எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 2 ஜனவரி, 2020

மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த மூலன். தினமலர் சிறுவர்மலர் - 47.

மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த மூலன்
இக்காலத்தில் ஒருவர் நோய் நொடியின்றி ஐம்பது, அறுபது ஆண்டுகள் முதல் நூறாண்டுகள் வரை எளிதில் வாழலாம். ஆனால் ஒரு மனிதன் கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருக்கிறார். அது மட்டுமல்ல ஆண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் மூவாயிரம் பாடல்களும் எழுதி இருக்கிறார். அவர் யாரென்று அறிய ஆவலாய் இருக்கிறீர்கள்தானே குழந்தைகளே. வாருங்கள் அவர் பற்றிச் சொல்லுகிறேன்.
திருவாடுதுறை என்னும் ஊரில் மூலன் என்றொரு ஆயர் இருந்தார். அவ்வூரின் அருகில் இருந்த சாத்தனூர் என்ற ஊரில் வாழ்ந்த குடும்பஸ்தர்களின் ஆநிரைகளை அதிகாலையில் வீடுதோறும் சென்று ஓட்டிக்கொண்டு பகல் பொழுதில் புல்வெளிகளிலும், காடுகளிலும், உழவு முடிந்த வயல்களிலும் மேய்த்து மாலையில் அதனதன் இல்லம் கொண்டு சேர்ப்பது அவர் பொறுப்பு.
அப்படி மேய்த்துவரும்போது ஒருநாள் மாலையாகியது. ஆநிரைகள் வீடு திரும்ப வேண்டும். அவை தம் மேய்ப்பரைத் தேடிக் குரல் எழுப்புகின்றன. அந்தியோ மங்கி வருகின்றது. ஆனால் அவரைப் பாம்பு ஒன்று தீண்டியதால் மேய்ச்சல் நிலத்தில் விழுந்து கிடக்கிறார். ஆநிரைகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தம் மேய்ப்பர் விழுந்து கிடப்பதைப் பார்த்து அவலக் குரல் எழுப்புகின்றன. சில மோந்து பார்க்கின்றன. ஒரு சிலவற்றின் கண்களிலிருந்து கண்ணீர் வடிகின்றது.

