எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 12 ஜனவரி, 2020

சொ. முருகப்பனாரும் பாரதியாரும்.

நலந்தா = நல்ல புத்தகக்கடை என்ற புத்தகக்கடையைக் காரைக்குடியில் நடத்தி வரும் திரு நலந்தா ஜம்புலிங்கம் அவர்கள் சிறந்த எழுத்தாளர் & பதிப்பாளரும் கூட. மிக சிறந்த எழுத்தாளுமைகளுடன் தொடர்பில் உள்ளவர். என் எழுத்தைப் பற்றி அவர் கூறியுள்ளவற்றைப் படிக்கும்போது சிறிது கூச்சம் ஏற்பட்டது. அதோடு சொ. முருகப்பனாரின் இராமகாதை பற்றியும் கூறி  இருக்கிறார். வாசித்துப் பாருங்கள்.


(இந்தப் புகைப்படம் பாரதி காரைக்குடி வந்தபோது எடுத்தது. பாரதியாரின்  வலது பக்கம் இராய சொ அவர்களும் இடது பக்கம் சொ முருகப்பனாரும் அமர்ந்திருக்கிறார்கள். )

அஹா.. நான் சிறு விதையை உபாசித்தேன். நீங்களோ சில நிமிடங்களில் அதை விருட்சமாக்கி விட்டீர்கள். நன்றி ஜம்புலிங்கம் சார் !!!

////புவிக்கு புவி ஈர்ப்பு ஆற்றல் உண்டு, இயல்பானது.

எழுத்துக்களுக்கும் எழுத்து ஈர்ப்பு ஆற்றல் உண்டு, ஆனால் அது இயல்பாக எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை.

அத்தகைய ஆற்றல் வாய்க்கப் பெற்றவர் சமூக வலைத்தளங்களிலும் ஏராளமான பத்திரிகைகளிலும் முத்திரை பதித்துவரும் கவிதாயினி தேனம்மை லெட்சுமணன். இவருடைய எழுத்துக்கள் பெரும்பாலும் சுயானுபவத்திலிருந்து மலர்கின்றன. இவருடைய எழுத்தின் களங்கள் விரிந்து பரந்துள்ளன. எந்தக் களத்தையும் எளிமையாகவும் தெளிவாகவும் சொல்லும் ஆற்றல் பெற்றவராகவுள்ளார். எழுத்து நூலாக வெளிவருவது தான் எழுத்தாளருக்குப் பெரிய அங்கீகாரம். தேனம்மை லெட்சுமணன் 19 நூல்களை எழுதியுள்ளார்.

அச்சு நூல்கள் சில, மின் அச்சு நூல்கள் சில, இரண்டு வடிவங்களிலும் சில. இந்த கலவைக்குக் காரணம் அவர் மின் ஊடகங்களிலிருந்து எழுந்த நாற்று. வலைப் பக்கங்கள் இவரின் தாய் வீடு.

சமையல் குறிப்புகள், கோலங்கள், புகைப்படங்கள் என ஆரம்ப நிலை படைப்புகளிலிருந்து, கவிதைகள், நூல் விமர்சனங்கள், பயண இலக்கியங்கள், நேர்காணல்கள், எனப் பல நிலைகளில் வகை வகையான படைப்புகளை தினந்தோறும் வலைப் பக்கத்தில் ( BLOG SPOT)பதிவு செய்து வருகிறார். வகைவாரியாக சும்மா, டைரி கிறுக்கல்கள், கோலங்கள், THENU's RECIPES, CHUMMA என ஐந்து வலைப்பக்களில் எழுதிவருகிறார். இதுவரை சுமார் 7000 பதிவுகள் ( ஆம்,ஏழாயிரம் பதிவுகள் தான்) செய்து 20 லட்சம் பார்வைகள் பெற்றுள்ளார்.

அதனினும் ஒரு படி மேலே சென்று இவருடைய வலைப்பக்கத்திலேயே மற்றவர்களையும் பதிவை செய்ய வரவேற்கிறார். சனிக் கிழமை தோறும் ஒரு நண்பரைப் பதிவு செய்ய வைப்பதற்காகவே சாட்டர்டே ஜாலி கார்னர் என்றொரு துணைப் பக்கம் ஏற்படுத்தியுள்ளார். மை கிளிக்ஸ் என்றொரு துணைப் பக்கத்தில் புகைப் படங்களைப் பதிவு செய்கிறார்.

இன்று இவரைப் பற்றி நான் இவ்வளவு நீண்ட பதிவு எழுதக் காரணம் இவருடைய ஒரு சின்ன முகநூல் பதிவு தான்.

