எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 3 ஆகஸ்ட், 2019

கர்ணன் செய்யாத தானம். தினமலர் சிறுவர்மலர். 25.

கர்ணன் செய்யாத தானம்.
பொன், வைரம், வைடூரியம், நவரத்தினம் மட்டுமல்ல தனது அவைக்கு வந்தவர்க்கெல்லாம் தனது கரூவூலத்திலிருந்து கை நிறைய மனம் நிறைய எடுத்துக் கொடுத்து மகிழ்ந்தவன் கர்ணன். கையில் எது இருந்தாலும் பிறர் கேட்டால் கொடுத்துவிடுவான். பிறந்ததில் இருந்து தனது உடலோடு ஒட்டியிருந்த கவச குண்டலங்களையும் வழங்கியவன். ஆனால் அவன் எத்தனைதான் தானம் செய்திருந்தாலும் ஒரு முறை கூட அன்னதானம் செய்யாததால் பட்ட துன்பத்தைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
யதுகுலத்தைச் சேர்ந்த சூரசேனரின் மகள் பிரீதா. சூரசேனர் பெண்குழந்தை இல்லாத தன் நண்பரான குந்தி போஜருக்கு தன் மகளான பிரீதாவைத் தத்துக் கொடுத்தார்.  குந்தி போஜரின் மகளானதும் இவர் குந்தி என அழைக்கப்பட்டார். குந்திக்கு ஒரு வரம் கிடைத்தது. அதன்படி கிடைத்த ஒரு மந்திரத்தைச் சோதிக்க எண்ணினார். அப்போது குளக்கரையில் நின்றதால் சூரியனின் ஒளி பட சூரியபகவானை நினைத்து இவர் அம்மந்திரத்தைக் கூற உடனே கர்ணன் பிறந்தான்.
கவசகுண்டலங்கள் அணிந்த அழகான குழந்தை. தந்தைக்குத் தெரியாமல் அக்குழந்தையை எப்படி வீட்டுக்கு எடுத்துச் செல்வது. எனவே குந்தி அதை ஒரு பேழையில் வைத்து ஆற்றில் விட்டுவிட்டாள். அக்குழந்தையை அதிரதன் ஒருவர் கண்டெடுத்து தன் மகனாக வளர்த்து வந்தார். அவனை மன்னர்களுக்கிடையேயான  ஒரு போட்டியில் கர்ணன் போட்டியிட விரும்ப அவனை துரியோதனன் ஆதரித்து மன்னனாக்கினான்.

