ஒருவர் ஒரு விஷயத்தைச் செய்யும்போது ஏன் செய்தார்கள் என்று அறிந்துகொண்டோமானால் நமக்கு அவர்கள் மேல் ஏற்பட்ட வெறுப்பு சிறிதாவது குறையும்.இப்படித்தான் கேகய நாட்டு மன்னனும் தயரதனின் மனைவியுமான கைகேயி அனைவராலும் வெறுக்கப்பட்டாள். ஆனால் அவள் மகன் ராமனோ அவளுக்காகத் தந்தையிடம் பரிந்து பேசினான். அது என்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
அயோத்தியே ஒளிமயமாய் மின்னிக் கொண்டிருந்தது. மக்கள் தங்கள் இல்லங்களைக் கோலங்களாலும் மாவிலை தோரணங்களாலும் அழகுபடுத்திக் கொண்டிருந்தார்கள். விடியற்காலையிலேயே பம்பையும் எக்காளமும் ஒலிக்க அனைவரின் உள்ளத்திலும் மகிழ்ச்சி பொங்கிக் கொண்டிருந்தது. ஏனெனில் அவர்கள் சக்கரவர்த்தி தயரதன் தன் இளவல் ராமனுக்கு முடிசூட்டப் போகிறார். அந்த இனிய காட்சியைக் காண அரண்மனை நோக்கி சாரி சாரியாக மக்கள் வந்து கொண்டிருந்தார்கள்.