கோபத்தால் அறிவிழந்த இந்திரமயில்
முருகப்பெருமானுக்கு நான்கு மயில்கள் வாகனமாக இருப்பதை அறிவோம். அதில் தேவமயில் என்றும் இந்திர மயில் என்றும் சிறப்பிக்கப்படும் மயிலானது தனது அறியாமையால் அறிவழந்து கோபப்பட்டது. எந்த விஷயத்திலும் உண்மையை ஆராய்ந்து தெளிவதே அறிவு. கேட்பார் பேச்சைக் கேட்டு அறிவிழப்பது எவ்வளவு தவறு என்பதை அது உணரவில்லை. இதனால் முருகப் பெருமானின் சாபம் பெற்று அது மலையானது. அது என்ன கதை என்று பார்ப்போம்.
வைகாசி விசாகத்தில் முருகன் அவதரித்தவுடன் சூரிய பகவானும் அக்னியும் தங்கள் திருமேனியிலிருந்து மயிலையும் சேவல் கொடியையும் உருவாக்கி அளித்தார்கள். அன்றுமுதல் முருகப் பெருமானின் வாகனமாக ஆனது அது.
அடுத்து வேதமும் மயிலானதால் அது அருணகிரிநாதரின் திருப்புகழில் மந்திர மயில் என்று அழைக்கப்பட்டது. இந்த மயிலில் ஏறித்தான் அவர் அம்மையப்பனிடம் மாங்கனியைப் பெற உலகைச் சுற்றி வந்தார்.
முருகப் பெருமான் சூரபத்மனுடன் போரிட்டபோது தேவேந்திரன் மயிலாக மாற அம்மயிலின் மீது ஆரோகணித்துத்தான் போரிட்டார். இதுதான் இந்திர மயில் எனப்படும் தேவமயில். சூரசம்ஹாரம் முடிந்தவுடன் சூரனே மயிலாகவும் கோழிக்கொடியாகவும் ஆனான். இது அசுர மயில்.
ஒருமுறை சூரனாதியர் நால்வரும் தவம் செய்துகொண்டிருந்தபோது தேவர்கள் அதற்கு ஊறு விளைவித்து அவர்களின் தவம் நிறைவேறாமல் செய்திருந்தனர். அதனால் கோபத்துடன் திகழ்ந்த சூரனாதியர் நால்வரும் தேவர்களைப் பழிவாங்க எண்ணம் கொண்டனர்.
ஒருமுறை கைலாயத்திற்கு சிவபெருமானையும் முருகப் பெருமானையும் சந்திக்க நான்முகனும் திருமாலும் வந்தார்கள். அப்போது அங்கே உலவிக்கொண்டிருந்தது இந்திரமயில். அம்மயிலிடம் சென்று ”நான்முகனின் ஊர்தியான அன்னமும், திருமாலின் ஊர்தியான கருடனும் வேகமாகப் பறந்து செல்வதில் உன்னைக் காட்டிலும் சிறந்தவர்கள். உனக்கு அந்த அளவு திறமை இல்லை என்று தேவர்கள் சொன்னார்கள்” என்று மயிலை மட்டம் தட்டியதாகப் பொய் சொன்னார்கள்.
’தன் திறமையைத் தேவர்கள் எப்படிக் குறைவாக மதிப்பிடலாம்’ என்று திரும்பத் திரும்பக் கோபம் கொண்ட மயில் அப்படி மதிப்பிட வைத்த அன்னத்தையும் கருடனையும் என்ன செய்யலாம் என்று கறுவத் தொடங்கியது. அடங்காத கோபத்துடன் மயில் அலையும்போது அப்பக்கம் வந்த அன்னத்தையும் கருடனையும் கோபமிக்கூர வேகமாகச் சென்று பிடித்து விழுங்கி விட்டது.
சிவபெருமானையும் முருகப் பெருமானையும் சந்தித்துவிட்டு வந்த திருமாலும் நான்முகனும் தங்கள் வாகனங்களைக் காணாமல் திகைத்தார்கள், தேடினார்கள். கோபமாக அலைந்து கொண்டிருந்த மயிலையும் பார்த்தார்கள். இதெல்லாம் மயிலின் செயலாகத்தான் இருக்கவேண்டும் என்பதை உணர்ந்த அவர்கள் முருகப் பெருமானிடம் சென்று முறையிட்டனர்.
