விஸ்வேஸ்வரருக்குப் பிடித்த வாரணாசி
காசி என்னும் ஆனந்தவனம் பற்றிக் கேள்வியுற்றிருப்பீர்கள். ஒருமுறை இந்த ஆனந்தவனத்திலிருந்து ஒரு வேண்டுகோளினால் மந்த்ராசலத்துக்குத் தன் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டார் விசுவநாதர். எங்கும் உறையும் இறைவனே ஆனாலும் தனக்குப் பிடித்த இடத்தில் கோவில் கொள்வதைத்தான் விரும்புவார் என்பதை காசி மாநகருக்கே அவர் திரும்பி வந்த கதை உணர்த்துகிறது. அது பற்றிப் பார்ப்போம்.
பத்ம கல்பத்தின் போது உலகெங்கும் வறட்சி ஏற்பட்டதால் உயிரினங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டன. படைப்புக் கடவுள் பிரம்மாவுக்கே இனித் தான் படைக்கும் தொழிலில் ஈடுபட முடியுமா என்று நினைக்கும் அளவில் புதிய உயிர்களைத் தோற்றுவிப்பது கடினமாக இருந்தது. அந்த அளவு அழிவின் விளிம்பில் அனைத்து உயிர்களும் உடலைப் பற்றிக் கொண்டிருந்தன.
ஆனந்தவனம் என்னும் காசியும் அதற்கு விதி விலக்கல்ல. இதைக் காப்பாற்ற வல்லவன் யார் என்று பிரம்மா தேடியபோது ரிபுஞ்செயன் என்னும் மன்னன் மிகுந்த அர்ப்பணிப்புடன் தவத்தில் ஈடுபட்டிருந்தான்.அந்நகரைக் காப்பாற்ற வல்லவன் என்று பிரம்மா தான் கணித்த மன்னன் அவனுக்குத் திவோதாசா என்று பெயரிட்டு காசிக்கு மன்னனாக இருக்கும்படிக் கூறினார்.

