பொன், வைரம், வைடூரியம், நவரத்தினம் மட்டுமல்ல தனது அவைக்கு வந்தவர்க்கெல்லாம் தனது கரூவூலத்திலிருந்து கை நிறைய மனம் நிறைய எடுத்துக் கொடுத்து மகிழ்ந்தவன் கர்ணன். கையில் எது இருந்தாலும் பிறர் கேட்டால் கொடுத்துவிடுவான். பிறந்ததில் இருந்து தனது உடலோடு ஒட்டியிருந்த கவச குண்டலங்களையும் வழங்கியவன். ஆனால் அவன் எத்தனைதான் தானம் செய்திருந்தாலும் ஒரு முறை கூட அன்னதானம் செய்யாததால் பட்ட துன்பத்தைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
யதுகுலத்தைச் சேர்ந்த சூரசேனரின் மகள் பிரீதா. சூரசேனர் பெண்குழந்தை இல்லாத தன் நண்பரான குந்தி போஜருக்கு தன் மகளான பிரீதாவைத் தத்துக் கொடுத்தார். குந்தி போஜரின் மகளானதும் இவர் குந்தி என அழைக்கப்பட்டார். குந்திக்கு ஒரு வரம் கிடைத்தது. அதன்படி கிடைத்த ஒரு மந்திரத்தைச் சோதிக்க எண்ணினார். அப்போது குளக்கரையில் நின்றதால் சூரியனின் ஒளி பட சூரியபகவானை நினைத்து இவர் அம்மந்திரத்தைக் கூற உடனே கர்ணன் பிறந்தான்.
கவசகுண்டலங்கள் அணிந்த அழகான குழந்தை. தந்தைக்குத் தெரியாமல் அக்குழந்தையை எப்படி வீட்டுக்கு எடுத்துச் செல்வது. எனவே குந்தி அதை ஒரு பேழையில் வைத்து ஆற்றில் விட்டுவிட்டாள். அக்குழந்தையை அதிரதன் ஒருவர் கண்டெடுத்து தன் மகனாக வளர்த்து வந்தார். அவனை மன்னர்களுக்கிடையேயான ஒரு போட்டியில் கர்ணன் போட்டியிட விரும்ப அவனை துரியோதனன் ஆதரித்து மன்னனாக்கினான்.