”நாங்கள் வரும்போது மயில் சாத்வீகமாகத் திரிந்து கொண்டிருந்தது. இப்போது கோபமாக அலைந்து கொண்டிருக்கின்றது. மயில் ஏதேனும் செய்திருக்குமோ என்னவோ என்று அதன் மீதுதான் சந்தேகமாய் இருக்கிறது” என்று அவர்கள் முறையிட்டதைக் கேட்ட முருகன் மயிலை அழைத்து விசாரணை செய்தார்.
”சூரனாதியர் என்னுடைய வேகம் பத்தாது என்றும் கருடனும் அன்னமும்தான் வேகமாகப் பறப்பதில் சிறந்தவர்கள் என்றும் கூறியதால் கோபம் ஏற்பட அன்னத்தையும் கருடனையும் ஒரே விழுங்காக விழுங்கி விட்டேன்” என்றும் மயில் ஒப்புக் கொள்ள அதன் அடாத செய்கையால் கோபம் கொண்ட முருகன் அந்த அன்னத்தையும் கருடனையும் கக்கும்படி ஆணையிட்டார்.
மயிலும் உடனே இரண்டையும் கக்கியது. நான்முகனும், திருமாலும் முருகனுக்கு நன்றி கூறி உடனே அன்னத்திலும் கருடனிலும் ஏறித் தங்கள் பிரம்மலோகத்துக்கும் வைகுண்டத்துக்கும் பறந்து சென்றார்கள். தன்னைச் சந்திக்க வந்த அவர்களுக்கு இடையூறு செய்ததன் காரணமாக மயிலை மலையாகும்படி சபித்துவிட்டார்.
முருகனின் கோபத்தைக் கண்டு பதறிய மயில் மனம் வருந்தி அவரிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டி சாபவிமோசனம் கேட்டது. மயிலின் நிலை கண்டு இரங்கிய முருகன் குன்றக்குடி என்னும் தலத்தில் போய் மலையாக இருக்கும்படியும் அங்கு தான் வந்து சாபவிமோசனம் வழங்கி அருள் செய்வதாகவும் கூறினார். பொய் சொன்ன சூரனாதியரை அசுரர்களாகும்படி சபித்தார்.
தான் கூறியபடி முருகப்பெருமான் குன்றக்குடிக்கு வந்து மயிலின் சாபத்தை நீக்கி மயிலை இருபாகமாக்கி ஒரு பாகத்திற்கு சாரூப பதவி அளித்தார். மற்றொரு பாகம் மலையாக இருக்குமாறு அருள் புரிந்தார். சாபவிமோசனம் பெற்ற மயில் முருகனை வணங்கித் தன் தவறுக்கு மன்னிப்புக் கேட்டது. முருகனிடம் குன்றக்குடி மலையில் தன் மேல் எழுந்தருளியிருக்க வேண்டும் என வேண்டிக் கேட்டுக் கொண்டது.
ஆறுமுகப்பெருமானும் மயில் வடிவத்தில் அமைந்த மலையில் எழுந்தருளி அருள் புரிகிறார். நீங்கள் குன்றக்குடிக்கு செல்லும்போது பார்த்தால் தெரியும், ஊரின் நடுவே வடக்குப் பக்கம் முகமும் தெற்குப் பக்கம் தோகையும் கொண்டு மயிலின் உருவமாக அமைந்து உயர்ந்து நிற்கும் மலையைக் காணலாம். இதுதான் மயில் மலையான கதை.
மலையின் மேல் கிழக்கு நோக்கி தெய்வானை, வள்ளி ஆகிய இருவருடன் சண்முகநாதர் மயிலின் மேல் காட்சி தருகிறார். நாம் மலை மீது ஏறும்பொழுது காணப்படும் படிகள் அனைத்துமே மயிலின் தோகை போன்று அழகாக விரிந்து இருப்பதையும் காணலாம். இந்த மயூரா நகரம், அரசவனம், கண்ணபுரம், மயில் மலை, சிகண்டிமலை, தோகைகுன்றம், குன்றைநகர், மாலீச்சுரம் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது.
கோபத்தால் அறிவிழந்தாலும் அந்த இந்திரமயில் தன் தவறுணர்ந்து மன்னிப்புக் கேட்டதால் முருகப் பெருமானை என்றென்றும் சுமக்கும் பெருமைமிகு மலையாக மாறியது. மயில் இப்படி அழகான நிலையான மலையான கதையைக் கேட்டுவிட்டுக் குன்றக்குடிக்குச் சென்று வணங்கி வாருங்கள். முருகனின் அருள் மயிலோடு என்றென்றும் துணை வரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)