காசி மாநகரில் வசித்துவந்த இரு சகோதரர்கள் பற்றிய கதை இது. இதில் ஒருவன் பணக்காரனாகவும் ஒருவன் ஏழையாகவும் இருந்தார்கள். முற்பிறப்பில் தனக்கு வழங்கப்பட்ட உணவை வீணாக்காதவன் அடுத்தபிறவியில் செல்வந்தனாக விளங்கினான். ஆனால் வீணாக்கியவன் அடுத்தபிறவியில் வறுமையில் உழலும் ஏழையாக துயருற்றான். அந்தக் கதை என்னவென்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
விசுவநாதரும் விசாலாட்சியும் குடி கொண்டிருக்கும் காசி மாநகரம். அங்கே அன்னபூரணியும் அனைவருக்கும் அன்னம் பாலித்து வருகிறாள். ஆனால் நகரின் ஒரு கோடியில் மாபெரும் மாளிகையில் தேவதத்தன் என்ற செல்வந்தன் வாழ்ந்து வந்தான். அவன் தினமும் அறுசுவை உணவை உண்டு இன்பமாய் இருந்தான்.
ஆனால் அவனது சகோதரன் தனஞ்செயனோ கங்கையின் மணிகர்ணிகை கட்டத்தில் நீராடி காலை உணவு கிடைக்குமா என்று கவலையோடு விசுவநாதர் கோயிலுக்கு வந்து நின்றான். பசி வயிற்றைக் கிள்ளியது. ஆனால் அவனிடம் சல்லித்துட்டு கூட இல்லை. தன் அண்ணனுக்கு அனைத்து செல்வங்களும் கிடைத்திருக்கும்போது தான் மட்டும் தரித்திரனாய் உழலும் காரணம் என்ன என்று அவன் கோயில் மண்டபத்தில் அமர்ந்து இறைவனிடம் கேட்டான்.
பசிக்கிறக்கத்தில் அவனுக்கு உறக்கம் வந்தது. அப்போது அவனுக்கு ஒரு கனவு வந்தது. அதில் ஒரு சாமியார் காட்சி தந்தார். “ தனஞ்செயா உனக்கு வறுமை ஏன் ஏற்பட்டது என்பதை நான் கூறுகிறேன். காஞ்சி மாநகரத்தை சத்ருதர்மன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனது தோழன் ஹேரம்பனுடன் ஒருமுறை வேட்டைக்குச் சென்றான். அப்போது அவர்கள் காட்டில் வழி தவறி விட்டார்கள். அவர்களைப் பார்த்த முனிவர் ஒருவர் பரிவோடு அழைத்து உணவு வழங்கினார். “
