சேந்தன் இட்ட களியைக் கூடக் களிப்போடு உண்ட ஈசன்
என்னது ஈசன் களி உண்டாரா.. அதுவும் களிப்போடு உண்டாரா என ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா. ஆம் அடிமுடி அறிய ஒண்ணாதவர், ஆதியந்தம் அற்றவர், தில்லையின் அம்பலவாணர், தன் பக்தனான சேந்தன் இட்ட களியை உண்டு அதைக் களிப்போடு உலகத்தாருக்கும் அம்பலப்படுத்தினார். அக்கதையைப் பார்ப்போம் வாருங்கள்.
பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருவெண்காடர் எனப்படும் பட்டினத்தடிகளின் முதன்மைக் கணக்காளர் சேந்தனார். மருதவாணன் கொடுத்த ஞானத்தால் துறவறமேற்ற பட்டினத்தடிகள் தனது கருவூலத்தில் உள்ள பொருட்களை ஏழை எளியோருக்கு வழங்கிவிடும்படித் தனது கணக்காளரான சேந்தனாரிடம் கட்டளையிட்டார்.
அதன்படிச் சேந்தனாரும் கருவூலத்தைத் திறந்து அதில் உள்ள நவநிதியங்களையும் பொற்குவைகளையும் விரும்பியோர் வந்து எடுத்துச் செல்லலாம் என அறிவித்தார். பெருந்திரளான மக்கள் வந்து எடுத்துச் சென்றுகொண்டே இருந்தனர்.
’யார் சொத்தை யார் தானம் அளிப்பது’ என வெகுண்ட பட்டினத்தாரின் உறவினர்கள் சோழ மன்னனிடம் சென்று சேந்தனாரின் செயலைப் பற்றிப் புகாரளித்தனர். அதைத் தீர விசாரித்து உண்மை என அறிந்த சோழ மன்னன் சேந்தனாரைக் கைது செய்து சிறையில் அடைத்தான். தான் கூறியபடி செய்த தன் முதுபதி கணக்காளர் சேந்தனார் சிறையில் வாடுவதை அறிந்தார் பட்டினத்தார்.
சோழ மன்னனிடம் சென்று சேந்தனாருக்கு அவ்வாறு கட்டளையிட்டது தாமே என்று பட்டினத்தடிகள் விளக்கிக் கூறியதும் மன்னன் சேந்தனாரைச் சிறையில் இருந்து விடுவித்தான். எனினும் பட்டினத்தடிகளிடம் பார்த்த வேலையையும் இழந்து சிறைக்கும் சென்றதால் செய்யும் தொழில் ஏதுமின்றி அவர் திருநாங்கூரிலிருந்து தில்லைக்குச் சென்று விறகு வெட்டிப் பிழைத்து வந்தார்.
விறகு வெட்டிக் கிடைக்கும் கூலியில் அவர் தன் குடும்பத்தை நடத்தியதோடு தினம் ஒரு சிவனடியாருக்கு உணவிடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். எவ்வளவு சிரமப்பட்டாலும் இவ்வழக்கத்தை அவர் கைவிடவில்லை. அவ்வளவு முற்றிய சிவபக்தி அவருக்கு.
ஒருநாள் அம்பலவாணரே அவர் வீட்டுக்குச் சிவனடியாராக எழுந்தருளினார். அன்றைக்கு என்று பார்த்து நெல்லரிசிச் சோறு சமைக்கும்படிக்கு வருவாய் இல்லை. எனவே வீட்டில் இருந்த மாவை வைத்துக் களி சமைத்திருந்தார்கள். வந்திருப்பதோ சிவனடியார். ஆயினும் என் செய்வது? இருந்த களியை அவருக்கு மனச் சங்கடத்தோடு பரிமாறினார் சேந்தனார். பக்தன் பரிமாறினால் களியானால் என்ன கூழானால் என்ன சிவபெருமான் அன்போடு அமுது செய்தார்.
