஆதரித்த 40 சீக்கியர்களும் மற்றும் மாய் பாகோவின் சகோதரர்கள், கணவர்
ஆகியோரும் இறந்தனர். மாய் பாகோவின் குழந்தைகளும் இப்போரில் உயிர்த்தியாகம் செய்தனர்.
முக்த்சார்போரில் உயிர் பிழைத்தவர் ஒரே ஒருவர்தான் அவர்தான் மாய் பாகோ.
போரில் காயமடைந்த மாய் பாகோ குருவுடன் தல்வண்டி சாபோவில் தங்கினார்.
குரு ஹஸூர் சாஹிப்பிற்குச் சென்றபோது குருவின் பத்து மெய்க்காப்பாளர்களில் ஒருவராக
ஆனார். பாரம்பரியக் கல்சா ஆடைகளை அணிந்தார். அதிலும் உயர்ந்த அடுக்கில் உள்ள போர் வீரர்கள்
அணியும் நிஹாங்கின் ஆடையை அணிந்தார். இதில் பலவிதமான இரும்புத்தகடு கொண்ட ஆயுதங்கள் (ஐந்து ஆயுதங்கள் ), மின்சார நீலநிற ஆடைகள், எஃகு
சுற்றப்பட்ட தலைப் பாகைகள் மற்றும் மணிக்கட்டில் எஃகு வளையல்கள் ஆகியவை அடங்கும். மின்னலின்
வேகத்தில் செயல்படும் வாளையும் வைத்திருந்தார்.போர் வீரர் போல் ஆண் உடை தரித்து பெரிய
ஈட்டி மற்றும் கஸ்தூரி ஆகியவற்றைக் கொண்ட ஆயுதம் ஏந்திக் காவலாக இருந்தார். மாய் பாகோ
என்றழைக்கப்பட்டாலும் கல்சாவாக மாறியபிறகு அனைத்துப் பெண் கல்சாக்களின் குடும்பப் பெயரான
மாய் பாக் கவுர் என்ற பெயரில் அழைக்கப்பட்டார்.
குருவின் பாதுகாவலராகச் சில ஆண்டுகள் இருந்தார் மாய் பாகோ. அதன்பிறகு,
அவர் தம்தாமா சாஹிப், ஆக்ரா மற்றும் நாந்தோட் ஆகிய இடங்களுக்குச் சென்றார். 1708 இல்
நாந்தோட்டில் குரு கோவிந்த் சிங் ஜி இறந்த பிறகு மாய் பாகோ தெற்கே சென்றார். கர்நாடகாவில்
உள்ள பிதாரில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜின்வாராவில் குடியேறினார். அங்கு
தேராவை நிறுவி தியானத்தில் மூழ்கினார். நீண்ட ஆயுளுடன் வாழ பிறருக்குக் குர்மத் எனப்படும்
குருவின் வழியைக் கற்பித்தார். அங்கே அவர் வாழ்ந்த குடிசை இப்போது குருத்வாரா தப் அஸ்தான்
மாய் பாகோ என்ற வழிபாட்டுத் தலமாக உள்ளது. இவர் நினைவாக ஹசூர் சாஹிப்பின் ஜத்தேதாரான
மோகன் சிங் என்பவரால் 1788 இல் ஒரு புங்கா ( போர்க்கோபுரம் ) கட்டப்பட்டது. 300 ஆண்டுகளுக்கும்
மேலாக சீக்கியர்களால் ஒரு புனிதப் போராளியாகக் கருதப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)