கம்பன் கழகம் மாணவர்களுக்கு நடத்தும் பேச்சுப் போட்டிக்கு இவரை நடுவராகப் பணித்திருந்தார்கள். இவரும் மாணவர்களைப் போல கம்பராமாயண நூலைத் தேடினார். என் சொந்த சேகரிப்பிலுள்ள சொ. முருகப்பா பதிப்பித்த இராமகாதை நூலை இவருக்கு வாசிக்கக் கொடுத்தேன். அந்த நூல் கைமாற்றுக்கு அவரது முகநூல் பக்கத்தில் எனக்கு நன்றியுரைத்துள்ளார். அது வெறும் நன்றியுரையாக இருந்தால் அதற்கு முகநூல் தேவையில்லை. அந்த நன்றியுரையோடு ஒரு போட்டியையும் நடத்தியுள்ளார்.

அது வேறொன்றுமல்ல அந்தப் பதிப்பிலுள்ள ஒரு பாடல் நாம் வழக்கமாக படிக்கும் பாடத்திலிருந்து ஒரு சொல் வேறுபட்டிருக்கிறது. அந்த வேறுபட்ட சொல் என்ன என்பது தேனம்மை லெட்சுமணன் முகநூலில் வைத்த கேள்வி. அது சாதாரணக் கேள்வி தான், அந்த கேள்வியின் மூலம் பல தசாப்தங்கள் முன் வெளிவந்த ஒரு சிறந்த நூல் பலருக்கு அறிமுகமாகிறது..

கம்பராமாயணப் பதிப்புகள் பல வெளிவந்துள்ள போதும், சொ. முருகப்பா பதிப்பு தனித்து நிற்கும் சிறப்புடையது. அந்த பதிப்பை மாமேதை சொ. முருகப்பா உருவாக்கிய நோக்கத்தையும், அப்பதிப்பின் செழுமையையும் அறிந்தால் தான் அதன் உயரம் நமக்கு தெரியும். நமக்குக் கிடைத்திருக்கும் கம்பராமாயணம் பன்னிரண்டாயிரம் பாடல்களைக் கொண்டது, ஆனால் இடைச்செருகல்கள் நிறைந்தது. இந்த இடைச் செருகல்களை வடிகட்டுவதில் பல கம்பன் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இடைச் செருகல்களை அடையாளம் காட்டுவதிலும் அறிஞர்கள் வேறுபடுகிறார்கள். சொ. முருகப்பா தேர்ந்தெடுத்த 3248 பாடல்களில் இராமகாதையை முழுமையாக தொகுத்துவிடுகிறார். அந்தத் தொகுதியும் மிக நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது.

இந்தப் பதிப்புப் பணியை சொ,முருகப்பா தன் வாழ்நாளிலேயே நிறைவு செய்திருந்த போதிலும் இப்பதிப்பு வெளிவரும் நேரத்தில் அவர் காலமாகிவிட்டார். இந்தப் பதிப்பின் சிறப்பு குறித்தும் சொ. முருகப்பாவின் இந்த மாபெரும் இலக்கியப் பணி குறித்தும் தமிழ்க் கடல் இராய சொ அவர்களின் முன்னுரை மிக தெளிவாக உரைக்கிறது.

சினிமாவின் வெற்றி அது நமது அன்றாட வாழ்க்கையில் கலந்துவிட்டது தான், திரையரங்கங்களுக்கு அப்பாலும் அது கோலோச்சுகிறது. புத்தகங்களைப் பற்றி மற்ற ஊடகங்களிலும் பேசப்பட வேண்டும். கவிதாயினி தேனம்மை லெட்சுமணன் அற்புதமாக இராமகாதை சொ. முருகப்பா பதிப்பைப் பற்றி நடத்திய சின்னஞ்சிறிய போட்டியை அத்தகைய உத்தியாகக் கருதுகிறேன். வாசிப்பு இயக்கங்கள் கவனிக்க வேண்டிய உத்தி.

நலந்தா செம்புலிங்கம்
10.01.2020

என் வலைப்பக்கத்திற்கு வரவேற்கிறேன். nalanthaa.blogspot.com
உள்ளதையும், உள்ளத்தில் உள்ளதையும்...////

2 கருத்துகள்:

  1. உங்கள் ஆக்கமும் ஊக்கமும் எல்லோரும் அறிந்ததே. அதைத் தான் அவரும் குறிப்பிட்டுள்ளார்.

    பதிலளிநீக்கு
  2. அஹா நன்றி கௌசி..

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...