இங்கே இவ்வாறு இருக்க அங்கே சோழன் அரண்மனையிலோ பெரும் அமளி. மாபெரும் சிவபக்தனான சோழ மன்னன் நியமம் தவறாமல் தினமும் சிவபூசை செய்து வந்தான். அவன் பூசையில் மகிழ்ந்த அம்பலவாணர் தன் சிலம்பின் ஓசையை அவன் கேட்கும் வண்ணம் அளித்தருளி வந்தார். அன்றைய தினத்துக்கான சிவபூசை செய்தபின் சிவனாரின் சிலம்பொலிச் சத்தம் கேட்கும், கேட்குமெனக் காத்திருந்தான் மன்னன். சில நாழிகைகள் பல நாழிகைகளாகக் கடந்தன. ம்ஹூம் கேட்கவேயில்லை.
’சிலம்பு ஒலிக்கவில்லையே. சிவன் வரவில்லையே, என் பக்தியில் குறை ஏதும் ஏற்பட்டதோ’ என வருத்தத்தோடு துயிலச் சென்றான் சோழமன்னன். அவனது கனவில் தோன்றிய சிவபெருமான் “சேந்தன் அளித்த களி உண்ணச் சென்றிருந்தேன்.” என்று களிபேறுவகையுடன் கூறினார்.
என்னது? சேந்தன் அளித்த களியா?. சிவனே களி கூறும் வண்ணம் களி படைத்தவர் யார்? மன்னன் தில்லைக்கு ஆள் அனுப்பினான். அங்கோ தில்லையம்பதியின் திருமேனியில் களி ஒட்டியிருந்ததைக் கண்ட தீக்ஷிதர்கள் மன்னனிடம் சேந்தனாரின் சிவபக்தியைப் பற்றிக் கூறினார்கள். வியந்து போனான் மன்னன்.
பட்டினத்தடிகளின் முன்னாள் கணக்காளர் ஆயிற்றே சேந்தனார். அவரிடம் தமிழும் செழித்தோங்கி இருந்தது. மார்கழி மாதம் திருவாதிரைத் திருநாள் அது. அன்றையத் திருவிழாவில் சிதம்பரத்தில் தேரோட்டம் நடைபெறும். ஆனால் என்ன காரணத்தாலோ தேர் நிலையில் இருந்து கிளம்பவே இல்லை. பக்தர்கள் செய்வது அறியாது தவித்தனர். அப்போது அசரீரி ஒன்று ஒலித்தது “சேந்தா. தேர் நடக்கப் பல்லாண்டு பாடுக” என்று.
பக்தர்களோடு பக்தராய் நின்றிருந்த சேந்தனாரின் மேனி புல்லரித்தது. ஆயிரக்கணக்கானோர் இருக்கும் இடத்தில் தன்னைச் சுட்டிக் கட்டளையிட்டது தில்லையம்பல நடராஜரே என்றுணர்ந்தார். திருவருளின் துணை கொண்டு மனத்தினை ஒருமுகப்படுத்தித் தில்லைநாதனை நினைந்துருகித் திருப்பல்லாண்டு பாடினார்.
”மன்னுக தில்லை வளர்க நம்பத்தர்கள்” என்று இவர் பாட ஆரம்பித்ததுதான் தாமதம், தேர் தானே நிலையிலிருந்து யாரும் வடம் பிடித்து இழுக்காமலே எளிதாகக் கிளம்பிற்று. இவர் பாடப் பாடத் தானே நான்கு ரத வீதிகளிலும் ஓடி நிலை வந்து சேர்ந்தது. இவ்வற்புத நிகழ்வினால் சோழ மன்னன் மட்டுமல்ல, மக்கள் அனைவருமே கண்கூடாகக் கண்டு களித்து இவரின் சிவபக்தியைப் போற்றினார்கள்.
இவ்வாறு இறைவனுக்குக் களியையும் களிபேறுவகையையும் கொடுத்த சேந்தனார் தில்லையை மட்டுமல்ல. திருவீழிமிழலை, திருவாவடுதுறை, திருவிடைக்கழி ஆகிய சிவத்தலங்களைப் பற்றியும் பாடியுள்ளார். அவருடைய செந்தமிழ்த் தொண்டும் சிவபக்தி நெறியும் போற்றுதலுக்குரியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)