அதன்படி அங்கதேசத்தின் மன்னனான கர்ணன் மிகச் சிறந்த கொடை வள்ளலாக விளங்கினான். தன்னை நாடி வருவோர்க்கெல்லாம் கைநிறைய பொன்னும் பட்டும் பீதாம்பரமும் அள்ளி அள்ளி வழங்கினான். சொல்லப்போனால் வலக்கை கொடுப்பதை இடக்கை அறியாது என்பதற்கேற்ப வழங்கினான்.
ஒரு முறை இந்திரன் கர்ணனது கவச குண்டலங்களைக் கேட்க பூஜை முடித்து வந்த கர்ணன் தன் தந்தை சூரியனின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாது தனது கவச குண்டலங்களை வழங்கினான். தனது இறப்பின் போது கூட தனது தர்மத்தின் பலன் அனைத்தையும் பகவான் கிருஷ்ணனுக்கே தானமாக வழங்கியவன். அப்பேர்ப்பட்ட கொடையாளியும் பட்டினியால் வாடும் நிலை வந்தது.
குருஷேத்திரப் போர் முடிந்து கர்ணன் போரில் வீரமரணம் அடைந்து சொர்க்கம் ஏகினான். எங்கு பார்த்தாலும் மாடமாளிகை கூட கோபுரம், நந்தவனங்கள், நீரூற்றுகள், அணிமணிகள், பொன்னாரங்கள், ஆடை ஆபரணங்கள், எங்கும் சுகந்தம் எங்கும் வசந்தம். கின்னரர் கிம்புருடர்களின் கானாமிர்தம். வித்யாதரர்கள் கந்தர்வர்களின் நாட்டியம், வாசனாதி திரவியங்கள் பரிமள கந்தங்கள், சப்ர மஞ்சங்கள், அப்சரஸ்திரீகள் என கனவு லோகம் போல சகலவித சம்பத்தும் சௌகரியமும் நிரம்பி இருந்தது சொர்க்கலோகம்.
அனைவரும் திருப்தியுடனும் சந்தோஷத்துடனும் உலாவந்து கொண்டிருந்தார்கள் . ஆனால் கர்ணனுக்கோ வெளியே சொல்ல முடியாத ஒரு பிரச்சனை ஏற்பட்டது. கடுமையான பசி ஏற்பட்டது. ’சொர்க்கத்தில்தான் பசி என்பதே ஏற்படாதே தனக்கு மட்டும் பசி ஏற்படுவதன் காரணம் என்ன’ என்று குழம்பியது அவன் மனது.
இதை யாரிடம் கேட்பது. அனைவரும் ஆடலும் பாடலுமாய் இன்பமயமாய்த் திரிந்தார்கள். யாரிடமும் கேட்கவும் அவனுக்கு வெட்கமாக இருந்தது. அப்போது அங்கே நாரதர் வந்தார். மனதில் எண்ணியதைப் படிக்கும் சக்தி படைத்தவர் அவர். அவர் கர்ணனைப் பார்த்தார். அவன் கடுமையான பசியால் வாடிக்கொண்டிருப்பது தெரிந்தது.
“கர்ணா உன் ஆட்காட்டி விரலை வாயில் வைத்துக் கொள் “ இப்படிச் சொன்னவுடன் அவன் தன் ஆட்காட்டி விரலை வாயில் வைத்துக் கொண்டான். உடனே அவன் பசி அடங்கியது. சரி அதுதான் பசி அடங்கிவிட்டதே என நினைத்துக் கையை வாயில் இருந்து எடுத்தால் திரும்பப் பசித்தது. ஒன்றும் புரியவில்லை அவனுக்கு.
“நாரதரே நீங்கள் கூறியபடி ஆட்காட்டி விரலை வாயில் வைத்தால் பசி தீர்கிறது. ஆனால் எடுத்தவுடன் திரும்பப் பசிக்கிறதே? என்ன காரணம் ? இதை எப்படி நீக்குவது ? இதிலிருந்து எப்படி மீள்வது ? “ என வினவினான்.
அதற்கு நாரதர் சொன்னார் “கர்ணா நீ உன் வாழ்நாள் முழுக்க ஆயிரக்கணக்கான தானங்கள் செய்திருக்கிறாய். தங்கம், வெள்ளி , பொன் பொருள் நவநிதியம் எனக் கொட்டிக் கொடுத்த நீ ஒரு முறை கூட அன்னதானம் செய்ததில்லை. அதனால்தான் உனக்கு இப்போது கொள்ளைப் பசி எடுக்கிறது “
”அப்படியானால் என் ஆட்காட்டி விரலை வாயில் வைத்ததும் பசி அடங்கியது எப்படி நாரதரே ?” என ஆச்சர்யத்தோடு வினவினான் கர்ணன். நாரத மகரிஷி சொன்னார், “ நீ நேரடியாக தானம் செய்யாவிட்டாலும் ஒரு முறை அன்னதானம் நடக்கும் இடத்தைப் பற்றி ஒருவர் உன்னிடம் விசாரித்தார். அப்போது நீ உன் ஆட்காட்டி விரலை நீட்டி அதோ அங்கே அன்னதானம் நடைபெறுகிறது என்று காட்டினாய். அதனால் உன் ஆட்காட்டி விரல் மட்டும் அன்னதானம் செய்த பலன் பெற்றது . அதனால்தான் நீ உன் விரலை வாயில் வைத்ததும் உன் பசி அடங்கியது. ”என்றார்.
”அன்னதானம் செய்த இடத்தைக் காட்டியதற்கே இவ்வளவு பலன் என்றால் அன்னதானம் செய்தால் இன்னும் எவ்வளவு புண்ணியம் கிட்டும் “ என நினைத்தான் கர்ணன். அதன்படி அவன் அன்னதானம் செய்வதற்கென்றே ஒரு பிறப்பு வேண்டி சிறுத்தொண்டராகப் பிறப்பெடுத்தான்.
எனவே எத்தனைதான் தானம் செய்தாலும் பிறர்க்கு அன்னதானம் செய்யவேண்டியதும் மிகவும் அத்யாவசியமான ஒன்று என்பதை இக்கதை மூலம் தெளிவாக அறிந்துகொண்டோம்தானே குழந்தைகளே.  

டிஸ்கி 1 :-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 12. 7. 2019  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார். 

4 கருத்துகள்:

 1. அன்னதானத்தின் சிறப்பை கர்ணன்வழியாகக் கூறியவிதம் அருமை.

  பதிலளிநீக்கு
 2. நல்ல கதை. ஏற்கனவே கேள்விப்பட்ட கதை என்றாலும் மீண்டும் படித்து ரசிக்க முடிந்த கதை.

  பதிலளிநீக்கு
 3. அறிந்திராத கதை. அன்னதானத்தின் சிறப்பைச் சொல்லும் அழகான கதை. வாழ்த்துகள்.

  கீதா

  பதிலளிநீக்கு
 4. நன்றி ஜம்பு சார்

  நன்றி வெங்கட் சகோ

  நன்றி கீத்ஸ்

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...