அப்போது அங்கே வருகிறார் ஒரு சிவயோகி. அவர் அஷ்டமா சித்திகளும் கைவரப் பெற்றவர். நந்தி தேவரின் மாணவர். கயிலாயத்தில் இருந்து தம் நண்பரான அகத்தியரைக் காண அவர் தென் திசை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது திருவாடுதுறையைக் கடக்க நேரிட்டது. அங்கே பார்த்தால் ஆநிரைகள் ஒரு வயலோரம் கூட்டமாக நின்று கதறிக் கொண்டும் கண்ணீர் சொரிந்து கொண்டும் நின்றன.
அவற்றை விலக்கிக் கொண்டு வந்து பார்த்தால் மூலன் என்ற மேய்ப்பர் விடம் தீண்டி இறந்து கிடந்தார். ஆநிரைகளின் துயரம் புரிந்தது சிவயோகிக்கு. அவர் கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை அறிந்தவர். அந்த மேய்ப்பர் எழுந்து நடவாவிட்டால் அந்த ஆநிரைகள் தங்கள் கொட்டடிக்குப் போக மாட்டா என்றுணர்ந்த அவர் ஒரு உபாயம் செய்தார்.
தன் உடலை ஒரு மரப்பொந்தில் ஒளித்து வைத்துவிட்டு தன் உயிரை மூலனின் உடலுக்குள் செலுத்தி உயிர் பெற்று எழுந்தார். மேய்ப்பர் மூலன் எழுந்ததும் பசுக்கள் சந்தோஷமாகத் துள்ளின. கோலை எடுத்துக் கொண்டு அவர் நடந்ததும் சாத்தனூர் நோக்கி அவை நடந்து தத்தம் எஜமானர்களின் இல்லத்தை அவை தாமே அடைந்தன.
பொழுது போய் வெகு நேரமாகியும் தன் கணவன் வீடு திரும்பாததைக் கண்ட மூலனின் மனைவி நங்கை ஊர் எல்லையை நோக்கி வேகு வேகென நடந்து வந்தாள். தூரத்தே தன் கணவனைக் கண்ட அவள் அவனை வீட்டிற்கு அழைக்கிறாள். மூலன் உடம்பில் இருப்பதோ சிவயோகியின் ஆவி. அதனால் அவர் மூலனின் இல்லத்திற்குச் செல்ல மறுக்கிறார். மேலும் நங்கையிடம் ” நான் உன் கணவன் அல்ல . உனக்கும் எனக்கும் எந்த உறவுமில்லை “ என்று கூறிவிட்டு சிவயோகிகள் தங்கும் சாத்தனூர் பொது மடத்திற்குச் சென்று தங்குகிறார்.
இரவு முடிந்து பொழுது விடிகிறது. அங்கே நங்கையோ அழுது துடித்து பொட்டுத் தூக்கமில்லாமல் இரவைக் கடக்கிறாள். அவளுக்கு உற்றார் உறவினர் யாரும் இலர். இங்கே மூலன் வடிவில் இருக்கும் சிவயோகி தன் காலைக் கடன்களை முடித்துக் கிளம்பத் தயாராகிறார்.
மூலனின் மனைவி நங்கை அதற்கு மேலும் பொறமாட்டாதவளாகி ஊர்ச் சபையில் சென்று தன் கணவனுடன் தன்னைச் சேர்த்து வைக்குமாறும் அவரை இல்லம் திரும்பச் சொல்லுமாறும் வேண்டிக் கொள்கிறாள். அவர்கள் மூலனிடம் சென்று பேசிப் பார்க்கிறார்கள்.
தெளிந்த இறைச் சிந்தனையுடன் மூலன் பேசுவது கண்டு வியப்புறுகிறார்கள். மூலன் ஓரிரவிலே செய்தவத்தால் சிவயோகியாகி விட்டான் என்பதை உணர்ந்த அவர்கள் மூலனின் மனைவியிடம் “ அம்மா , இவர் உன் கணவர் மூலன்தான் ஆனால் இப்போது தெளிந்த சிவ சிந்தனையுடன் கூடிய திருமூல சித்தராகி விட்டார். இனி இவர் குடும்பத்துக்குத் திரும்புதல் கடினம். உன் மனதைத் தேற்றிக் கொள். அவர் வழியில் அவரைப் போகவிடு “ என்று கூறிச் செல்கிறார்கள்.
மனைவி பதைத்திருக்க திருமூலரோ தன் சித்தர் உடலைத் தேடி தான் முதல் நாள் ஒளித்து வைத்த மரப்பொந்து நாடிப் போகிறார். அஹா என்ன இது எங்கேயுமே அவரது உடலைக் காணவில்லையே. என்ன செய்வது என்று யோசிக்கிறார். வேறு வழியே இல்லை. தான் புகுந்த மூலனின் உடம்பிலேயே வாசம் செய்ய வேண்டியதுதான். இது இறைவனின் சித்தம் என்று உணர்கிறார்.
திருவாடுதுறைக் கோயிலை அடைந்து அங்கே வீற்றிருக்கும் அம்மையப்பரைச் சரணடைகிறார். அடுத்து என்ன செய்வது என்று யோசித்தபடி அக்கோயிலை வலம் வருகிறார். மேற்குத் திசையில் வரும்போது ஒரு அரசமரம் அவரைக் கரங்கள் நீட்டி அணைப்பது போலிருக்கிறது. அங்கேயே தேவாசனத்தில் அமர்ந்து யோகத்தில் ஆழ்கிறார்.
சிவயோகத்தில் அமர்ந்த திருமூலர் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நால்வகை நன்னெறிகளும் துலங்கும் திருமந்திரத்தைப் படைக்கிறார். எல்லாவற்றையும் ஒரே நாளில் அல்ல. ஒரு ஆண்டுமுழுவதும் தியானத்திலும் யோகத்திலும் இருந்து ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் யோக நிலையில் இருந்து விழித்து ஒரு பாடலை அருளுவார். இதே போல் மூவாயிரம்  ஆண்டுகள் உயிர்த்து மூவாயிரம் பாடல்களை அருளிச் செய்தார்.
ஒரு மனிதன் மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததும் மூவாயிரம் பாடல்களை ஆண்டுக்கொன்றாய் இயற்றியதும் வியக்கத்தக்க செயல்தானே குழந்தைகளே.

டிஸ்கி :-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 20 .12. 2019  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர்கள் அஷோக் &  ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.

2 கருத்துகள்:

  1. நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...